Published:Updated:

``ரஜினி - எஸ்.பி.முத்துராமன் தொடங்கி, சிவா - சி.எஸ்.அமுதன் வரை... கோலிவுட்டின் டாப் காம்போ!"

``ரஜினி - எஸ்.பி.முத்துராமன் தொடங்கி, சிவா - சி.எஸ்.அமுதன் வரை... கோலிவுட்டின் டாப் காம்போ!"
``ரஜினி - எஸ்.பி.முத்துராமன் தொடங்கி, சிவா - சி.எஸ்.அமுதன் வரை... கோலிவுட்டின் டாப் காம்போ!"

தமிழ் சினிமாவில் இருந்த, இருக்கும் பாப்புலரான இயக்குநர் - ஹீரோ காம்போக்களைப் பற்றிய தொகுப்பு!  

ங்களுக்கான சில தனித்துவமான விஷயங்களை வைத்து சினிமாவில் ஜொலிப்பது சவாலான காரியம். இயக்குநருக்கோ, ஹீரோவுக்கோ தங்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ற ஒரு பார்ட்னர் கிடைத்தாலே, பாதி வெற்றிதான்!. அப்படி, தமிழ் சினிமாவில் இருந்த, இருக்கும் பாப்புலரான இயக்குநர் - ஹீரோ காம்போவைப் பார்ப்போம்.   

ரஜினிகாந்த் - எஸ்.பி.முத்துராமன் : 

`அபூர்வ ராகங்கள்' படத்தில் இயக்குநர் பாலசந்தர் ரஜினியை அறிமுகப்படுத்தியிருந்தாலும், எஸ்.பி.முத்துராமன் - ரஜினிகாந்த் கூட்டணிதான் அதிகப் படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறது. `புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில் தொடங்கிய இந்தக் கூட்டணி, `ஆறிலிருந்து அறுபது வரை', `முரட்டுக்காளை', `வேலைக்காரன்', `பாயும் புலி', `நான் மகான் அல்ல' `குரு சிஷ்யன்', `தர்மத்தின் தலைவன்' என வெற்றி நடைபோட்டுக்கொண்டே இருந்தது. இறுதியாக, `பாண்டியன்' என்ற படத்துடன் இந்தக் கூட்டணி நிறைவுக்கு வந்தது. 23 படங்கள் எஸ்.பி.முத்துராமனுடன் பணியாற்றிய ரஜினிகாந்த், கே.பாலசந்தரின் இயக்கத்தில் 9 படங்களில் நடித்திருக்கிறார். மேலும், தனக்கு நெருக்கமான இயக்குநர்கள் பட்டியலில் இயக்குநர் மகேந்திரனின் பெயரைப் பல இடங்களில் கூறியிருக்கிறார். 

கமல்ஹாசன் - கே.பாலசந்தர் :

`அரங்கேற்றம்' படத்தில் அரங்கேறிய இந்தக் கூட்டணிக்குத் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. `அபூர்வ ராகங்கள்', `அவள் ஒரு தொடர்கதை', `மூன்று முடிச்சு', `நினைத்தாலே இனிக்கும்', `புன்னகை மன்னன்', `வறுமையின் நிறம் சிவப்பு' உள்ளிட்ட தமிழ்ப் படங்களும் `ஏக் துஜே கே லியே' உள்ளிட்ட இந்திப் படங்களும் இந்தக் கூட்டணியில் உருவானது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளியான `உத்தம வில்லன்' படத்தில் இருவரும் இயக்குநர் - கதாநாயகனாகவே நடித்திருந்தனர். அவர்கள் வரும் காட்சிகளில் இவர்களுக்குள்ளான ஆத்மார்த்தமான உறவு வெளிப்பட்டதைப் பார்த்தோம். இந்த கிளாசிக் கூட்டணியின் கடைசிப் படமும் இதுதான். 

விக்ரம் - பாலா :

நடிகர் விக்ரமின் சினிமா கரியரை `சேது'வுக்கு முன், பின் எனப் பிரித்துவிடலாம். தமிழ், மலையாளம், தெலுங்கு எனத் தன்னை நிரூபிக்க ஓடிக்கொண்டிருந்த விக்ரமிற்கு, அறிமுக இயக்குநர் பாலாவின் `சேது' அடையாளம் கொடுத்தது. நிறைய தடங்கல்கள், பிரச்னைகள் துரத்த, இந்தக் கூட்டணியின் கடின உழைப்பாலும், முயற்சியாலும் சியானை மக்கள் கொண்டாடத் தொடங்கினார்கள். தொடர்ந்து, `பிதாமகன்' படத்தில் தன் நடிப்பால் மிரட்டினார், விக்ரம். இந்த இரு படங்கள் இவர்களுக்கான டிரேட் மார்க். விக்ரம் மகன் துருவ்வை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பாலா எண்ணியது, தன் மகன் நடிகனானால் அது பாலா இயக்கத்தில்தான் என விக்ரம் நினைத்தது... என இவர்களது நட்பு தலைமுறை கடந்தும் பயணிக்கிறது.  

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ :

பல இயக்குநர்களுடன் கைக்கோத்து ஐம்பது படங்களைக் கடந்து விஜய் தன் சினிமா பயணத்தைத் தொடர்ந்து வரும் சமயத்தில், உருவானதே விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி. `துப்பாக்கி' படத்தில் ராணுவ வீரர்களின் வாழ்க்கையைச் சொன்ன இந்தக் கூட்டணி, `கத்தி' படத்தில் விவசாயி பிரச்னையையும், `சர்கார்' படத்தில் ஓட்டுரிமையைப் பற்றியும் பேசினார்கள். அடுத்ததாக, `தெறி', `மெர்சல்' என தன் சினிமா பயணத்தை விஜய்யுடன் பயணித்து வருகிறார், இயக்குநர் அட்லீ. இந்த இரு கூட்டணியில் உருவாகும் படங்கள் மக்களால் பேசப்பட்டவை. 

அஜித் - சிவா : 

காதல் மன்னனாக இருந்த அஜித், ஆக்‌ஷன் படங்களிலும் நடித்து வந்தார். நிறைய இயக்குநர்களுடன் பணியாற்றிய அஜித், 2014- ம் ஆண்டு வெளியான `வீரம்' படத்துக்குப் பிறகு சிவாவைத் தவிர வேறெந்த இயக்குநர்களிடமும் கைக்கோக்கவில்லை. `வீரம்', `வேதாளம்', `விவேகம்', இப்போது `விஸ்வாசம்' என `வி' வரிசை படங்களை வரிசையாக வெளியிட்டு வருகிறது இந்தக் கூட்டணி. டூயல் ரோல், வில்லேஜ் சப்ஜெக்ட், அஜித் - நயன்தாரா கூட்டணி என மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கிறது, இந்தக் கூட்டணியின் அடுத்த படைப்பான `விஸ்வாசம்'.   

சூர்யா - ஹரி :

அதிவேக திரைக்கதையும் அனல் பறக்கும் வசனமும்தான், இயக்குநர் ஹரியின் அடையாளம். `ஆறு', `வேல்', `சிங்கம்' படத்தின் மூன்று பாகங்கள் என இந்தக் கூட்டணி நன்றாகவே ஸ்கோர் செய்தது. ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், ஃபேமிலி ஆடியன்ஸையும் கவர்வது இந்தக் கூட்டணியின் ஸ்டைல். ஹீரோவுக்கு நிகராக வில்லனையும் பயங்கரமாகக் காட்டி, இறுதியில் அசத்தல் பன்ச், கார்கள் பறக்கும் சண்டைக் காட்சிகள்... என ஹீரோவை ஜெயிக்க வைக்கும் ஹரிக்கும், நடிகர் சூர்யாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க் அவுட் ஆகும்.

தனுஷ் - வெற்றிமாறன் :

மூன்று படத்தில் ஹீரோவாக, ஒரு படத்தில் தயாரிப்பாளராக... என வெற்றிமாறன் இயக்கிய நான்கு படங்களிலும் தனுஷ் நிறைந்திருக்கிறார். பிரபு, கருப்பு, அன்பு என வெற்றிமாறன் படத்தில் வரும் தனுஷின் கேரக்டர்கள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்தவை; கொண்டாடப்பட்டவை. நேர்த்தியான திரைக்கதை, அசத்தலான நடிப்பு... இவ்விரண்டும் ஒன்று சேரும்போது, தானாகவே ரசிகர்களை உருவாக்கும். அதுதான் இந்தக் கூட்டணிக்கும் நிகழ்ந்தது. 

சிவகார்த்திகேயன் - பொன்ராம் :

நக்கல் நையாண்டியுடன் ஜாலியாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு அவர் மைண்ட் செட்டில் அமைந்தவர், இயக்குநர் பொன்ராம். என்டர்டெயினிங் கமர்ஷியல் படம் என்பதைக் கையிலெடுத்த இந்தக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு கிடைத்தது. `வருத்தப்படாத வாலிபர் சங்கம்', `ரஜினிமுருகன்', `சீமராஜா' என இவர்களின் அடுத்தடுத்த முயற்சிக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்தன. இரண்டரை மணி நேரம் கவலை மறந்து படத்தின் கேரக்டர்களோடு சேர்ந்து, பார்ப்பவரையும்யும் ஜாலியாக வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது, இந்தக் கூட்டணி.  

விஜய் சேதுபதி - சீனு ராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் :

எல்லாப் படங்களிலும் தன் எதார்த்த நடிப்பால் கவரும் விஜய் சேதுபதி, ஹீரோவாகத் தன்னை மக்கள் முன்னிலையில் நிறுத்திய சீனு ராமசாமியின் படங்கள் என்பதனாலோ என்னவோ, அவர் படங்களில் தனித்து ஜொலிக்கிறார். அதேபோல, குறும்படக் காலங்களிலிருந்து ஒன்றாகவே பயணிக்கும் நண்பர் கார்த்திக் சுப்புராஜுடன் பணிபுரியும்போதும் இவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி திரையில் பளிச்செனத் தெரியும் அழகே அழகு.     

சிவா - சி.எஸ்.அமுதன் :

ஹிட் சினிமாக்களையும் டெம்ப்ளேட் காட்சிகளையும் ஸ்பூஃப் செய்வதை தங்களுக்கான ஜானராக எடுத்துக்கொண்டு மக்கள் மத்தியில் பாப்புலரானது சிவா - சி.எஸ்.அமுதன் காம்போ. `தமிழ்ப் படம்' படத்துக்குப் பிறகு எட்டு வருடம் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் `தமிழ்ப் படம் 2' மூலம் உதயமானது. ஃபர்ஸ்ட் லுக் முதல் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி வரை எல்லாமே ஸ்பூஃப்தான். இந்தக் கூட்டணிதான் சிவாவை `அகில உலக சூப்பர் ஸ்டாரா'க அறிமுகப்படுத்தியது. இவர்களின் அடுத்த படத்தின் அறிவிப்பு எப்போது வந்தாலும், அதைக் கொண்டாட சிவாவின் விழுதுகள் தயாராக உள்ளன. 

இன்னும் பல ஹிட் ஹீரோ- இயக்குநர் காம்போ தமிழ்சினிமாவில் உண்டு. அதில், உங்களுக்குப் பிடித்த கூட்டணியை கமென்ட் பாக்ஸில் பதிவு செய்யலாமே?! 

அடுத்த கட்டுரைக்கு