Published:Updated:

“பாலுமகேந்திராவுக்குச் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“பாலுமகேந்திராவுக்குச் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்!”
“பாலுமகேந்திராவுக்குச் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்!”

கு.ஆனந்தராஜ் - படங்கள்: பா.காளிமுத்து

பிரீமியம் ஸ்டோரி

ளிச் மேக்கப் மற்றும் புன்னகையுடன் வரவேற்கிறார் மெளனிகா. வீட்டின் வரவேற்பறையில் இயக்குநர் பாலு மகேந்திராவின் ஒரு புகைப்படம்கூடத் தென்படவில்லை.நம்மைப் புரிந்துகொண்டவராக “நீங்க எங்க தேடிப்பார்த்தாலும் அவரோட போட்டோஸ் இருக்காது. என்னையும் வருத்திக்கிட்டு, என்னை நம்பியிருக்கிறவங்களையும் வருத்தப்பட வைக்க நான் விரும்பலை. அவர் போட்டோஸ் எல்லாமே பத்திரமா வேற இடத்தில் இருக்கு...” என்றவர், பேசத் தொடங்கினார்.

“பாலுமகேந்திராவுக்குச் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்!”

“எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடிச்சிருக்கீங்க. ஏன் இத்தனை பெரிய இடைவெளி?”

“ ‘பாணா காத்தாடி’ படத்துக்குப் பிறகு, வலுவான கதாபாத்திரங்கள் வரலை. அந்த நேரத்தில்தான் என் சகோதரர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸ்ல கவனம் செலுத்தினேன். அதே சமயத்தில் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமப்போக, அதைத் தொடர்ந்து நிறைய பிரச்னைகளும் ஏற்பட்டுச்சு. 2014-ம் வருஷம், பிப்ரவரியில அவர் மரணமடைந்தார். அதற்குப் பிறகான மன அழுத்தங்களிலிருந்து மீண்டு வர எனக்கும் கால அவகாசம் தேவைப்பட்டுச்சு.”

“உங்க கணவர் பாலு மகேந்திராவின் இழப்பிலிருந்து எப்படி மீண்டு வந்தீங்க?”

“அவர், என் அஸ்திவாரம். அது ஆட்டம் காண ஆரம்பிச்சதுமே, எனக்குச் சரிவு உண்டாகிடுச்சு. அப்போ என்னைத் தாங்கிப் பிடிச்சது, என் அம்மா, தங்கை, தங்கை கணவர். அவங்க மூன்று பேராலதான் இன்னைக்கு உங்க முன்னாடி பேசிக்கிட்டிருக்கேன். நான் மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சு, சொந்தக் கால்ல நிற்கவும் அவங்கதான் காரணம்.”

“பாலுமகேந்திராவுக்குச் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்!”

“பாலு மகேந்திராவுடன் 28 ஆண்டுகள் வாழ்ந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது என்ன தோணுது?”

“அவர் இயக்கத்தில் நான் நடிச்ச முதல் படம், ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்.’ அதில் நான் ரஜினியின் தங்கை. அவர் எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்கும் விதமே என் மனசில் ஒருவித நேசத்தை ஏற்படுத்துச்சு. என்ன, எப்படினு தெரியலை. அவர் மேல் எனக்குக் காதல் வந்துச்சு. அவர்கிட்ட என் காதலைச் சொன்னேன். ‘உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?’னு தொடங்கி, நிறையவே திட்டினார்; மறுத்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் காதலை ஏத்துக்கிட்டார். ஒருகட்டத்துல என்னுடனான வாழ்க்கையை வெளியுலகத்துக்கு வெளிப்படையாகச் சொன்னார். என்னை முறைப்படி கல்யாணமும் செய்துகிட்டார். அவர் பையனுக்கும் எனக்கும் அஞ்சு வயசுதான் வித்தியாசம். அவர் பையனோட டிரஸ்ஸை என்னைப் போட வெச்சு, போட்டோஸ் எடுப்பார். என் நீண்ட நாள் ஆசைப்படி, ஒருநாள் திருப்பதியில் மொட்டை போட்டேன். ‘ஏன் இப்படிப் பண்ணினே’னு திட்டினார். கொஞ்சமா முடி வளர்ந்தபிறகு என்னை போட்டோ எடுத்தார். அப்போ, ‘இதுதான் நான் எடுக்கிற கடைசி போட்டோவா இருக்கும்’னு சொன்னார். ‘ஏன் இப்படிப் பேசுறீங்க?’னு அவரைத் திட்டினேன். அவர் தீர்க்கதரிசி, சொன்னது அப்படியே நடந்துச்சு. அந்தப் போட்டோவைப் பொக்கிஷமா வெச்சிருக்கேன். அவர் எனக்கு எழுதின, நான் அவருக்கு எழுதின காதல் கடிதங்களையெல்லாம் பத்திரமா வெச்சிருக்கேன். எனக்கு டைரக்‌ஷன் ஆசை இருந்துச்சு. அதுக்காக யூனியன்ல கார்டெல்லாம் எடுத்துக்கொடுத்திருக்கார். இந்த அன்பைவிட அவர்கிட்ட நான் வேற என்ன எதிர்பார்க்க முடியும்? எங்களுடையது, மிக அழகான காதல். அது மத்தவங்களுக்கு எளிதில் புரியாது.”

“பாலுமகேந்திராவுக்குச் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்!”

“அவரை இறுதியா எப்போ பார்த்தீங்க? அவரை இறுதியா வழியனுப்பி வைத்த கணம் எப்போது?”

(கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பேசுகிறார்) “அவர் இறக்கிறதுக்கு ரெண்டு வருஷம் முன்னாடி எனக்கு ஒரு லெட்டர் எழுதினார். அதில், ‘எனக்கு வயசாகிடுச்சு. இனி உனக்கு பாரமா இருக்க விரும்பலை. இதுக்கும் மேல நான் உன்னோட இருந்தால், நிச்சயம் என்னைச் சார்ந்தவங்களால உனக்கு ஆபத்து வரும்’னு எழுதியிருந்தார். அதைப் படிச்சுட்டு உடனே அவருக்கு போன் பண்ணித் திட்டினேன். ‘நீங்கதான் எனக்கு முக்கியம். எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை’னு சொன்னேன். அப்புறம் ஒருநாள் என் வீட்டுக்கு வந்து பிரியா விடைபெற்றுப் போனார்.  பிறகு அவரைப் பார்க்க நான் முயன்றது, அது நடக்காமலே போனதெல்லாம் பெரிய சோகம்.”

“குழந்தை வேண்டாம்னு முடிவெடுத்தீங்களா?”


“ஆமாம். இருமுறை கர்ப்பமானேன். அவருக்குத் தெரியாம கருவையும் கலைச்சேன். அதனால கோபப்பட்டவர், ரொம்ப நாள் எங்கிட்ட பேசாமலே இருந்தார். சரியோ... தவறோ... அவர்தான் எனக்கு வேணும்னு நினைச்சது என் சொந்த முடிவு. அதனால வரும் பிரச்னையை நான் தாங்கிப்பேன். எந்தத் தப்பும் செய்யாத எங்களுடைய குழந்தை ஏன் அசிங்கப்படணும்? என்னைப் பொறுத்தவரை குழந்தை வேண்டாம்னு நான் தீர்மானிச்சது சரியான முடிவுதான். ஆரம்பத்திலிருந்து இன்னைக்கு வரை என் காதலுக்கு எங்க வீட்டுல  எதிர்ப்புதான். ஆனா, என் முடிவில் நான் உறுதியா இருந்தேன். என் தரப்பு நியாயத்தை எப்படி வெளிப் படுத்தினாலும், இன்னொரு பெண்ணோட வாழ்க்கையைப் பங்குபோட்டது தப்புதான். ஆனால், அவர் இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுப்பார்க்கவே முடியலை. தப்பான விஷயம்னு சிலர் சொல்லலாம்; நான் அதைச் சரியாதான் வாழ்ந்திருக்கேன்.”

“பாலுமகேந்திராவுக்குச் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்!”

“பாலு மகேந்திராவின் முதல் மனைவி அகிலாவிடம் உங்க தரப்பு விளக்கத்தைச் சொல்ல முயற்சி பண்ணியிருக்கீங்களா?”

“அகிலாம்மாவுக்கு என் மேல கோபம்னு பலரும் சொல்வாங்க. அது எந்த அளவுக்கு உண்மைனு தெரியலை. ஒருவேளை கோபம் இருந்தாலும், அது நியாயமானதுதானே! கணவர் இறந்த பிறகு அகிலா அம்மாகிட்ட, மனம்விட்டுப் பேச முயற்சி பண்ணினேன். எங்கள் இருவருக்கும் பரிச்சயமான நண்பர் ஒருவர் மூலம் இந்தச் செய்தியை அவங்ககிட்ட தெரியப்படுத்தினேன். ‘எனக்கு விருப்பமில்லை. காலப் போக்கில் என் மனம் மாறினால் சந்திப்போம்’னு நாகரிகமா சொல்லிட்டாங்க. ஆனா, அவங்க மேல எனக்கு நிறைய அன்பு இருக்கு. ‘நான் மரணமடைந்த பிறகு, பிரச்னை வந்தால், என் புள்ளை உனக்கு உதவி செய்வான்’னு அவர் ஒருமுறை சொன்னார். அதை அப்போ நான் நம்பலை. ஆனா, அதுவும் நடந்துச்சு. என் கணவரின் பூத உடலைப் பார்க்க, அவர் மகன் அனுமதிச்சார். அவர் இறந்த மறுநாள் அவரோட மகன் என்கிட்ட பேசினார். அதற்குப் பிறகு அவர்கிட்ட நான் பேசலை.” 

“பொருளாதாரத் தேவைகளை நிறைவாகப் பூர்த்தி செய்துக்க முடிகிறதா?”

“ஒருமுறை என் கணவர் எங்கிட்ட ரெண்டு சத்தியம் கேட்டார். ‘என் மரணத்துக்குப் பிறகும் நீ நடிக்கணும்; எனக்கு அப்புறம் நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்’னு சொன்னார். முதல் விஷயத்துக்கு மட்டும்தான் நான் சத்தியம் பண்ணினேன். அதன்படி, இனி சினிமாவுல ஆக்டிவா நடிக்க முடிவு செஞ்சிருக்கேன். அப்போதான் என்னையும், என்னை நம்பியிருக்கும் குடும்பத்தினரையும் பார்த்துக்க முடியும். அதுக்கு நடிப்பை விட்டால் எனக்கு வேறு வழியில்லையே!

சில மாதத்துக்கு முன்பு வரை வீட்டுல அவரோட போட்டோஸ் நிறைய இருக்கும். அதையெல்லாம் பார்க்கிறப்போ, அவரோட நினைவுகளால் ஒருவித சோக நிலைக்குப் போயிடுறேன். அதனால எல்லா போட்டோஸையும் பத்திரப் படுத்தி எடுத்து வெச்சுட்டேன். ஆனா, அவரோட உருவமும், நினைவுகளும் என் ஆழ்மனசுல இருந்து எப்போதும் நீங்காது”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு