Published:Updated:

அவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்! - மீனா

அவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்! - மீனா
பிரீமியம் ஸ்டோரி
அவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்! - மீனா

தொகுப்பு : கு.ஆனந்தராஜ் - படம் : சு.குமரேசன்

அவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்! - மீனா

தொகுப்பு : கு.ஆனந்தராஜ் - படம் : சு.குமரேசன்

Published:Updated:
அவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்! - மீனா
பிரீமியம் ஸ்டோரி
அவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்! - மீனா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 13 வயதில் கதாநாயகியாகி, 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னிந்திய சினிமாவின் ‘டாப் ஹீரோயின்’. 35 ஆண்டுகளுக்கும் மேலாகச் சினிமாவில் புகழுடன் இருக்கும் மீனா, ‘அவள் அரங்கத்’தில் வாசகிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.

அவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்! - மீனா

குழந்தை நட்சத்திரமாக முதல் சினிமா வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? நடிப்பால், படிப்பு பாதிக்கப்படவில்லையா?

- கலாதேவி சுகுமாரன், மந்தைவெளி

அம்மா அப்போ அரசியல்ல இருந்தாங்க. அதனால சிவாஜி சாருக்கும் எங்களுக்கும் நல்ல நட்பு இருந்தது. ஒருமுறை சிவாஜி சாரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க அம்மாவுடன் போயிருந்தேன். சிவாஜி சாருக்கு நான் மாலை அணிவிச்சேன். அந்த நேரம்தான், ‘நெஞ்சங்கள்’ படத்தில் நடிக்க ஒரு குழந்தை நட்சத்திரத்தைத் தேடிட்டு இருந்தாங்க. என்னுடைய  பேச்சு, துடுக்குத்தனம் எல்லாம் சிவாஜி சாருக்குப் பிடிச்சுப்போக, ‘நெஞ்சங்கள்’ படத்துல என்னை கமிட் பண்ணினாங்க. அந்த நாலு வயசுல சினிமாவைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. டைரக்டர் மேஜர் சுந்தரராஜன் அங்கிள் சொல்லிக்கொடுத்ததுபோல நடிச்சேன். தொடர்ந்து பல மொழிகளிலும் குழந்தை நட்சத்திர வாய்ப்புகள் கிடைக்க, பிஸியானேன். அதனால படிப்பு ரொம்ப பாதிக்கப்பட்டுச்சு. ட்யூஷன் வெச்சுதான் படிச்சேன். தொடர்ச்சியான சினிமா வாய்ப்புகளால், எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டியதாச்சு. ஆனா, படிப்பு ரொம்ப முக்கியம்னு முடிவெடுத்து, பிஸி ஷெட்யூலுக்கு இடையிலும் கரஸ்ல பி.ஏ மற்றும் எம்.ஏ முடிச்சேன்.

குழந்தை நட்சத்திரம் மீனா, கதாநாயகியானபோது அந்த முதிர்ச்சி நடிப்பில் கைகூடியதா?

- கே.சுகுமாரி, பட்டுக்கோட்டை

அப்போ எனக்கு 13 வயசுனு நினைக்கிறேன். தமிழ்ல ‘என் ராசாவின் மனசிலே’, தெலுங்கில் ‘நவயுகம்’னு ஒரே நேரத்துல ரெண்டு படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். ரெண்டு படங்களிலுமே எனக்குக் கர்ப்பிணி ரோல். ஹீரோயினா நடிக்க எனக்குப் பயமில்லை; சொல்லிக் கொடுக்கிறதை அப்படியே நடிச்சுடலாம்னு ஒரு நம்பிக்கை. ‘நவயுகம்’ பட ஷூட்டிங்... ‘காத்தடிக்கும், மழை வரும், ஜன்னலைச் சாத்தும்போது பிரசவ வலி வரும், பயங்கரமா கத்தணும்’னு சொல்லி நடிக்கச் சொன்னாங்க. ரிகர்சலில் நான் ‘ஓ’னு அழுது நடிக்க ஆரம்பிச்சேன். சுத்தியிருந்த எல்லோரும் சிரிச்சாங்க. ‘ஏன்?’னு கேட்டேன். ‘கண்ணைக் கசக்கிட்டு அழக் கூடாது. வலி இடுப்புலதான் வரும். அங்கே கை வெச்சுதான் அழணும்’னு சொன்னாங்க. அப்போதான் குழந்தை நட்சத்திரமா நடிக்கிறதுக்கும், ஹீரோயினா நடிக்கிறதுக்குமான வித்தியாசத்தை மனதளவில் உணர்ந்தேன்.

அவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்! - மீனா

ரஜினியின் மகளாக நடித்துவிட்டு, ‘எஜமான்’ படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த அனுபவம்..?

- புவனா மகேஷ், அறந்தாங்கி

ஹீரோயினா பல படங்கள்ல நடிச்சுட்டேன். அப்போ ‘எஜமான்’ படத்துல என்னை செலக்ட் பண்ணறதா பேச்சு அடிபட்டுச்சு. ‘ரஜினி அங்கிளுக்கு நான் ஹீரோயினாவா? இதெல்லாம் சாத்தியமே இல்லை’னு முதல்ல நினைச்சேன். ‘அவர் பெரிய நடிகர், ரொம்பச் சின்னப் பொண்ணான என்னை ஜோடியாக்க அவர் சம்மதிக்க மாட்டார்’னு நினைச்சிருந்தேன். ‘ரஜினி சார் `ஓகே’ சொல்லிட்டார்; நீங்கதான் ஹீரோயின்’னு, டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் சார் சொன்னார்.

முதல் நாள் ஷூட்டிங் போற வரை எனக்கு நம்பிக்கையே இல்லை. எனக்கும் ரஜினி சாருக்கும் சில ஷாட்கள் எடுத்ததுக்கு அப்புறம்தான் நம்பினேன். ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லார்கிட்டயும் சகஜமா பேசுவேன். சாரை பார்த்தா மட்டும் தலையைக் குனிஞ்சுப்பேன். ஒரு கட்டத்துல அவர் எங்கம்மாகிட்ட, ‘பொண்ணுக்கு என்னாச்சுங்க... என்னைப் பார்த்தா மட்டும் டல் ஆகிடுது?’னு கேட்டார். பல ஷெட்யூல்களுக்குப் பிறகுதான் அவருடன் ஓரளவுக்குப் பேச ஆரம்பிச்சேன்.

‘நீ தெலுங்கில் பெரிய ஹீரோயினாமே... உன் கால்ஷீட்டுக்குப் பயங்கர போட்டினு கேள்விப்பட்டேன். சந்தோஷமா இருக்கு. காட் பிளஸ் யூ’னு சொன்னார். ‘எஜமான்’ படம் ரிலீஸாகி, டூயட் காட்சிகளைப் பார்த்தப்போ அவ்ளோ ஆச்சர்யமும் சந்தோஷமும் எனக்கு. தொடர்ந்து அவர்கூட ‘முத்து’, ‘வீரா’ படங்கள்ல நடிச்சேன். அப்போ அவர்கூட எந்தக் கூச்சமும் இல்லாம இயல்பா பழகினேன்.’’

அவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்! - மீனா

கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்தபோது கற்றுக்கொண்ட விஷயங்கள்..?

- கு.உஷா நந்தினி, மதுரை

விக்கிபீடியா, டிக்‌ஷனரி... கமல் சாரும் அப்படி ஓர் அறிவுக் களஞ்சியம். சினிமா மட்டுமல்ல; எல்லா விஷயங்களைப் பற்றியும் அவருக்குத் தெரியும். எந்த விஷயத்துக்காகவும் அவர்கிட்ட ஆலோசனை கேட்கலாம்; நான் கேட்டிருக்கேன். அந்த லெஜண்ட் கூட நடிக்கும்போது நாம ஏதாச்சும் தப்பு செய்துடக் கூடாதேனு ஒரு பயம் இருந்துட்டே இருக்கும். ‘அவ்வை சண்முகி’ ஷூட்ல அவர் நடிப்பைப் பார்த்து பிரமிச்சு நிற்பேன். முதல் டேக்ல, அசந்துபோற மாதிரி நடிப்பார். உடன் நடிச்சவங்களால அடுத்த டேக் போனா, முன்பைவிட சிறப்பா நடிப்பார். அவர் அளவுக்கு இல்லாட்டியும், முடிந்தவரை நம்ம பெஸ்ட்டைக் கொடுக்கணும்னு கவனமா நடிப்பேன். ‘ஷாட் ஓகே’னு சத்தம் கேட்டதும்தான், ‘அப்பாடா’னு இருக்கும்.

உங்களுக்குச் ‘சிறந்த ஜோடி’ என்று நீங்கள் கருதும் நடிகர் யார்?

- இந்திராணி கணேசன், பெங்களூரு


ரொம்பக் கஷ்டமான கேள்வியைக் கேட்டுட்டீங்களே... ஓகே, சொல்றேன். ரஜினி சார். உங்களுக்கும் இந்த ஜோடி பிடிக்கும்தானே? ஆனா, இதைப் படிச்சுட்டு மற்ற ஹீரோக்கள் என் மேல கோபப்பட்டா, நீங்கதான் பொறுப்பேத்துக்கணும்! (சிரிக்கிறார்).

அவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்! - மீனா

குழந்தை நட்சத்திரம், ஹீரோயின் என பிஸியாக நடித்த காலத்தில் நீங்கள் இழந்த விஷயங்கள்..?

- நித்யாதேவி கிருபாகரன், திருச்சூர்

ஸ்கூல், ஃப்ரெண்ட்ஸ், டீச்சர், ஹோம்வொர்க்... இப்படிப் பால்யத்துக்கான இயல்பான விஷயங்களை நான் இழந்திருக்கேன். ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போய் விளையாடுறது, மகிழ்ச்சியை ஷேர் பண்ணிக்கிறது இதெல்லாம் எனக்கு அதிகமாகக் கிடைச்சதில்லை. மத்த பசங்க மாதிரி சுதந்திரமா வெளிய போக முடியாது. இதுக்காகவெல்லாம் பலமுறை வருத்தப்பட்டிருக்கேன். ‘எல்லாத்துலயுமே ப்ளஸ், மைனஸ் கலந்துதான் இருக்கும். எல்லாக் குழந்தைகளுக்கும் சிவாஜி, ரஜினியுடன் நடிக்கிற வாய்ப்புக் கிடைக்குமா? சின்ன வயசுலேயே ஸ்டாராக முடியுமா? அதெல்லாம் உனக்குக் கிடைச்சிருக்கு. இந்த வாய்ப்பைச் சரியா பயன்படுத்திக்கோ’னு அப்பா எனக்குப் புரியும்படி எடுத்துச் சொல்வார்.

டிராவல் பண்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதற்காகவே, ஐ.எஃப்.எஸ் ஆபீஸராகணும்னு குழந்தையா இருக்கும் போது ஆசைப்பட்டிருக்கேன். ஆனா, நான் நினைச்சது நடந்திருந்தாகூட என்னால இத்தனை நாடுகளுக்குப் போயிருக்க முடியுமானு தெரியலை. நான் ஷூட்டிங்குக்காகப் போகாத நாடுகளே இல்லைங்கிற அளவுக்கு, உலகத்தைச் சுத்தி வந்துட்டேன். ஆனா, பிரைவஸியை ரொம்ப இழந்திருக்கேன். அப்பா சொன்னதுதான்... ஒன்றை இழந்தாதான் மற்றொன்றைப் பெற முடியும்.

‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக, ‘குயில் பாட்டு’ பாடிய ‘சோலையம்மா’வைப் பற்றிய சுவாரஸ்யமான சில நினைவுகள்..?

- சி.கலாவதி, திருப்பதி

அவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்! - மீனா(கேள்வியை ரசித்துச் சிரிக்கிறார்) ஏற்கெனவே சொன்னதுபோல, அந்த 13 வயசுல கர்ப்பிணி ரோல். நடிக்க ரொம்பக் கூச்சப்பட்டேன். அதைவிட சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, நான் நிஜமாவே கர்ப்பமா இருக்கேனு நினைச்சு ‘அதைச் சாப்பிடு, இதைச் சாப்பிடு, இப்படியெல்லாம் நடந்துக்கணும்’னு அந்தக் கிராமத்து மக்கள் ஷூட்டிங் ஸ்பாட்ல என்னை அப்படி கவனிச்சுக்குவாங்க. கேரக்டரின் இயல்புக்காக பெடிக்யூர், மெனிக்யூர் எல்லாம் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டாங்க. படத்தில் ஃப்ரேமில், ‘என் கால் விரல் நகங்கள் எல்லாம் இப்படி இருக்கே’னு ரொம்பக் கவலைப்பட்டிருக்கேன். முகத்துல மஞ்சள் பூசிகிட்டு, சுத்தமா மேக்கப் இல்லாம நடிச்சிருப்பேன். ராஜ்கிரண் சார் என்னை ஒரு பாட்டு முழுக்க தூக்கிக்கிட்டே நடக்கிற சீன்ல ரொம்பச் சிரமப்பட்டார்.

என்னை அடக்கம் பண்ற காட்சி. என் முகம் தவிர உடல் முழுக்க எருமை வறட்டி வெச்சுட்டாங்க. டேக் ஓகே ஆக நேரமாக, நான் ரொம்ப டயர்டாகி, கண் அசந்துட்டேன். டைரக்டர் கஸ்தூரி ராஜா சார் என் பக்கத்துல குனிஞ்சு, ‘கொஞ்சம் மூச்சை இழுத்துப் புடிச்சுக்கோம்மா’னு சொல்ல, க்ளாஸ்ல டீச்சர் சத்தம் கேட்டதும் தூக்கத்தைக் கலைச்சுப் போட்டுட்டு எழுந்து நிக்கிற குழந்தை மாதிரி சட்டுனு முழிச்சேன். இப்போ ‘சோலையம்மா’வை டி.வி-யில பார்க்கிறப்போ, ‘சோலையம்மா மட்டுமில்ல, மீனாவும் அப்போ இன்னொசன்ட்தான்’னு சிரிச்சிக்குவேன்.

திருமண வாழ்க்கை, தாய்மையின் பூரிப்பு, ஹீரோயின் நைனிகா, தோழிகள், ரஜினி - கமல் யாருக்கு ஆதரவு, அட்ஜெஸ்ட்மென்ட், மீ டூ...

இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு மீனா பதிலளிக்கிறார், அடுத்த இதழில்!