Published:Updated:

‘ராஜா’ சிவகார்த்திகேயன்... ‘சிலம்பம் டீச்சர்’ சமந்தா! - சீமராஜ்ஜியம் சீக்ரெட்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘ராஜா’ சிவகார்த்திகேயன்... ‘சிலம்பம் டீச்சர்’ சமந்தா! - சீமராஜ்ஜியம் சீக்ரெட்ஸ்!
‘ராஜா’ சிவகார்த்திகேயன்... ‘சிலம்பம் டீச்சர்’ சமந்தா! - சீமராஜ்ஜியம் சீக்ரெட்ஸ்!

சனா - படம்: ப.சரவணகுமார்

பிரீமியம் ஸ்டோரி

“ ‘ரஜினிமுருகன்’ படத்துக்காக மதுரை பக்கத்துல லொகேஷன் பார்க்கப் போனேன். அப்போ ஒரு ஊருல ஜமீன்தார் வாழ்ந்த அரண்மனை கண்ணுல பட்டுச்சு. உள்ளே போனா, அங்கே வேலை பார்த்த பணியாளர்கள், ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ராஜா வந்துகிட்டிருக்கார். ராணி வந்துருவாங்க’னு ஓவர் பில்டப் கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. அந்த நிமிஷத்துல மனசுல தோணுனதுதான் ‘சீமராஜா’ கதை. இந்தப் படம் ஜமீன்தார் பற்றிய கதையில்லை. ஆனா, ஒரு ராஜா பற்றிய கதை. இன்றைய நவீன உலகத்துல ராஜாக்கள் எப்படியிருக்காங்கனு இந்தப் படம் சொல்லும். ஏன்னா, இன்னுமே ராஜா, ராணி, மந்திரினு ஒரு செட்டப்ல அவங்க வாழ்ந்துட்டிருக்காங்க. சீமராஜாவாகப் படத்துல சிவகார்த்திகேயன் நடிச்சிருக்கார். ஒரு சின்ன சோசியல் மெசேஜ்  சொல்லியிருக்கேன். அந்த மெசேஜ் கண்டிப்பா மக்களுக்குப் பிடிக்கும்’’ - உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார், சிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாகக் கைகோத்திருக்கும் இயக்குநர் பொன்ராம்.

‘ராஜா’ சிவகார்த்திகேயன்... ‘சிலம்பம் டீச்சர்’ சமந்தா! - சீமராஜ்ஜியம் சீக்ரெட்ஸ்!

“தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்துப் படம் எடுப்பதற்கான காரணம் என்ன?”

“ ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தோட கதை சிவாவுக்காக எழுதப்படலை. ஆனா, அந்தக் கதைக்கு சிவா சரியா பொருந்தினார். அதன்பிறகு  ‘ரஜினி முருகன்’ கதை சிவாவுக்காகவே ரெடி பண்ணினேன். ஆனா, ‘சீமராஜா’ கதை எழுதும்போது மனசுல யாரும் இல்லை. கதை எழுத எழுத, கதைக்குள்ளே சிவகார்த்திகேயன் வந்துட்டார். ஆனா, முதலில் கதையை சிவாவிடம் சொல்லாம, வேற ஹீரோக்களிடம் சொல்லலாம்னு முயற்சி செஞ்சேன். எதுவும் சரியா செட் ஆகலை. அந்தச் சமயத்துல நானும் சிவாவும் மீட் பண்ணிப் பேசிட்டிருந்தப்போ, ‘நாம உடனே படம் பண்ணிருவோமா?’னு கேட்டார். சந்தோஷமா இறங்கிட்டோம்!”

“சமந்தாவை எந்த மாதிரியான ரோலில் எதிர்பார்க்கலாம்?”

“ `சுதந்திரதேவி’ங்குற கேரக்டர்ல சிலம்பம் ஆசிரியரா சமந்தா நடிக்கிறாங்க. ‘ரஜினி முருகன்’ படத்திலேயே சமந்தா நடிக்க வேண்டியது. முழுக்கதையும் கேட்டுட்டு விழுந்து விழுந்து சிரிச்சு, தலையணையெல்லாம் தூக்கி எறிஞ்சாங்க. கால்ஷீட் பிரச்னை காரணமா அப்போ சமந்தா பண்ண முடியலை. ‘சீமராஜா’ படத்துக்காகக் கதை சொன்னப்போ, ‘முந்தைய படம் பண்ணலைனு கோவிச்சுக்கிட்டு வராம இருப்பீங்கனு நினைச்சேன். ஆனா தேடி வந்துட்டீங்க’னு சொன்னாங்க. சிலம்பம் க்ளாஸுக்கு சின்சியரா மூணு மாசமா போய்க் கத்துக்கிட்டாங்க.”

‘ராஜா’ சிவகார்த்திகேயன்... ‘சிலம்பம் டீச்சர்’ சமந்தா! - சீமராஜ்ஜியம் சீக்ரெட்ஸ்!

“உங்க படங்களில் சீனியர் ஆக்டர் கண்டிப்பா இருக்காங்களே?”

“உண்மைதான். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துல சத்யராஜ் சார்,  ‘ரஜினி முருகன்’ல ராஜ்கிரண் சார். இந்தப் படத்தில் நெப்போலியன் சார். ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனுக்காகத்தான் இப்படிப் பண்றேன். நாங்க ஏதாவது தவறு செஞ்சாலும் எங்களை வழிநடத்துற முன்னோடிகளா இவங்க இருப்பாங்க. நெப்போலியன் சார், சிவாவுடைய அப்பாவா நடிக்கிறார். அவர் யு.எஸ்.ல செட்டில் ஆகிட்டார். சென்னைக்கு அவர் வந்தப்போ கதை சொல்லி, நடிக்க சம்மதம் வாங்கினேன். ஏழு மணிக்கு ஷூட்டிங்னு சொன்னா, ஆறு மணிக்கெல்லாம் செட்டுக்கு வந்துருவார். ‘சீமராஜா’ ஷூட்டிங்குக்காக ஒவ்வொரு முறையும் யு.எஸ்.ல இருந்துதான் வருவார். நெப்போலியன் சார் நல்ல உயரமான மனிதர். சிவாவும் நல்ல உயரம். ரெண்டு பேரையும் நிக்க வெச்சா ஹைட் அண்டு வெயிட் சரியா இருக்கும். அதுவும் ஒரு காரணம்!”

“சிம்ரன் வில்லியாமே?”

“சிம்ரனுடைய ரசிகன் நான். ரொம்ப சிம்பிளா இருப்பாங்க; டேக்னு சொல்லிட்டா... சிங்கமா மாறிடுவாங்க. மாஸான வில்லியா நடிச்சிருக்காங்க. நெப்போலியன், சிம்ரன், சிவா, சூரி எல்லாரும் ஜாலியா அரட்டை அடிச்சிட்டிருப்பாங்க. அவுட்டோர் ஷூட்டிங் என்பதால் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம். நெப்போலியன் அம்பயர். நான், சிவா, சூரி எல்லாம் பேட்டிங் பண்ணுவோம். சிம்ரன், சமந்தா ரெண்டு பேரும் எங்க டீமை ஜெயிக்க வைக்க கை தட்டிட்டு இருப்பாங்க.

இன்னொரு முக்கியமான விஷயம், கீர்த்தி சுரேஷ் ஒரு கேமியோ ரோல் பண்ணியிருக்காங்க.அந்த ரோலுக்கு யாரை நடிக்க வைக்கலாம்னு யோசிச்சோம். யூனிட்கூட ஃப்ரெண்ட்லியா இருக்கிற யாராவது நடிச்சா நல்லா இருக்கும்னு யோசிச்சோம். கீர்த்தி சுரேஷ்தானே ஒரே சாய்ஸ். கேட்டவுடனே, ‘நம்ம டீம் சார். நீங்க எப்போ கூப்பிட்டாலும் நடிச்சுக் கொடுப்பேன். நாளைக்கே வந்துடறேன்’னு, கதைகூடக் கேட்காம நடிச்சுக்கொடுத்தாங்க. அவங்க நடிச்ச ‘நடிகையர் திலகம்’ படத்தை சமீபத்துலதான் பார்த்தேன். நம்ம படத்துல நடிச்ச பொண்ணு இவ்ளோ அழகாக, திறமையா நடிச்சிருக்காங்களேனு சந்தோஷப்பட்டேன்.”

‘ராஜா’ சிவகார்த்திகேயன்... ‘சிலம்பம் டீச்சர்’ சமந்தா! - சீமராஜ்ஜியம் சீக்ரெட்ஸ்!

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துல உங்க குருநாதர் ராஜேஷ் வசனம் எழுதியிருப்பார். அவரை அடுத்தடுத்த படங்களில் ஏன் பயன்படுத்தலை?”

“இந்த நேரத்துல அவருக்கு நன்றி சொல்லணும்.எனக்கு முதல் படமா ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ அமைஞ்சப்போ, என்னை நம்பித் தயாரிப்பாளர்கள் பணம் போடணும். அந்த நம்பிக்கையைத் தயாரிப்பாளர்களிடம் ஏற்படுத்தணும்கிறதுக்காக ராஜேஷ் சார் எனக்காக வசனம் எழுதிக்கொடுத்தார். அதற்குப் பிறகு அவரைத் தொந்தரவு செய்ய விரும்பலை. அவரிடம் தன்னம்பிக்கை  அதிகம். நடிகர்களை, தயாரிப்பாளர்களையெல்லாம் எப்படிக் கையாளணும்ங்கிறதைச் சொல்லிக்கொடுத்தது ராஜேஷ்தான். பிரச்னை வரும்போது எமோஷனல் ஆகாமல், சமாளிக்கக் கத்துக்கணும்ங்கிறதைச் சொல்லிக்கொடுத்ததும் அவர்தான்.”

‘ராஜா’ சிவகார்த்திகேயன்... ‘சிலம்பம் டீச்சர்’ சமந்தா! - சீமராஜ்ஜியம் சீக்ரெட்ஸ்!


“ ‘ரஜினி முருகன்’ பட க்ளைமாக்ஸ்ல சிவா டூயல் ரோலில் வருவார். அவரை வைத்து டூயல் ரோல் படம் பண்ணணும்னு ஆசை இருக்கா?”

“நிச்சயமா. அதுக்காக கதையும் ரெடி பண்ணியிருக்கேன். படத்தோட கதையை சிவாவிடமும் சொல்லியிருக்கேன். ஆனா எப்போ எடுக்கப்போறேன்னு தெரியலை.  ‘ரஜினி முருகன்’ க்ளைமாக்ஸ் ஷூட்டிங்கின்போது சிவா, ‘சார், இதை அப்படியே முழுநீளப் படமாகப் பண்ணலாமா?’னு கேட்டார். நிச்சயம் பண்ணுவோம்னு நம்புறேன்!”

“நேரடியான அரசியல் படமோ அல்லது உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்த படமோ எடுக்கும் எண்ணம் இருக்கா?”

“அந்த மாதிரியான எண்ணத்தோடதான் சினிமாவுக்கே வந்தேன். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ கதை ஆணவக்கொலையை மையமா வெச்சு எழுதப்பட்ட கதைதான். க்ளைமாக்ஸ்ல ஹீரோ கொல்லப்படுற மாதிரிதான் வெச்சிருந்தேன். என் நண்பர்கள் சிலர், ‘விஷப்பரீட்சை வேண்டாம்’னு சொன்னாங்க. நானும் ‘இந்த க்ளைமாக்ஸை மக்கள் ஏத்துக்குவாங்களா என்ற சந்தேகத்தோட படம் பண்ண வேண்டாம்’னு முடிவு பண்ணினேன். முதல்ல என்னை நிரூபிச்சுட்டு, நான் ஆசைப்பட்ட சினிமா எடுக்கணும்னு முடிவு பண்ணினேன். இப்பவும் அந்த எண்ணம் இருக்கு. பிசினஸ் என்ற ஒரே விஷயம்தான் தடுக்குது. ஆனா, நான் கண்டிப்பா சீரியஸான, சமூகத்துக்குத் தேவையான சினிமாக்கள் பண்ணுவேன்!”

‘ராஜா’ சிவகார்த்திகேயன்... ‘சிலம்பம் டீச்சர்’ சமந்தா! - சீமராஜ்ஜியம் சீக்ரெட்ஸ்!

தயாரிப்பாளர் ராஜா பற்றி?

``ஆர்.டி.ராஜா எனக்கு அண்ணன் மாதிரி. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் எடுத்தப்போ அவர் க்ரியேட்டிவ் புரொடியூசரா இருந்தார். அந்தப் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் ‘ரஜினி முருகன்’ படத்துக்காக என்னைக் கூப்பிட்டுப் போய் தயாரிப்பாளர்கிட்ட கன்ஃபார்ம் பண்ணுனதே  அவர்தான். அவருடைய 24 ஏ.எம்.ஸ்டுடியோ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே, ‘எனக்காக ஒரு படம் பண்ணணும்’னு எனக்கு அட்வான்ஸ் பணம் கொடுத்தார். ‘ரஜினிமுருகன்’ படத்துக்கு அப்புறம் வெளியே ஒரு படம் பண்ணிட்டு உங்களுக்குப் படம் பண்றேன்’’னு சொன்னேன். ஆனா, அதுக்கு முன்னாடியே பண்ணிட்டேன். சூப்பர் கேரக்டர் ராஜா.” 

“பொன்ராம் - சிறுகுறிப்பு வரைக”

“என்னோட ஊர் உசிலம்பட்டி பக்கத்துல ஒரு கிராமம். குடும்பச் சூழ்நிலை காரணமா படிப்பைப் பாதியிலேயே நிறுத்திட்டு தேனியில ஒரு மில்லில் வேலை பார்த்தேன். அங்கே ஷூட்டிங் நடக்கும். அதைப்பார்த்துட்டு சினிமாவுக்குப் போகணும்னு ஆசை வந்துச்சு. அதனால என் வேலையை விட்டுட்டு சினிமாவுக்காக சென்னை வந்துட்டேன். இப்போ, திருமணம் முடிஞ்சு பொண்ணு ஒண்ணு, பையன் ஒண்ணு இருக்காங்க. மனைவி பேர் சுகன்யா. சினிமாவில் இருந்ததால் யாருமே எனக்குப் பொண்ணு தரலை. சுகன்யா என்னை நம்பிக் கல்யாணம் பண்ணினாங்க. இப்போ, ரொம்ப சந்தோஷமா எங்களுக்கான உலகத்துல நாங்க நாலு பேரும் இருக்கோம்.”

சிரிப்பில் மகிழ்ச்சி தெறிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு