Published:Updated:

ரீமேக் ஆவது உண்மை தான்; ஆனால்...? - `பிங்க்' படத்தை உறுதி செய்த எழுத்தாளர் 

ரீமேக் ஆவது உண்மை தான்; ஆனால்...? - `பிங்க்' படத்தை உறுதி செய்த எழுத்தாளர் 
ரீமேக் ஆவது உண்மை தான்; ஆனால்...? - `பிங்க்' படத்தை உறுதி செய்த எழுத்தாளர் 

சிவாவுடன் நான்காவது முறையாக அஜித் இணைந்த `விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்துக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அஜித்தின் அடுத்த படத்தை போனிகபூரின் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. 

அஜித்தின் 59-வது படமாக உருவாகும் இத்திரைப்படமானது அமிதாப் பச்சன் நடித்து பாலிவுட்டில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்ற `பிங்க்' படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியானது.  இயக்குநர் ஹெச். வினோத் என்ற பெயருடைய ட்விட்டர் பக்கத்தில்,  அஜித்தை வைத்து, தான்  இயக்கும் திரைப்படம் `பிங்க்' ரீமேக் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களால் மிகவும் குழப்பமடைந்தனர் நெட்டிசன்கள்.

இந்தக் குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில் வினோத் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர், ``என்னுடைய அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு எதுவாயினும், அது நிச்சயம் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியிடப்படும். அதுவுமில்லாமல், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட எந்தச் சமூக வலைதளத்திலும் எனக்குக் கணக்குகள் கிடையாது' என்று குறிப்பிட்டுள்ளார். `பிங்க்' படத்தின் ரீமேக்கா என்பது குறித்து ஹெச்.வினோத் எதுவும் குறிப்பிடவில்லை. இதற்கிடையே, பிங்க் தமிழ் ரீமேக் ஆகவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார் அப்படத்தின் எழுத்தாளர் சூஜித் சிர்கார்.

கோவா திரைப்பட விழாவின்போது பேசிய இவர், ``பிங்க் படம் தமிழ் ரீமேக்காகிறது என்பது உண்மைதான். படம் எடுத்த பிறகு என்னிடம் காண்பிப்பதாக கூறியுள்ளார்கள். ஆனால், அதை நான் இயக்கவில்லை. அதில் யார் நடிக்கிறார்கள் என்பதும் தெரியாது. படக்குழுவை இன்னும் சில நாள்களில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் உறுதி செய்வார்" என்று கூறியுள்ளார். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வராததால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.