தொடர்கள்
Published:Updated:

“சினிமாவை சினிமாவோடு நிறுத்தக்கூடாது!”

“சினிமாவை சினிமாவோடு நிறுத்தக்கூடாது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சினிமாவை சினிமாவோடு நிறுத்தக்கூடாது!”

“சினிமாவை சினிமாவோடு நிறுத்தக்கூடாது!”

“நான் சினிமாவுக்கு வரும்போது அப்பா (விஜேந்திர பிரசாத்) பெரிய கதாசிரியர் இல்லை. உண்மையிலேயே, அப்பா கதாசிரியர் ஆகணும்னும் நினைக்கலை. எங்க குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். அப்பாவுக்கு விவசாயம் சார்ந்த தொழில் பண்ணணும்னுதான் ஆசை. அடிப்படையில கொஞ்சம் சினிமா ஆர்வம் இருந்ததால, சினிமா தயாரிப்புல இறங்கிட்டார். ஆனால் அதில் தொடர்ச்சியா நஷ்டங்களைச் சந்திச்சார். பெரிய பணக்காரருக்கு மகனா பிறந்து, திரும்பவும் ஜீரோவுல இருந்து ஆரம்பிக்கவேண்டிய சூழல். அப்போதான் அவர் சினிமாவுல கதாசிரியர் ஆகலாம்னு முடிவு பண்ணிக் களமிறங்கினார். நிறைய படிப்பார். அதனால அவருக்கு அது ஈஸியாகவும் இருந்தது. தன்னை சினிமாவுல நிலைநிறுத்திக்க அவருக்குப் பத்து வருடங்கள் ஆச்சு. படிப்பைப் பாதியில் நிறுத்தி சுத்திக்கிட்டிருந்த நானும் சினிமாவுக்கு வந்துட்டேன். நாலஞ்சு வருடம் என்ன ஆகணும்னு யோசிக்கலை. பிறகுதான், இயக்குநர் ஆவோம்னு தோணுச்சு!” - இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநராக, ராஜமௌலி ஆன கதை இது!

“சினிமாவை சினிமாவோடு நிறுத்தக்கூடாது!”

“உங்க படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகுது, பல மொழிகள்ல ரீமேக் ஆகுது. அதேசமயம், உங்க கதைகளெல்லாம் வேறொரு கதாசிரியர் எழுதியதா இருக்கு... உங்களுக்கான கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்கிறீங்க?”

“என் பெரும்பாலான படங்களுக்கு அப்பாதான் கதை. அவர் கதை சொல்லும்போது, அந்தக் கதை எனக்குள்ள தங்கணும். அந்தக் கதாபாத்திரங்கள் என்கிட்ட பேசணும்... அப்படி இருந்தாதான் அந்தப் படத்தை நான் இயக்கணும்னு நினைப்பேன். அந்தக் கதைக்குச் சிறப்பு சேர்க்க என்னென்ன சேர்க்கலாம், எப்படி கமர்ஷியலா மாத்தலாம், அந்தக் கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சிடுவேன். ‘ஈகா’ (நான் ஈ) சின்ன பட்ஜெட் படமாதான் எடுக்க நினைச்சேன். கதையை டெவலப் பண்ணுன பிறகு, அதுக்கு அதிக பட்ஜெட் தேவைப்பட்டது. இப்படி, ஒரு கதைக்கும் எனக்குமான உறவுதான் படமா பிரதிபலிக்கும்.”

“ ‘விக்ரமார்கூடு’, ‘நான் ஈ’, ‘மரியாதை ராமண்ணா’, ‘பாகுபலி’னு படங்களை வெரைட்டியா எடுக்கிறீங்களே... எப்படி?”

“முதலில் ஆடியன்ஸ் பார்வையில் இருந்து முடிவெடுக்கணும். நாம ஒரு படம் எடுக்கிறோம்னா, அது மக்களுக்குப் பிடிக்கணும். இன்னைக்கு மக்களுக்குப் பொழுதுபோக்குக்கு நிறைய சாய்சஸ் இருக்கு. வாரத்துக்கு நாலு படம் ரிலீஸ் ஆகுது. ஏற்கெனவே, நாலு படங்கள் தியேட்டர்ல ஓடிக்கிட்டிருக்கு. தவிர, மற்ற மொழித் திரைப்படங்கள்... இப்படி வாரம் 20 படம் தியேட்டர்ல வருது. டிவியில படங்கள்,  சீரியல்கள், ஆன்லைன்ல  எக்கசக்கமான படங்கள், வெப் சீரிஸ்னு கொட்டிக் கிடக்கு. இதுமட்டுமல்லாம, மால், கேம் சென்டர், பீச், பார்க்னு நிறைய பொழுதுபோக்குகள் மக்களுக்கு இருக்கு. இவ்வளவையும் தாண்டி நாம எடுக்கிற படத்துக்கு மக்கள் சில மணி நேரத்தையும் பணத்தையும் செலவு பண்ண வைக்கணும்னா அதுக்கு என்ன செய்யணும்னு முதல்ல யோசிக்கணும். அதுக்காக நாம் மெனக்கெடற அந்த விஷயம்தான், மக்களை தியேட்டருக்குக் கொண்டுவரும்.”

“ஆறு வருடங்கள்  ‘பாகுபலி’ டீமிடம் இருந்து வேலை வாங்குறது ஒரு பொறுப்புனா, அவங்க யாரும் சோர்ந்துபோயிடாம பார்த்துக்கிறது மிகப்பெரிய பொறுப்பு... எப்படி சமாளிச்சீங்க?”
 
“இந்தப் படத்தை முடிக்க இவ்வளவு வருடம் ஆகும்னு ஆரம்பத்துல எங்களுக்குத் தெரியாது. ரெண்டு வருடத்துல படத்தை முடிச்சிட லாம்னுதான் ஆரம்பிச்சோம். ஷூட்டிங் ஸ்பாட்லதான், இந்தப் படத்தை முடிக்க ரொம்ப காலம் தேவைப்படும்னு தெரிஞ்சது. கடல்ல இறங்கியாச்சு. ஒண்ணு மூழ்கணும், இல்லைனா நீச்சலடிச்சுக் கரை சேரணும். நாங்கெல்லாம் நீந்திக் கரைசேர ஐந்து வருடம் ஆச்சு!  எல்லோரையும் இந்தப் படத்துக்கு இத்தனை வருடம் தக்கவைக்கிறது கொஞ்சம் கஷ்டமான காரியம்தான். ஆனா, இந்தப் படத்துல நடிச்ச எல்லோரும் பாகுபலி, தேவசேனா, சிவகாமினு கேரக்டர்களாகவே வாழ ஆரம்பிச்சுட்டாங்க. கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர்னு டெக்னிக்கல் டீம் எல்லோருக்குமே, பெஸ்ட் விஷயத்தைத் தயாரிப்பாளருக்குக் கொடுக்கணும்னு எண்ணம் வந்திடுச்சு. அதனால, ஸ்பாட்ல பிரச்னைகளைப் பெருசா கண்டுக்கலை; இலக்கை நோக்கியே ஓடிக்கிட்டிருந்தோம்.”
 
“ ‘பாகுபலி’யில வர்ணாசிரமக் கொள்கையைப் புகுத்தியிருந்தீங்களே... தேவையா?”

“வர்ணாசிரமக் கொள்கைகள் பண்டைய காலத்திலிருந்தே நம்ம நாட்டுல இருக்கு. இங்கே குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மேலே வைப்பதும், இன்னொரு பிரிவினரைக் கீழே வைப்பதும் உலகம் முழுக்க இருந்துக்கிட்டேதான் இருக்கு. வெகுசிலரே பிரிவினை பார்க்காம மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கிறாங்க. ‘பாகுபலி’ கதாபாத்திரம் பாகுபாடுகள் கடந்து மனிதர்களை நேசிப்பவர்னு காட்டத்தான், பாகுபலி கட்டப்பாவை சாப்பாடு ஊட்டச் சொல்ற காட்சியை வைத்தேன்.”
 
“ ‘பாகுபலி தி பிகினிங்’ வெப் சீரிஸ்  பற்றி...?”


“ஹாலிவுட்ல ஒரு படம், படமா மட்டுமல்லாம கேம், வெப் சீரிஸ், அனிமேஷன் சீரிஸ்னு பல வகையில மாற்றமடையுது. ஹாலிவுட்டைவிட இந்தியாவில் சினிமா ரசிகர்கள் அதிகம். அவங்களே பண்ணும்போது, நாம ஏன் பண்ணக்கூடாது?! இதை நான் தயாரிப்பாளர் ஷோபுகிட்ட சொல்லியிருந்தேன். ஒரு படத்தை அது தொடர்பான மற்ற விஷயங்களா மாத்துறதுக்குப் பின்னாடி ஒரு சயின்ஸ் இருக்கு... அதுக்குப் பெயர், ‘டிரான்ஸ் மீடியா’. நாங்களும் ‘பாகுபலி’யை டிரான்ஸ் மீடியாவுக்குக் கொண்டுபோயிட்டோம். சினிமாவை சினிமாவோடு நிறுத்தக்கூடாது. ‘பாகுபலி’யை ஒரு உலகமாக்கினோம். அந்த உலகத்துல சில கதைகள்தான், பாகுபலி 1, பாகுபலி 2. இதுதவிர, இன்னும் பல கதைகள் இருக்கு. ‘கட்டப்பா’ கதாபாத்திரத்தின் ஆதி முதல் அந்தம் வரைக்கும் இருக்கு. சிவகாமி, தேவசேனாவுக்குப் பின்னாடி சில கதைகள் இருக்கு. பாகுபலியும், பல்வால் தேவனும் சின்ன வயசுல எப்படி இருந்தாங்கன்னும் ஒரு கதை இருக்கு. இந்தக் கதையை கார்ட்டூன் சீரிஸா கொடுத்தா, குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலதான், ‘பாகுபலி தி லாஸ்ட் லெஜன்ட்ஸ் (BAAHUBALI - THE LOST LEGENDS)’னு எடுத்தோம். சிவகாமியோட கதையை ‘தி ரைசஸ்  ஆஃப் சிவகாமி’னு ஒரு நாவலா எழுதியிருக்கோம். இந்த நாவல்ல படத்தைவிட எமோஷனலான விஷயங்கள் இருக்கு. அந்த நாவலைத்தான் வெப் சீரிஸா எடுத்துக்கலாம்னு முடிவெடுத்திருக்கோம்.”

“அடுத்து இயக்கப்போற ‘RRR’ படத்தின் கதை என்ன?”

 
“இது படத்தோட பெயர் இல்ல... ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், என்னுடைய பெயருடைய முதல் எழுத்து மூன்றையும் இணைச்சு இப்படிச் சொல்றோம். இப்போதான் ஸ்கிரிப்ட் எழுதிக்கிட்டிருக்கேன். டிசம்பர் முதல் வாரத்துல முழுமையான அறிவிப்பு வரும்.”  

“தமிழ் சினிமாவைப் பற்றிப் பல இடங்கள்ல பாராட்டியிருக்கீங்க. ஒரு நேரடி தமிழ்ப்படம் பண்ணணும்னு தோணலையா?”


“பண்ணக்கூடாதுனு இல்லை. அப்பா சொல்ற கதைக்கு யார் சரியா இருப்பாங்கனு நான் நினைக்கிறேனோ, அவங்களைத்தான் நடிக்க வெச்சுட்டு வர்றேன். இங்கே இருக்கிற எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கு. அவங்க நம்ம கதையை வேறொரு உயரத்துக்குக் கொண்டுபோயிடுவாங்க. ஆனா, நான் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிறது என்னன்னா... நம்மளோட கதைகள் மூலமா சீக்கிரமே சர்வதேச அளவுக்குப் போகலாம். அதனால, எனக்கு தமிழ்ப்படம், தெலுங்குப் படம்னு எல்லாம் பிரிச்சுப் பார்க்க முடியலை. என் படம் ‘இந்தியப் பட’மா இருக்க ஆசைப்படுறேன். மொழி எல்லைகளை என் படங்கள் கடக்கணும்னு ஆசைப்படுறேன்.”

அலாவுதின் ஹுசைன் - படம்: பா.காளிமுத்து