சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பாம்பே ‘மும்பை’ ஆன கதை!

பாம்பே ‘மும்பை’ ஆன கதை!
பிரீமியம் ஸ்டோரி
News
பாம்பே ‘மும்பை’ ஆன கதை!

பரிசல் கிருஷ்ணா

நேர்மையாக இருப்பதாலேயே, பெரிதாகப் பெயர் பெற முடியாத இன்ஸ்பெக்டர் சர்தாஜ் சிங்குக்கு (சயிஃப் அலிகான்) ஓர் அழைப்பு வருகிறது. தன்னை அறிமுகப்ப டுத்திக் கொள்ளாமல், ‘இன்னும் 25 நாளில் மும்பை அழியப்போகிறது. நான் சில தகவல்கள் தருகிறேன். உன்னால் காப்பாற்ற முடியும்’ என்கிறது அந்த அழைப்பு. அவன் வரச்சொன்ன இடத்துக்குச் சென்று கொண்டிருக்கும் சர்தாஜ், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து சிலபல கெட்டவார்த்தைகளில் அவனைத் திட்டி, “போய் நல்ல டாக்டராப் பாரு” என்கிறார்.

“நான் யாருனு தெரியாமப் பேசாதே” என்று சொல்லி சில வழக்கு எண்களைச் சொல்கிறான். “போய் ரெகார்டைப் பாரு. நான் மனுஷனா, தெய்வமானு தெரியும்.” பதறிப்போகிறார் இன்ஸ்பெக்டர் சர்தாஜ். அவரசமாகச் சென்று சரிபார்க்கிறார். ஆம். அவன்தான். கணேஷ் ஏக்நாத் கைத்துன்டே (நவாஸுதீன் சித்திக்). 158 கொலைவழக்குகளில் முக்கியக் குற்றவாளி; மும்பை காவல்துறை, ரா, ஐ.எஸ்.ஐ என்று எல்லார் கண்ணிலும் மண்ணைத்தூவி 17 வருடம் தலைமறைவாக இருக்கும் கணேஷ் கைத்துன்டேதான் தனக்கு அழைத்தது என்று தெரிந்ததும் விவகாரம் சூடுபிடிக்கிறது.  

பாம்பே ‘மும்பை’ ஆன கதை!

இப்படித்தான் ஆரம்பிக்கிறது ‘சேக்ரெட் கேம்ஸ்’ சீரியஸின் முதல் அத்தியாயம். மொத்தம் எட்டு அத்தியாயங்கள். ஒவ்வொன்றும் சுமாராக முக்கால் மணிநேரம். மொத்தம் ஆறரை மணி நேரத்தில் மும்பையின் அண்டர்வேர்ல்டை அலசியிருக்கிறார்கள். ஜுலை ஆறாம்தேதி வெளியானது இந்த ‘இந்தியாவின் முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் சீரிஸ்.’ 

2006ல் எழுத்தாளர் விக்ரம் சந்த்ரா எழுதிய நாவல் Sacred Games. இரண்டு லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டு, வெளியானது. `பாம்பே, மும்பை ஆனது எப்படி?’ என்பதுதான் சேக்ரெட் கேம்ஸின் மையக்கரு.

அனுராக் காஷ்யப் அந்த நாவலைப் படித்து அதனால் ஈர்க்கப்பட்டவர். பாலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான அவருக்கு 2014ல், ‘சேக்ரெட் கேம்ஸ்’ நாவலை ஆங்கிலத்தில் படமாக்கச் சொல்லி ஓர் அழைப்பு வருகிறது. இந்தியாவை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்த நாவலை, இன்னொரு மொழியில் எடுத்தால் சிறப்பாக இருக்காது என்று மறுத்துவிடுகிறார். அதே சமயம், அனுராக்கின் நண்பரும், ‘Phantom Films’ல் அனுராக்குடன் பார்ட்னராக இருக்கும் இன்னொரு பிரபல இயக்குநருமான விக்ரமாதித்யா மோத்வானிக்கு நெட்ஃப்ளிக்ஸிலிருந்து ஓர் ஆஃபர் வருகிறது. அதே ‘சேக்ரெட் கேம்ஸை’ வெப் சீரிஸாக படமாக்கச்சொல்லி அனுராக்கிடம் பேச, அவரும் களத்தில் குதிக்கிறார். நவாஸுதீன் சித்திக்கி, சயிஃப் அலிகான், ராதிகா ஆப்தே, நீரஜ் கபி என்று நட்சத்திரப்பட்டாளங்கள் நடிக்க, வெளியாகியிருக்கிறது சேக்ரெட் கேம்ஸ்.

பாம்பே ‘மும்பை’ ஆன கதை!

நவாஸுதீன் சித்திக்கி சம்பந்தப்பட்ட  காட்சிகளை அனுராக் காஷ்யப் படமாக்க, சயிஃப் அலிகானின் இன்ஸ்பெக்டர் போர்ஷன் முழுவதையும் விக்ரமாதித்யா மோத்வானி படமாக்குகிறார். நவாஸுதீனின் கேங்ஸ்டர் கதாபாத்திரம் அறுபதுகளில் ஆரம்பித்து சமகாலம் வரை படமாக்கப்பட்டிருக்கிறது. பீரியட் காட்சிகளில் அவ்வளவு துல்லியம். எமெர்ஜென்ஸி, இந்து முஸ்லிம் கலவரம், அரசியலில் மதம் கலந்தது எப்படி போன்ற சர்ச்சைகளையெல்லாம் கச்சிதமாகப் படமாக்கியிருக்கிறார் அனுராக்.

இன்னொரு பக்கம் விக்ரமாதித்யா மோத்வானி, சயிஃபின் கதாபாத்திரத்தை, காவல்துறையில் நடக்கும் கோல்மால்களை யெல்லாம் தைரியமாகத் தோலுரித்துக் காட்சிப்படுத்தியிருக்கிறார். காவல்துறை, இந்திய உளவு அமைப்பு, கள்ளப்பணப் பரிமாற்றத்தில் ஈடுபடும் அரசியல்வாதி என்று எல்லாவற்றையுமே நிஜத்தோடு பிணைந்து படமாக்கியிருக்கிறார் விக்ரமாதித்யா.

நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் சீரிஸ்களுக்கே உண்டான எல்லா எழுதப்படாத விதிமுறைகளும் இதிலும் உண்டு. நேரடியான வசவு வார்த்தைகள், ஒவ்வொரு எபிசோடிலும் ஒன்றிரண்டு 18+ காட்சிகள். ஆனாலும், கதையின்போக்கில் அவை எதுவும் உறுத்தவில்லை.

பாம்பே ‘மும்பை’ ஆன கதை!

ராஜிவ் காந்தி சம்பந்தப்பட்ட வசனங்களுக்காக காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்திருக்கிறார்கள். வேறு சில காட்சிகளுக்காக பாஜகவும் கோபப்பட்டிருக்கிறது.  “அந்த நாளில் நிகழ்ந்தவைகளைச் சம்பந்தப்படுத்தியிருக்கிறோம் அவ்வளவுதான். அது அந்த கேங்ஸ்டரின் குரல்” என்கிறார் விக்ரமாதித்யா.

 இருவரும் சேர்ந்து  ஒரிஜினல் நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸ்களுக்கு, தங்கள் நேர்த்தியான படைப்பால் ஒரு பென்ச்மார்க் வைத்துவிட்டார்கள். இனி எடுக்கப்போகும் சீரிஸ்கள் இதன் பிரதியாக இல்லாமலிருக்க வேண்டும்.; அதே சமயம், இது தந்த தாக்கத்தைத் தரவேண்டி இருக்கும். அடுத்தடுத்த சீஸன் இருக்கிறதா என்ற கேள்விக்கு, அனுராக், விக்ரமாதித்யா இருவரிடமும் புன்னகையே பதிலாக வந்துகொண்டிருக்கிறது.

வி ஆர் வெய்ட்டிங் பா!