Published:Updated:

ஒரு டுட்டுக்கு ஒன்பது ஸ்பீட் பிரேக்கர்கள்! - வண்டி விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
ஒரு டுட்டுக்கு ஒன்பது ஸ்பீட் பிரேக்கர்கள்! - வண்டி விமர்சனம்
ஒரு டுட்டுக்கு ஒன்பது ஸ்பீட் பிரேக்கர்கள்! - வண்டி விமர்சனம்

ஒரு டுட்டுக்கு ஒன்பது ஸ்பீட் பிரேக்கர்கள்! - வண்டி விமர்சனம்

நாயகன் விதார்த்,  இங்கே ஒரு ட்விஸ்ட்... நாயகன் விதார்த் அல்ல  டுட்டு என்கிற யமஹா ஆர்.எக்ஸ் வண்டி. மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் இருக்கும் அந்த யமஹா ஆர்.எக்ஸ் வண்டி எப்படி போலீஸ் பிடியில் சிக்கியது என்பதுதான் கதை. இங்கே ஒரு ட்விஸ்ட்... கதை இதுமட்டுமல்ல, இதையும் தாண்டி..!

சைதாப்பேட்டை ஹவுசிங் போர்டில் நண்பர்களோடு `குடி'த்தனம் இருக்கிறார் விதார்த். நண்பரில் ஒருவர் தட்டு கடையிலும், இன்னொருவர் பைக் பார்க்கிங்கிலும் பணி புரிகிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண் சாந்தினிக்கு விதார்த் மேல் காதல். அவர் பெட்ரோல் பங்கில் பணிபுரிகிறார். 30 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி, வேலைக்காரப் பெண்ணுக்கு மூன்று மாத சம்பள பாக்கி, நிரந்தரமில்லாத பணி என விதார்த் தன் வாழ்க்கை வண்டியை ஓட்டும் வழியில் ஒன்பது ஸ்பீடு பிரேக்கர்கள். எல்லாம் தாண்டி முன்னேற நினைத்தால் ஒரு ஐ-போன் உள்ளே புகுந்து வண்டிக்கு டேக்-டைவர்ஷன் காட்டுகிறது. அதன்பின், அந்த வண்டி எங்கெல்லாம் ஓடி, ஓடி, அலைஞ்சு, திரிஞ்சு, உடைஞ்சு, முடிஞ்சு, எங்குப் போய் நிற்கிறது என்பதுதான் திரைக்கதை. இங்கே ஒரு ட்விஸ்ட்... இந்தக் கதையின் இன்னொரு புறம் வேறு சில கதைகளும் நகர்கின்றன. எல்லா கதைகளும் எப்படி ஒரு புள்ளியில் இணைகிறது என்பதுதான் க்ளைமாக்ஸ். இங்கே ஒரு ட்விஸ்ட்... ஆம், க்ளைமாக்ஸில் பெரிய ட்விஸ்ட் ஒன்று இருக்கிறது. அவ்வ்...

விதார்த் நன்றாக நடித்திருக்கிறார். சாந்தினியும் குறையில்லாத நடிப்பைத் தந்திருக்கிறார். விதார்த்தின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் நிறைவாய் நடித்திருக்கிறார்கள். வழக்கமான ஜான் விஜய்யாக ஜான் விஜய். நடிகர் பட்டாளத்தில் பாதிப் பேர் சீரும் சிறப்புமாகவும் மீதிப் பேர் பார்க்கவே வெறுப்பாகவும் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். `மிர்ச்சி' சிவாவின் குரல் கதையை நரேட் செய்திருக்கிறது, மொட்டை ராஜேந்திரனின் குரல் வண்டிக்குக் குரல் கொடுத்திருக்கிறது. இங்கே ஒரு ட்விஸ்ட்... வண்டிக்குக் குரல் கொடுத்திருப்பது மொட்டை ராஜேந்திரனா அல்லது ’கலக்கப்போவது யாரு’ சரத்தா எனப் புரியவில்லை. ராகேஷ் நாராயணனின் ஒளிப்பதிவுதான் `வண்டி'யின் பெட்ரோல். கேமரா எல்லாக் காட்சிகளிலும் கச்சிதம், குறிப்பாக சண்டைக் காட்சிகளை செமத்தியாக படம் பிடித்திருக்கிறது. சூரஜின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பெரிதாய் ஈர்க்கவில்லை. 

தொடர்ந்து நல்ல ஸ்க்ரிப்ட்களாக தேர்ந்தெடுத்து நடித்துவந்த விதார்த்துக்கு என்னதான் ஆச்சு, என நிச்சயம் கேட்க முடியாது. ஸ்க்ரிப்டாய் படிக்கும்போதோ அல்லது கேட்கும்போதே, நிச்சயம் `வண்டி' பிரமாதமாய் இருந்திருக்கும். பிறகென்ன பிரச்னை? சிம்பிளான கதையும் சிக்கலான திரைக்கதையும் கொண்ட ஸ்க்ரிப்டுக்கு இருபது குயரில் வசனங்கள் எழுதியதுதான் பிரச்னை. `ஐந்தாவது கடை, என் கடை' என சிம்பிளாக சொல்லி சீனை முடிக்காமல்,  `நம்ம கடை பக்கத்துல மூணாவது கடை இருக்குல்ல, மூணாவது கடை பக்கத்துல நாலாவது கடை இருக்குல்ல, நாலாவது கடை பக்கத்துல அஞ்சாவது கடை இருக்குல்ல, அதுதான் நம்ம கடை' என்று வசனங்களாலேயே `வண்டி'யை சுற்றி வளைத்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாது சிற்றுந்து போல் சின்னஞ்சிறிதாய் அமைத்திருக்க வேண்டிய காட்சிகளையெல்லாம் தொடர்வண்டி அளவுக்கு நீட்டி முழக்கியிருக்கிறார்கள். ஒரு யுகத்திற்குப் படம் பார்த்த ஃபீலிங்! ஹோட்டல் ரூமை காலி செய்து தன் ரூமுக்கு கால் டாக்ஸியில் செல்வதை அதிக பட்சம் இரண்டு நிமிடங்களுக்குக் காட்சிப்படுத்தலாம், இப்படி இருபது நிமிடங்களுக்கா காட்சி`படுத்துவது இயக்குநரே!

படத்தில் சாந்தினியின் அப்பாவாக நடித்திருப்பவர் வேறு பூர்ணம் விஸ்வநாதனைவிட மெதுவாக வசனம் பேசி உயிர் பயத்தை காட்டுகிறார். `ஏயிஈஈ... இன்ன்னாடா உன்க்க்கு...' என ஜான்விஜய்யும் தன் ஆதிகாலத்து மாடுலேஷனிலேயே பேசி கலங்கடிக்கிறார். மூன்று அத்தியாயங்கள் கொண்ட கதையின் முதல் அத்தியாத்தை மட்டும் முதற்பாதி முழுக்க காட்டியிருப்பது என்ன நியாயம் சாரே, அதுவும் கதைக்கு தேவையேயில்லாத ஒரு டஜன் காட்சிகளோடு? இரண்டு மற்றும் மூன்றாம் அத்தியாயங்கள், முதல் அத்தியாத்தில் வாங்கிய ஊமைக்குத்துக்கு மருந்தாக இல்லையென்றாலும் மயிலிறகாய் வருடி கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியிருக்கிறது. இரண்டாம் கியரிலிருந்து மூன்றாம் கியருக்கு மாற க்ளெட்சை பிடிக்கும்போது க்ளைமாக்ஸே வந்துவிடுகிறது. ப்ச்ச்...

மொத்தத்தில், தன்னுடைய நல்ல ஸ்க்ரிப்டை, வண்டி டயரின் கீழ் வைத்த எலுமிச்சம்பழம் போல் நசுக்கியிருக்கிறார் இயக்குநர்.

அடுத்த கட்டுரைக்கு