Published:Updated:

38 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பெஸ்ட்செல்லர் நாவல் படமாக ஈர்க்கிறதா? #TheGirlInTheSpidersWeb

ஃபர்ஸ்ட் பார்ட் பாக்கனும்னு அவசியமில்ல... இந்த 'இவருக்குப் பதில் இவர்' சீக்வல் #TheGirlInTheSpidersWeb படம் எப்படி?

38 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பெஸ்ட்செல்லர் நாவல் படமாக ஈர்க்கிறதா? #TheGirlInTheSpidersWeb
38 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பெஸ்ட்செல்லர் நாவல் படமாக ஈர்க்கிறதா? #TheGirlInTheSpidersWeb

சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு ஸ்வீடனில் குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களைக் காக்கிறார் ஹேக்கர் லிஸ்பெத் சலாண்டர். அவரிடம் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் ப்ரோக்ராம் ஒன்றை அமெரிக்க NSA நிறுவனத்திடம் இருந்து திருடச் சொல்லி அசைன்மென்ட் ஒன்று வருகிறது. அதைக் கைப்பற்றியவுடன் அவரிடமிருந்து அந்த ப்ரோக்ராமையும் அதன் பாஸ்வேர்டு அறிந்த சிறுவனையும் ரஷ்யர்கள் கடத்திவிடுகிறார்கள். அந்த ப்ரோக்ராமை மீட்க லிஸ்பெத்தும் முயற்சிகள் எடுக்கும்போது அவரின் இறந்த காலம் குறுக்கே வந்து நிற்கிறது. இது போதாதென்று ஒருபுறம் இழந்த ப்ரோக்ராமை மீட்டெடுக்க அமெரிக்க அதிகாரி ஒருவரும் ஸ்வீடனுக்கு வருகிறார். சிலந்தி வலையென விரியும் பிரச்னைகளைச் சதுரங்க ஆட்டம் ஆடி லிஸ்பெத் எப்படிச் சரி செய்கிறார் என்பதே #TheGirlInTheSpidersWeb.

ஸ்வீடனின் மிகவும் புகழ்பெற்ற சைக்கலாஜிக்கல் த்ரில்லர் நாவல்களில் 'The Girl' (ஆங்கில மொழிபெயர்ப்பின் பெயர்) சீரிஸுக்கு தனி இடம் உண்டு. இதன் ஒரிஜினல் ட்ரைலாஜியை எழுதிய ஸ்டீக் லார்ஸன் (Stieg Larsson) இறந்துவிட, டேவிட் லாகர்க்ரேன்ட்ஸ் (David Lagercrantz) என்ற மற்றொரு எழுத்தாளர் அடுத்தடுத்த பாகங்களை எழுதி வருகிறார். ஸ்வீடனிலேயே அந்த சீரிஸின் ஒரிஜினல் ட்ரைலாஜி, படமாக எடுக்கப்பட்டு மெகாஹிட்டாக, சும்மா இருக்குமா ஹாலிவுட்? சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படங்களின் வித்தகன் டேவிட் ஃபின்சர் இயக்கத்தில், 2011 வருடம் இந்தப் புத்தகத் தொடரின் முதல் நாவல் 'The Girl with the Dragon Tattoo' என்ற பெயரில் வெளியாகி அனைவராலும் வரவேற்கப்பட்டது.

அதில் முக்கியக் கதாபாத்திரங்களாகத் தோன்றிய 'ஜேம்ஸ்பாண்ட்' புகழ் டேனியல் க்ரெயிக் மற்றும் ரூனி மாராவின் நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. இப்போது அப்படத்தின் சீக்வல் என்ற பெயரில் அந்த நடிகர்கள், இயக்குநர் என யாருமின்றி 'இவருக்குப் பதிலாக இவர்' என்ற கணக்கில் #TheGirlInTheSpidersWeb படம் வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் அந்த நாவல் வரிசையில் நான்காம் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தப் படத்தைப் பார்க்க முதல் பாகத்தைப் பார்த்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படிப்பட்ட திரைக்கதைதான் படத்தின் பலம்.

முந்தைய பாகத்தில் முக்கியக் கதாபாத்திரங்களாக இருந்த டேனியல் க்ரெயிக்குக்கு பதில் ஸ்வெரிர் குட்நாசன் (Sverrir Gudnason) மற்றும் ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட ரூனி மாராவுக்கு பதில் க்ளேர் ஃபாய் (Claire Foy) எனப் பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைக்க முற்பட்டு இருக்கிறார்கள். லிஸ்பெத் சாலண்டராக, டிராகன் டாட்டூ கொண்ட பெண்ணாக க்ளெயிர் ஃபாய் நன்றாக பொருந்திப் போயிருக்கிறார். கிட்டத்தட்ட ரூமி மாராவின் உடல்மொழியை கொண்டு வந்துவிட்டார் என்றே சொல்லாம். குறிப்பாக டுக்காட்டி பைக்கில் சீறிப்பாயும்போதும் எதிராளிகளின் எலும்பை உடைக்கும் சண்டைக் காட்சிகளின்போதும் ஆக்ரோஷம் பீரிடுகிறது. எமோஷனல் காட்சிகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். மௌனம் சரிதான், ஆனால் அந்த க்ளிசரின் நடிப்பைத் தவிர்த்து இருக்கலாமே க்ளேர்!

ஸ்வெரிர் குட்நாசனின் (Sverrir Gudnason) கதாபாத்திரமான மைக்கேல் ப்ளூம்க்விஸ்ட்டுக்கு பெரிய வேலை இல்லை. சென்ற படத்தில் இவர் கதையின் முக்கியக் காரணி, ஆனால் இங்கே ஓரங்கட்டப்பட்ட ஜூனியர் ஆர்டிஸ்ட் கணக்காக மட்டுமே வந்துபோகிறார். இவரின் பங்களிப்பு இல்லாவிட்டாலும் படத்தின் கதை 'இதே இடத்தில் தொடங்கி இதே இடத்தில் முடிந்திருக்குமே?' என்று கேள்வி கேட்கும் அளவுக்குப் படு வீக்காக இருக்கிறது. ஆகஸ்டு பால்டராக வரும் சிறுவன் கிறிஸ்டோபர் கான்வெரிக்கு சற்றே வெயிட்டான ரோல்! அதைச் சிறப்பாக செய்திருக்கிறார். நாவலில் ஆட்டிஸம் பாதித்த கதாபாத்திரமாக வரும் இவனைக் குறித்து இங்கே பெரிதாக விவாதம் இல்லை என்றாலும் கொடுத்த காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறான் இந்தச் சிறுவன்.

குறிப்பாக லிஸ்பெத்துடன் செஸ் ஆடிக் கொண்டிருக்கும்போதே எழுந்துபோனவனை லிஸ்பெத், "ஆட்டத்தை முடிக்காமலே எங்கே போகிறாய்?" என்று அதட்ட, "ஓ... சொல்ல மறந்துட்டேன்! செக் மேட்" என்று அமைதியாக நகர்கிறான். அது தவிர, அந்தக் கடினமான ப்ரைம் நம்பர் விளையாட்டு, "தந்தை இறந்தது இறந்த காலத்தில், அதைக் குறித்து சிந்தித்து வருத்தப்பட இப்போது ஒன்றுமே இல்லை!" என்று வயதுக்கு மீறிய அந்த முதிர்ச்சி என அவனின் கதாபாத்திரம் சற்றே வித்தியாசம்தான். இன்னும் கொஞ்சம் அவனுடனே படத்தின் திரைக்கதைப் பயணித்திருக்கலாமே டைரக்டர் சார்?

முந்தைய படமான 'The Girl with the Dragon Tattoo' ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என்பதால் சற்றே மெதுவாக நகரும். ஆனால், இந்த #TheGirlInTheSpidersWeb வெறும் க்ரைம் த்ரில்லர் மட்டுமே என்பதால் திரைக்கதை ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. குடும்ப வன்முறைகளை லிஸ்பெத் எதிர்க்கும் ஆரம்பக் காட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் காட்சிகளுமே கதையின் ஒட்டத்துக்கு உதவியிருக்கின்றன. பின்னணி இசையும் ஒரு ரேசி த்ரில்லருக்கான எல்லா குணங்களையும்கொண்டு காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

"அந்த ஆபத்தான நியூக்ளியர் ப்ரோக்ராம்... எல்லாப் போர்ளையும் சம்பந்தமில்லாம உள்ளே நுழையும் அமெரிக்காகிட்ட இருக்கனுமா? இல்ல, இதுவரைக்கும் போருக்கே போகாத ஸ்வீடன்கிட்ட இருக்கனுமா?", "நீ அன்னைக்கு ஒருநாள் தப்பு பண்ணிட்டனு மன்னிப்பு கேட்கற... ஆனா, இது அந்த ஒருநாள் பத்தி இல்ல. அதுக்கப்புறம் 16 வருஷம் நான் அனுபவிச்ச நாள்களைப் பத்தி..." என்பது போன்ற வசனங்கள் நச்! வீட்டில் வெடிக்கும் குண்டை சமாளித்துவிட்டு, போலீஸிடம் மாட்டாமல் லிஸ்பெத் பைக்கில் கிளம்பும் அந்த சேஸிங் காட்சி, ஏர்போட் விசாரணை அறையில் இருந்து அமெரிக்க அதிகாரியை விடுவித்துவிட்டு அவரை லிஸ்பெத் தனக்கு அடிபணிய வைக்கும் அந்த சீக்வென்ஸ், லிஸ்பெத்துக்கும் அந்தச் சிறுவனுக்குமான கெமிஸ்ட்ரி, கிளைமேக்ஸில் ஹீட் விஷனுடன் அரங்கேறும் அந்த ஸ்னைப்பர் வேட்டை எனக் கைதட்டல் காட்சிகள் படத்தில் ஏராளம். இப்படி மேக்கிங், நடிப்பு, இதர தொழில்நுட்ப விஷயங்கள் என அனைத்திலும் ஸ்கோர் செய்த படம், திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறது.

என்னதான் பெரிய ஹேக்கராக இருந்தாலும் ஸ்வீடனில் எதோ ஒரு மாடித்தள வீட்டில் இருந்துகொண்டு அமெரிக்காவின் NSA நிறுவனத்தில் இருந்து ஒரு ப்ரோக்ராமை திருடுவது எல்லாம் எப்படி எனப் புரியவில்லை. அதுவும் அணு ஆயுதம் சம்பந்தப்பட்ட ப்ரோக்ராமை அவ்வளவு அசால்ட்டாகவா வைத்திருப்பார்கள்? அதை மீட்டெடுக்கவும் ஒரே ஒரு அதிகாரி மட்டுமே ஸ்வீடன் வருகிறார். என்னமோ போங்க பாஸ்! இதற்கெல்லாம் முதலில், இப்படியொரு ஆபத்தான ப்ரோக்ராமை யாரேனும் உருவாக்கிட முடியுமா என்றும் யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. நாவலின் அடிநாதம் என்று பார்த்தால், அது லிஸ்பெத்துக்கும் அவளின் சகோதரிக்குமான உறவு. வெகு நாள்களாக வெவ்வேறு திசையில் சுற்றித் திரிந்தவர்கள் பின்பொரு நாளில் எதோ ஒரு பிரச்னையில் எதிர் எதிர் துருவங்களாகச் சந்தித்து கொண்டால் எப்படியிருக்கும் என்ற அந்த மேஜிக்கல் ஒன்லைன் படத்தில் அத்தனை ஆழமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது. அதை பின்சீட்டுக்குத் தள்ளிவிட்டு, ஆக்ஷன், ஹேக்கிங் என மசாலாவை இஷ்டத்துக்குத் தூவி இருக்கிறார்கள். ரொம்ப காரமுங்கணா!

38 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலை டெக்னிக்கலாக ஒரு நல்ல படமாக எடுத்தவர்கள் அதன் எமோஷன்களுக்கு நியாயம் சேர்க்க பெரிதாக முயற்சிகள் எடுக்கவில்லை. படத்தின் தொடக்கம் மற்றும் முடிவில் மட்டுமே வரும் மனிதம் பேசும் விஷயங்கள், குடும்ப வன்முறையால் ஏற்படும் உறவுச் சிக்கல்கள், சரி, தவறு என்பதுக்கான வரையறைகள் ஆகியவற்றைப் படம் முழுவதும் நுழைத்திருந்தால், இந்தச் சிலந்தி வலையில் மாட்டிய பெண் நிச்சயம் நம்மையும் பதைபதைக்க வைத்திருப்பாள்.