Published:Updated:

``ஹாட்ஸ் ஆஃப் ஷங்கர்..!" 2.0 ப்ளஸ்... மைனஸ் ரிப்போர்ட் - `2.0' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
``ஹாட்ஸ் ஆஃப் ஷங்கர்..!" 2.0 ப்ளஸ்... மைனஸ் ரிப்போர்ட் - `2.0' விமர்சனம்
``ஹாட்ஸ் ஆஃப் ஷங்கர்..!" 2.0 ப்ளஸ்... மைனஸ் ரிப்போர்ட் - `2.0' விமர்சனம்

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளிவந்த 2.0 படத்தின் விமர்சனம்.

ந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், மேக்கிங் மெனக்கெடலுக்காகச் சில ஆண்டுகள், நாட்டின் முதல் முழுநீள 3டி திரைப்படம், ரஜினி, ஷங்கர், ரஹ்மான், அக்‌ஷய் எனப் பெருந்தலைகளின் கூட்டணி - இத்தனை எதிர்பார்ப்புகளையும் ஒரு படம் தாங்கி வரும்போது வெற்றி பெறுமளவுக்குத் தடுமாறி விழவும் வாய்ப்புகள் அதிகம். `2.0' இதில் எந்தப் பக்கம்?

ரோபோ vs ரோபோ `எந்திரன்'. ரோபோ vs செல்போன்... `2.0'.

ஒரு வழக்கமான நாளில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அத்தனை செல்போன்களும் மாயமாக மறைகின்றன. அதைத் தொடர்ந்து சில முக்கியப் புள்ளிகள் கொலையாக, பாதுகாப்பு கருதி ராணுவம் களத்தில் இறக்கப்படுகிறது. ஆனால், அரணாக நிற்கவேண்டிய ராணுவமும் பலியாடுகளாக மாற, வேறு வழியே இல்லாமல் சிட்டி ரோபோவுக்கு உயிர் கொடுக்கிறார் வசீகரன். `செல்போன்கள் எல்லாம் ஏன் மாயமாக மறைகின்றன? கொலைகளுக்குப் பின்னணியில் இருப்பது யார்/எது?' என்ற சிட்டியின் டெக்னாலஜி தேடலே அடுத்த இரண்டு மணிநேர வி.எஃப்.எக்ஸ் விருந்தாக மாறுகிறது.

அனைத்துக்கும் முன்.... ஹாட்ஸ் ஆஃப் ஷங்கர்...! க்ரியேட்டிவ்வாகப் பலப்பல பாராட்டுகளைக் குவித்திருக்கிறது தமிழ் சினிமா. ஆனால், டெக்னிக்கலாக ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது `2.0'. பொறுமையாகச் செயல்பட்டு, இந்தப் பெருமையைச் சாத்தியப்படுத்திய கேப்டன் ஷங்கருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்! 

ரஜினி - மெஷின்களும் புரொகிராமிங் கோடுகளும் ஆட்கொள்ளும் இந்த அல்ட்ராமாடர்ன் பேட்டையின் ஒன் அண்டு ஒன்லி தாதா! மைக்ரோ சைஸில் வந்தாலும் மேக்ஸிமம் எனர்ஜியைப் பற்ற வைக்கிறார். முதல் பாகத்தில் பார்த்த ரகளை ரஜினியை மிஸ் செய்கிறோமோ என முதல்பாதியில் தோன்றும் கேள்விக்குக் கடைசி கால் மணிநேரத்தில் சர்ப்ரைஸ் பதில் சொல்லியிருக்கிறார் ஷங்கர். ஓபனிங் சாங், ரொமான்ஸ், பரபர சண்டைகள் போன்ற பழக்கமான மசாலா இல்லாமல் ரஜினியைப் பார்ப்பதே புது அனுபவம். பிளாக் அண்டு ஒயிட், அதன்பின் கலர், பின்னர் அனிமேஷன்... இப்போது 3டி - இவை அத்தனையும் ரஜினிக்கு மட்டுமே சாத்தியம். ரஜினி என்பதால் மட்டுமே சாத்தியம். 

ஒருபக்கம் பிரமாண்ட சூப்பர்மெஷினாக ரஜினி நின்றால் மறுபக்கம் பயங்கர வில்லன் ஒருவர்தானே இருக்கமுடியும், பொருத்தமாக இருக்கிறார் அக்‌ஷய்குமார். ஏக்கம், கோபம், வெறி என ரஜினியை விட உணர்ச்சிகளைக் காட்டும் வெளி இவருக்குத்தான் அதிகம். அத்தனையையும் செய்துவிட்டு, `அடுத்தென்ன?' என்கிற ரீதியில் கேமராவைப் பார்க்கிறார் அக்‌ஷய்! ஆசம்! அவரின் கேரியரில் இது நிச்சயம் ஒரு `ஒன்டைம் வொண்டர்' கதாபாத்திரம்.

எமி ஜாக்சன் - ஐசக் அசீமோ கூட இவ்வளவு அழகான ரோபோவை கற்பனை செய்திருக்க மாட்டார். லண்டன் மியூசியத்தின் மெழுகு பொம்மைக்கு ரோபோ சூட் மாட்டியதுபோலவே இருக்கிறார். படத்தில் மொத்தமே மூன்று முக்கிய கேரக்டர்கள்தாம். ஆனாலும் கதையமைப்பை ரஜினியும் அக்‌ஷயுமே ஆக்ரமித்துக்கொள்வதால் ஒருசில காட்சிகளில் மட்டுமே எமி ஜாக்சனுக்கு வேலை! டெக்னிக்கல் டீமில் சொல்லிப் பாராட்ட ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.

முதலில் நீரவ் ஷா. கிராஃபிக்ஸ் அதிகப் பங்கு வகிக்கும் கதைகளை கேமராவில் அடக்குவது அத்தனை சுலபமில்லை. கிராஃபிக்ஸுக்கு இடம்விட்டு மற்றவற்றை ஷூட் செய்து, பின்னர் அதையும் கிராஃபிக்ஸ் காட்சிகளையும் சரியாக ப்ளெண்ட் செய்து... இமாலய வேலை. அவ்வளவு உழைப்பிலும் ஒரு சின்னப் பிசிறுகூட தட்டவில்லை. ஒவ்வொரு ஃப்ரேமிலும் `நம்ம ஊர் படமா இப்படி?' என ஆச்சர்யத்தை மட்டுமே பரிசளிக்கிறார் நீரவ் ஷா! மாஸ்டர்க்ளாஸ்!

அடுத்து வேறு யார்? ரஹ்மான்தான். படத்தில் பாடல்களே இல்லை. ஆனால் அதைப் பின்னணி இசையின் மூலம் சரி செய்கிறார்கள் ரஹ்மானும் அவரின் Qutub-E-Kripa குழுவும்! ஒவ்வொரு படத்திலும் பின்னணி இசையில் பல அடிகள் முன்னேறிப் பாய்கிறது அவரின் குழு. முந்தைய பாகத்தில் தோன்றும் கேரக்டர்களுக்குப் பழைய பி.ஜி.எம்மில் ரீ-டச் செய்து, புது கேரக்டர்களுக்கு செம ஸ்டைலாக இசைகோத்து... கொண்டாட்டமாக இசை பதிவு செய்திருக்கிறார்கள்.

படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே திசையில் ஸ்பீட் பிரேக்கர்களின்றி பாய்கிறது. அதற்கு முக்கியக் காரணம் ஆண்டனியின் படத்தொகுப்பு. 2.0வின் முதுகெலும்பு வி.எஃப்.எக்ஸ்தான். ஶ்ரீனிவாஸ் மோகன், ரிஃப் டேகர், Legacy Effects, DNEG, Quantum FX என ஒரு பெரிய பட்டாளமே அசுர உழைப்பைக் கொட்டிக் கொடுத்திருக்கிறது. இவர்களால் மட்டுமே பேப்பரில் இருந்த 2.0 படம் திரைகளைத் தொட்டிருக்கிறது! ஒவ்வொரு செல்போனிலும் அக்‌ஷய் குமாரின் முகம் தெரிவது, கூண்டுக்குள் பறவை அடைபடும் காட்சி, எங்கும் எதிலும் வெள்ளை ஸ்கிரீன் மொபைல்கள் தென்படுவது என ஒவ்வொரு காட்சியும் அற்புதம். டெக்னிக்கலாக செல்போன் டவர் உயரத்தில் இருக்கும் தமிழ் சினிமாவை அலேக்காகத் தூக்கி ட்ரோபோஸ்பியரில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது இவர்களின் முயற்சி. தமிழ் ரசிகர்கள் சார்பாக நன்றிகளும் வாழ்த்துகளும்!

ஆஸ்கர் நாயகன் ரசூலும் ஆடியோகிராஃபியில் தன்பங்கை சரியாகச் செய்திருக்கிறார். சில்வா, நிக் பவெல், ஸ்டீவ் க்ரிஃபின் ஆகியோரின் கற்பனையில் சண்டைக்காட்சிகள் கைதட்ட வைக்கின்றன. சுருங்கச் சொன்னால் டெக்னிக்கலாக `2.0' இந்திய சினிமாவின் பெருமைமிகு விசிட்டிங் கார்டு. மொபைல் போனில் தங்களின் சினிமா ரசனையை தணித்துக்கொள்கிற கூட்டத்தை தியேட்டரை நோக்கி வரவைக்கும் பெரு முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பாளர் சுபாஸ்கரனும். 

வசனம் ஷங்கரும் ஜெயமோகனும். டெக்னிக்கல் டீட்டெயிலிங் எல்லாம் சரிதான். ஆனாலும் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தில் பெருமாள் அவதாரம், அசுரனை அழிக்கிற அம்சம் டைப் வசனங்கள் பொருந்தாமல் துருத்தி நிற்கின்றன. மேக்கிங்கிற்காக இத்தனை ஆண்டுகள் செலவழித்தவர்கள் கதைக்காகக் குறைந்தபட்சம் சில வாரங்கள் செலவு செய்திருக்கலாம். குழந்தைகூட அடுத்து இதுதான் எனக் கணித்துவிடும் கதையும் திரைக்கதையும் கிராஃபிக்ஸ் புண்ணியத்தில் தப்பிப் பிழைக்கின்றன. அக்‌ஷயின் கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம் சொதப்பல். அவர் நல்லவரா... கெட்டவரா?! ஒரு சின்னஞ்சிறு உயிருக்காகத் தன்னையே விட்டுக்கொடுக்கும் ஒருவர் எப்படி இத்தனை கொடூரங்களைச் செய்வார்? அவர் கொடூரமாக மாற கதை கொஞ்சம்கூட நியாயம் செய்யவில்லையே! சரி அவர் சூப்பர்வில்லன் என்றால் சிட்டி 2.0வுக்கும் அவருக்கும் என்ன பெரிய வித்தியாசம்? கேள்விகள் சுற்றி வளைக்கின்றன.

படத்தில் ரஜினிக்கும் அக்‌ஷய்க்கும் இடையேதான் மொத்த பரபரப்பும் இருக்கிறது. மற்றபடி வேறெங்கும் அதை உணர முடியவில்லை. மொபைல்கள் காணாமல் போய் அதன்பின் கொலைகளும் நடக்கின்றன. ஆனாலும் கொஞ்சம்கூட பதற்றமே இல்லாமல் அடுத்த மொபைல் வாங்குவதற்கு வரிசையில் நிற்கிறார்கள் மக்கள். இன்னொரு காட்சியில் நகரத்தின் மையத்தில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் உக்கிரமான சண்டை நடக்கிறது. ஆனால், அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் ஒருபக்கம் மக்கள் போய் வந்து கொண்டிருக்கிறார்கள். பல அதிமுக்கிய ரகசியங்கள் அடைபட்டிருக்கும் `AIRD' அலுவலகத்திற்குள் சந்தைக்கடை போல ஆளாளுக்குப் புகுந்து வெளிப்படுகிறார்கள். இந்தச் செயற்கைத்தன்மை படத்தோடு மட்டுமல்ல படத்தில் சொல்லப்பட்டுள்ள மெசேஜோடும் நம்மை ஒன்றவிடாமல் தடுக்கிறது. 

படம் சயின்ஸ் பிக்‌ஷன் என்ற லேபிளோடுதான் வெளியாகியிருக்கிறது. ஆனால், சிட்டியின் கதாபாத்திரம் தவிர்த்து படத்தில் சயின்ஸுக்குக் கொஞ்சமும் வேலையில்லை. கதையின் போக்கைத் தீர்மானிக்கும் Aura-வை அறிவியல் உலகமே pseudoscience என நிராகரிக்கும்போது அதை வைத்து விஞ்ஞானிகள் எப்படிப் படத்தில் முடிவுக்கு வருகிறார்கள்? இதனாலேயே இது சயின்ஸ் பிக்‌ஷன் படமா பேய்ப்படமா ஃபேன்டஸி படமா என்ற குழப்பம் எழுகிறது.

ஆனால், இப்படியான சின்னச் சின்னக் குறைகளைத் தவிர்த்தால், 2.0 வுக்கு இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கிய இடமுண்டு. தொழில்நுட்பரீதியாக தமிழ் சினிமாவை... இல்லையில்லை... இந்திய சினிமாவை வேற லெவலுக்குக் கைபிடித்துத் தூக்கி விட்டதற்காக 2.0வுக்குப் பெரிய தம்ஸ் அப் காட்டுகிறது விகடன்! 

அடுத்த கட்டுரைக்கு