Published:Updated:

`` `நீங்களா இப்படி?!" - `சீதக்காதி' வில்லனைப் பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா

`` `நீங்களா இப்படி?!" - `சீதக்காதி' வில்லனைப் பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா
News
`` `நீங்களா இப்படி?!" - `சீதக்காதி' வில்லனைப் பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா

`சீதக்காதி' படத்தில் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் சுனில், படம் குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்துக்குப் பிறகு பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம், `சீதக்காதி'. விஜய் சேதுபதியின் 25-வது படமான இதில், வில்லனாக நடித்திருக்கிறார் புதுமுகம் சுனில். இவர் நடிகர் வைபவ்வின் சகோதரர்.  

`` `சீதக்காதி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுதன், என் தம்பி வைபவ் நடிச்ச `கப்பல்' படத்தைத் தயாரிச்சார். அவரும் நானும் நண்பர்கள். ஒருநாள் இயக்குநர் அருண் வைத்தியநாதன் பிறந்தநாள் விழாவுக்கு என்னையும் அழைச்சுட்டுப் போனார். அங்குதான் இயக்குநர் பாலாஜி தரணீதரனைச் சந்திச்சேன். பார்ட்டி கலகலப்பா இருக்கணும்னு சிலரை மாதிரி நான் இமிடேட் பண்ணி நடிச்சேன். பல நண்பர்கள் அதை ரசிச்சாங்க. அந்த பார்ட்டிக்கு அடுத்தநாள் தயாரிப்பாளர் சுதன் எனக்கு போன் பண்ணி, `சார்.. நீங்க படத்துல நடிக்கணும்'னு கேட்டார். சும்மா கலாய்க்கிறார்னு நினைச்சு, `என்னங்க.. ஏதோ ஷாப்பிங் போலாமானு கேட்கிற மாதிரி கேட்குறீங்க... எனக்கு நடிப்பைப் பத்தி எதுவும் தெரியாது. பார்ட்டியில சும்மா ஃபன் பண்ணேன், அவ்ளோதான்'னு சொன்னேன். `இல்லை, நீங்க சும்மா வாங்க. இயக்குநரை மீட் பண்ணுங்க'னு சொல்லி, போனை வெச்சுட்டார். அதுக்குப் பிறகு பலமுறை போன் பண்ணார், நான் எடுக்கலை. அதுக்கப்புறம் என் தம்பி வைபவ்வுக்கு போன் பண்ணி, பேசச் சொன்னார். அதுக்குப் பிறகு, பாலாஜியைச் சந்திச்சேன். ரெண்டு நிமிஷம் என்னையே பார்த்துக்கிட்டு இருந்தவர், 'ஓகே... நீங்கதான் இதுல வில்லன்'னு சொல்லிட்டார்.  

`சார், எனக்குத் தமிழே சரியாப் பேச வராது'னு சொன்னேன். `அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், வாங்க'னு சொன்னார். அவரை நம்பித்தான் படத்துல நடிச்சேன். படத்தோட டிரெய்லரை ரிலீஸுக்கு முன்னாடியே பார்த்துட்டு, நண்பர்கள்கிட்ட `ட்ரெய்லர் மூணு நிமிஷம் ஓடுதுடா'னு சொன்னேன். `இவ்ளோ நேரம் இருந்தா, ரீச் ஆகாதேடா'னு வருத்தப்பட்டாங்க. ஆனா, ட்ரெய்லர் ரிலீஸான கொஞ்ச நேரத்துல வைரல் ஆகிடுச்சு. தவிர, இந்தப் படத்துல நான் நடிக்கிறேன்னு சொன்னப்போ, யாரும் நம்பல. ட்ரெய்லரைப் பார்த்துட்டு பலரும் போன் பண்ணிப் பாராட்டினாங்க. குறிப்பா நடிகர் எஸ்.ஜே.சூர்யா சார். அவருக்கும் எனக்கும் பழக்கம் குறைவுதான். அவர் எனக்கு போன் பண்ணி வாழ்த்தணும்னு அவசியமும் இல்லை. ஆனா, முதல் ஆளா போன் பண்ணி, `நீங்க ஏதோ சின்னதா கேரக்டர் பண்ணியிருப்பீங்கனு நினைச்சேன், உங்களுக்குள்ள இவ்ளோ நடிப்புத் திறமை இருக்கும்னு நம்பவே இல்லை'னு சொன்னார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எங்க அம்மாகிட்ட, ட்ரெய்லரைக் காட்டும்போது, `நீதான்டா டிரெய்லர் முழுக்க இருக்க'னு சந்தோஷப்பட்டாங்க. இதுக்காக, இயக்குநர் பாலாஜிக்குத்தான் நன்றி சொல்லணும். சினிமாவுல என் தம்பி வைபவ் `நடிகர்'னு எல்லோருக்கும் தெரியும். ஆனா, எங்க அப்பா கோதண்டராமி ரெட்டியைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. அவர் தெலுங்கில் இதுவரை 90-க்கும் அதிகமான படங்களை இயக்கியிருக்கார். சீரஞ்சீவி நடித்த `Attaku Yamudu Ammayiki Mogudu' எங்க அப்பா இயக்கிய படம்தான். இந்தப் படத்தோட தமிழ் ரீமேக்தான், ரஜினி சார் நடித்த `மாப்பிள்ளை'. நான் `சீதக்காதி'யில் நடிக்கிறேன்னு தெரிஞ்சதும், பாலாஜி தரணீதரன் சார்கிட்ட பேசுனார், அப்பா. `அவனை நடிக்க வைக்கிறதுல நீங்க உறுதியா இருந்தா, சந்தோஷம். ஆனா, அவனுக்கு நடிப்புல பெரிய விருப்பமெல்லாம் இல்லை, பார்த்துக்கோங்க'னு சொன்னார். அப்பாகிட்ட நானும் பேசினேன். `கேமரா முன்னாடி போயிட்டா, நீதான் ராஜா. சுத்தி இருக்கிற யாரைப் பற்றியும் கவலைப்படாம நடி'னு சொன்னார். அப்பா சொன்னதை அப்படியே ஃபாலோ பண்ணேன்.

ஷூட்டிங் போனதுக்குப் பிறகும்கூட, பாலாஜி சார் என்கிட்ட கதையைச் சொல்லல. ஸ்பாட்ல்தான், `இதுதான் சீன், நடிங்க'னு சொல்வார். நடிப்பு குறித்து நிறைய விஷயங்களை பாலாஜி சார்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். படத்துல கோபக்கார சினிமா தயாரிப்பாளரா நடிச்சிருக்கேன். இது என் ரியல் கேரக்டருக்கு நேர் எதிர். ஏன்னா, நான் ரொம்ப அமைதியான ஆள். பேசும்போது, சத்தம்கூட குறைவாதான் வரும். ஸ்பாட்லகூட, `சூப்பரா கோபப்படுறீங்க.. ஆனா, உங்க வாய்ஸ் கேட்கவே மாட்டேங்குதே!'னு சொல்வார், பாலாஜி. படத்துக்கு டப்பிங் போகலை. எல்லாமே லைவ் ரெக்கார்டிங்தான்.  

இந்தப் படத்துல நடிச்சதுல, ஒரே ஒரு வருத்தம்தான். ஷூட்டிங் ஸ்பாட்ல விஜய் சேதுபதியை நான் சந்திக்கவே இல்லை. ஆனா, `அவரோட நடிப்பு நல்லா இருக்கு'னு பாலாஜிகிட்ட சொல்லியிருக்கார். சீக்கிரமே விஜய் சேதுபதியைச் சந்திக்கணும், அதுக்காக வெயிட்டிங்!" என்கிறார், சுனில்.