Published:Updated:

கேமரா ரோலிங் சார்!

மு.பார்த்தசாரதி - படம்: சொ.பாலசுப்ரமணியன்

பிரீமியம் ஸ்டோரி

மூவி பஃப் நடத்தும் ‘ஃபர்ஸ்ட் க்ளாப்’ குறும்படப்போட்டியின் இரண்டாவது சீசன் இது. படத்தின் நீளம் 3 நிமிட அளவு மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை  ஏற்று, தேர்வுக்காக வந்திருந்த 750க்கும் மேற்பட்ட படங்களிலிருந்து முதல் கட்டத்தில் 26 படங்கள் தேர்வாயின. அவற்றிலிருந்து இயக்குநர்கள் ராம், விக்னேஷ் சிவன், அருண் பிரபு உள்ளிட்ட 10 பேர்கள் கொண்ட நடுவர் குழு ஐந்து குறும்படங்களைத் தேர்ந்தெடுத்தது. ஏற்கெனவே இந்தக் குறும்படங்களை யூடியூப்பில் நீங்கள் பார்த்திருக்கலாம். திரையரங்குகளிலும் திரையிடப்படுகின்றன. இந்த ஐந்து படங்களில் பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் ஏதேனும் ஒரு குறும்படம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

கேமரா ரோலிங் சார்!

ஜனநாயகத்தின் மகிமையைப் பணத்துக்கு விற்கும் அவலத்தைத் தோலுரிக்கும் ஷியாம் சுந்தரின் ‘குக்கருக்கு விசில் போடு’, கதைத் திருட்டுக்கு எதிராக உரக்கப் பேசும் சாரங்கு தியாகுவின் ‘பேரார்வம்’, பெண் அரசியல்வாதிகளின் பிரச்னைகளையும் விவசாயிகளின் துயரங்களையும் பேசும் லோகியின் ‘மயிர்’,  பெண்களுக்கு எதிரான குற்றங்களின் ஆணிவேரைக் காட்சிப்படுத்தும் விஷ்ணு எதவனின் ‘கல்கி’, பாலியல் சுரண்டல்கள் குறித்த பாலசுப்ரமணியத்தின் ‘கம்பளிப்பூச்சி’ ஆகியவைதாம் அந்த ஐந்து குறும்படங்கள்.

“நான் திருநெல்வேலிக்காரன். சினிமாவுக்காகதான் சென்னை வந்தேன். ஆனா, பொருளாதாரத் தேவை என்னை ஐ.டிக்குள்ள தள்ளிடுச்சு. ஆனாலும், சினிமாக் கனவை விட்டுடாம முயற்சி பண்ணிட்டிருக்கேன்” என்கிறார் ஷியாம். சாரங்கு தியாகு, “நான் ஒரு இன்ஜினீயரிங் ஸ்டூடன்ட். காலேஜ் படிக்கும்போதே நண்பர்களின் குறும்படங்களில் வொர்க் பண்ணியிருக்கேன்” என்கிறார்.

“பிரசவம் என்கிற வார்த்தையைக் கேட்டாலே எனக்கு சிலிர்ப்பா இருக்கும். என்னைச் சுத்திலும் எப்போதுமே நல்லவங்கதான் இருக்காங்க. அதனாலதான், பிரசவத்தையும் நல்ல  மனிதர்களையும் என் படத்துல மையமா வெச்சிருந்தேன்” என்று சிருஷ்டி ரகசியம் சொல்லிச் சிலிர்க்கிறார் விஷ்ணு எதவன்.

“ஸ்க்ரிப்ட் முடிச்சதுமே இந்துஜா மேம்கிட்ட கால்ஷீட் கேட்குறதுக்காக போன் பண்ணினேன். ரிங் ஆன அடுத்த செகண்டுலயே எடுத்துட்டாங்க. கொஞ்சம் டைம் கிடைக்கும், நிதானமா பேசலாம்னு பார்த்தா இப்படி ஆகிடுச்சேன்னு பதறிட்டேன். ஆனாலும், என் மைண்டுல இருந்ததை அப்படியே அவங்ககிட்ட சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது, அவங்க செம பாசிட்டிவ். ‘ஸ்க்ரிப்ட் சூப்பர் பாஸ். நீங்க நேர்ல வாங்க பேசலாம்’னு சொன்னதுமே நான் செம எனர்ஜியாகிட்டேன்”  உற்சாகம் இன்னும் அப்படியே இருக்கிறது பாலசுப்ரமணியத்திடம்.

மூன்று நிமிடங்களில் பல்வேறு சமூக அவலங்களைப் பதியவைத்துப் படங்கள் ஆக்கியிருக்கும் இந்த ஐந்து இளைஞர்களும், கோலிவுட்டிலும் கால் பதித்துக் கொடி நாட்டுவார்கள் என்று நம்புவோம்.

வாங்க பாஸ், வரவேற்கிறோம்...
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு