Published:Updated:

'' '2.0'ல ஷங்கரே டப்பிங் பேசியிருந்தா படம் வேற லெவல்ல இருந்திருக்கும்!" - நடிகர் ஜெயபிரகாஷ்

'' '2.0'ல ஷங்கரே டப்பிங் பேசியிருந்தா படம் வேற லெவல்ல இருந்திருக்கும்!" - நடிகர் ஜெயபிரகாஷ்
'' '2.0'ல ஷங்கரே டப்பிங் பேசியிருந்தா படம் வேற லெவல்ல இருந்திருக்கும்!" - நடிகர் ஜெயபிரகாஷ்

ஷங்கரின் `2.0' படத்தில் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நடிகர் ஜெயபிரகாஷ் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். படம் குறித்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

``என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்திருக்கு, `2.0'. இதுவரைக்கும் நான் எந்தப் பெரிய நடிகருக்கும் டப்பிங் பேசினது இல்லை. முதன்முறையா பாலிவுட் ஸ்டார் நடிகர் அக்‌ஷய் குமாருக்குத்தான் டப்பிங் பேசியிருக்கேன். இந்த வாய்ப்பு வரும்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை!'' ஆச்சர்யத்திலிருந்து இன்னும் மீளமால் பேசத் தொடங்குகிறார், நடிகர் ஜெயபிரகாஷ். 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகியிருக்கிறது `2.0'. 3டி தொழில்நுட்பத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் படத்தின் பிரமாண்டத்தைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து அக்‌ஷய் குமார் ஏற்று நடித்த 'பக்ஷிராஜன்' கதாபாத்திரத்துக்குக் குரல் கொடுத்தவர் யார் என்பதை தீவிரமாகத் தேடி வருகிறார்கள். அதற்கு விடையாக வந்தவர்தான் `பசங்க', `நாடோடிகள்' உள்ளிட்ட படங்களில் குணசித்திர கேரக்டரில் நடித்த ஜெயபிரகாஷ். `2.0' படம் குறித்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

``ஷங்கர் சாருடன் இதுவரைக்கும் நான் வேலை பார்த்தது இல்லை. பொது நிகழ்ச்சியில் மட்டுமே அவரைப் பார்த்திருக்கேன். என்னைப் பார்த்தா நலம் விசாரிப்பார். அவ்வளவுதான். இந்தப் படத்துக்காக அவர் மைண்டில் நான் எப்படி வந்தேன்னுகூட தெரியல. ஒருநாள் அவருடைய துணை இயக்குநர் என்னை போனில் அழைத்து, ` `2.0' படத்துல வர்ற ஒரு கேரக்டருக்கு நீங்க டப்பிங் பேச முடியுமா சார்'னு கேட்டார். இந்த வாய்ப்பை மிஸ் பண்ண வேணாம்னு ஷங்கர் சாருடைய ஆபீஸ் போனேன். முதல்ல அந்தப் படத்துல வர்ற உள்துறை அமைச்சருக்குத்தான் டப்பிங் பேசச் சொன்னாங்க. ஆடிஷன் நல்லபடியா நடந்தது. ஆனா, நான் டப்பிங் பேசினப்போ ஷங்கர் சார் இல்லை. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு திரும்பவும் போன் வந்தது. `ஷங்கர் சார், உங்களை அக்‌ஷய் குமார் கேரக்டருக்கு டப்பிங் பேசச் சொல்றார்'னு சொன்னாங்க. முதல்ல ஆச்சர்யமா இருந்தது, அப்புறம் முயற்சி பண்ணிப் பார்க்கலாம்னு மறுபடியும் அவருடைய ஆபீஸ் போனேன்.

`படத்துடைய எடிட்டிங் வேலைபோயிட்டிருக்கு. நீங்க ஒரு ட்ராக் பேசுங்க. அவுட் எப்படி வருதுன்னு பார்க்கலாம். இருந்தாலும் ஷங்கர் சார் யாரைப் பேச வைக்கலாம்னு இன்னும் முடிவு பண்ணலை'னு சொன்னாங்க. ஷங்கர் சாருடைய டீம் வொர்க் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர்கிட்ட இருக்கிற நேர்த்தி, ஒட்டுமொத்த டீம்கிட்டயும் இருந்தது. ஒருத்தர்கிட்ட இருந்து வேலை வாங்கும்போது அவ்வளவு புஷ் பண்ணுவாங்க. ஆனா, அது நெருக்கடியாவே நமக்குத் தெரியாது. ரொம்ப வேகமாப் படத்துடைய வேலைகள் நடந்தது. ஷங்கர் சார் என்னுடைய சிங்கள் ட்ராக் டப்பிங்கைப் பார்த்துட்டு, `நீங்களே பேசிடுங்க சார்'னு சொன்னார். அப்புறம்தான் டப்பிங் வேலைகள்ல முழுமையா இறங்கினேன். பக்ஷிராஜன் கதாபாத்திரத்துடைய வீரியத்தைப் புரிஞ்சிகிட்டு என்னை நானே தயார் பண்ணினேன். அசுரவேகம் காட்டுற அந்த ரோலுக்கு வெவ்வேற மாடுலேஷன்ல பேசணும். `உங்க குரலோட சேர்த்து மூணு லேயர் சேர்த்துக்கலாம் சார்'னு ரசூல் பூக்குட்டி சொன்னார். 

முழுமையா டப்பிங் பேசி முடிக்க ரெண்டு வாரம் தேவைப்பட்டது. அந்த ரெண்டு வாரமுமே ஷங்கர் சார் கூடவே இருந்து மாடுலேஷன்களைச் சொல்லியும் கொடுத்தார், அதை நடித்தும் காட்டினார். வசனங்களை எல்லாம் அடி வயிற்றிலிருந்து பேசி டெலிவர் பண்ணுவார். ஷங்கர் சாரே பேசியிருந்தா படம் இன்னும் வேற லெவல்ல இருந்திருக்கும். `சூப்பரா பேசுறீங்க, நீங்களே பண்ணலாமே சார்'னு கேட்டேன். `என் குரலைவிட உங்க குரல் ஸ்ட்ராங்கா இருக்கும். நீங்க பண்ணுங்க, உங்களால முடியும்'னு தட்டிக் கொடுத்தார். ரசூல் பூக்குடியும் அப்படித்தான். `யூ ஆர் ஆஸம், ராக்கிங்'னு ஏதாவது சொல்லி எனர்ஜி கொடுதுட்டே இருப்பார். அந்தக் கதாபாத்திரத்துக்கு டப்பிங் கொடுக்குறதுல எனக்கு இருந்த ஒரே சவாலான விஷயம், ஒவ்வொரு வசனத்தையும் அடி வயித்துல இருந்து பேசணும். இதைவிட அடுத்த நாள் அதே மாடுலேஷன்ல பேசணும். அப்போதான் வசனங்கள் எல்லாம் சரியா மேட்ச் ஆகும்.  

நிறைய வசனங்கள் நான் க்ரீன் மேட்டைப் பார்த்துதான் பேசினேன். ஆனா, எனக்கு அது ஒரு கஷ்டமாவே தெரியல. காரணம், அடுத்து என்ன நடக்குப் போகுதுங்கிற ஆர்வத்துலேயே ஒரு ஃப்ளோல பேசினேன். இந்த விஷயத்தை வெளியில யார்கிட்டேயும் சொல்லலை. ஏன்னா, ஷங்கர் சார் படங்கள்ல என்ன நடக்கப் போகுதுங்கிறதுதான் ஸ்பெஷலே. அதையே நானும் மெயின்டெயின் பண்ணினேன். என்னுடைய வீட்டுல கூட நான் யார்கிட்டேயும் முழுசா சொல்லலை. படம் முடிஞ்சதுக்கப்புறம், அவுட் பார்த்துட்டு, `ரொம்ப உற்சாகமா வேலை பார்க்குறீங்க. ஜோரா பண்ணுங்க'னு சொல்லி என்னைக் கட்டிப்பிடிச்சுப் பாராட்டினார். படம் ரிலீஸானதுக்கு அப்புறம் நிறைய பேர் என் குரலை அடையாளம் கண்டுபிடிச்சுப் பாராட்டினாங்க. இதுதான் எனக்கான வெற்றியா நான் நினைக்கிறேன்." என அக்‌ஷய் குமார் ஸ்டைலில் சிரித்து பேட்டியை முடித்தார், ஜெயபிரகாஷ். 

அடுத்த கட்டுரைக்கு