Published:Updated:

``கோபம், சண்டை, புறக்கணிப்பு, பக்குவம்... புரூஸ் லீ, ஐகான் ஆன கதை!'' - #HBDBruceLee

தார்மிக் லீ
``கோபம், சண்டை, புறக்கணிப்பு, பக்குவம்... புரூஸ் லீ, ஐகான் ஆன கதை!'' - #HBDBruceLee
``கோபம், சண்டை, புறக்கணிப்பு, பக்குவம்... புரூஸ் லீ, ஐகான் ஆன கதை!'' - #HBDBruceLee

புரூஸ் லீ பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு.

சீனாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை 'இயர் ஆஃப் தி டிராகன்' (Year of the dragon) என்று கொண்டாடும் வழிமுறையை 1928-லிருந்து பின்பற்றி வருகின்றனர். அப்படி வரும் ஆண்டுகளுக்கு ஒவ்வொரு பெயரும் உண்டு. 1928-ல் ஆரம்பித்த முதல் டிராகன் வருடத்துக்குப் பெயர் உலகம். இதைத் தொடர்ந்து 1940-க்கு உலோகம், 1952-க்கு தண்ணீர், 1964-க்கு மரம், 1976-க்கு தீ என்று பெயர் சூட்டி வந்தனர். அதற்குப் பின் வரும் அடுத்தடுத்த 12 ஆண்டுகளுக்கு, இதே பெயர்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும். அப்படிக் குறிப்பிட்ட வருடத்தில் பிறக்கும் குழந்தைகளை, அந்த வருடம் சார்ந்த தனிமத்தோடு இணைத்துப் போற்றி வருகிறார்கள். 1940-ம் ஆண்டு, உலோக வருடம். அந்த ஆண்டின் நவம்பர் 27-ல் பிறந்தவர்தான், புரூஸ் லீ. இதைத் தவிர அறியாத தகவலாக, வேறென்ன இவரைப் பற்றிச் சொல்லிவிட முடியும். இவரைத் தீவிரமாகப் பின்பற்றி வரும் நபர்களுக்கு இதுவும் தெரிந்திருக்கும். இப்படி உலகமே போற்றிப் புகழும் உலோக மனிதனுக்கு இன்று பிறந்தநாள். முறுக்கேறும் நரம்போடு இக்கட்டுரையைத் தொடர்வோமா..?

லீயின் 32 வருட வாழ்க்கைப் பயணத்தில், நிறைய நபர்களுடைய பெயரை மேற்கோள் இட்டுக் காட்ட வேண்டியிருக்கிறது. அதில், பெற்றோரைத் தவிர குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கியமான நபர் இப் மேன் (Yip Man). இவர்தான் புரூஸ் லீயின் அபரிமிதமான ஆற்றலுக்கு வித்திட்டவர். தமிழ்நாட்டில் களரி, அயல் நாட்டில் குங் ஃபூ, சைனீஸ் பாக்ஸிங், மார்ஷியல் ஆர்ட்ஸ்... என இன்னும் பல பெயர்கள் உண்டு. இந்த ஒட்டுமொத்த கலைக்கும் வித்திட்டவர்கள் தமிழர்கள்தான் என்று கூறுபவர்களும் உண்டு. குங் ஃபூவில் ஷாவோலின் குங் ஃபூ (Shaolin), மன்சூரியன் குங் ஃபூ (Manchurian), வூ ஷூ குங் ஃபூ (Wushu), விங் சன் (Wing chun) என பல வகைகள் உள்ளன. இதில், விங் சன் என்ற குங் ஃபூ முறையில்தான் லீ தேர்ச்சி பெற்றவர், சகலகலா வல்லவர்.

லீ, தனது 16 வயதில் இப் மேனிடம் தற்காப்புக் கலையைக் கற்கத் தொடங்கினார். 'உடல் வலிமை பெறுவதைவிட, மனம் வலிமை பெறுவதே மிக முக்கியம்' என்பதை அவர் மனதில் வேறூன்றி நிற்கச் செய்தார் இப் மேன். காரணம், புரூஸ் லீ மிகப்பெரிய கோபக்காரர். அவர் சிறுவயதில் சண்டையிடாத தெருக்களே கிடையாதாம். காரணம், புரூஸ் லீயைத் தேடிவந்த 'அந்த' முதல் சண்டை. ஏதோவொரு பிரச்னைக்காக ஒரு கும்பலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு, அந்த வாக்குவாதம் வளர்ந்து பெரும் சண்டையில் முடிந்திருக்கிறது. இந்தச் சண்டையில் லீயை அடித்துத் துவைத்துவிட்டார்கள். விவரம் புரியாத வயதில் எழுந்த அந்த முதல் கோபம், நாளடைவில் வீரியம் பெற்று, எங்கு சென்றாலும் சண்டை, எதற்கெடுத்தாலும் சண்டை என்றாகிப்போனது. இதற்குக் காரணம் இவரின் தந்தை. தந்தையிடமிருந்து குங் ஃபூவின் அடிப்படையைக் கற்றுக்கொண்டார். தவிர, 20 படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடிக்க வைத்திருக்கிறார்  இவரின் தந்தை.

ஹாங்காங்குக்கும் ஜப்பானுக்கும் போர் நடந்த சமயம். போரில் ஏற்பட்ட இழப்புகளைக் கண்ட இவருக்குக் கோபம் உச்சத்துக்கு ஏறியது. வெறி பிடித்ததுபோல் வெவ்வேறு தெருக்களுக்குச் சென்று சண்டையிட்டு பிரச்னைகளை உண்டாக்கினார். இவரது இந்தச் சண்டைப் பயணத்தில் ஒருநாள் மிகப் பெரிய புள்ளியின் வாரிசும் அடக்கம். இவரின் பெற்றோரால் எவ்வளவு முயன்றும் இவரைப் பள்ளிக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. அப்படியே அனுப்பினாலும், படிப்பென்பது துளிகூட இவர் மனதில் நிற்கவில்லை. காரணம், இவரது மனம் முழுக்க சண்டை, தற்காப்புக் கலையென எதிர் வழியிலேயே ஓடிக்கொண்டிருந்தது. இப்படி வெறிபிடிக்க ஓடியவருக்கு இலக்காக வந்தவர்தான் இப் மேன். கற்க வந்த ஓரிரு நாள்களிலேயே லீயின் கோபத்தை அறிந்துகொண்டார் அவர். தனக்கு குங் ஃபூ கற்றுக்கொடுக்க இப் மேனை இவர் அணுகிய சம்பவமே நகைச்சுவையானது. இதை, டானி யென் நடித்த 'இப் மேன்' படத்தில் ஒரு காட்சியாகவே வைத்திருப்பார்கள். 

லீயின் மனநிலையை மெள்ள மெள்ள சீர்படுத்தி, தற்காப்புக் கலையின் முக்கியத்துவத்தை உணர்த்தியதோடு, அவரை, தத்துவங்கள் பக்கமும் திசை திருப்பிவிட்டார், இப் மேன். புரூஸ் லீயை நன்கு அறிந்தவர்களுக்கு அவரது வீட்டிலிருக்கும் புத்தகக் குவியல் பற்றியும் தெரிந்திருக்கும். ஆம், அன்று சிறு வயதில் இப் மேன் ஏற்படுத்திய தாக்கம், பின்னாள்களில் மிகப்பெரிய மாறுதலை இவரிடம் உண்டாக்கியது. அப்போதுதான், கடவுள் மீதிருந்த நம்பிக்கையைப் புறம்தள்ளிவிட்டு, தன் மீது நம்பிக்கை வைத்து, தன்னை செதுக்கத் தொடங்கினார் லீ. சாலையோரத்தில் சண்டையிட்டுக்கொண்டிருந்த இவரைப் போட்டிகளில் பங்கேற்க வைத்து, அவரது கோபத்தை ஆற்றலாக மாற்றினார் இப் மேன். குறிப்பிட்ட குங் ஃபூ கலையில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் கொடுப்பார்கள். 'விங் சன்' வகை குங் ஃபூவின் கிராண்ட் மாஸ்டர் இப் மேன்தான்.

தன் இனத்தையும் மதத்தையும் சாதியையும் முன் நிறுத்திக்கொள்ள மற்ற மனித இனங்களைத் தாழ்த்துவதும் புறக்கணிக்கப்பதும் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்த சமயம். இப் மேனின் குங் ஃபூ பள்ளியில் பயின்ற மற்ற மாணர்கள், லீயின் இனத்தைக் காரணம் காட்டி, இவருடன் பயில மறுப்பு தெரிவித்தார்கள். இப் மேன் அவர்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு, புரூஸ் லீயைப் போன்ற ஆறு மாணவர்களுக்கு மட்டும் குங் ஃபூ பயிற்சியளித்தார். இதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான், மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' திரைப்படம். இதில், லீ கதாபாத்திரமாக ஜீவாவும் இப் மேன் கேரக்டராக செல்வாவும் சித்திரிக்கப்பட்டிருப்பர்கள். இப் மேனைப் பற்றி முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவு தெரிந்துகொள்ள ஹாங்காங்கில் வெளியான 'இப் மேன்' படத்தைப் பார்க்கலாம். இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகியுள்ளன. இக்கட்டுரையில், இப் மேனைப் பெருமைபடுத்திப் பேசுவதற்குக் காரணம் ஒன்றுதான். இப் மேனின் பிரதிபலிப்புதான் புரூஸ் லீ.

இப் மேனின் பயிற்சியில் முழுமையாக மூழ்கி, அமைதி, தத்துவம், தற்காப்புக் கலை எனச் சீராகச் சென்றுகொண்டிருந்தது லீயின் வாழ்க்கை. மீண்டும் ஊர் முழுக்க சண்டைகளும் சர்ச்சைளுமாகக் காணப்பட்டது. அதுவரை காரணமில்லாமல் சண்டை போட்டவருக்கு, இப் மேன் ஏற்படுத்திய தாக்கம் பகுத்தறியச் செய்து, காரணத்தோடு சண்டையிட வைத்தது. புரூஸ் லீயின் இந்த நடவடிக்கைகளைக் கண்ட பெற்றோர், பயந்துபோய் இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர். இப் மேன் விதைத்த விஷயங்களுக்கு, மேலும் உயிர் கொடுக்கும் விதமாக, அது சார்ந்து பயிலத் தொடங்கினார். குங் ஃபூ கலையில் மிகப்பெரிய வல்லுநரானார். சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். உலகையே திரும்பிப் பார்க்கவும் வைத்தார். இவரது இந்த வெற்றிப் பயணத்தை ஒரு கட்டுரையில் சுருக்கிவிட முடியாது. 

நாடு முழுவதும் தொற்று நோயாகத் தொற்றிக்கொண்டிருப்பது, 'Human Race'. தமிழ்நாட்டில் அதிமாகப் புழங்கும் வார்த்தை, 'நீங்க என்ன ஆளுங்க?' என்பது. இதை வெளிநாட்டில் அதிகம் கேட்கமாட்டார்கள். ஏனென்றால், முகத்தை வைத்தே இந்நாட்டைச் சேர்ந்தவர்தான் என்பதை முடிவு செய்துவிடுவார்கள். லீ ஆசியாவைச் சேர்ந்தவர் என்ற ஒரு காரணத்தால், பல பெரும்புள்ளிகளின் விமர்சனக் கணைகளை எதிர்கொண்டார். இந்தச் சமயத்தில்தான் இவர் கற்றுக்கொண்ட தத்துவங்களும் தற்காப்பும் பெரிதாக உதவியது. ஏளனங்களை ஏணிப்படிகளாக்கி தன் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டார். பின்னாள்களில் ஹாங்காங் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் ஜொலித்தார். இப் மேனிடம் இருக்கும் சிறந்த குணாதிசியம், தான் கற்றதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பது. இதைத்தான் புரூஸ் லீயும் செய்தார். தன்னிடமிருக்கும் தற்காப்புக் கலையை நாடறியச் செய்தார். சினிமாவில் நடிப்பதோடு நிறுத்தாமல், தனக்குத் தெரிந்த கலையை, பயிற்சி மையம் அமைத்து மற்றவர்களுக்கும் கற்பித்தார். பின்னாளில் Jeet Kune Do என்ற புதிய வகை தற்காப்புக் கலை ஒன்றையும் உருவாக்கினார். தனக்கே உரிய ஸ்டைலுடன், தான் பார்த்து, கற்றுகொண்ட பலவற்றையும் சேர்த்து ஒரு கலவையாக இந்தக் கலையை உருவாக்கி இருந்தார்.

,

இப் மேன் தன்னிடமிருந்த அனைத்து சிறப்பம்சங்களையும் புரூஸ் லீயிடம் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், சோகம் என்னவெனில், இப் மேன் விதைத்துச் சென்ற கலையை லீயால் ஏழு மாத காலம் மட்டுமே உயிருடன் இருந்து காப்பாற்ற முடிந்தது. ஆம்... இப் மேன் இறந்த ஏழு மாதங்களில் புரூஸ் லீயும் இறந்துவிட்டார். புரூஸ் லீயின் மரணம் இன்று வரை விமர்சனத்துக்குறிய ஒன்றாகவே தொடர்கிறது. அந்த சோகம் நமக்கு வேண்டாம். உலகின் கடைசி நபர் உயிரோடு இருக்கும்வரை, 'புரூஸ் லீ' என்ற உலோக மனிதனின் புகழ் நிலைக்கட்டும், நிலைக்கும்! 

புரூஸ் லீயின் பிறந்த நாளான இன்று, அவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த சுவாரஸ்யமான விஷயங்களைக் கமென்ட் பாக்ஸில் பகிர்ந்துகொள்ளலாமே?

அடுத்த கட்டுரைக்கு