Published:Updated:

``என் அடையாளத்தை நான் இழக்கலைனு நம்புறேன்!" - வசந்தபாலன்

``என் அடையாளத்தை நான் இழக்கலைனு நம்புறேன்!" - வசந்தபாலன்
``என் அடையாளத்தை நான் இழக்கலைனு நம்புறேன்!" - வசந்தபாலன்

`ஜெயில்' படத்தை இயக்கியிருக்கும் வசந்தபாலன், படம் குறித்தும் மற்ற சினிமா இயக்குநர்கள், எழுத்தாளர்கள் பற்றியும் பேசியுள்ளார்.

``ரங்கநாதன் தெருவைப் பார்க்கும்போது, மக்களின் உழைப்புச் சுரண்டல் எப்படித் தெரிஞ்சதோ, அதேமாதிரி அரசாங்க நலத்திட்டம் எவ்வளவு மோசமான சீரழிவை மக்களுக்குக் கொடுக்குதுனு புரிஞ்சது. உலகம் முழுக்கப் பழங்குடி மக்களை அவங்க இடத்திலிருந்து அப்புறப்படுத்துறாங்க. அவங்க நிலத்தை அபகரிக்கிறதுக்கான செயல் இது. நம்ம ஊரிலும் இது நடக்குது. அந்த மக்களின் வலியைப் பதிவு பண்ணத்தான் இந்த `ஜெயில்' படம். வேறொரு கதைக்காக கண்ணகி நகருக்கு வந்த எங்களுக்கு, கடைசியில இதையே படமா பதிவு பண்ண வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்தப் பகுதி மக்களின் குரலாக இருக்கும் இந்தப் படம்." வலியுடன் விவரிக்க ஆரம்பிக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு ஜி.வியை வைத்து `ஜெயில்' படத்தை இயக்கியிருக்கும் வசந்தபாலனிடம் பேசினேன். 

``என் அடையாளத்தை நான் இழக்கலைனு நம்புறேன்!" - வசந்தபாலன்

``இது சம்பந்தமா நிறைய கட்டுரைகளைப் படிச்சேன். 2000 - 2018 வரை இந்த மக்களுக்கு என்ன நடந்ததுனு அவங்ககூட இருந்தே தெரிஞ்சுக்கிட்டேன். அவங்க கதைகளைக் கேட்கும்போதே, அவங்க வாழ்வியல் எவ்வளவு கவலைக்கிடமா இருக்குனு தெரிஞ்சது. இங்கிருக்கிற சிலர் அவங்க வீட்டை வாடகைக்கு விட்டுட்டு பிளாட்ஃபார்ம்ல இருக்காங்க. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிற சிலர் இந்த மக்களோட நாலு வீட்டை ஒரு வீடா கட்டிக்கிட்டுக் குடிபெயர்ந்துட்டாங்க. கண்ணகி நகர் நிலையை `force to fingers'னு டெல்லியைச் சேர்ந்த ஒருத்தர் டாக்டரேட் பண்ணியிருக்கார். `Disaster of resettlement india'னு தன் பி.ஹெச்.டி படிப்புக்காக இந்தியா முழுக்க ரீ-செட்டில்மென்ட் எங்கெல்லாம் நடந்திருக்குனு ஆய்வு பண்ணிப் பதிவு பண்ணியிருக்கார். அது எனக்குப் பெரும் உதவியா இருந்தது."

``குடிசைவாழ் பகுதி மக்களின் வாழ்வியலைப் படத்துல காட்டும்போது, அது செயற்கையா இருக்குனு ஒரு குற்றச்சாட்டு இருக்கு. சமீபத்துல வந்த `வடசென்னை' படம்கூட அப்படி ஒரு விமர்சனத்தை சந்திச்சது.. இந்தப் படம் எப்படி?" 

``மற்றவர்கள் எப்படிக் காட்டுனாங்கனு என்னால சொல்ல முடியாது. இந்தப் படத்தை அந்தப் பகுதி மக்களில் ஒருவனாகத்தான் எடுத்திருக்கிறேன். அந்தப் பகுதி மக்களின் உண்மையான பிரச்னைகளை இந்தப் படத்துல சொல்லியிருக்கேன். `பைசைக்கிள் தீவ்ஸ்' படம் இரண்டாம் உலகப்போரின் வலியைச் சொல்லியிருக்கும். அப்படி ஒரு நோக்கத்தோட இந்தப் படத்தை எடுத்திருக்கேன்."  

``கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு படம் இயக்கியிருக்கீங்க. இந்த இடைவெளியில் சினிமா கொஞ்சம் மாறியிருக்கும். அதை நீங்க எப்படி உணர்றீங்க?" 

``இன்னைக்கு சினிமா ரொம்ப மோசமான சூழல்ல இருக்கு. நடிகர்கள் தயாரிப்பாளரா மாறணும், இல்லைனா இயக்குநர்கள் தயாரிப்பாளரா மாறணும்ங்கிற நிலை. ஆன்லைன்ல உடனுக்குடன் படங்கள் திருட்டுத்தனமா வந்துடுது. தியேட்டர்ல மூணு நாள்தான் படம் ஓடுது. `பரியேறும் பெருமாள்' படத்துக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைச்சும்,  ரிலீஸூக்குத் தியேட்டர்கள் கிடைக்கலை. பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை. மீடியமான பட்ஜெட்ல படம் எடுக்கிறவங்களுக்குப் பெரிய பிரச்னைகள் இருக்கு. வெப் சீரிஸ் அது இதுனு பல விஷயங்கள் அறிமுகமாகியிருக்கிற சூழல்ல, ஒரு இயக்குநர் தன் அடையாளத்தை இழந்துடாம ஒரு படத்தை உருவாக்குறது சவாலான விஷயம். அந்த சவாலை நான் வெற்றிகரமா கடந்துக்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்."

``சினிமா இந்தக் கடுமையான சூழலைக் கடந்து வரும்னு நினைக்கிறீங்களா?"

``நூறு வருடம் பிரிட்டிஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி இருந்தப்போதான், விடுதலை கிடைத்தது. ஏதாவது ஒரு கட்டத்தில் விடுதலை கிடைச்சுதான் ஆகணும். நான் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறேன். ஆனா, அது யார் மூலமா நடக்கணும்னுதான் தெரியலை. இப்போதைக்கு வேடிக்கை பார்க்கிறோம். கண்டிப்பா, ஒருநாள் இந்த நிலை விடுதலையை நோக்கி நகரும். பக்கத்து மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவுல பைரஸி பிரச்னை இல்லை. ஆனா, இங்கே மட்டும் தமிழ் ராக்கர்ஸ் நேரடியா சவால் விடுறதா சொல்றாங்க. சின்னப் படங்கள்கூட கேரளாவுல அவ்வளவு மரியாதையா ஓடிக்கிட்டு இருக்கு. இங்கே தலைதெறிக்கப் பிரச்னைகள் சுத்திக்கிட்டு இருக்கு. ஒருநாள் மாறும், மாறணும்."  

``என் அடையாளத்தை நான் இழக்கலைனு நம்புறேன்!" - வசந்தபாலன்

``பயோபிக் படங்கள் அதிகமா வரத் தொடங்கியிருக்கு. உங்களுக்கு அப்படி எதுவும் ஐடியா இல்லையா?" 

``இன்னைக்கு இருக்கிற அரசியல் சூழல் நம்மளைத் துன்புறுத்திக்கிட்டே இருக்கு. குறிப்பா, கடந்த மூன்று வருடமா அரசியல் நிகழ்வுகள் மக்களை நேரடியா பாதிக்குது. இந்த நிலையிலிருந்து விலகி, ஒரு பயோபிக் படம் பண்ண ஒரு கலைஞனா எனக்குச் சரினு படலை. ஒரு நல்ல பயோபிக் படம் எடுப்போம்னு எனக்குத் தோணும்போது, நான் பிரபாகரனின் வாழ்க்கையைப் படமா எடுப்பேன். இது என் ஆசையும்கூட! தவிர, அதையும் இந்தியப் படமா எடுக்க முடியாது; இன்டர்நேஷனல் படமா எடுக்கணும். அது என் கனவு... நடந்தா சந்தோஷம்."  

``என் அடையாளத்தை நான் இழக்கலைனு நம்புறேன்!" - வசந்தபாலன்


``இயக்குநர் ஷங்கரின் 25 வருடப் பயணத்தை அவருடைய உதவி இயக்குநர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாடியிருக்கீங்களே..." 

``1992-ல் இருந்து ஷங்கர் சாருடன் இருக்கேன். `ஷங்கர் 25'னு ஒரு நிகழ்ச்சி நடத்தலாம்னு சொன்னப்போ, ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. ஏன்னா, ஷங்கர் சார் எப்போவும் அவரை விளம்பரப்படுத்திக்க விரும்பமாட்டார். அதனால, உதவி இயக்குநர்களுக்குள்ளேயே சின்னதா ஒரு விழாவை நடத்தி முடிச்சுட்டோம். அவரோட முதல் படமான `ஜென்டில்மே'னை ஒரு கமர்ஷியல் வெற்றியாகக் கொடுக்கணும்னு நினைச்சோம். அது நடந்தது. இன்னைக்கு அவர் பெரிய இயக்குநரா வளர்ந்திருக்கார். என்டர்டெயின்மென்ட் சுனாமியா மாறியிருக்கார். 25 வருடமா தனி ஆளாக அவர் கனவை அவர் மட்டுமே எடுத்துக்கிட்டு போறார். எங்கேயும் இடைவெளி எடுத்துக்காம, ஓடிக்கிட்டே இருக்கார். முதல் படத்தை எடுக்கிறப்போ அவர்கிட்ட இருந்த கவனத்தைவிட நூறு மடங்கு அதிகமா இப்போ கவனம் இருக்கிறதுனாலதான், `2.0' படத்தை அவரால பிரமாண்டமா எடுக்க முடியுது. அந்த மெனக்கெடலை எல்லோரும் கத்துக்கணும். அவர் என் குரு. அவரைத் தவிர வேற யாரிடமும் நான் உதவி இயக்குநரா வேலை பார்க்கலை. அவரிடம் பேரன்பும், நன்றியுள்ள உறவும் இருக்கு. அந்த விழாவுல அவர்கிட்ட, "`தங்கல்' படத்துல வர்ற அமீர் கான் மாதிரி, நீங்க எங்க பக்கத்துல இல்லைனாலும், சில முடிவுகளை எடுக்கிறதுக்கு முன்னாடி மானசீகமா உங்களிடம் கேட்டுக்குவோம்"னு சொன்னோம். அப்படி ஒரு மானசீக குரு அவர்."

அடுத்த கட்டுரைக்கு