பிரீமியம் ஸ்டோரி

சினிமாவுக்கு வந்தவர்களில் வென்றவர்களைப் பட்டியலிட்டால், சினிமாவில் வெற்றி என்பது ஓர் அசாதாரண நிகழ்வு என்பது புரியும். அதுவும் பிரபலத்தின் பிள்ளை என்றால் அவர்களுக்கு ஒப்பீடுதான் மிகப்பெரிய சவால். இதையெல்லாம் கடந்து வென்றவர்கள் ஒருசிலர்தான். அதில் சூர்யா குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர். கூச்சமும் குழப்பமுமாக ‘நேருக்கு நேர்’ படத்தில் அறிமுகமானவருக்கு இன்று தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள். ‘36 வயதினிலே’, ‘பசங்க-2’,  ‘24’, ‘மகளிர் மட்டும்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று தயாரிப்பாளராகவும் அர்த்தமுள்ள படங்களைத் தந்துவருகிறார். 42 வயதைக் கடந்து 43-வது வயதில் அடியெடுத்து வைக்கும் சூர்யாவைப் பற்றிய பர்சனல் விஷயங்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம். 

* மகன் தேவ், மகள் தியாவை ‘இன்னாரின் பிள்ளைகள்’ என்று அடையாளம் தெரியாத வகையில் எளிமையாக வளர்க்க விரும்புகிறார். வீட்டைச் சுற்றியுள்ள மாநகராட்சிப் பூங்காக்கள்தான் இவர்களின் விளையாட்டுக் கூடங்கள். அதேசமயம் நடனம், நாடகம், இசை, விளையாட்டு... என்று இருவரும் ஏகப்பட்ட சிறப்பு வகுப்புகளுக்குச் செல்கிறார்கள். ‘பாடப் புத்தகத்தைத் தாண்டிய வாழ்க்கை இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்துக்கும் பெற்றோரையே சார்ந்து இருத்தல் கூடாது’ என்பார்.

நற்பணிக் கலைஞன்! - 43

* ‘நாங்களாகத் தேடிப்பிடித்திருந்தால்கூட இப்படி ஒரு மருமகள் அமைந்திருக்க மாட்டார்.’  - சிவகுமார் குடும்பத்தில் ஜோதிகாவை இப்படித்தான் கொண்டாடுகிறார்கள். அனைவரும் சேர்ந்து கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்பதுகூட ஜோவின் விருப்பம்தானாம். சூர்யாவும் கார்த்தியும் தன் அம்மா லெட்சுமியம்மாவின் பெயரில் தி.நகரில் கட்டியுள்ள வீட்டில்தான் தற்போது வசிக்கின்றனர். 

* ‘பள்ளி மாணவர்களை மன்றத்தில் சேர்க்கக் கூடாது.’ இது இவரின் ரசிகர் மன்றத்தில் எழுதப்படாத விதி. கல்லூரி மாணவர்களாக இருந்தாலும் முதலில் படிப்பு. பிறகே மன்றம்.

* சுமார் 10 ஆண்டுகளாக, வருடத்துக்கு ஒருமுறை மாவட்ட நிர்வாகிகள் 500 பேரையும் ஒரே நாளில் சந்திப்பார். நிர்வாகிகள் அனைவரையும் ‘யோவ் வாய்யா, எப்படிய்யா இருக்க’ என்று பிரியமாக அழைப்பார். அவர்கள் ஒவ்வொருவரும் பர்சனலாக மெசேஜ் அனுப்பி, பேசும் அளவுக்கு நெருக்கம்.

* இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடையாறில் குடியிருந்தபோது பாண்டிச்சேரியில் இருந்து 10 வயது சிறுவன் ஒருவன் வீட்டில் சொல்லாமல் இவரைப் பார்க்க எப்படியோ வந்துவிட்டான். ‘நான் வீட்டுக்குப்போக மாட்டேன், சூர்யாவுடன்தான் இருப்பேன்’ என்று பிடிவாதமாக இருந்திருக்கிறான். பிறகு அவனை டிபன் சாப்பிட வைத்து, தாஜா செய்து பெற்றோரின் போன் நம்பர் வாங்கி, ‘உங்க பையன் இங்குதான் இருக்கிறான். அவனை நானே அனுப்பி வைக்கிறேன்’ என்று அட்ரஸ் வாங்கி இனோவா காரில் தன் ரசிகர் மன்ற நிர்வாகியையும் உடன் அனுப்பி வைத்திருக்கிறார்.

* தமிழகத்தைவிடக் கேரளாவில் இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்பதுதான் மிகப்பெரிய ஆச்சர்யம். இவர் கேரளா சென்றால் கூட்டத்தைக்  கட்டுப்படுத்துவது சிரமம். கேரளாவின் சிறு கிராமம் ஒன்றில் தும்பி என்ற ரசிகை தன் கையில் பிளேடால் ‘சூர்யா’ என்று கீறியிருந்ததைக் கேள்விப்பட்டு, துடித்துப்போனார். ‘இது மிகப்பெரிய தவறு. அன்பை வெளிப்படுத்த இது வழி கிடையாது. இனி அப்படிப் பண்ணினால் நீங்கள் என் ரசிகையே கிடையாது’ என்று அவருக்கு அலைபேசினார்.

நற்பணிக் கலைஞன்! - 43

* ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வெளியான சமயத்தில் காஞ்சிபுரத்தில் இவரின் ரசிகர்கள் கட் அவுட் வைக்க ஏழு லட்சம், டான்ஸ் ஏற்பாட்டுக்கு 50 ஆயிரம், போக்குவரத்துக்கு 50 ஆயிரம் என மொத்தமாய் அந்த ஒருநாளுக்கு மட்டும் எட்டு லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். மறுநாள் அவர்களைச் சென்னைக்கு வரவழைத்து பரேடு விட்டிருக்கிறார். ‘உங்க குடும்பத்தேவைகளுக்குப்போக மீதி இருந்தால்தான் மன்றத்துக்குச் செய்யணும். அதுவும் போஸ்டர், கட் அவுட்டுக்குக் கிடையாது. இல்லாதவர்களுக்கு உதவுங்கள்’ என்று கிட்டத்தட்ட மிரட்டி அனுப்பினார்.

* ‘உணர்வுபூர்வமாக முடிவெடுக்கக்கூடாது. அறிவுசார்ந்து இயங்க வேண்டும்’ என்பார். ‘ஈழத்தில் இறுதிப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில், ‘உண்ணாவிரதம் இருக்க வேண்டும்’ என்று ரசிகர்கள் கேட்டிருக்கின்றனர். ‘ஈழம் பற்றி மன்றத்தில் எத்தனை பேருக்குத் தெரியும். எத்தனை பேர் வருவார்கள்’ என்று கேட்டிருக்கிறார். ‘நிறைய பேர் வருவார்கள். ஆனால், அத்தனை பேருக்கும் ஈழம் பற்றிய புரிதல் இருக்குமா என்று தெரியவில்லை’ என்று பதில் வந்திருக்கிறது. இதையடுத்து, தலைமை மன்ற அலுவலகத்தில் ஈழம் பற்றி ஒரு வாரம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். தியாகு, விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் மணிவண்ணன், வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் எனப் பலர் இவரின் ரசிகர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறார்கள். அந்த வகுப்பு முடிந்த பிறகே உண்ணாவிரதம் நடத்தினார்களாம். 

* ‘நிறைய விளம்பரங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொள்ளலாம் என்கிறார்கள்’ என்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் சொன்னபோது, ‘இதனால் பயன் என்னவென்று பார்க்க வேண்டும். அகரத்துக்கு ஆரம்பத்தில் பல இடங்களிலிருந்து நிதி வந்தது. அப்படி நிதியளித்த பலர் அவர்களே தனித்தனி டிரஸ்ட் ஆரம்பித்து விட்டனர். இன்று தேவைகள் நிறைய உள்ளன. அதனால்தான் விளம்பரங்களைத் தேடித்தேடி நடிக்கிறேன். நிதி வரவில்லை என்று அகரத்தை அப்படியே விட்டுவிடக்கூடாதே’ என்றார்.

*  `நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் தோற்ற பலருக்கும் தன் சம்பளத்திலிருந்து இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்று 50 லட்சம் வரை உதவித்தொகை அளித்திருக்கிறார். ‘ச்சே... பேராசைப்பட்டு ஜெயிச்ச காசையும் விட்டுட்டோமே’ என்ற காயம் காலத்துக்கும் ஆறாது. அவங்களுக்கு நான் தர்ற பணம் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்’ என்று அந்த உதவியை அளித்திருக்கிறார்.

வாழ்த்துகள் சூர்யா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு