Published:Updated:

இருண்ட காலத்தின் நட்சத்திரங்கள் - பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் கோல்டு வார் ஒரு பார்வை #ColdWar #Iffi2018

இருண்ட காலத்தின் நட்சத்திரங்கள் - பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் கோல்டு வார் ஒரு பார்வை #ColdWar #Iffi2018
இருண்ட காலத்தின் நட்சத்திரங்கள் - பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் கோல்டு வார் ஒரு பார்வை #ColdWar #Iffi2018

பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் சமீபத்திய படமான Cold War-ல் வழக்கமான திடீர்த் திருப்பங்களோ போரின் மரண ஓலங்களோ இல்லை. மெல்லுணர்ச்சிச் சீண்டல்களும் சம்பிரதாயப் படபடப்புகளும் இல்லை. ஏனெனில், இப்படம் போருக்குப் பிந்தைய வெவ்வேறு அரசியல் சுழிப்புகளை நம்பிக்கையின் விளைவாய் கவிந்த இரு மனங்களது வாழ்வின் ஊடாக விரித்துச் செல்கிறது. 

கோல்டு வார் (Cold War) படத்திலிருந்து ஒரு தருணம். இருளும் ஒளியும் முறுகிக் கிடக்கும் அந்த கறுப்பு வெள்ளைக் காட்சியில் இளமை ததும்பிக் கொண்டிருக்கிறது. நாட்டுப்புற பாடற்குழு ஒன்றை உருவாக்கி முன்னெடுக்க முனைந்திருக்கும் போலந்து அரசாங்கத்தின் முயற்சியில் பங்குபெற்று தத்தம் திறமைகளை வெளிக்காட்டி தேர்வாகி விடத் துடிக்கும் முனைப்பில் குழுமியிருக்கும் இளைஞர் கூட்டம். சமீபத்தில் நிகழ்ந்து முடிந்த இரண்டாம் உலகப் போரின் துக்கங்கள் தீண்டியிராத சதைப்பிடிப்புள்ள மிருதுவான கிராமத்து முகங்கள். அலைக்கழிப்புகள் ஏதுமற்ற அமைதியான கண்கள். அவர்தம் ஒவ்வோர் அசைவிலும் வியாபித்திருக்கும் வசீகரத்தை திசைகள் அறுந்துவிட்ட விழிகளென ஒடுங்கி அமர்ந்து அறிந்து மூர்ச்சையாகிறோம். குளிர்ச்சியான நீர்ச்சுனையின் வாஞ்சையில் பணிந்து குழையும் புற்கள் போல. களைப்பும் சோர்வும் அலை அலையாக நெளிந்து புரண்டு மூர்க்கங்களை மழுங்கடிக்கும் பிரயத்தனங்களுடன் உக்கிரங்களைக் கரை சேர்ப்பித்துக்கொண்டிருந்த வேளையில், அந்த இளைஞர் கூட்டம் ஆடலும் பாடலுமாக ஆனந்தக் கனவில் லயித்திருக்கிறது. அவர்கள் தாளக் கணக்குகள் எதுவுமின்றி ஆன்ம ஓர்மையை நம்பிப் பாடுபவர்கள். உள்ளங்கையைத் தழுவிய பனி மூட்டம் பரிசளிக்கும் பிசுபிசுப்பு போன்ற பாடல்கள். அவை நம் உயிர்ச் சுடரை உரசிச் செல்கின்றன. மனதை விம்மச் செய்யும் பேதைமை மங்காத பொன்னலங்கார நாத வருடல்கள் திகைப்பின் சொர்க்க வாசலில் நம்மைக் கட்டிப்போடுகின்றன. ஸூலா (Joanna Kulig) அவர்களுள் ஒருத்தியல்ல என்பதைத் தேர்வாளரான ஐரீனா உடனடியாகக் கண்டு கொள்கிறாள். பாம்பின் கால் பாம்பறியாததா? ஆனால், துக்கங்களை விழுங்கி பாசி படர்ந்து விட்ட ஸூலாவின் உறுதியான கருவிழிகளில் ஓர் ஆண் தேடுவது வேறு. திரள் திரளாக வெடித்துக் கூத்தாடும் மின்னல் கொடிகளின் மீது தாவி ஏறி எதிர்காலத்தின் திசையறியா போக்குகளை உடனுக்குடன் தனதாக்கும் வித்தை அறிந்தவள் ஸூலா. விக்டர் அவளைக் கண்டடைகிறான். கடலில் அமிழும் செஞ்சூரியன். 

இருண்ட காலத்தின் நட்சத்திரங்கள் - பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் கோல்டு வார் ஒரு பார்வை #ColdWar #Iffi2018

போரின் பின்னணியில் ஒரு காதல் கதையைச் சொல்வது ஒன்றும் புதிதல்ல. துப்பாக்கி முழக்கங்களுக்கும் பீரங்கி வெடிப்புகளுக்கும் நடுவே கண் பார்த்து கை கோத்து கட்டித் தழுவி முத்தமிட்டுப் பிரியா விடை கொடுத்து கண்ணீர் உகுக்கும் காவியக் காட்சிகளை காஸப்ளாங்கா காலத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவற்றிலிருந்து கொஞ்சம் விலகி, படத்தின் உச்சக்காட்சி வரைக்குமே போரின் வெறுமையை முற்றிலுமாக ஒதுக்கிப் புறந்தள்ளி விட்டு காதலை மட்டும் பின்தொடர்ந்த படம் என ஹும்பர்தோ ஸொலாஸின் செஸிலியாவைக் (Cecilia 1982) குறிப்பிடலாம். தம்மைச் சுற்றி இறுகிக் கொண்டிருக்கும் கொந்தளிப்பான சூழல் குறித்த பிரக்ஞை துளியுமின்றி நாயகனும் நாயகியும் காதலித்துக் கொண்டிருப்பார்கள். காதலுக்குக் கண்ணில்லை!

அன்றாடங்களின் அலுப்பூட்டும் அடுக்குகளை உதறித் தள்ளி மேலெழும் உந்து சக்தியாக காதற் சாளரங்களின் வசந்தங்கள் திறக்கும் அதே கணத்தில் அதற்கு விரோதமாய் முன் அறிவிப்பின்றி புரட்சிக் கனலும் பிரவேசித்து காதலுக்கு ஊறு விளைவிப்பது என்பது அதிர்வுறச் செய்யும் முரண். பார்வையாளர்களுக்குமே அந்த முடிவு சகலத்தையும் கலைத்துப் போட்டு திணறடித்த ஒன்று தான். இத்தகைய போர்ப் பின்னணி வரிசையில் வைக்கத் தகுந்த பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் (Pawel Pawlikowski) சமீபத்திய படமான Cold War-ல் வழக்கமான திடீர்த் திருப்பங்களோ போரின் மரண ஓலங்களோ இல்லை. மெல்லுணர்ச்சிச் சீண்டல்களும் சம்பிரதாயப் படபடப்புகளும் இல்லை. ஏனெனில், இப்படம் போருக்குப் பிந்தைய வெவ்வேறு அரசியல் சுழிப்புகளை நம்பிக்கையின் விளைவாய் கவிந்த இரு மனங்களது வாழ்வின் ஊடாக விரித்துச் செல்கிறது. 

இருண்ட காலத்தின் நட்சத்திரங்கள் - பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் கோல்டு வார் ஒரு பார்வை #ColdWar #Iffi2018

இயக்குநர் பாவெலின் பெற்றோரது வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்ட படம். சமர்ப்பணமும் அவர்களுக்குத்தான். 4:3 விகிதத்தில் (aspect ratio) கறுப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது. பனிப்போர் மூளும் காலகட்டம். அத்தகைய உக்கிரமான காலகட்டத்தில் இரு நெஞ்சங்களிடையே இரைச்சலிட்டுப் பெருகி வளரும் உயிர்த்தீ. அதை அடர்த்தியான புகை மூட்டத்தின் தற்காலிக மடிப்புகளுக்கு அவ்வப்போது காவு கொடுக்க நேர்ந்தாலும் காதலின் தகிப்பை விக்டரும் ஸூலாவும் ஊதிப் பெருக்கி அணையாது பாதுகாக்கிறார்கள். உச்சியில் துடிக்கும் இசையை திடும்மென நிறுத்திவிட நேர்கிற அவலம். அதன் அதிர்வுகள் வடிந்து குன்றாதிருக்க எந்நேரமும் மீட்டிக் கொண்டு பொரும வேண்டிய நிர்பந்தம். பின்னொரு நாளில் தொடர்ந்திடக் கொப்பளிக்கும் ஆவேசம். கனவுகளுக்கும் நிதர்சன வாழ்க்கைக்குமான இடைவெளிகளை இருவரும் பிரியத்தின் கைகோத்து பூர்த்தி செய்கிறார்கள். 

ஆழத்துள் நிலை பெற்றதை சோதித்துப் பார்க்கும் வல்லமை மேற்பரப்புச் சலனங்களை உண்டாக்கும் கல்லெறிதல்களுக்கு இல்லை. எனினும் பிரிவின் துயரும் ஸ்பரிசங்களை அண்ட விடாத  தொலைவும் ஆழங்களை அசைத்துப் பார்க்கிறது. சஞ்சலங்களும் சந்தேகங்களும் வரிசை கட்டி வந்து நிற்கின்றன. தீர்மானங்களின் இசைவுக்கேற்ப காரணிகளை அடுக்கிக் கொண்டு வரும் மனத்தின் வெவ்வேறு பாவனைகளை படத்தில் சலித்தெடுத்து வைத்திருக்கிறார்கள். திடீரென அந்நியப்பட்டு விடும் நெருங்கிய நெஞ்சங்களை அணுகுவதில் உள்ள சிரமங்களையும் சிக்கல்களையும் பாவெலால் 85 நிமிடங்களுக்குள் முழுதாய்க் காட்டிவிட முடிந்திருக்கிறது. விக்டருக்கும் ஸூலாவுக்கும் இடையேயான உணர்ச்சிப் பரிமாற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இறுக்கமான புறச்சூழலுக்கு பொருந்திப் போகிறாற்போல அமைக்கப்பட்டுள்ளன. இப்படம் காயங்களை நிமிண்டி கண்ணீர் உகுக்கச் செய்யும் மலினமான உத்திகளை அறவே தவிர்க்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இருண்ட காலத்தின் நட்சத்திரங்கள் - பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் கோல்டு வார் ஒரு பார்வை #ColdWar #Iffi2018

ஒன்றைக் கடைபரப்பிக் காட்டி விட்டு வேறொன்றை நுட்பமாக உணர்த்துவதில் பாவெல் கை தேர்ந்தவர். பாவெலின் முந்தைய படமான Ida-விலும் நாம் அகழ்ந்தெடுக்க வேண்டிய சங்கதிகள் ஏராளமாகப் பொதிந்திருக்கும். இவரது பெரும்பாலான காட்சிச் சட்டகங்களின் குவிமையமாக உரையாடுகின்ற முகங்களோ ஏதேனுமொரு செயலில் ஈடுபட்டிருக்கும் கதாபாத்திரங்களோ இல்லாது அந்தக் குறிப்பிட்டத் தருணங்கள் நிகழ்கின்ற பின்னணிக்கு மேலதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வரலாற்றின் ஒழுக்கில் சின்னஞ்சிறிய கண்ணிகளாக வாழ்ந்து மடியும் சொற்ப காலத்துக்குள் எத்தனை எத்தனை அற்பக் கூச்சல்கள்! பிற படங்களில் முழுத் திரையையும் ஆக்கிரமிக்கும் பிரதான பாத்திரங்களின் ஆகிருதியை காட்சிச் சட்டகத்தின் கீழ்ப்பகுதிக்கு நகர்த்தி விட்டு அவர்களது பின்புலம் பிரமாண்டமாய் எழுந்து நின்று அச்சுறுத்துவதை கவனப்படுத்துகிறார். இடதுசாரி அரசாங்கத்தின் மீதான பாவெலின் கூரிய விமர்சனங்கள் வெற்றுக் கோஷங்களாக முன்வைக்கப்படாமல் அமைதியின் உள்ளொடுங்கிய தன்மையுடனும் அறிவின் ஆழ்ந்தறியும் பக்குவத்துடனும் எதிரொலிக்கின்றன.

தேசத்தின் பெயரால் வயிறு வளர்ப்பவர்கள்தான் அடிக்கடி ஏப்பம் விடுகிறவர்கள். முஷ்டி உயர்த்தி நரம்பு புடைக்க அவர்கள் கூச்சலிடுவதெல்லாம் முகமூடிகளை இறுகப் பற்றிக்கொண்டு கோமாளித்தனங்களை இன்னும் கொஞ்சம் நீட்டித்து விட முனைவதன் வெளிப்பாடே. ஆனால், நாம் உள்ளுள் அறியும் உண்மை வேடங்களுக்கு எதிரானது. எவராவது முதுகெலும்புள்ளவர்கள் முறுக்கிக் கொண்டு எதிர்க்கிற பட்சத்தில் பொல்லாத முத்திரைகள் குத்தி ஆக்ரோஷத்தின் வழியாக பசப்புவதைவிட மேலான வழியை இன்னமும் தேச பக்தர்கள் கண்டுபிடிக்கவில்லை. விக்டர் சுரணையுள்ளவன். போலந்திலிருந்து பாரீஸுக்குத் தப்பித்துச் செல்கிறான். பாதசாரியின் கவிதை வரி உணர்த்தும் அனர்த்தங்களைப் போல `சொந்த வீட்டில் அகதியாக சொந்த உடம்பில் அகதியாக' காதலியையும் தேசத்தையும் பிரிந்து வாழ்கிறான். 

இருண்ட காலத்தின் நட்சத்திரங்கள் - பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் கோல்டு வார் ஒரு பார்வை #ColdWar #Iffi2018

பழம்பெருமை பேசி பழங்கதைகளுக்கு பூரித்துப் போகும் தனி நபர்களிடமே எச்சரிக்கை கொள்ள வேண்டுமெனும்போது ஓர் அரசாங்கமே புதுமைக்கு முதுகு காட்டி வீற்றிருக்கிறது. ஜாஸும் ராக்கும் கோலோச்சிய காலத்தில் போலந்து நாட்டின் கம்யூனிச அரசாங்கம் நாட்டுப்புற பாடலைப் பாடுவதற்கு கோஷ்டி சேர்க்கிறது. குழுவினரது உடைகள் பழங்குடி மக்களின் பிரதிபலிப்புகளாக உருமாறுகின்றன. இங்கே கிராமங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பது வெறும் பாவனைதான். இவர்களது 'பண்பாட்டைப் பாதுகாத்தல்' முழக்கங்கள் அத்தனையும் நவீன மனங்களின் ஒன்றிணையும் தன்மைக்கு எதிரான நோக்கங்கள் கொண்டதாகவே இருக்கின்றன. தனது சுய இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முனையும் அதிகார வர்க்கங்களின் அசட்டு மோதலில் வேரற்று திரியும் மனிதர்கள் மீதான பச்சாதாபம் புதிய உருக்கொள்கின்றது. கடந்த காலத்துக்குத் திரும்பினாலன்றி மோட்சமில்லை என்று நம்பச் சொல்கிறார்கள். ஆனால், நிதர்சனம் வேறு விதமானது. அது காலூன்றிக் கிடக்கும் சுரணையுள்ளவர்களையும் நிலம் நீங்கச் செய்கிறது. 'We Welcome Tomorrow' எனும் வாசகம் பொதிந்த பதாகையை நாட்டுப்புறப் பாடற் குழுவின் தொடக்க விழாவுக்காக கொடியேறி கயிற்றில் கட்ட முனைபவன் குப்புற வீழ்வதைப் படத்தில் காட்டுகிறார்கள். பாவெலின் நக்கல்!

காலம் வழுக்கிச் செல்வதை இயக்குநர் உணர்த்துகின்ற இடங்கள் பிரமிப்பை உண்டாக்கியவாறு இருந்தன. ஒரே பாடல் நாட்டுப்புறப் பண்ணிலும் ஜாஸிலும் ராக்கிலும் பாடப்படுகிறது. எடித் பியாஃப் மேற்கோள் காட்டப்படுகிறார். இத்தனை பெரிய கான்வாஸிற்கு 85 நிமிடங்கள் என்பது மிகக் குறுகிய அவகாசம் தான். ஆனால், அதனுள் அணு உலை கொதித்து வெடிப்பதற்கு முந்தைய கணங்களை அநாயசமாக அடுக்கிச் செல்கிறார். ஓரிரு வசனங்களிலேயே கதாபாத்திரங்களின் வடிவ நேர்த்தி துலங்கி விடுகிறது. நேர்முகத் தேர்வறைக்கு வெளியே தன் அருகே அமர்ந்திருப்பவளிடம் அவள் பாடவிருக்கும் பாடலைப் பாடச் சொல்லி கேட்கிறாள் ஸூலா. 'நல்லாருக்கு. ஆனா இதை ரெண்டு பேர் சேர்ந்து பாடுனா இன்னும் நல்லாருக்கும்.' தேர்வாளர்களான விக்டர் மற்றும் ஐரீனா முன்பு ஸூலாவும் அவளும் இணைந்தே அந்தப் பாடலைப் பாடுகிறார்கள். ஸூலா கிராமத்திலிருந்து வந்தவள் அல்ல என்பது அவளது கண்களைப் பார்த்தவுடன் ஐரீனாவுக்குத் தெரிந்து விடுகிறது. 'வேற நாட்டுப்புறப் பாட்டு எதையாச்சும் பாட முடியுமா?' என விக்டர் கேட்கையில் அவள் ரஷ்யப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலையே பாடுகிறாள். அவளது கடந்த காலத்தின் இடைவெளிகள் அடுத்தடுத்தக் காட்சிகளில் கச்சிதமாக முழுமை கொள்கின்றன. உண்மைக் கதையாக இருப்பதன் அனுகூலம். மரணத் தறுவாயிலும் 'அந்தப் பக்கம் இன்னும் அழகா இருக்கும். அங்கே போய் காத்திருக்கலாம்' என ஸூலா விக்டரின் தோளணைத்து அழைத்துச் செல்லும் காட்சியில் சிலிர்க்காமல் இருக்க முடியாது. 

படத்தின் ட்ரெய்லர்

கூடடைந்து விட்ட பறவைகள் வானில் விட்டுச் சென்ற சிறகடிப்பு இந்தப் படம். நம் காலத்தின் மாபெரும் இயக்குநர்களுள் ஒருவர் பாவெல்.

விருதுகள் : 

கேன்ஸ் திரைப்பட விழா சிறந்த இயக்குநர் : பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி

அடுத்த கட்டுரைக்கு