Published:Updated:

அவ்ளோ அப்பாவி நான்! - `பிக் பாஸ்' ரம்யா

அவ்ளோ அப்பாவி நான்! - `பிக் பாஸ்' ரம்யா
பிரீமியம் ஸ்டோரி
அவ்ளோ அப்பாவி நான்! - `பிக் பாஸ்' ரம்யா

பொன் வசந்தம்கு.ஆனந்தராஜ் - படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

அவ்ளோ அப்பாவி நான்! - `பிக் பாஸ்' ரம்யா

பொன் வசந்தம்கு.ஆனந்தராஜ் - படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
அவ்ளோ அப்பாவி நான்! - `பிக் பாஸ்' ரம்யா
பிரீமியம் ஸ்டோரி
அவ்ளோ அப்பாவி நான்! - `பிக் பாஸ்' ரம்யா

‘நல்லவர் யார்... கெட்டவர் யார்?’ என்கிற ஆவலோடு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, போட்டியாளர் ரம்யா என்.எஸ்.கே-வின் வெளியேற்றம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. பிற போட்டியாளர்களிடம் அன்பு காட்டியும் அன்பைப் பெற்றும் தனித்து விளங்கிய அமைதித் திலகம் ரம்யாவுடன் ஒரு `கலகல' சந்திப்பு... 

அவ்ளோ அப்பாவி நான்! - `பிக் பாஸ்' ரம்யா

இசைப் பயணத்தை எப்போது தொடங்கினீங்க?

மூணு வயசுலயே இசை கத்துக்க ஆரம்பித்தேன். முதலில் கர்னாடக இசையும் கிளாஸிக்கலும். அந்தச் சின்ன வயசுல என் எதிர்காலம் பத்தியெல்லாம் முடிவு செய்யலை. அதன் பிறகு வெஸ்டர்ன் பாடல்களைக் கேட்டு, தப்புத் தப்பா பாடியே அந்த இசைமீது பெரிய ஆர்வம் ஏற்பட்டுடுச்சு. பாடகியாகும் ஆசை வந்துச்சு. என் குரலுக்கு வெஸ்டர்ன் பாடல்கள்தான் செட்டாகிற மாதிரி இருக்கும். அப்போ அத்தகைய பாடல்கள் அவ்வளவா அறிமுகமாகலை. அதனால ஒருகட்டத்துல இசையை பேஷனா வெச்சுகிட்டு, விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சேன்.

பின்னணிப் பாடகியானது எப்படி?

என் கிட்டார் மாஸ்டர், விஜய் ஆண்டனி சார் இசையமைப்பில் வாசிச்சுட்டிருந்தார்.  அவர் மூலமா விஜய் ஆண்டனி சாரின் அறிமுகம் கிடைச்சு, ‘உனக்கென நான்’ (காதலில் விழுந்தேன்) பாடலைப் பாடி, பின்னணிப் பாடல் உலகத்துக்குள் நுழைந்தேன். கல்லூரிப் படிப்பு முடிஞ்சு, `ரேடியோ சிட்டி' பண்பலையில வேலைக்குச் சேர்ந்தேன். சில மாதங்களுக்குப் பிறகு, ‘காதலில் விழுந்தேன்’ படம் ரிலீஸாகி, நான் பாடிய பாடலும் என் குரலும் ஹிட் ஆச்சு. அந்தப் பண்பலையின் பல கிளைகளுக்கும் பாடல்களைத் தேர்வு செய்து கொடுக்கிற மியூசிக் மேனேஜர் வேலை என்னுடையது. அப்போ மத்த பண்பலைகளிலெல்லாம் என் பாட்டை அடிக்கடி ஒலிபரப்புவாங்க. ஆனா, யாராச்சும் ஏதாச்சும் சொல்லிடுவாங்களோனு நினைச்சு, என் பண்பலையில் என் பாடலை மட்டும் தேர்வு செய்யாமல், அவ்ளோ அப்பாவியா வேலை பார்த்தேன். ஒரு கட்டத்துல சினிமா மற்றும் கச்சேரி வாய்ப்புகள் அதிகம் வரவே, பண்பலை வேலையை விட்டுட்டேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் நிறைய பாடல்களைப் பாடினேன். ஸ்கைப் மூலமாகப் பயிற்சி வகுப்புகள் எடுத்தேன்.

அவ்ளோ அப்பாவி நான்! - `பிக் பாஸ்' ரம்யா

இளையராஜா இசையில் பல ஹிட்ஸ் கொடுத்த அனுபவம்...

இசையமைப்பாளர் தமன் என் குழந்தைப் பருவ நண்பர். அவர் இசையில் ‘டூக்குடு’ங்கிற தெலுங்குப் படத்தில் பாடினேன். அந்தப் பாட்டு, பெரிய ஹிட்டாச்சு. அதைக் கேள்விப்பட்ட இளையராஜா சார், தன் ‘குண்டெல்லோ கோதாரி’ங்கிற படத்தில் பாட என்னைக் கூப்பிட்டிருந்தார். அவர் என்னைத் தெலுங்குப் பொண்ணுன்னு நினைச்சிருந்தார். அப்புறம் என் ரெண்டு தாத்தாக்கள் பேரையும் சொல்லி, ‘அவங்க பேத்திதான்’னு சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டார். அன்றைக்கு, ராஜா சாரின் இசையில் ஒரு பாடலைப் பாடினேன். அடுத்த நாளே மறுபடியும் அவர்கிட்ட இருந்து அழைப்பு. அதுதான், ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்துக்கான ரெக்கார்டிங். அப்படி, ‘சாய்ந்து சாய்ந்து’, ‘சற்று முன்பு பார்த்த’னு ரெண்டு பாடல்களைத் தமிழ் மற்றும் தெலுங்கில் பாடினேன். என் கரியர்ல பெரிய பிரேக் கிடைச்சது. ஃபிலிம் ஃபேர் விருதும் கிடைச்சது. தொடர்ந்து ராஜா சார் மியூசிக்ல பல பாடல்களைப் பாடியிருக்கேன். என் வளர்ச்சியில் அவருக்குப் பெரிய பங்குண்டு.

கனவு?

‘கொஞ்சம் நிலவு (திருடா திருடா)’ பாடல் வெஸ்டர்ன் சாயல்ல வெளியானபோதுதான், ‘அப்போ நம்ம வாய்ஸும் ஹிட் ஆகும்’னு எனக்கு மியூசிக் கரியர் மேல நம்பிக்கையே வந்தது. அதுக்குக் காரணமான ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையில் பாடுவது எனக்கு இன்னும் கனவாவே இருக்கு. ‘ஏன் இன்னும் சார் நம்மள பாடக் கூப்பிடாம இருக்கார்?’னு பல முறை யோசிச்சிருக்கேன். சீக்கிரமே அவர் இசையில பாடுவேன்னு நம்பிக்கை இருக்கு.

இரண்டு பிரபல தாத்தாக்களின் பேத்தி...


‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன், அப்பாவின் அப்பா. ‘நடிப்பிசைப் புலவர்’ கே.ஆர்.ராமசாமி, அம்மாவின் அப்பா. நான் பிறக்கும் முன்பே இருவரும் இறந்துட்டாங்க. சின்ன வயசுல அவர்களின் புகழையும் பெருமையையும் தெரிஞ்சுக்கும் பக்குவம் எனக்கில்லை. வளரப் வளரப் பெற்றோர் மற்றும் பலர் சொல்லியும், அவங்க படங் களைப் பார்த்தும் அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். தாத்தா என்.எஸ்.கிருஷ்ணன், தான் சம்பாதிச்சதைப் பலருக்கும் கொடுத்து மகிழ்ந்தவர். ‘பிறருக்குக் கொடுத்து உதவணும்’னுதான் எங்கம்மாவும் என்கிட்ட சொல்லி வளர்த்திருக்காங்க. கடந்த 11 வருஷமா, என் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிச்சு வெச்சு, அதில் ஏழைகளுக்கு உடைகள், உணவுகள் வாங்கிக் கொடுத்துட்டு இருக்கேன். இதனால் தாத்தாவே என்கூட இருக்கிறதா உணர்கிறேன். இதை இதுவரை யார்கிட்டயும் சொன்னதில்லை.

அவ்ளோ அப்பாவி நான்! - `பிக் பாஸ்' ரம்யா

ஏன் இந்த ஹேர்ஸ்டைல்?

எங்க போனாலும் முதல்ல என் ஹேர்ஸ்டைல் பத்திதான் கேட்கிறாங்க. அடிக்கடி ஹேர்ஸ்டைலை மாத்துவேன். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் போறதுக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான், இந்த ஹேர்ஸ்டைலை மாத்தினேன். ஒருபக்கம் ஷார்ட்டாவும், இன்னொருபக்கம் லாங் ஹேரும் வெச்சு அதில் சில்வர் கலரை அப்ளை பண்ணினேன். இது மெயின்டெயின் பண்ண ரொம்ப சுலபமா இருக்கு. ‘அழகான சுருள் முடியை ஏன்டீ இப்படிப் பண்ணிட்டே?’னு அம்மா வருத்தப்பட்டாங்க. இப்போ அவங்களுக்கும் என் ஹேர்ஸ்டைல் பிடிச்சுப் போச்சு.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்ததும் உங்க முதல் செயல்பாடு என்ன?

 ‘பிக் பாஸ்’ போன சீஸன்லயே பல போட்டியாளர்களோட பெயரும் டேமேஜ் ஆனதைப் பார்த்தோம். எங்க சீஸன்லயும், நிறைய சண்டை சச்சரவுகள் நடந்தன. நான் எலிமினேட் ஆனதும், அங்கே இருந்தே அம்மாவுக்குத் தகவல் சொல்லிட்டேன். வீட்டுக்கு வர கார்ல ஏறினதும், என் க்ளோஸ் ஃப்ரெண்டு கோகுலுக்கு போன் பண்ணினேன். ‘கடந்த 35 நாளா என்ன நடந்துச்சு? நிகழ்ச்சியில வயசுல மூத்த பலரையும் எதிர்த்துப் பேசியிருக்கேன்; கோபப்பட்டிருக்கேன். அது சரியான காரணத்துக்காகத்தான். ஆனா, அதை மக்கள் எப்படிப் புரிஞ்சுக்கிட்டாங்க? மக்களுக்கு என் மேல கோபம் இருக்கா?’னு கேட்டேன். மக்கள் என் மேல ரொம்ப அன்பா இருக்காங்கனு அவன் சொல்லக் கேட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது; சோஷியல் மீடியாவில் மக்கள் அளித்த ஆதரவு நெகிழ்ச்சியைத் தந்தது.

‘பிக் பாஸ்’ மூலம் கற்றவை... பெற்றவை..?

வீட்டில் எல்லா வேலைகளுக்கும் அம்மாவை எதிர்பார்த்தே வளர்ந்துட்டேன். அவங்களை ரொம்ப வேலை வாங்கிட்டேன். ஆனா, ‘பிக் பாஸ்’ வீட்டில் எல்லா வேலைகளையும் செய்தேன். அப்போதான் அம்மாவுக்கு நான் கொடுத்த வேலைபளுவைப் புரிஞ்சுக்கிட்டேன். இனி அவங்களுக்குக் கூடுமானவரை வீட்டு வேலையில ஒத்தாசையா இருக்கணும்னு நினைச்சிருக்கேன். எலிமினேட் ஆகி வந்ததுல இருந்து இதுவரை நான் சந்திச்ச மக்கள்ல ஒருத்தர்கூட என்னை நெகட்டிவாகப் பேசலை; பாராட்டத்தான் செஞ்சாங்க. முன்பைவிட, இப்போ மக்களின் அன்பை நிறைய பெற்றிருக்கேன்.