தொடர்கள்
Published:Updated:

கோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்

கோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
கோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்

கோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்

‘புற்றுநோயாளி’ அம்மாவுக்காக போதைப்பொருள் கடத்தத் துணியும் கோகிலாவே, ‘கோலமாவு கோகிலா.’ நிழல் உலகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காமெடிப் படங்களில் முதன்முதலாக ஒரு ‘நாயகி’ப் படம் எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் நெல்சன்.

கோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்

பாவாடை சட்டையில் பாந்த சாந்த கோகிலாவாய் நயன்தாரா. குடும்பக் கஷ்டத்தைக் கண்ணிலும் நெஞ்சிலும் சுமக்கும் அண்டர்ப்ளே நடிப்பும் தன் எதிரிகளை அசால்ட்டாய் டீல் பண்ணும் கெத்தும்... சிறப்பு.  ஆனால் காஸ்ட்யூம் உட்பட `நானும் ரௌடிதான்’ காதும்மாவையே திரும்பவும் பார்ப்பது போலிருப்பது மட்டும் சலிப்பு. காமெடி ஒன்லைனர்களால் கன்னாபின்னா சிக்ஸர் அடிக்கிறார் யோகிபாபு. கூடவே ‘சேகர் ஸ்டோர்’ கடைப்பையன் ஆனந்தும் ஆர்வக்கோளாறு காதலன் அன்புதாசனும் பிரமாதமான ஃபீல்டிங்.

கோகிலா குடும்பத்தார் சரண்யா பொன்வண்ணன், ஆர்.எஸ்.சிவாஜி,  ஜாக்குலின் தொடங்கி மெயின் வில்லன் ஹரீஷ் பேரடி, ரைமிங்கில் தெறிக்கவிடும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘சபாரி வில்லன்’ அருண் அலெக்ஸாண்டர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், அறந்தாங்கி நிஷா, ‘வேற மாதிரி பாப்பே மாமே’ என மிரட்டும் டோனி வரை கலகல லகலக காஸ்டிங் கச்சிதம்.

கோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்

சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத்தின் ‘கல்யாண வயசு’  பாடல் அதிரடி ஹிட். பாடல் ஆரம்பிக்கும்போதே தியேட்டரை விசில் கிழிக்கிறது. சிவக்குமார் விஜயனின் கேமராவும் நிர்மலின் எடிட்டிங்கும் இணைந்து ஜாலம் காட்டியிருக்கின்றன.

கோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்ஜாக்குலின் சொல்வது போல கொலம்பியா, ஆப்கானிஸ்தான், மும்பை, கும்மிடிப்பூண்டி வரை ஜஸ்ட் லைக் தட் கைமாறும் ‘கோலமாவு’, ரெட் ஹில்ஸ் வரும்போது மட்டும் டைம்லூப்பில் சிக்கிக்கொண்டது போல திரும்பத் திரும்ப வரும் காட்சிகள் அலுப்பு.

படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஆடியன்ஸ் விழுந்து எழுந்து சிரிக்கிறார்கள்.  ஆனால், கொலைகளையும் காமெடியாக எடுத்துக்கொண்டு பார்வையாளர்கள் சிரிப்பதையும் ரசிப்பதையும் பார்த்தால் பயமாகத்தான் இருக்கிறது.

‘கேன்சர் நோயாளி’ என்ற ஒற்றை அனுதாப அலையும் இரண்டாம் பாதியில் காமெடியாக்கப்பட்டு, காணாமல்போகிறது. பாலியல் வன்புணர்வுக் காட்சியில் நயன் தன் அம்மா, அப்பாவை அழைக்கும் காட்சி... வித்தியாசமாக யோசிப்பதாக நினைத்து விபரீதமாக யோசித்திருக்கிறார்கள்.

அறவுணர்வும் லாஜிக்கும் சினிமாவுக்குத் தேவையில்லை என்று நினைப்பவர்கள் கோகிலாவின் கோலத்தை ரசிக்கலாம்.

- விகடன் விமர்சனக் குழு