Published:Updated:

`#MeToo புகார்கள் ஃபேஷனாகிவிட்டது' - சாடும் மோகன்லால்!

`#MeToo புகார்கள் ஃபேஷனாகிவிட்டது' - சாடும் மோகன்லால்!
`#MeToo புகார்கள் ஃபேஷனாகிவிட்டது' - சாடும் மோகன்லால்!

#MeToo இயக்கம் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

கஜா புயலுக்கு முன் தமிழகத்தைக் கலங்கடித்த புயல் என #MeTooவைக் கூறலாம். பாடகி சின்மயி, `மீ டூ' புகார் தெரிவித்ததை அடுத்து தமிழ் திரையுலகில் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள்குறித்து குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்த, பெண்கள் பாலியல் புகார்களைத் தெரிவிக்க மத்திய அரசும், நடிகர் சங்கமும் கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. இதேபோல பாலிவுட், டோலிவுட் திரையுலகிலும் #MeToo இயக்கம் வலுப்பெற்றது. இதற்கிடையே, மலையாள சூப்பர் ஸ்டார் #MeToo இயக்கம் பற்றி சில கருத்துகளைக் கூறியுள்ளார். அபுதாபியில், மலையாள நடிகர் சங்கமான அம்மா கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதை அடுத்து, அங்கு சென்றுள்ளார் மோகன்லால். 

அப்போது நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ``அனைவருக்கும் நடந்தது எல்லாம் தெரியும். இப்போது மலையாளத் திரையுலகில் பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. எதையும் பெரிதாக பேசி சிக்கல்களை உருவாக்க வேண்டாம். மலையாளத் திரையுலகில் நடிகைகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது. #MeToo ஒரு இயக்கம் என்று நீங்கள் நம்ப முடியாது. #MeToo புகார்கள் தெரிவிப்பது தற்போது ஃபேஷனாகிவிட்டது. இது ஒரு சில நாள்களுக்கு மட்டுமே நீடிக்கும். காரணம், புதியது எதுவுமே ஒரு சில நாள்களுக்கு மட்டுமே உயிரோடு இருக்கும். பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் எல்லா இடங்களிலும் நடக்கிறது. திரையுலகில்  மட்டும் நடப்பது அல்ல" எனக் கூறியுள்ளார்.