Published:Updated:

த்ரிஷ்யம், மெமரீஸ், முன்னறியிப்பு வரிசையில்... மாஸ்டர்பீஸ் க்ரைம் த்ரில்லர்! #Joseph படம் எப்படி?

ர.முகமது இல்யாஸ்

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர், விபத்தில் இறந்த தன் முன்னாள் மனைவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக விசாரணை மேற்கொள்கிறார். அந்த மரணத்தின் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் விரிகிறது. எப்படி இருக்கிறது இந்த க்ரைம் த்ரில்லர் ‘ஜோசப்’?

த்ரிஷ்யம், மெமரீஸ், முன்னறியிப்பு வரிசையில்...  மாஸ்டர்பீஸ் க்ரைம் த்ரில்லர்! #Joseph படம் எப்படி?
த்ரிஷ்யம், மெமரீஸ், முன்னறியிப்பு வரிசையில்... மாஸ்டர்பீஸ் க்ரைம் த்ரில்லர்! #Joseph படம் எப்படி?

ஜோசப் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. தனிமையில் எந்நேரமும் குடியும், சிகரெட்டுமாக இருப்பவர். அவரைப் போலவே ஓய்வுபெற்ற காவலர்கள் நால்வர்தான் ஜோசப்பின் நண்பர்கள். ஜோசப் காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்றிருந்தாலும், காவல்துறை தீர்க்க முடியாத கொலை வழக்குகளுக்கு அவரைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஜோசப்பின் முன்னாள் மனைவி ஸ்டெல்லா தன் இரண்டாம் கணவர் பீட்டருடன் வாழ்ந்து வருகிறாள். ஸ்டெல்லா ஒரு நாள் சாலை விபத்தில் இறந்துவிட, ஜோசப் அவள் இறந்த இடத்தை ஆராய்கிறார். அது விபத்தல்ல என்பதும், ஸ்டெல்லா கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்பதையும் ஜோசப் அறிகிறார். ஸ்டெல்லாவின் மரணத்திற்குக் காரணம் யார்? அந்த மரணம் எப்படி நிகழ்ந்தது? சுவாரஸ்யமான த்ரில்லர் திரைப்படங்களுக்கே உண்டான பாணியில் இதற்கான விடைகளைச் சொல்கிறது ‘ஜோசப்’ திரைப்படம்.

மலையாள சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த கிரைம் த்ரில்லர் திரைப்படங்களான த்ரிஷ்யம், மெமரீஸ், முன்னறியிப்பு முதலானவை கேரளாவில் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றன. சில திரைப்படங்கள் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. அப்படியான திரைப்படங்களின் வரிசையில் வெளிவந்திருக்கிறது ஜோசப். எம்.பத்மகுமார் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதிய ஷாஹி கபீர் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி. கற்பனையான கதையை, நிஜத்தின் அருகில் கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது அவரின் பங்களிப்பு. எனினும், திரைக்கதையில் இன்னும் சில சுவாரஸ்யங்களைக் கூட்டியிருக்கலாம். அதற்கான எல்லா வாய்ப்பும் இந்தக் கதையில் இருக்கிறது.

’ஜோசப்’ கதாபாத்திரத்தில் நடித்த ஜோஜு ஜார்ஜ் இந்தப் படத்தின் பெரிய பலம். எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தாலும், ஒவ்வொரு காட்சியுமே, ஜோஜு ஜார்ஜுக்கானதுதான். அப்படியான வாய்ப்பைத் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். தனிமையை விரும்பும் குடிகாரனாக, மனைவியிடம் தன் பிரச்னையைக் கூறத் தயங்கும் கணவனாக, ’அவள் தனக்கானவள் இல்லை’ என்று தெரிந்தும், காதலியிடம் பிரியமாகப் பேசும் காதலனாக, நரைத்த மீசையையும் தாடியையும் தடவிக் கொண்டே, விசாரணை செய்து, கண்களால் மிரட்டும் காவல்துறை அதிகாரியாக... என ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருக்கிறார். மலையாள சினிமா ஜோஜு ஜார்ஜை இன்னும் நன்றாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை ‘ஜோசப்' நிரூபித்திருக்கிறது.

ஜோசப்பின் மனைவி ஸ்டெல்லாவாக ஆத்மியா. சில காட்சிகளே வந்தாலும், பார்வையாளர்களைக் கவர்கிறார். எனினும் முதுமையான தோற்றம் அவருக்குப் பொருந்தவில்லை. ஸ்டெல்லாவின் இரண்டாவது கணவராக வரும் பீட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தேசிய விருது பெற்ற மலையாள இயக்குநர் திலீஷ் போத்தன். மனைவியின் முன்னாள் கணவன் ஜோசப்பிடம் தயங்கித் தயங்கி பேசும் காட்சிகளிலும், மனைவியின் உடலை அடக்கம் செய்யும் முன், ‘இறுதியாக யாராவது முத்தம் தர விரும்புகிறீர்களா?’ எனப் பாதிரியார் அறிவிக்கும்போது, கூட்டத்தின் பின்னால் நிற்கும் ஜோசப்பை அழைக்கும் காட்சியிலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

’ஜோசப்’ படம் முழுவதும் ஸ்டெல்லா மீதான ஜோசப்பின் பிரியமும், அவள் மரணத்தின் பின்னணியில் இருக்கும் மர்மமும் மட்டுமே பிரதானமாக இருப்பதால், அவற்றைக் கட்டமைப்பதில் சிறப்பாக பணியாற்றியிருக்கிறது ஒளிப்பதிவும், படத்தொகுப்பும். ஜோசப்பின் கண்களைக் காட்டுவதிலும், கிரைம் சீன்களை அவற்றிருக்குரிய சஸ்பென்ஸுடன் காட்டுவதிலும் மனீஷ் மாதவனுடைய கேமரா விளையாடியிருக்கிறது. ‘தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும்’ படத்தின் படத்தொகுப்பாளர் கிரண் தாஸ் இந்தப் படத்தையும் தொகுத்துள்ளார்.

ஒரு கொலையை விசாரிப்பதில் இருக்கும் டீடெய்ல்கள், அதன் பின்னணியில் சம்பந்தப்படுப்பட்டிருக்கும் மிகப்பெரிய நெட்வொர்க்கை அம்பலப்படுத்துவதில் இல்லாமல் போனது ‘ஜோசப்' படத்தின் மைனஸ். ஜோசப்பின் ஒவ்வொரு செயல்களையும் பொறுமையாகக் காட்டி, படத்தின் நீளத்தை அதிகரித்ததால், இறுதிக் காட்சிகளை வேகமாக முடிக்கவேண்டிய கட்டாயத்துக்குச் சென்றிருக்கிறார் இயக்குநர் பத்மகுமார். மருத்துவத்துறையில் இயங்கும் மிகப்பெரிய கிரிமினல் நெட்வொர்க்கைப் பற்றி ஒரு சில வார்த்தைகளே பேசியிருந்ததால், அவற்றின் நம்பகத்தன்மையும் குறைந்துள்ளது. மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலின் கேரள உறுப்பினர் சுல்பி நுஹு என்பவர் 'உடல் உறுப்புத் தானம்' குறித்த தவறான காட்சிகளை 'ஜோசப்' படத்தில் காட்டியிருப்பதால் மக்கள் மனதளவில் குழப்பம் அடைவார்கள் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த விஷயத்தையும் திரைக்கதையில் உள்ள சில க்ளீஷே காட்சிகளையும் கழித்துவிட்டு பார்த்தால், கிரைம் த்ரில்லர் ரசிகர்களை ‘ஜோசப்’ நிச்ச்யம் கவர்ந்து இழுப்பான்.