Published:Updated:

`சோழன் பயணம் தொடர வேண்டும்' - ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து பகிரும் செல்வராகவன்!

`சோழன் பயணம் தொடர வேண்டும்' - ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து பகிரும் செல்வராகவன்!
`சோழன் பயணம் தொடர வேண்டும்' - ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து பகிரும் செல்வராகவன்!

ஆயிரத்தில் ஒருவன்- 2 படம் எடுப்பது குறித்து பகிர்ந்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.


12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆன்ட்ரியா என நட்சத்திர பட்டாளங்களை வைத்துப் படத்தை இயக்கினார் இயக்குநர் செல்வராகவன். திகில், த்ரில் இணைந்த இந்த ஃபேன்டஸி படம் அப்போது தமிழுக்குப் புதுசாக இருந்தது. 2010ம் ஆண்டு வந்த இப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. படம் விமர்சன ரீதியாக இல்லாவிட்டாலும், அசுரத்தனமான உழைப்பைக் கொட்டி, தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. இதன் இயக்குநர் செல்வராகவனிடம் ட்விட்டரில் அடிக்கடி வைக்கப்படும் கேள்வியாக இருப்பது என்னோவோ `புதுப்பேட்டை - 2' எப்போது வரும்  என்பது தான். அவரும் நிச்சயம் வரும் என்று கூறி ரசிகர்களை ஆசுவாசப்படுத்துவார். 

இதற்கிடையே, தன்னுடைய ஆசை குறித்து தற்போது ட்விட்டரில் பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்துள்ளார் இயக்குநர் செல்வராகவன். அந்த ஆசை வேறு ஒன்றும் அல்ல. ஆயிரத்தில் ஒருவன் - 2 எடுப்பது தான் அவரின் நீண்ட நாள் ஆசையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டதில், ``வெளியே எங்குச் சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை  2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் எனச் சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை ``ஆயிரத்தில் ஒருவன் 2'' எடுக்க வேண்டும் என்பதுதான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்" எனக் கூறியுள்ளார்.