Published:Updated:

கறுப்பா பொறந்தது என் குத்தமா? - தீபா

கறுப்பா பொறந்தது என் குத்தமா? - தீபா
பிரீமியம் ஸ்டோரி
கறுப்பா பொறந்தது என் குத்தமா? - தீபா

வலிகள் தாண்டிய வாழ்வுகு.ஆனந்தராஜ், படங்கள் : வ.யஷ்வந்த்

கறுப்பா பொறந்தது என் குத்தமா? - தீபா

வலிகள் தாண்டிய வாழ்வுகு.ஆனந்தராஜ், படங்கள் : வ.யஷ்வந்த்

Published:Updated:
கறுப்பா பொறந்தது என் குத்தமா? - தீபா
பிரீமியம் ஸ்டோரி
கறுப்பா பொறந்தது என் குத்தமா? - தீபா

``தீபாவளி அன்னிக்குப் பிறந்தேனாம். அதனாலதான் என் பேரு தீபா. பேருலதான் பிரகாசம். நிஜ வாழ்க்கையில புறக்கணிப்பு, வலி, அழுகைதான். கறுப்பா பொறந்தது என் குத்தமா? விளையாட்டு, படிப்பு, ஆண்டு விழானு எதுலேயுமே கூடப்படிக்கிற புள்ளைங்க என்னைச் சேர்த்துக்க மாட்டாங்க. ‘நீயெல்லாம் ஸ்டேஜுக்கு வேணாம்’னு டீச்சரும் சொல்லுவாங்க. ஆனா, இன்னிக்கு நானும் ஒரு நடிகை ஆகிட்டேன்’’ -  முகம் சிரித்தாலும், மனம் சுருண்டுபோயிருக்கிறது தீபாவுக்கு. ‘மெட்டி ஒலி’ சீரியலில் அறிமுகமாகி, இன்று கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்' படத்தில் அவருக்கு அக்காவாக நடித்திருப்பது வரை, தீபா தாண்டிவந்துள்ள வலிகள் பல.

‘`எப்பப் பார்த்தாலும் என்னை ஒதுக்கிற பள்ளிக்கூடம் எனக்கு வேணாம்னு, `ப்ளஸ் ஒன்’னுக்கு அப்புறம் போகலை. வீட்டுல டான்ஸ் ஆடுறது, ஏதாச்சும் ஒரு சினிமா சீனை நடிச்சுப் பார்க்கிறதுனு இருந்தேன். ‘லூசு மாதிரி பண்ணிக்கிட்டுக் கிடக்காளே’னு எங்க வீட்டு ஆளுங்களே திட்டுவாங்க’’ என்று வெள்ளந்திச் சிரிப்புடன் சொல்லும் தீபா, கணவர், உடல்நலக் குறைபாடுகளுடன் கூடிய தன் குழந்தைகளுடன், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் வசிக்கிறார்.

“ஸ்கூல்ல இருந்து டிராப் ஆனதும், தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மூணு வருஷங்கள், அப்புறம் டான்ஸ்ல டீச்சர் டிரெய்னிங் கோர்ஸ் முடிச்சேன். அடுத்து சென்னை மியூசிக் காலேஜ்ல சேர்ந்தேன். அங்கே ஆடல் கலைமணி, நட்டுவாங்க நன்மணினு ரெண்டு கோர்ஸைச் சேர்த்து அஞ்சு வருஷங்கள் படிச்சேன். இடைப்பட்ட காலத்துல, ‘மெட்டி ஒலி’ சீரியல் ஆடிஷன்ல செலக்ட் ஆனேன். தூத்துக்குடி, முத்தையாபுரத்துல இருக்கிற எங்க வீடு ரணகளமானது. ‘நடிக்கக் கூடாது’னு சொல்லி அப்போ எங்கப்பா அடிச்ச அடியில, ரெண்டு நாள் என்னால எழுந்திரிக்க முடியல. ‘என்னால ஒரு நாளும் உங்க பேரு கெடாது’னு சொல்லி, வீட்டு எதிர்ப்பை மீறி ‘மீனா’ங்கிற கேரக்டர்ல நடிச்சேன். அடுத்து, ‘மலர்கள்’ சீரியல்ல ஒரு கறுத்தப் புள்ளை கேரக்டர்ல நடிச்சேன். அப்போதான் எனக்குக் கல்யாணமாச்சு. பிறகு, ‘மேகலா’, ‘கோலங்கள்’, ‘அழகி’னு பல சீரியல்கள்ல நடிச்சேன்’’ என்கிறவர், திரைப்படங்களிலும் முகம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

கறுப்பா பொறந்தது என் குத்தமா? - தீபா

‘` ‘வெடிகுண்டு முருகேசன்’ படத்துல மனவளர்ச்சி இல்லாத பொண்ணா நடிச்சேன். அடுத்து ‘மாயாண்டி குடும்பத்தார்’ல நாலு ஆம்பளப் புள்ளைக கூடப் பொறந்த பொறப்பா நடிச்சேன். அந்தப் படத்தின் டைரக்டர் ராசுமதுரவன் சார், எனக்கு டயலாக் எதுவும் சொல்லாம, ‘நீங்க கிராமத்துப் பொண்ணு தானே? இந்த சீன்ல, உங்க பையனுக்குக் காது குத்தும் நிகழ்ச்சியில சொந்த தம்பி சாப்பிடாம போவான். அப்போ நீங்க என்ன பண்ணுவீங்களோ அதை செய்யுங்க’னு சொன்னார். எதார்த்தமா நடிச்சேன். ஒரே டேக்ல  `ஓகே’ ஆகிடுச்சு. அந்தப் படம் தான் எனக்கு நல்ல அடையாளம் கொடுத்துச்சு. நான் நடிச்ச ‘தி யெல்லோ ஃபெஸ்டிவல்’ ஷார்ட் ஃபிலிம் நிறைய பாராட்டுகளைக் வாங்கிக் கொடுத்துச்சு. அதன் மூலமா ‘செம’ படத்துல நடிக்கிற வாய்ப்பு வந்துச்சு. என் நடிப்பு பிடிச்சுப்போய், அந்தக் குறும்படத்தின் தயாரிப்பாளர் பாண்டிராஜ் சார் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துல வாய்ப்பு கொடுத்தார்” என்கிற தீபாவை, திரைத்துறையிலும் ஆரம்ப காலங்களில் புறக்கணிப்பு உடைத்துப்போட்டிருக்கிறது.

“எனக்கு மாடர்னா டிரஸ் பண்ணத் தெரியாது. நாகரிகமா பேசத் தெரியாது, பகட்டா நடந்துக்கத் தெரியாது, ஸ்டைலாவெல்லாம் சாப்பிடத் தெரியாது. எங்க ஊருல, வீட்டுல இருக்கிற மாதிரிதான் எங்கே போனாலும் இருப்பேன். அதனாலேயே என்னை எளக்காரமா பார்ப்பாங்க. ‘நீயெல்லாம் இப்போ சாப்பிட்டு என்ன பண்ணப்போற? கடைசியா வா’னு கையில வெச்சிருக்கும் தட்டைப் பிடுங்கி வெச்சுப்பாங்க. ஓரமா போய் அழுவேன்.

சினிமாவுக்கு வந்த இந்த பதினைந்து வருஷப் போராட்டத்துல, இன்னும் எனக்குனு பெரிசா ஓர் அடையாளம் கிடைக்கல. இன்னொரு பக்கம், இதே நடிப்புக்காகப் பிறந்த வீட்டு ஒறவுக என்னோடு பேசாம இருக்கிற துயரமும் தீரல. ஆனாலும், வாழ்க்கை மேல நம்பிக்கை இருக்கு. பார்ப்போம்...’’ என்று உருக்கமாகச் சொல்லும் தீபா, தன் குழந்தைகள் பற்றிப் பேசினார்.

“பெரிய பையன் தனிஷ், ஆறாம் வகுப்புப் படிக்கிறான். பிறவிலேயே செவித்திறன், பேச்சுத்திறன் இல்ல. அவனுக்கு ரெண்டு வயசு ஆனபோதே பிரத்யேக காது கேட்கும் கருவி வெச்சு பேச்சுப் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சோம். அவனுக்காக சென்னை, போரூர்ல வெச்சிருந்த மளிகைக்கடையை வித்துட்டு, கொஞ்ச காலம் டான்ஸ் டீச்சர் வேலைக்குப் போனேன். ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை காது கேட்கிற மெஷினை மாத்தணும். அதுக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் செலவாகும். சின்னப் பையன் சேதுராம், மூணாம் வகுப்பு படிக்கிறான். இதயப் பிரச்னையோட பிறந்த இவனுக்கு, ரெண்டு பெரிய ஆபரேஷன் பண்ணியிருக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கறுப்பா பொறந்தது என் குத்தமா? - தீபா

‘நீ நடிக்கும்போது கேமரா வெளிச்சம்பட்டுதான் அவனுக்கு இப்படி ஆகிடுச்சு’னு நிறைய வசை கேட்டுட்டேன். அதெல்லாம் காரணமில்லைனு நான் எந்த விளக்கமும் யாருக்கும் கொடுக்கலை. ஆனா, ரெண்டு சிசேரியன், உள்ளுக்குள்ள வெச்சு புதைச்ச கவலைனு எல்லாம் சேர்ந்து என் வெயிட் கூடிடுச்சு. தொடர்ச்சியான வாய்ப்புகளோ, வருமானமோ இல்லை. ஆனாலும், நடிப்புக் கலையை உசுருக்கு இணையா நேசிக்கிறேன். அதைப் புரிஞ்சுகிட்டு, கல்யாணமான காலத்தில் இருந்து இன்னிக்கு வரை எனக்கு சப்போர்ட் பண்ற ஒரே ஆள் என் வீட்டுக்காரர் சங்கர்தான். ஓலா கார் ஓட்டுறார்’’ எனும்போது ஒரு பூரணம் பரவி மறைகிறது தீபாவின் முகத்தில்.

‘`இப்போ ‘மரகதவீணை’, ‘சரவணன் மீனாட்சி’ சீரியல்கள்லயும், பிரபுதேவா படம் ஒண்ணுலேயும் நடிக்கிறேன். என்னதான் நான் வறுமையில இருந்தாலும், மத்தவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவி
களைச் செய்றேன். வசதியில் லாத குழந்தைகளுக்கு பல வருஷமா இலவச டான்ஸ் க்ளாஸ் எடுக்கிறேன். அவங்கள்ல பலரும் இப்போ தனியா க்ளாஸ் எடுக்குறாங்க. இப்போகூட எங்கிட்ட அஞ்சு புள்ளைக
டான்ஸ் கத்துக்குதுங்க. ஏழைக் குழந்தைங்களுக்கு உதவுறதுக்காக சில மேடை நிகழ்ச்சிகளும் செய்துட்டு இருக்கேன். என்னையெல்லாம் பேட்டி எடுப்பாங்கன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. இப்போ சந்தோஷமா இருக்கு” - கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சிரிக்கிறார், தீபா.

அழகி!