சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“நிறைய சம்பாதிக்கலை, ஆனா நிறைவா வாழ்ந்துட்டேன்!”

“நிறைய சம்பாதிக்கலை, ஆனா நிறைவா வாழ்ந்துட்டேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நிறைய சம்பாதிக்கலை, ஆனா நிறைவா வாழ்ந்துட்டேன்!”

சனா - படங்கள்: ப.சரவணகுமார்

“ஆனந்த விகடன்ல இருந்தா பேசுறீங்க... உங்க சேர்மன் பாலசுப்ரமணியமும் நானும் ஸ்கூல்மேட்ஸ். நீங்க பேசினதும் எனக்குப் பழைய சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வருது. நான் படங்கள்ல நடிக்கிறதை நிறுத்தி நாளாச்சே. இப்ப நான் பேட்டி கொடுத்து என்ன பண்ணப்போறேன்?” குழறிக் குழறிப் பேசுகிறார் டைப்பிஸ்ட் கோபு.

50 ஆண்டுகளாக 600க்கும் அதிகமான திரைப்படங்கள், ஏராளமான நாடகங்களில் நடித்தவர். இப்போது முதுமையும் வறுமையுமாக மிகச்சிறிய வீட்டில் மனைவி, மகனுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

“திருச்சி பக்கம்தான் சொந்த ஊர். சின்ன வயசுலேயே சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிட்டோம். அம்மாதான் தனி மனுஷியா இருந்து கஷ்டப்பட்டு பி.காம் வரை படிக்கவெச்சாங்க. காலேஜ் படிக்கும்போதே நிறைய நாடகங்கள்ல நடிச்சேன். அப்ப இருந்தே மனசு முழுக்க நடிப்புதான். காலேஜ் முடிச்சதும் டி.எஸ்.சேஷாத்ரினு ஒருத்தரோட கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். அவருக்கு ஒரு நாடகக் கம்பெனியும் இருந்துச்சு. ‘கம்பெனியில வேலை செஞ்சுகிட்டே நாடகத்துலயும் நடிக்கட்டுமா’னு கேட்டேன். உடனே சரின்னார்.

“நிறைய சம்பாதிக்கலை, ஆனா நிறைவா வாழ்ந்துட்டேன்!”

அந்த நாடகத்துல அவர் கொடுத்ததுதான் டைப்பிஸ்ட் கேரக்டர். என் கேரக்டர் பேர் கோபு. டைப் மெஷின் பக்கத்துல உட்கார்ந்து பேப்பரை உள்ளவெச்சு டைப் பண்றமாதிரி நடிக்கணும். டயலாக் கிடையாது. ஆனால், வெரைட்டியான முகபாவனைகள்ல அந்த ரோலை செமையா பண்ணிட்டேன். நாடகம் முடிஞ்சதும் எல்லாரும் என்னைக் கூப்பிட்டுப் பாராட்டினாங்க. ‘உன் பேர் இனி கோபாலரத்தினம் கிடையாது; ‘டைப்பிஸ்ட் கோபு’னு சொன்னார் அந்த சேஷாத்ரி. இன்னைக்கு வரை நான் டைப்பிஸ்ட் கோபுதான்.

ஒரு நாள் என் நாடகத்தைப் பார்க்க ஏவி.எம்.முருகன் சார் வந்திருந்தார். அவருக்கு என் நடிப்பு பிடிச்சிருந்தது. அவர்தான் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். பிறகு ‘அதே கண்கள்’, ‘எங்க மாமா’னு தொடங்கி ‘உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்’, ‘மைக்கேல் மதன காமராசன்’, ‘சிவா’னு மூணு தலைமுறை நடிகர்களோட நடிச்சேன். சினிமாவில் எனக்கு நெருங்கிய நண்பன் நாகேஷ். என் அம்மாவுக்கு என்னைவிட அவனை ரொம்பப் பிடிக்கும்...” நாகேஷைப் பற்றிப் பேசும்போதே கோபுவுக்குக் கண்ணீர் ததும்புகிறது.

சமாளித்துக்கொண்டு பேச்சைத் தொடர்கிறார். “அவனோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எப்பவும் என் சட்டைப் பாக்கெட்ல வெச்சிருப்பேன். ஏவி.எம். முருகன் சாரிடம் அந்த போட்டோவைக் காட்டி, ‘இந்தப் பையன் நல்லா நடிப்பான். இவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க’னு கேட்டேன். அப்படி அவர் நாகேஷுக்குக் கொடுத்த வாய்ப்புதான் ‘அன்னை’ படம். அந்த முதல் வாய்ப்புலயே நாகேஷ் நடிப்புல பிச்சு உதறிட்டான். நான் அவனுக்கு வாங்கிக்கொடுத்ததோ சின்ன வாய்ப்பு. ஆனா, அவனோட பெருந்தன்மை பாருங்க, ‘எனக்கு முதன்முதல்ல நடிக்க வாய்ப்பு வாங்கித்தந்தது கோபுதான்... கோபுதான்’னு வாழ்நாள் முழுக்கச் சொல்லிட்டே இருந்தான். என் வாழ்க்கைல மறக்க முடியாத மனுஷன்னா அது நாகேஷ்தான்.”

கோபுவைத் தேற்றியபடி தொடர்கிறார் அவரின் மனைவி ராஜலட்சுமி அம்மாள்.

“நிறைய சம்பாதிக்கலை, ஆனா நிறைவா வாழ்ந்துட்டேன்!”

“என்னை இவர் பொண்ணு பார்க்க வந்தப்ப இவரோட நாகேஷும் வந்திருந்தார். அப்ப என்கிட்ட பேசின நாகேஷ், ‘யம்மா, இவன் குண்டா இருக்கானேனு நினைக்காத. உன்னை நல்லா பார்த்துக்குவான், நம்பிக் கல்யாணம் பண்ணிக்க’னு சொன்னார். அப்படித்தான் எங்க கல்யாணம் நடந்துச்சு. அவரோட குடும்பமும் நாங்களும் பல வருஷம் நட்பா இருந்தோம். ஆனா அவர் கல்யாணத்துக்குத்தான் போக முடியலை” என்று சொல்லி ராஜலட்சுமி மௌனமாகிறார். கோபு தொடர்கிறார்.

“நாகேஷ் கிறிஸ்துவப் பெண்ணைத் திருமணம் செய்துகிட்டான். அதனால ரொம்பநாள் நானும் என் அம்மாவும் அவனோட பேசுறதை நிறுத்திட்டோம். இன்னைக்கு நினைச்சுப்பார்த்தா என்னை நினைச்சு எனக்கே வெறுப்பாதான் இருக்கு. எவ்வளவு நல்ல நட்பு. அதுல கீறல் விழ மதத்தைக் காரணமா காட்டிட்டோமேனு... எனக்கு உடம்புக்கு முடியாம இருந்ததால அவன் இறந்ததுக்குக்கூட என்னால போக முடியலை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவனை மாதிரியான நண்பன் கிடைக்கவே மாட்டான்.”

நாகேஷிலிருந்து நாடகத்திற்கு நகர்கிறது உரையாடல். ``நாகேஷ் போலவே சோவும் ஒய்.ஜி.மகேந்திரனும் என் நண்பர்கள்; நலம் விரும்பிகள். அவங்க இருவரும் நான் ரொம்பக் கஷ்டமான காலகட்டத்துல இருந்தப்ப நிறைய உதவிகள் செஞ்சிருக்காங்க. ஒய்.ஜி.மகேந்திரனோட சேர்ந்து நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். நாடகம் போட அவரோட சேர்ந்து பல உலக நாடுகள் சுத்தியிருக்கேன்.

ஒருமுறை சோ நாடகத்தைப் பார்க்கப் போயிருந்தேன். அவர் நாடகத்துல நடிக்க வேண்டியவர் நீலு. அவரால் தவிர்க்கமுடியாத காரணத்தால் அன்னைக்கு வர முடியலை. ‘ஒரு சாயல்ல கோபுவும் நீலு மாதிரிதான் இருக்கான். இந்த நாடகத்துல நீதான் நீலு. பண்ணு’ன்னார். ‘நாடகம் ஆரம்பிக்க இன்னும் கால் மணிநேரம்தான் இருக்கு. ரிகர்சல் பண்ணாம என்னால எப்படி நடிக்க முடியும்?’னேன். ‘ஆன் தி ஸ்பாட்ல தோணுறதைப் பேசு. நான் சமாளிக்கிறேன்’னார். அப்படித்தான் சோவோட நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன்.” நாடகத்தைப் பற்றிப் பேசும்போது கோபுவின் பேச்சில் ஒரு குழந்தையின் குதூகலம் தெரிகிறது.

“நிறைய சம்பாதிக்கலை, ஆனா நிறைவா வாழ்ந்துட்டேன்!”

பேச்சு நடிகர் சங்கம் பக்கம் திரும்பியது. “நான் எங்கே இருக்கேனு சினிமாவில் இருக்கிற பலருக்கும் தெரியாம இருந்தப்ப, குட்டிபத்மினிதான் இரண்டு வருஷத்துக்கு முன்ன என்னை நடிகர் சங்கத்துக்கு அழைச்சுட்டுப்போய் உதவினார். இப்ப நடிகர் சங்கத்துல இருந்து எனக்கு மாசாமாசம் 2,500 ரூபாய் பென்ஷன் வருது. அதை வெச்சுதான் எனக்கும், என் மனைவிக்குமான மருந்து மாத்திரைகளை வாங்கிக்கிறோம்.” தேவைகளைப் பற்றி, தன் கணவர் பேசத் தயங்கியதை உணர்ந்த ராஜலட்சுமி அம்மாள், தொடர்கிறார்.

“எனக்கு 78 வயசாகுது. டயாலிசிஸ் பேஷன்ட். அவருக்கு 84 வயசு. எங்களுக்கு இரண்டு பசங்க, ஒரு பொண்ணு. மூத்த பையன் அவனோட மாச வருமானத்துல அவன் குடும்பத்தைப் பார்க்கவே அவனுக்கு சரியா இருக்கு. ரெண்டாவது பையனுக்கு 40 வயசுக்கும் மேல ஆகுது. கல்யாணம் பண்ணிக்கலை. எங்ககூடத்தான் இருக்கான். மாசம் எட்டாயிரம் சம்பளத்துக்கு ஒரு இடத்துல வேலைக்குப்போறான். அவன் சம்பளத்தை வெச்சுதான் குடும்பத்தை ஓட்டுறோம். என் கணவர் 60 வருஷங்களுக்கு மேல சினிமாவுல இருக்கார். ஜெயலலிதா அம்மா போயஸ்கார்டன் வீட்டைக் கட்டி கிரஹப்பிரவேசம் பண்ணினப்ப நாங்க குடும்பத்தோட விருந்தினர்களா கலந்துகிட்டோம்.  அவங்க ஆட்சியில் இவருக்குக் கலைமாமணி விருது கொடுத்தாங்க. அதுக்குப்பிறகு அவங்களைப் பார்க்க பலமுறை முயற்சி பண்ணினோம். முடியலை.

என் வீட்டுக்காரர் மற்றவங்கள்ட்ட உதவி கேட்க யோசிப்பார். இந்த வீட்டுக்கு 3,500 ரூபாய் வாடகை. அதைக்கொடுக்கக்கூட சில மாசங்கள்ல சிரமப்படுறோம். சினிமாவுல இருக்கிற நல்ல உள்ளங்கள் உதவினா நல்லா இருக்கும்” அழும் தன் மனைவியைத் தேற்றிய கோபு, “நான் அளவுக்கதிகமா சம்பாதிக்கலைங்க. ஆனா, நிறைவா வாழ்ந்துட்டேன். நீங்க நேர்ல வந்து பேட்டி எடுக்கிற அளவுக்குப் புகழ் அடைஞ்சிருக்கேனே, அது போதும்மா!”

நிறைவாக வாழ்ந்துவிட்டதன் பெருமிதத்தோடு விடைகொடுத்தார் டைப்பிஸ்ட் கோபு.