Published:Updated:

``விஷால்கூட சண்டைலாம் போட்ருக்கேன்... ஆனா அவரோ...?!" - ஜே.எஸ்.கே உருக்கம்

தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் நடிகர் விஷால் பற்றிய சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

``விஷால்கூட சண்டைலாம் போட்ருக்கேன்... ஆனா அவரோ...?!" - ஜே.எஸ்.கே உருக்கம்
``விஷால்கூட சண்டைலாம் போட்ருக்கேன்... ஆனா அவரோ...?!" - ஜே.எஸ்.கே உருக்கம்

`பொதுவா எனக்கும் விஷாலுக்கும் இடையேயானா உறவுமுறை எப்படியிருக்கும்னு வெளியே இருந்து பார்க்கிற உங்க எல்லோருக்கும் நல்லா தெரியும்னு நினைக்கிறேன். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஏதாவது தவறு செய்தால் அதை முதல் ஆளாக முன்நின்று தட்டிக் கேட்பவன் நான். உதாரணத்துக்கு `96' பட பிரச்னையின்போதுகூட விஷாலைப் பற்றி முதலில் பேசியது நான்தான்.'' இப்படித்தான் ஆரம்பித்தது தயாரிப்பாளர் ஜே.எஸ்.கேவுடனான உரையாடல். 

``விஷாலைப் பற்றி ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். அதற்கு விகடன் இணையதளம்தான் சரியா இருக்கும்.'' என்றவர், தொடர்ந்தார்.  

``பள்ளிப் பருவத்தில் என்கூட படிச்ச பசங்க எல்லோரும் சேர்ந்து ஒரு ரீ-யூனியனுக்கு பிளான் பண்ணோம். இந்தச் சந்திப்பின்போதுதான், விஷாலைப் பற்றிய ஒன்று தெரியவந்தது. என் நண்பர் ஒருவர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கு. திடீர்னு ஒருநாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமப் போச்சு. நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அவரை குளோபல் மருத்துவமனையில் சேர்த்தோம். பத்து நாள் தொடர்ந்து அவருக்கு ட்ரீட்மென்ட். மருத்துவச் செலவுக்கான தொகையை நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து திரட்டிக் கொடுத்தோம். டாக்டர் ஒருநாள் எல்லோரையும் அழைத்து, `அவருடைய கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கு. அவருடைய உயிரைக் காப்பாத்தணும்னா, யாராவது கல்லீரல் தானமா கொடுக்கணும்னு'னு சொல்லிட்டார். நண்பருடைய மனைவியே கல்லீரல் தானம் கொடுக்க முன்வந்தாங்க, ஆபரேஷன் தொடங்கியது.

ஆபரேஷனுக்கான செலவு 20 லட்சம், கூடுதல் மருத்துவச் செலவுக்கு 5 லட்சம் ரூபாய் பணம் தேவை. இவ்வளவு பெரிய தொகையை நண்பர்களால் திரட்ட முடியலை. அதனால, எங்களால முடிஞ்ச அளவுக்கு ஒரு தொகையை ரெடி பண்ணோம். இதுக்கு ஏதாவது உதவி கிடைக்கும்னு நினைச்சு, நான் சினிமாவில் இருக்கிற பிரபலங்கள் பலருக்கு மெசேஜ் அனுப்பினேன். அதைப் படித்த பலரும் கடந்து போயிட்டாங்க. யார்கிட்ட இருந்தும் உதவி கிடைக்கலை. திடீர்னு ஒருநாள் இரவு 12 மணிக்கு விஷாலிடமிருந்து அழைப்பு வந்தது. `பிரதர்.. நீங்க  அனுப்புன மெசேஜ் பார்த்தேன், கஷ்டமா இருந்துச்சு. யார் அவர், அவருக்கு என்ன உதவி தேவை?'னு கேட்டார். விஷால் எனக்கு  போன் பண்ணிப் பேசியது ஆச்சர்யம். ஏன்னா, பெரும்பாலும் நான் அவரை எதிர்த்திருக்கேன். சங்க விஷயங்களில் இருவருமே எதிரெதிர் துருவங்களில் நின்னோம். 

தொடர்ந்து விஷால், `அவருக்கு என்ன தேவையோ, அதைச் செய்யுங்க... என்னால என்ன பண்ண முடியுமோ, நான் அதைப் பண்றேன்'னு சொன்னார். சொன்னதோட, தினமும் என் நண்பரைக் குறித்து விசாரிச்சுக்கிட்டே இருந்தார். மருத்துவமனைக்கு போன் பண்ணி டாக்டர்கிட்ட பேசினார். விஷால் சார்பா மருத்துவமனைக்கே சிலர் வந்து நலம் விசாரிச்சுட்டுப் போனாங்க.

ஆபரேஷனுக்குக் குறித்த தேதி வந்தது. ஆனா, நண்பரை ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டு போறதுக்கு சில மணி நேரத்துக்கு முன்னாடியே நண்பர் இறந்துட்டார். விஷால் வழக்கம்போல போன் பண்ணி, `என்ன பிரதர்.. ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சதா?'னு கேட்டார். நடந்த விஷயத்தைச் சொன்னேன். `மருத்துவமனையிலிருந்து அவருடைய உடலை எடுத்துச் செல்ல 10 லட்சம் ரூபாய் தேவைப்படுது. பணத்தைக் குறைக்கச் சொல்லி மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியிருக்கேன்'னு சொன்னேன். இரண்டு மணி நேரம் கழிச்சு திரும்பவும் போன் பண்ண விஷால், `மருத்துவமனை நிர்வாகத்திடம் நான் பேசிட்டேன். நீங்க ஒரு ரூபாய்கூட கொடுக்கத் தேவையில்ல. அவருக்கு ஆகவேண்டிய வேலையைப் பாருங்க'னு சொன்னார். எனக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியலை... `உன் இடத்துல நான் இருந்திருந்தா, இப்படிப் பண்ணியிருக்கமாட்டேன்பா... ரொம்ப நன்றி. நீங்களும் நானும் எதிரெதிரா நின்னு பேசிக்கிட்டிருந்த ஆள்கள்'னு உடைஞ்சு சொன்னேன். 'இல்ல பிரதர்... இது என் கடமை'னு சொன்னார், விஷால். 

விஷால் பேசுறதுக்கு முன்னாடி என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்க, மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினேன். அப்போதான், விஷாலோட இன்னொரு முகம் எனக்குத் தெரிஞ்சது. அந்த மருத்துவமனையில் தத்தெடுக்கப்பட்ட 5 வயதுக் குழந்தைகளுக்கு இலவசமா கல்லீரல் மாற்றம் பண்றாங்க. அதைப் பற்றிப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த பிரபலம் ஒருத்தர் இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்ச மருத்துவமனை நிர்வாகம், விஷாலை அணுகியிருக்காங்க. அதுக்கு விஷால், `நான் நிச்சயம் பண்றேன். ஆனா, உங்க மருத்துவமனையில் இருக்கிற ஜே.எஸ்.கே-வின் நண்பருடைய உடலை எடுத்துச்செல்ல எந்தப் பணமும் கேட்காதீங்க. அதுக்குப் பதிலா, நீங்க எனக்குக் கொடுக்கிற வேலைக்குச் சம்பளம் வேணாம்'னு பேசியிருக்கார். இதைக் கேள்விப்பட்டதும், விஷாலை நினைச்சு எனக்குப் பெருமையா இருந்தது. எனக்கும் அவருக்கும் எவ்வளவோ சண்டைகள் வந்திருக்கு, வாக்குவாதம் நடந்திருக்கு... தன்னைப் பிரபலப்படுத்திக்க பணம் கொடுக்கிற எவ்வளவோ பேருக்கு மத்தியில், வலது கைக்குச் செய்ற உதவியை இடது கைக்குத் தெரியாமப் பண்ணியிருக்கார், விஷால். அந்த நல்ல மனிதனுக்கு இந்தத் தருணத்துல மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக்கிறேன்'.' என்று முடித்தார், உருக்கமாக!