Published:Updated:

``அது ஆல்கஹால் இல்லை... என்னனு தெரியுமா?’’ - காயத்ரி ரகுராம்

``அது ஆல்கஹால் இல்லை... என்னனு தெரியுமா?’’ - காயத்ரி ரகுராம்
``அது ஆல்கஹால் இல்லை... என்னனு தெரியுமா?’’ - காயத்ரி ரகுராம்

``என் வீட்டு வாசல்ல சிசிடிவி கேமரா இருக்கு. அதில் நான் வீட்டுக்கு வந்த நேரம், கார்ல இருந்து இறங்கிய நபர்கள்னு எல்லா காட்சிகளும் பதிவாகியிருக்கும். தேவைனா, அதை யார் வேணாலும் சரிபார்க்கலாம்.’’

டிகை காயத்ரி ரகுராம் மதுபோதையில் கார் ஓட்டியதாகச் சமீபத்தில் வெளியான செய்தி பரபரப்பை உண்டாக்கியது. இவ்விவகாரம் தொடர்பாக நடந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ள காயத்ரி ரகுராமிடம் பேசினோம். 

``சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கிற எங்க வீட்டுக்கு பக்கத்துல என்னோட புதுப்பட வேலைகள் நடக்குது. அப்படத்தில் நடிகை `பிக் பாஸ்' காஜலும் நடிக்கிறாங்க. இரவு நேரம்ங்கிறதால, காஜலை அவங்க வீட்டுல ட்ராப் பண்றதா சொன்னேன். நான் கார் ஓட்ட, என்னுடன் என் அம்மாவும் காஜலும் வந்தாங்க. அங்கிருந்து போகும் வழியில், அண்ணாசாலையிலுள்ள பார்க் ஹோட்டல்ல நடந்த ஒரு நிகழ்ச்சியில என் அம்மாவும் நானும் கொஞ்ச நேரம் இருந்தோம். பிறகு மேடவாக்கத்துல இருக்கிற காஜலின் வீட்டுல அவரை ட்ராப் பண்ணக் காரை ஓட்டினேன். 

தொடர்ச்சியான ஷூட்டிங் பணிகளால் என் உடல்நிலை சரியில்லை. எனக்கு ஆஸ்துமா பிரச்னை இருக்கு. அதனால இன்ஹேலர் பயன்படுத்துவேன். அதன்படி ஹோட்டல்ல இருந்து கிளம்பும்போது, மூச்சிரைப்பு அதிகமா இருந்ததால, இன்ஹேலர் பயன்படுத்தினேன். மேலும், காஃப் சிரப் (cough syrup) மருந்தையும் பயன்படுத்தியிருந்தேன்.

12 மணியளவில் எங்க கார் அடையாறு மேம்பாலம்கிட்ட வந்ததும், டிராஃபிக் போலீஸார் எங்க காரை நிறுத்த சொன்னாங்க. நிறுத்தினேன். உடனே, ஒரு போலீஸ், ``நீங்க குடிச்சிருக்கீங்களா? ஊதிக்காட்டுங்க’’னு மெஷினை பக்கத்துல கொண்டுவந்தார். 'நான் குடிச்சுட்டு வண்டியை ஓட்டலை. அதை நிரூபிக்க, உடனடியா ரத்தப்பரிசோதனை செய்யத் தயார்'னு சொன்னேன். ஆனா, போலீஸார் நான் சொன்னதை ஏத்துக்கலை. அதனால, நான் ஊதிக்காட்டினேன். 33 பாயின்ட் காட்டுவதாகச் சொன்னாங்க. `நான் இன்ஹேலர் மற்றும் காஃப் சிரப் பயன்படுத்தியிருக்கேன். அதனால்கூட சோதனைக் கருவியில (Alcohol Breathalyzer tester) குடிச்சிருக்கிறதா காட்டியிருக்கலாம்'னு சொன்னேன். 'ஓ! அப்படியா?'னு கேட்ட போலீஸார், உங்களுக்கு உடல்நிலை சரியில்லைங்கிறதை நாங்க நம்புறோம். ஆனா, டெஸ்டிங் மெஷின்ல குடிச்சிருக்கிறதா பாயின்ட்ஸ் காட்டிடுச்சு. இனி நாங்க எதுவும் பண்ண முடியாது. நீங்க ஃபைன் கட்டிடுங்க'னு சொன்னாங்க. அதை நான் ஏத்துக்கிட்டேன். அடுத்து லைசென்ஸ் கேட்டாங்க. அப்போ எங்கிட்ட லைசென்ஸ் இல்லை. வீட்டுல லைசென்ஸ் இருக்குனு சொன்னேன். லைசென்ஸ் இல்லாம கார் ஓட்டினதுக்கும் சேர்த்து ஃபைன் கட்டச் சொன்னாங்க. 

அப்ப என் கையில பணம் இல்லை. உடம்பும் மனசும் ரொம்ப சோர்வா இருந்தது. அதனால, போலீஸார்கிட்ட வாக்குவாதம் செய்ய விரும்பலை. ஃபைன் கட்ட முடிவெடுத்து, என் ஃப்ரெண்டுகிட்ட உதவிகேட்டேன். அவர், கிண்டிக்கு வந்து வாங்கிக்கச் சொன்னார். எங்ககூட ராஜ்குமார்ங்கிற போலீஸ்காரர் கார்ல வந்தார். கிண்டில உள்ள என் ஃப்ரெண்டுகிட்ட பணத்தை வாங்கி போலீஸ்காரர் கிட்ட கொடுத்ததும் அவர் கிளம்பி போயிட்டார். ஒருவேளை நான் குடிச்சிருந்தா, எப்படி என்னை கார் ஓட்ட போலீஸ் அனுமதிச்சிருப்பாங்க. இந்தக் காட்சி எல்லாம் அந்த ஏரியாவுல உள்ள சிசிடிவி கேமராவுல பதிவாகியிருக்குமே... பிறகு காஜலை அவர் வீட்டுல இறக்கிவிட்டுட்டு, நுங்கம்பாக்கத்துல இருக்கிற என் வீட்டுக்குப் போயிட்டேன். 

நான் போலீஸார்கிட்ட நடுரோட்டில் சண்டை போட்டேங்கிறது பொய்யான தகவல். இருதரப்பிலும் சுமுகமாகத்தான் பேசினோம். மறுநாள் செய்தித்தாள்கள்ல போலீஸ் என்னைக் கொண்டு வந்து வீட்டுல விட்டுட்டுப் போனதாகவும், நான் மறுநாள் ஃபைன் கட்டிட்டு காரை எடுத்துட்டுப் போனதாகவும் செய்தி வெளியாகிருந்தது. எல்லாம் வடிகட்டின பொய். என் வீட்டு வாசல்ல சிசிடிவி கேமரா இருக்கு. அதில் நான் வீட்டுக்கு வந்த நேரம், கார்ல இருந்து இறங்கிய நபர்கள்னு எல்லா காட்சிகளும் பதிவாகியிருக்கும். தேவைனா, அதை யார் வேணாலும் சரிபார்க்கலாம். நடந்த இந்தப் பிரச்னை பெரிதாகக் காரணம், ஒரு பத்திரிகையாளர்தான். அவர்தான் உள்நோக்கத்துடன் என்னைத் தவறா சித்திரிச்சு, பெரிதுபடுத்திட்டார். நடந்த இச்சம்பவம் பற்றி, இதுவரை என்கிட்ட யாரும் கேட்காம, தெளிவுபடுத்திக்காம, தவறான செய்திகளை வெளியிட்டிருக்காங்க. அதையெல்லாம் சுட்டிக்காட்டி, என் ட்விட்டர் தளத்திலும் பதிவுசெய்திருந்தேன். 

ரொம்ப நாளாவே என் பெயரை கெடுக்க சிலர் செயல்படுறாங்க. எல்லாத்தையும் நான் எதிர்கொள்ள தயார். இதுவரை குடிச்சுட்டு நான் கார் ஓட்டினதில்லை. ஒருவேளை, குடிச்சிருந்தால் அதை ஒப்புக்கொள்ளவும் நான் தயங்க மாட்டேன். நடக்காத ஒரு விஷயத்தைத் தவறா சித்திரிச்சு சொல்றதையும் நான் ஏத்துக்க மாட்டேன்" என்கிறார் காயத்ரி ரகுராம் ஆவேசத்துடன். 

அடுத்த கட்டுரைக்கு