Published:Updated:

"ஈழம், லிபியா, சிரியா, அஃப்கான்... மேரி கால்வினுக்கு எல்லாம் ஒன்றுதான்!" - எப்படி இருக்கிறது #APrivateWar?

கார்த்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"ஈழம், லிபியா, சிரியா, அஃப்கான்... மேரி கால்வினுக்கு எல்லாம் ஒன்றுதான்!" - எப்படி இருக்கிறது #APrivateWar?
"ஈழம், லிபியா, சிரியா, அஃப்கான்... மேரி கால்வினுக்கு எல்லாம் ஒன்றுதான்!" - எப்படி இருக்கிறது #APrivateWar?

தன் வாழ்நாள் முழுக்க போர்களின் ரணங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கால்வினின் கடைசி வருடங்களைப் பதிவு செய்திருக்கிறது A Private War.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லகை ஆள தற்போது எந்த விதமான போர்களும் நடப்பதில்லை. இப்போது நடப்பதெல்லாம் ஓர் நாட்டின் மீதான சர்வாதிகாரத்தை நிலைநாட்டத்தான். கடந்த 30 ஆண்டுகளில் உலகெங்கிலும் நடைபெற்ற போர்களில் பெரிதும் பேசப்பட்டவர் மேரி கால்வின். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அந்தப் போர்கள் பற்றியெல்லாம் மக்கள் தெரிந்துகொள்ளக் காரணமாய் இருந்தவர் மேரி கால்வின்.

சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அயல்நாட்டு ஆசிரியரான சீயன் ரியனிடம் (டாம் ஹாலண்டர்) , "நீங்கள் இதெல்லாம் பார்க்கக்கூடாது என்பதற்காகவே, நான் இதையெல்லாம் பார்க்கிறேன் " என்பார் மேரி. ஆம், அவர் அப்படிப்பட்டவர் தான். அவர், அவரது கட்டளைகளில் மிகத் தெளிவானவர். மிகவும் தைரியமானவர். அவர் சென்ற இடங்களில் எல்லாம், போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் பற்றிய செய்தியினை ஊருக்கு அறிவிக்கவே விரும்பினார். அவரது ஒரே நோக்கமும் அதுதான். அவருக்குத் தெரியும் இது அத்தனை எளிதான விஷ்யம் இல்லை என்று. அவர் ஒரு யுத்த களச் செய்தியாளர். அவர்தான் மேரி கால்வின்.

2001ம் ஆண்டு இலங்கைப் போர் சமயம் அங்குச் செல்கிறார் மேரி கால்வின். புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சாமானியர்களின் நிலையைப் பதிவு செய்யும் மேரி, அங்கிருந்து இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்துக்கு நகர்கிறார். அவர் தான் பத்திரிகையாளர் என மீண்டும் மீண்டும் சொன்ன போதிலும், அந்த இடத்திலேயே வெடிகுண்டை வீசுகிறது இலங்கை ராணுவம். இடது கண் பார்வையை இழக்கிறார் மேரி. மேரி கால்வின் என்றதும், இணையம் கக்கும் படங்களில் பெரும்பாலும் இடது கண் கறுப்புத்துணியால் கட்டப்பட்ட நிலையில்தான் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருப்பார் மேரி. 

படத்தில் மேரி கால்வினாக ரோசாமண்டு பைக் நடித்திருக்கிறார். 39 வயதான ரோசாமண்டு பைக்கின் ஆகச்சிறந்த பெர்பாமன்ஸ் இதுதான். சைக்காலஜிக்கல் த்ரில்லரான கான் கேர்ள் (Gone Girl) படம்தான் தற்போதுவரையில் பைக்கின் தெறி பெர்பாமன்ஸாக இருந்தது. அதையெல்லாம் கடந்து, இதில் அதகளம் செய்திருக்கிறார். இரண்டு கண்களைக் கொண்டு பார்த்தவர்கள் சட்டென ஒரு கண் பார்வைக்கு மாறும்போது ஏற்படும் சிரமங்கள் வரை அவரது டீட்டெய்லிங் அசத்தல். அதீத குடிப்பழக்கம், போதைப் பொருள்கள் அதைத் தொடர்ந்து மாறும் பற்களின் நிறம் வரை மெனக்கெட்டிருக்கிறார்கள். போர்களை நேரில் சென்று பதிவு செய்வதால், post-traumatic stress disorder (PTSD) என்னும் மன அழுத்தத்தின் பாதிப்புக்குள்ளாகிறார். மன அழுத்தம், தற்கொலை முயற்சி, குழந்தையின்மை, காதல் துரோகம் என ரோசாமண்டு பைக் மறைந்து மேரி கால்வின் மட்டுமே கண் முன் நிற்கிறார். இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் ரேசில் தன் பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ரோசாமண்டு பைக்.  

ப்ரிட்டிஷ் ஃபோட்டோகிராபரும், மேரியின் போர்க்கால பதிவுகளின் சக இருதயரான பால் கன்ராயாக ஜேமி டார்னன். அப்ஃகானில் மாட்டிக்கொள்ளும் போது பதறுவதும், பின்னர் மேரிக்காக இறுதிவரை காத்திருப்பதுமென மிகையில்லாத நடிப்பு. சிரியாவில் பத்திரிகையாளர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்தும், மேரி கால்வின் அங்குச் செல்வதும், அந்த நாளின் இரவை அவர் எதிர்கொள்வதும் மிகவும் முக்கியமான காட்சிகள். 

இலங்கையில் இனப்படுகொலை, அஃப்கானில்  புதைக்கப்பட்ட பிணக்குவியல்கள், லிபியாவில் முன்னாள் பிரதமர் கடாஃபியுடன் பேட்டி, சிரியாவில் குழந்தைகளின் பலி என அனைத்தையும் எவ்வித சமரசமுமின்றி பேசியிருக்கிறது A Private War. அமெரிக்காவின் அரசியல் என்பது இத்தகைய நாடுகளில் எந்த அளவுக்குச் சரி என்கிற விவாதங்களை மட்டும் புறந்தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், இப்படம் ஒரு ஆகச்சிறந்த பதிவு. ஏனெனில், இது நம் சார்பு நிலையைக் கடந்து மேரி கால்வின் என்னும் பத்திரிகையாளர், தன் வாழ்நாளில் தன் உயிரையும் பணயம் வைத்துப் பதிவு செய்த விஷயங்களைக் குறித்த ஒரு பதிவு. அதிலும் வேனிட்டி ஃபேர் என்னும் இதழுக்காக மேரி பென்னர் என்னும் புலனாய்வு பத்திரிகையாளர் எழுதிய 'Marie Colvin’s Private War' என்னும் கட்டுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஒரு புனைவு.

டாக்குமென்ட்ரி இயக்குநரான மாத்யூ ஹெய்ன்மேன், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். வரலாற்று நிகழ்வுகளை மையமாகக் கொண்ட ஒரு படத்தில், அந்த நபரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பேச வேண்டும். இரண்டையும் மிகவும் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். சிதைந்த உடல்கள், சிதிலமடைந்த கட்டடங்கள், தரையைப் பிளக்கும் வெடிகுண்டுகளுக்கு இடையே, மேரி கால்வினோடு நம்மைப் பதைபதைப்போடு பயணிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ராபர்ட் ரிச்சர்டுசன். சிரியாவின் சிதிலமடைந்த கட்டடங்கள் ஏனோ ரோமன் பொலான்ஸ்கி இயக்கிய 'தி பியானிஸ்ட்' படத்தின் சிதிலமடைந்த கட்டடங்களை நினைவுறுத்தியது. படம் பார்த்துவிட்டு வந்த சில மணி நேரம் ஆனாலும், அந்த உடல்களும், ரோசாமண்டு பைக்கின் நடிப்பும் கண்ணைவிட்டு அகல மறுக்கின்றன. 

போர்க்கால சூழல்களில் ஒரு பத்திரிகையாளரின் பணி எத்தகையானது என்பதையும், போர்கள் ஒருவரின் மனதை எந்தளவுக்கு அழுத்தத்துக்குள் தள்ளும் என்பதையும் அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது A Private War. அதனாலேயே இந்த வருடம் போர் குறித்து வெளியான படங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது இந்தப் படம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு