Published:Updated:

`பாசிசம் மீண்டும் தோற்கடிக்கப்படும்!’ -முருகதாஸுக்கு ஆதரவாக கமல் #sarkar

அழகுசுப்பையா ச
`பாசிசம் மீண்டும் தோற்கடிக்கப்படும்!’ -முருகதாஸுக்கு ஆதரவாக கமல் #sarkar
`பாசிசம் மீண்டும் தோற்கடிக்கப்படும்!’ -முருகதாஸுக்கு ஆதரவாக கமல் #sarkar

சர்கார் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதல் கதைத் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்தது படக்குழு. திரைக்கு வந்து 3 வாரம் ஆனபோதும் இன்னும் சர்கார் திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள் ஓயவில்லை.  இந்தப் பிரச்னைகளில் மிகத் தீவிரமாகத் தலையெடுத்தது, அரசின் நலத்திட்டங்களை விமர்சிப்பது போன்று காட்சி அமைத்துள்ளதாக எழுந்த பிரச்னை. இந்தப் பிரச்னையை மையமிட்டுத் திரைப்படத்தைத் தடைசெய்யக் கோரியும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸைக் கைதுசெய்ய வேண்டும் என்றும்  அ.தி.மு.க-வினர் தொடர்ந்து சர்கார் திரையிடப்பட்ட திரையரங்குகளின்முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், தான் கைது செய்யப்படலாம் என்று ஏ.ஆர். முருகதாஸ் நீதிமன்றத்தை நாடினார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.முருகதாஸை நவம்பர் 27-ம் தேதிவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்திருந்தனர். அந்த இடைக்காலத்தடை இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 


 

அப்போது, முருகதாஸுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், 'சர்கார்' படத்தில் அரசுத் திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில், அரசின் திட்டங்களையும் அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாதப் பத்திரம் தாக்கல்செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார். இதுதொடர்பாக, முருகாதாஸிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க வேண்டுமென அவரது வழக்கறிஞருக்கு நீதிபதி தெரிவித்ததையடுத்து, வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன்  “தணிக்கைக் குழுவால் சான்றிதழ் வழங்கப்பட்ட படம் சர்கார். ஆனால், அரசு மக்களின் கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நினைக்கிறது. இது ஜனநாயகமல்ல. முன்பைப் போலவே பாசிசம் முறியடிக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.