Published:Updated:

இன்செப்ஷன் பாதி; இன்டர்ஸ்டெல்லார் மீதி; ஆனா, ரிசல்ட்!? - `உத்தரவு மகாராஜா' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
இன்செப்ஷன் பாதி; இன்டர்ஸ்டெல்லார் மீதி; ஆனா, ரிசல்ட்!? - `உத்தரவு மகாராஜா' விமர்சனம்
இன்செப்ஷன் பாதி; இன்டர்ஸ்டெல்லார் மீதி; ஆனா, ரிசல்ட்!? - `உத்தரவு மகாராஜா' விமர்சனம்

இன்செப்ஷன் பாதி; இன்டர்ஸ்டெல்லார் மீதி; ஆனா, ரிசல்ட்!? - `உத்தரவு மகாராஜா' விமர்சனம்

`இன்ஸப்ஷனை` மிஞ்சிய விஞ்ஞான விளையாட்டையும் `இன்டர்ஸ்டெல்லாரை' மிஞ்சிய தந்தை-மகள் பாசத்தையும் கொண்ட  ஸ்பேஸ் சயின்ஸ் ஃபிக்‌ஷன் சைக்கோ த்ரில்லர் திரைப்படம் `உத்தரவு மகாராஜா'.

கோட்டும் ஷூட்டுமாக கார்ப்பரேட் கிரிமினல் லுக்கில், பருகண்டி கலர் தாடியோடு பந்தாவாக ஊரைச் சுற்றி வரும் உதயா. திடீர் திடீரென அவர் காதுகளுக்கு மட்டும் உக்கிரகண்ட மகாராஜாவின் குரல் உக்கிரமாக கேட்க ஆரம்பிக்கிறது. கிட்டத்தட்ட, `புரட்சி போராட்டம்' பிரபுவின் சாயலில் ஒலிக்கும் அந்தக் குரலோடு, 5.1 சரவுண்டிங்கில் குதிரைகள் ஓடும் சத்தமும் கேட்க, தலையைப் பிய்த்துக்கொண்டு தெருதெருவாய் ஓடுகிறார் உதயா. அந்தக் குரலும் கூகுள் மேப்பைப் போல `இடது பக்கம் திரும்பு, வலது பக்கம் திரும்பு' என ஓட வேண்டிய திசையையும் சமத்தாய்ச் சொல்கிறது. உக்கிரகண்டனின் குரலால் நிம்மதியாய் உறங்கமுடியாமல் தவிக்கிறார் உதயா. இது ஏதும் அமானுஷ்ய சக்தியின் வேலையா அல்லது மன நோயா எனக் குழம்பிப்போகிறார்கள் அவரது நண்பர்கள். ஒருமுறை, அந்தக் குரலின் உத்தரவுக்கு `உத்தரவு மகாராஜா' எனச் சொல்படி கேட்டு பாலத்திலிருந்து குதித்தேவிடுகிறார். அங்கு இடைவேளை. இடைவேளைக்குப் பிறகு இருபது ட்விஸ்ட், இருபது ட்விஸ்ட் முடிந்தபிறகு இறுதிக்காட்சி. அதிலும் ஒரு ட்விஸ்ட்.... கதையின் இடையிடையே ட்விஸ்ட்கள் இருக்கலாம். இங்கே ட்விஸ்ட்களுக்கு இடையிடையேதான் கதையே இருக்கிறது. வாவ்!

`உதயாவின் மாறுபட்ட நடிப்பில்’ என விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு கோட்-ஷூட் லுக், சைடு வகிடு எடுத்த அம்மாஞ்சி லுக், கரை படிந்த பற்களோடு சுடுகாட்டுச் சித்தன் லுக் என விதவிதமான கெட்டப்களில் வந்து கிலி கிளப்பியிருக்கிறார் மனிதர். இளைய திலகம் பிரபு இஸ் பேக் வித் ஏ பேங்! படத்தில் பிரபுவின் கதாபாத்திரம், சமீபகாலமாய் விக்ரம் பிரபுவுக்குக் கிடைக்கும் கதாபாத்திரங்களைவிட அவ்வளவு இளமையானது. அவர் கதாபாத்திரத்தைப் பற்றி அதிகம் எழுதினால் `ஸ்பாய்லர்' ஆகிவிடும் என்பதால் அணு அணுவாய் ரசித்து எழுதமுடியாத வருத்தத்தில் உழன்று கொண்டிருக்கிறோம். இந்த இருவர்களைத் தவிர மூன்று ஹீரோயின்ஸ் மற்றும் ஶ்ரீமன், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், நாசர் போன்ற நடிகர்களும் படத்தில் இருக்கிறார்கள். இருக்கிறார்கள்... அவ்வளவே!

கொடைக்கானலின் அழகையும், உக்கிரகண்ட மகாராஜாவின் குரல் கேட்டுத் தெருத் தெருவாய் ஓடும் ஹீரோவின் அலைச்சலையும் ஓடி ஓடி படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா. நரேன் பாலகுமாரின் இசையில் `பெண்ணேய்ய்ய்...' எனத் தொடங்கும் பி.ஜி.எம் மனதில் பச்சக்கென ஒட்டிக்கொள்கிறது. உதயாவுக்கு உக்கிரகண்டனின் குரல் கேட்பதுபோல நமக்கு அந்த இசை காதுகளுக்குள் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. சத்யநாராயணன் படத்தை ஷார்ப்பாக எடிட் செய்திருக்கலாம்.

`சந்திரமுகி’, `அந்நியன்’ படங்களில் பேசப்பட்ட dissociative identity disorder எனும் மனநல குறைபாட்டை இந்தப் படத்தில் பேச நினைத்த இயக்குநர் ஆஃசிப் குரேஷி, கதையின் கருவை மட்டும் சுவாரஸ்யமாகப் பிடித்திருக்கிறார். ஆனால், அதற்கான திரைக்கதையில்தான் முறுக்கு சுத்தியிருக்கிறார். ஹீரோவுக்கு உண்மையாகவே மனநலக் குறைபாடா; அமானுஷ்ய வேலைகளா; இல்லை ஹீரோ நடிக்கிறாரா என்பதை தெளிவாகச் சொல்லாமல் குழப்பி எடுக்கிறார்கள். 

ஒரு கொலைக்கு 500 கோடி சார்ஜ் செய்யும் காஸ்ட்லியான கான்ட்ராக்ட் கில்லர், சென்னை, கொடைக்கானல், டெல்லி என ஆரம்பித்து செவ்வாய் கிரகம் வரைக்கும் பயணிக்கும் திரைக்கதை, க்ளைமாக்ஸில் ஹீரோவின் சோலோ பெர்ஃபார்மஸ், ஹீரோயின் செவ்வாய் கிரகத்துக்குச் செல்வதற்கான காரணம் என இடங்களில், `ஷ்ஷப்ப்பாஆஆ முடில’ மொமென்ட்தான்.

இயக்குநருக்குக் கிடைத்திருத்த ஒரு நல்ல கதைக்கருவை, சரியாகப் பயன்படுத்தி ஒரு கவனிக்கத்தக்க படமா இதை எடுக்க வாய்ப்பு இருந்தும், ஒரு முறைகூட கஷ்டப்பட்டு பார்க்க வேண்டிய அளவுக்கு அரைகுறையாக படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பதே வேதனை.

படத்தின் சொல்வது போல், `திங்கிங், பாயின்டிங், ஸ்ட்ரைக்கிங் எல்லாம் சரியாய் இருந்திருந்தால் இந்த மகாராஜாவின் உத்தரவுக்கு நாமும் செவி சாய்த்திருக்கலாம். 

அடுத்த கட்டுரைக்கு