Published:Updated:

2.0 பார்க்கிறதுக்கு முன்னாடி 1.0-வுக்கு விகடன் மார்க் என்னனு தெரிஞ்சுக்கங்க!

விகடன் விமர்சனக்குழு
2.0 பார்க்கிறதுக்கு முன்னாடி 1.0-வுக்கு விகடன் மார்க் என்னனு தெரிஞ்சுக்கங்க!
2.0 பார்க்கிறதுக்கு முன்னாடி 1.0-வுக்கு விகடன் மார்க் என்னனு தெரிஞ்சுக்கங்க!

2.0 பார்க்கிறதுக்கு முன்னாடி 1.0-வுக்கு விகடன் மார்க் என்னனு தெரிஞ்சுக்கங்க!

இயக்குநர் ஷங்கர் - ரஜினி கூட்டணியின் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக நாளை பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது 2.0. 2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்திருக்கும் நிலையில், நாளை வெளியாகும் 2.0 படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. இந்தநிலையில், ஆனந்த விகடனில் வெளியான `எந்திரன்’ சினிமா விமர்சனத்தைக் கொஞ்சம் படிச்சிருங்க.

அக்டோபர் 13 - 2010 தேதியிட்ட ஆனந்த விகடனிலிருந்து...

``இரும்புக்குள் ஒரு இதயம் முளைத்து, 'எந்திரன்'... தந்திரன் ஆனால், என்ன நடக்கும்?

அனைத்துக்கும் முன்... தொழில்நுட்ப நேர்த்தியில் ஒரு தமிழ்த் திரைப்படத்தை சர்வதேசத் தளத்துக்குள் அழைத்துச் சென்று இருக்கும் இயக்குநர் ஷங்கர் குழுவினரின் அசுர உழைப்புக்கு ஒரு 'ரோபோ ஹேண்ட் ஷேக்'!

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் பிரமாண்டமான முதல் தயாரிப்பு.

அச்சுப்பிச்சுப் பாடல்கள், பில்ட்-அப் பிஸ்கோத்து, டூமாங்கோலி டபுள் ஆக்ட்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த கிராஃபிக்ஸ் கலையை, கச்சிதமாக ஒரு திரைக்கதைக்குள் பூட்டி, ரஜினி எனும் மாஸ்க் மாட்டி மாஸ் மார்க்கெட்டுக்கு விருந்துவைத்து இருக்கிறார் ஷங்கர்!

ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் வரிக் கதை! விஞ்ஞானி ரஜினி உருவாக்கும் 'சிட்டி' ரோபோவுக்கு, ரஜினியின் காதலி ஐஸ்வர்யா ராய் மீது காதல் அரும்புகிறது. இயந்திர - மனித வித்தியாசங்களைக் கடந்து ஐஸ்வர்யாவை அடைய, எந்த எல்லை வரை அந்த ரோபோ செல்கிறது என்பதே எந்திரன் படத்துக்கான புரொகிராம்!
ரஜினியே ஒரு சூப்பர் ஹீரோ. அதிலும், 'ஸ்பீட் ஒன் டெரா பைட்ஸ், மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்' சக்திகொண்ட ரோபோவாக ரஜினி நடிக்கும்போது, திரையில் எப்படி எல்லாம் பட்டாசு வெடிக்கும்? படபடா தடதடா!

கோயில் திருவிழாவில் ரவுடிகளை மிரட்ட 'மேக்னடிக் மோட்' ஆக்டிவேட் செய்து 'ஆயுத அய்யனார்' அவதாரம் எடுப்பது, டிரெயின் தகராறில் வூடு கட்டி அடிப்பது, ஒரே பாடலில் விதவிதமான நடனங்கள் ஆடி அசத்துவது, 'பின்னாடி பார்த்து ஓட்டு' என்றதும், சடாரெனக் கழுத்துக்கு மேல் தலையைப் பின்புறம் திருப்பி கார் ஓட்டுவது, ஐஸ்வர்யா பிறந்த நாளுக்கு ஸ்டைல் ஹேர்ஸ்டைல்ஸ் பொருத்தி அழகு பார்ப்பது, 'அவள் இடுப்பு... குழந்தைகள் உட்காரும் குட்டி நாற்காலி' என்று மிலிட்டரி அதிகாரிகள் முன்னிலையில் கையெறி குண்டுக்குள் ரோஜா காம்பு சொருகிக் காதலில் உருகுவது... என ரோபோ ரஜினியின் கையே படம் முழுக்க ஓங்கி இருக்கிறது.

ஓப்பனிங் பாடல், இன்ட்ரோ பில்ட் - அப்ஸ், பஞ்ச் டயலாக், பறந்து பறந்து அடிப்பது, காலைச் சுற்றும் காதலி என எதுவும் இல்லாமல் ரஜினியின் இமேஜையே புரட்டிப் போட்டு இருக்கும் படம். சொல்லப்போனால், விஞ்ஞானி ரஜினி, உதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறார். ஐஸ்வர்யா ராயிடம் வம்பு பண்ணும் காட்டானை பெண்டு நிமிர்த்துவதற்குப் பதிலாக, பதறிப்போய் போலீஸைக் கூப்பிட போனை எடுக்கிறார். ரஜினி, தன் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்துகிற வழக்கமான ஃபார்முலாக்களைத் தாண்டி, இறங்கி வந்து உழைத்து இருக்கிறார். 'என்னை அழிச்சுராதீங்க டாக்டர்... நான் வாழணும்' என்று கை, கால்கள் பிய்ந்து தொங்கிய நிலையில், தரையில் பின்னோக்கித் தவழ்ந்தபடி ரோபோ ரஜினி கெஞ்சுவதுபோன்ற காட்சிகள் இயக்குநருக்கு முழுசாக அவர் கொடுத்து இருக்கும் ஸ்பெஷல் ஸ்பேஸ்!

'கொச கொச' தாடி விஞ்ஞானி, 'பளபளா' நிக்கல் சிட்டி, 'மின்னல்' கிருதா வில்லன் என மூன்று கெட்-அப்களையும் வித்தியாசப்படுத்தி வெளுத்துக் கட்டுகிறார் ரஜினி. அதிலும் சிட்டி... செம ஸ்வீட்டி. ஆனாலும், அதகளம் பண்ணி, அடித்து நொறுக்குவது நிக்கல் மீது தோல் போர்த்திய இயந்திரம் என்பதும், அதை அடக்குவதற்குப் படாத பாடுபடுவதுதான் ஒரிஜினல் ரஜினி என்பதும் விசில் பார்ட்டி ரசிகர்களின் உற்சாகத்துக்குக் கொஞ்சம் மைனஸ் போடுகிறது!
எந்திரன் கும்பலுக்குள் ஊடுருவிவிட்ட விஞ்ஞானி ரஜினியை 'ஹூ இஸ் த ப்ளாக் ஷீப்?' என்று கண்டுபிடிக்கத் தேடும்போது, 'ரோபோவ்வ்வ்' என்று பழிப்புக் காட்டுவதும், 'ம்ம்ம்ம்மே' என்று ஆடு கணக்காக ராகம் போடுவதுமாக... அபூர்வமாக வெளிப்படும் ரஜினி ஸ்டைல்கள்!
ஓர் இயந்திரத்துக்கே காதல் பூக்கவைக்கும் அழகி கேரக்டரில் ஐஸ்வர்யா... அழகு. பாடல் காட்சிகளில் பல ஃப்ரேம்களில் ரஜினி பக்கம் பார்வையே செல்லவிடாதபடி அதிர்ந்து இழுக்கின்றன ஐஸ்வர்யாவின் அசைவுகள்!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, பாடல்களுக்கு எலெக்ட்ரானிக் துடிப்பையும் பின்னணிக்குப் பதற்றப் பரபரப்பையும் நிரப்புகிறது. 'புதிய மனிதா பூமிக்கு வா', 'அரிமா அரிமா ஆயிரம் அரிமா' என வைரமுத்துவின் கம்பீரத் தமிழ், 'பூம்... பூம் ரோபோடா' எனும் கார்க்கியின் தொழில்நுட்பத் தமிழ், 'கிளிமாஞ்சாரோ' எனும் பா.விஜய்யின் கன்னித் தமிழ் என அத்தனையும் அபார சொல் விளையாட்டுகள். ரோபோவின் பார்வையில் பயணிக்கும் ரத்னவேலுவின் கேமரா கோணங்களும், அதோடு பின்னிப் பிணையும் கிராஃபிக்ஸ் மிரட்டல்களும் தமிழுக்குப் புதுசு. ரோபோவின் நட்டு, போல்ட் துவங்கி அதிநவீன ஆராய்ச்சிக் கூடங்கள் வரை படத்துக்கு பிரமாண்டம் சேர்த்ததில் சாபு சிரிலின் கலை இயக்கத்துக்கு அபார பங்கு உண்டு. 'மனுஷன் படைச்சதுலேயே உருப்படியான ரெண்டே விஷயம், ஒண்ணு... நான். இன்னொண்ணு... நீ!', 'இது இயற்கைக்கு எதிரானது இல்லை; இது இயற்கைக்குப் புதுசு', 'எல்லா மனுஷங்களுக்கு உள்ளேயும் ஒரு ரெட் சிப் இருக்கு. அதை எடுத்துட்டா எந்தப் பிரச்னையும் இல்லை' என்று ஓரிரு வரிகளில் கடக்கும் வசனங்கள் 'வாரே வாவ்' ரகம். 'சுஜாதா, ஷங்கர், மதன் கார்க்கி'க்குச் சேர்கிறது பெருமை.

முதல் பாதி முழுக்க பரபரவெனக் கதை நகரும் விறுவிறுப்புக்கு, நேர் எதிர் பின் பாதி! அதிலும் பல நூறு வில்லன் ரோபோக்கள் விதவிதமாக உருவம் மாற்றி 'அசுரன்' வடிவில் ஓடி வரும் காட்சிகள் ஒட்டுமொத்த எந்திரமயமாக இருப்பதால்... ஆவ்வ்வ்வ்வ் அயர்ச்சி! கொசுவோடு ரஜினி பேசுவது காமெடியா? ஸாரி! சந்தானம், கருணாஸுக்கும் காமெடியில் தோல்வியே! கோடரியால் வெட்டினாலே கை பிளந்துகொள்கிற ரோபோவுக்கு, லாரிகளை இழுத்து வளைப்பதற்கும், காரைத் தூக்குவதற்கும் எங்கே இருந்து அந்தப் பலம் வந்தது என்பதற்கு சுஜாதா இருந்தால், லைட்டாக விஞ்ஞான விளக்கம் தொட்டுக் கொடுத்திருப்பாரோ?!

தனது கை, கால்களைக் கழற்றிக்கொண்டே சிட்டி 'பை பை உரை' நிகழ்த்தும் அந்த இறுதிக் காட்சிதான் சென்ட்டிமென்ட்டுக்கும் டெக்னாலஜிக்குமான பக்கா பார்ட்னர்ஷிப். ஒவ்வொரு வசனமும் மனதை நெகிழ்த்த, துளியும் அசங்காத அனிமேட்ரானிக்ஸ் கிராஃபிக்ஸ் புருவத்தை உயர்த்துகிறது.

அடுத்த கட்டுரைக்கு