Published:Updated:

தில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு!

தில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு!
பிரீமியம் ஸ்டோரி
தில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு!

பாரதி மணி - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

தில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு!

பாரதி மணி - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
தில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு!
பிரீமியம் ஸ்டோரி
தில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு!

ஜூலை 27, வெள்ளிக்கிழமை ஏ.பி. நாகராஜனின் ‘தில்லானா மோகனாம்பாள்’ வெளியாகி ஐம்பது வருடங்கள் பூர்த்தியாயிற்று. அதே வருடம்தான் என் தந்தையாரும் காலமானார். இந்தத் `தில்லானா’வுக்கு முன்னரே எட்டுப் படங்கள் இயக்கியவர் ஏ.பி. நாகராஜன். நடிகர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகப் பங்களிப்பு செய்தவர்.

தில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு!

1968 ஜூலை ஆரம்பத்தில் அம்மா எனக்கெழுதிய கடிதத்தில் அப்பாவுக்கு வயிற்றில் ஒரு கட்டி இருப்பதாகவும், டாக்டர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென்று சொல்வதாகவும் எழுதியிருந்தார்.  அப்பா சுப்பிரமணியன், திருவிதாங்கூர் அரண்மனையில் பேஷ்காராக  இருந்தார். உடனே நான் தில்லியிலிருந்து ஒருமாத விடுமுறை பெற்று, பார்வதிபுரம் வந்துசேர்ந்தேன். வரும்போது என் வெளிநாட்டுப்பயணத்தில் நான் புதிதாக வாங்கிய பிலிப்ஸ் டேப்ரெக்கார்டரையும் கொண்டுவந்தேன். அப்பாவின் ஒரு நீண்ட நேர்காணல் பதிவு செய்து பாதுகாக்கவேண்டுமென்ற ஆசை எனக்கிருந்தது.

நாகர்கோவில் மத்தியாஸ் மருத்துவமனையில் என் தந்தைக்கு வயிற்றுப்பகுதியில் Cancerous growth இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அறுவைசிகிச்சை முடிந்து ஒருவாரம் மருத்துவமனையில் தங்கியிருந்தோம். டாக்டர் என்னிடம் தனியாக, ‘புற்றுநோய் வயிறு பூராவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதிகபட்சம் ஆறு மாதங்கள். அவரை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்!’ என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.

நான் டேப்ரெக்கார்டர் கொண்டுபோனது பலவிஷயங்களில் உதவியாக இருந்தது. அப்பாவுக்குப் பிடித்த மதுரை மணி, அரியக்குடி, காருகுறிச்சி கச்சேரிகளடங்கிய பல Spool Tapes கொண்டுபோயிருந்தேன். ரேடியோவின் ‘கரகரப்பு’ இல்லாத நல்ல சங்கீதம் கேட்கமுடிந்தது. அவர் வலியை மறக்க சங்கீதம் உதவியது.

தில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு!

தில்லியிலிருந்து  ஊருக்கு வந்ததுமுதல் மருத்துவமனை, வீடு, மருத்துவமனை என்று அலைந்துகொண்டிருந்தேன். அம்மாவும், ‘டேய்! வந்ததிலிருந்து ஆஸ்பத்திரியும் வீடுமாய் இருக்கே. அப்பா சரியாத்தான் இருக்கார். ராத்திரிதான் கண்முழிக்கிறே. சாயங்காலம் நாறோலுக்கு போயுட்டுவா. எதாவது சினிமா பாத்துட்டுவா. அடஞ்சு கெடக்காதே!’ என்றார். அன்றுதான் மீனாட்சிபுரம் லக்ஷ்மி தியேட்டரில் ‘தில்லானா மோகனாம்பாள்’ ரிலீசாகிறது. நாகர்கோவிலில் அப்பா இல்லாமல் சினிமா பார்ப்பது முதல்முறை.

முதல்நாள் முதல் ஷோ படம் பார்க்கத்தூண்டிய காரணங்கள்: விகடனில் ‘கலைமணி’’ (கொத்தமங்கலம் சுப்பு) தொடராக எழுதிவந்த நாவல், படத்தில் எப்படிக் கையாளப்பட்டிருக்கிறது என்கிற ஆவல், படத்தில் நாதஸ்வரம் பின்னணியை மதுரை MPN சேதுராமன்-பொன்னுசாமி குழுவினர் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க... `வைத்தி’யை நாகேஷ் எப்படி உருவகப்படுத்தியிருக்கிறார் என்பதில் ஆவல்.

1968-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி மீனாட்சிபுரம் லக்ஷ்மி தியேட்டரில் `தில்லானா மோகனாம்பாள்’ படம் பார்த்துவிட்டு நிறைந்த மனதுடன் வீடு திரும்பினேன். அப்பா, ‘எப்படிரா இருந்தது படம்?’ என்று கேட்டதற்கு, ‘ரொம்பத் திருப்தியான படம். நீங்க சொன்னமாதிரியே சேதுராமன்–பொன்னுசாமி வாசிப்பு காருகுறிச்சி அச்சு அசல். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் பண்ணுன இங்கிலீஷ் நோட்டும் வாசிக்கிறா. முக்கியமா எல்லா நடிகர்களும் தங்கள் பாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்துகிறார்கள். நாகேஷ், பாலையா, பத்மினி முதல் ஏ.கருணாநிதி வரை! ஆனால் ஒரேயொரு நெருடல். ஒரு காட்சியில் ஷண்முகசுந்தரம் நாதஸ்வரம் வாசித்துக்கொண்டிருக்கும் போது, வில்லன் நாகலிங்கம் கத்தியை வீசியெறிகிறான். அது சிக்கலாரின் இடதுபுஜத்தின் மேல் தைக்கிறது. ‘அம்ம்மா!’ என்று வலிதாங்காமல் இடதுகையைப் பிடித்துக்கொண்டு சாயவேண்டும். ஆனால், சிவாஜியின் நடிப்பு கொஞ்சம் ஓவர் ஆக்‌டிங்! மற்றபடி அவர் ஷண்முகசுந்தரமாக வாழ்ந்திருக்கிறார்!” என்றேன்.

படம் ரிலீசாகிப் பத்துநாள்களுக்கப்புறம்,  ‘அம்மா, நாறோலுக்குப் போயிட்டு வரேன். பத்துமணிக்கெல்லாம் வந்துருவேன்’ என்று சொல்லிவிட்டு, டேப்ரெக் கார்டரோடு நாகர் கோவில் போனேன். லக்ஷ்மி தியேட்டரில் கூட்டம் குறைந்திருந்தது. முதலாளி ரூமுக்குப் போனேன். பதினைந்து நிமிடத்துக்கப்புறம் நடுத்தர வயதுடைய ஒருவர் வந்தார். அவரிடம் அப்பாவின் நிலைமையை எடுத்துச்சொல்லி, படத்தை ரெக்கார்டு செய்ய அனுமதி கேட்டேன். அவரும் டேப்ரெக்கார்டரை அதுவரை பார்த்ததில்லை. நான் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு போன் வந்தது. அவர் போனில் பேசிக்கொண்டி ருந்ததைப் பதிவு செய்ய ஆரம்பித்தேன். பேசி முடித்த பின், என்னிடம் “ஸாரி சார், என் தம்பி’’ என்று மன்னிப்பு கேட்டார். அவருக்கு நான் பதிவு செய்ததைப் போட்டுக்காண்பித்தேன். டேப்ரெக்கார்டரும் கடைசியில், ``ஸாரி சார், என் தம்பி’’ என்று மன்னிப்பு கேட்டது. அவருக்கு ஒரே ஆச்சர்யம்! ‘`சார், நா பேசினது அப்டியே வந்திருக்கு!’’ என்று பிரமிப்போடு சொன்னார். 

தில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு!

ஆக, 1968-ம் வருடம் ஆகஸ்ட் 10-ம் தேதி வாக்கில் ‘இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக’  நாகர்கோவிலில் ‘Cinema Piracy’ வெற்றிகரமாக அரங்கேறியது. முதலாளியே என் கூட வந்து புரொஜக்டர் ரூமில் படம்போடுபவரிடம் ஒரு ஸ்டூல் போடச்சொல்லி அதில் டேப்ரெக்கார்டர் வைக்கப்பட்டது. மைக்கை புரொஜக்டர் முன்னிருக்கும் சதுர ஓட்டை வழியாக தியேட்டருக்குள் தொங்க விட்டேன். படம் ஆரம்பிக்குமுன்னரே முதலாளி கொடுத்து விட்ட காளிமார்க் பன்னீர் சோடாவும் வந்துசேர்ந்தது. ரெக்கார்டிங் ஆரம்பத்தில் ஏ.பி. நாகராஜன் தன் கணீர் குரலில் `பேரன்புமிக்க ரசிகப்பெருமக்களுக்கு அன்பு கலந்த வணக்கம்’ என்பதில் தொடங்கி, 19 ரீலுக்கு ஓடி கடைசியில் ‘சுபம்’ வரை என் பெட்டிக்குள் ‘திருட்டு சினிமா’வாக அடைக்கல மானது.

அடுத்தநாள் காலை அப்பாவுக்கு ஒரு இட்லியும் சட்னியும் ஊட்டிவிட்டபிறகு, நான் எடுத்த பதிவைப் போட்டேன். முதலில் பிடிபடா விட்டாலும், பிறகு சுதாரித்துக்கொண்டு, “படவா! நேத்திக்கு ரெக்கார்ட் பண்ணியா?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார். பிறகு திரும்பத்திரும்ப எத்தனை முறை கேட்டிருப்பாரென்பதற்கு என்னிடம் கணக்கில்லை. அடுத்தநாள் மாலை தெருவாசிகளுக்கு ’தில்லானா மோகனாம்பாள்’ Sound & Music Show. திண்ணையில் ரெக்கார்டரை வைத்து, தெருவில் நாலைந்து பெஞ்சுகள் போட்டு இலவச ‘சினிமா.’ கிராமத்து ‘சிவாஜி’ ரசிகர்களுக்குப் பேரானந்தம்! நான் தில்லி திரும்புவதற்குள் பலமுறை Repeat Performances!

அப்பாவுக்கு வியாதியின் வீரியம் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போனது. கடைசி மூன்றுநாள்கள் கங்காஜலம் மட்டுமே அவர் உணவு. டாக்டர்கள் ஆறுமாதக்கெடு வைத்திருந்தாலும், கேன்சர் நண்டு அவரை ஒரு மாதத்துக்குள் தின்றுவிட்டது.

அண்ணாந்து பார்த்து மூன்று ஸ்பூன் கங்கைநீர் அருந்தியபின் வலி தாங்காமல் உடனே முன்னாலிருக்கும் தலையணையில் சாயும் என் அப்பா, அன்றிரவு கங்காஜலம் பருகிவிட்டு எந்த வலியும் இல்லாமல் என் தோள்மேல் சாய்ந்தார்... சடலமாக!