Published:Updated:

ரசிப்பதற்காகத்தான் சவால்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரசிப்பதற்காகத்தான் சவால்கள்!
ரசிப்பதற்காகத்தான் சவால்கள்!

சனா

பிரீமியம் ஸ்டோரி

‘பேரன்பு’ படத்துக்காக நிறைய பேர் எனக்கு வாழ்த்துகள் சொன்னாங்க. அதுல, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சாரோட வாழ்த்து, பெரிய விருது வாங்கிய ஃபீல் எனக்கு! ஏன்னா, நான் அவர்கிட்டதான் உதவி ஒளிப்பதிவாளரா சேரணும்னு ஆசைப்பட்டேன். அது நடக்கலை” - நெகிழ்வும் மகிழ்வுமாகப் பேசுகிறார், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

ரசிப்பதற்காகத்தான் சவால்கள்!

“சொந்த ஊரே எனக்கு அடைமொழியா அமைஞ்சது சந்தோஷம். எங்க அப்பா ஒரு கால்நடை மருத்துவர். வீட்டுல செலவுக்குக் கொடுக்கிற காசை வெச்சு ஒரு ஸ்டில் கேமரா வாங்கிப் பயன்படுத்திக்கிட்டிருந்தேன். ஆனா, அப்பா என்னை ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்தான் படிக்க வெச்சார். படிப்பை முடிச்சுட்டு, சினிமாவுக்குப் போறேன்னு சொன்னப்போ சம்மதிக்கவே இல்லை.  போராடிதான் சினிமாவுக்கு வந்தேன், முதல் வாய்ப்பு ரொம்ப சிரமமா இருந்தப்போதான், என் நண்பர் சுசீந்திரன், என்மீது இருந்த நம்பிக்கையில ‘அழகர் சாமியின் குதிரை’ படத்துக்கு ஒளிப்பதிவாளரா சான்ஸ் கொடுத்தார். அதுக்குப் பிறகான இந்தப் பயணம் மனசுக்கு நிறைவா இருக்கு.” என்றவர் ‘பேரன்பு’, ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ அனுபவங்கள் குறித்துப் பேசத் தொடங்கினார்.

“இயக்குநர் ராம், எனக்குப் பத்து வருடங்களுக்கு மேலான பழக்கம். ‘கற்றது தமிழ்’ படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போட்டோவை நான்தான் எடுத்துக் கொடுத்தேன். அந்தப் படத்துக்கும் நான்தான் ஒளிப்பதிவு செய்யவேண்டி இருந்தது. சில காரணங்களால முடியலை. ‘தங்க மீன்கள்’ படத்துக்கும் பண்ணவேண்டியது. கால்ஷீட் பிரச்னை காரணமா, முடியலை. விடுபட்டுக்கிட்டே இருந்த வாய்ப்பு, ‘தரமணி’யில அமைஞ்சது. இப்போ, ‘பேரன்பு’ வரைக்கும் கொண்டு வந்திருக்கு. இன்னும் போகும் இந்தப் பயணம். 

ரசிப்பதற்காகத்தான் சவால்கள்!

கொடைக்கானல்ல இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவுல ஒரு லொக்கேஷன் பிடிச்சோம். குளிரும் பனியுமா இருக்கிற நாள்கள்ல ஷூட்டிங் பண்ணுனா கதைக்குப் பொருத்தமா இருக்குமேனு நவம்பர், டிசம்பர் மாதங்களுக்காகக் காத்திருந்தோம். காலையில அஞ்சு மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கும். ஒரு வீட்டை செட் போட்டிருந்தோம். அந்த வீட்டுல  மின்சாரம் கிடையாது, சிம்னி விளக்கு ஒளியில ஷூட் பண்ணுனேன். இரவு நேரங்கள்ல மெழுகுவத்தி, தீப்பந்தம்தான் எங்களுக்கான லைட்டிங்ஸ்! ‘பேரன்பு’ படத்துல வழக்கமான ஒளிப்பதிவா இல்லாம, வித்தியாசத்தை ஆடியன்ஸ் ஃபீல் பண்ணுவாங்க.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தோட இயக்குநர் லெனின், ‘அழகர் சாமியின் குதிரை’ படத்துல இணை இயக்குநரா வொர்க் பண்ணுனவர். இந்தமாதிரியான படங்களுக்கு, தயாரிப்பாளர் தரப்புல இருந்து முழுச் சுதந்திரம் கிடைச்சா மட்டும்தான், அது நல்ல படைப்பா வெளியே வரும். அந்த உதவியை, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தைத் தயாரிச்ச விஜய் சேதுபதி செஞ்சு கொடுத்திருக்கார்.

ரசிப்பதற்காகத்தான் சவால்கள்!

தேனி மாவட்டத்தின் அடிவாரப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வாழ்கிற எளிய மக்களோட கதை இது. வாழ்க்கையில் அனுதினமும் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள், பிரச்னைகள்தான் படத்தோட திரைக்கதை. ‘உலகமயமாக்கல்’ இந்த மக்களை மறைமுகமா எப்படியெல்லாம் பாதிக்குதுனு சொல்லியிருக்கார், லெனின். கதை, திரைக்கதை தவிர்த்து இந்தப் படத்துக்கு நான் ஒளிப்பதிவு பண்ண ஆர்வம் காட்டுனதுக்கு முக்கியமான காரணம், இந்தப் படத்துல நடிச்சிருக்கிற எல்லோரும் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த சாமானிய மக்கள்.

இந்த சவாலுக்காகவே இந்தப் படத்தை ரொம்ப ரசிச்சுப் பண்ணியிருக்கேன். எனக்கு இந்தமாதிரி கதையோடு சேர்ந்து ஒளிப்பதிவுக்கும் முக்கியத்துவம் இருக்கிற படங்கள்ல வொர்க் பண்ணணும்னுதான் ஆசை. இந்தப் படமும் எனக்கு அப்படி அமைஞ்சது. ஒரு மராத்தி, பெங்காலி படத்தோட ஃபீல் தர்ற ஒளிப்பதிவை இந்தப் படத்துல பார்க்கலாம். இந்தப் படம் ‘GLOBAL INTERNATIONAL FILM FESTIVAL’ திரைப்பட விழாவில், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை எனக்குப் பெற்றுத் தந்திருக்கு!.”

இன்னும் விருதுகள் ஈஸ்வருக்காகக் காத்திருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு