Published:Updated:

மேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்

மேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
மேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்

மேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்

மேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்

மேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்

Published:Updated:
மேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
மேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்

முன்னேற்றம் என்கிற முழக்கத்தோடு முன்வைக்கப்படும் அரசியல், எளிய மனிதர்களின் வாழ்க்கையை எப்படிச் சூறையாடுகிறது என்பதையும், கடைசிவரை காணிநிலம் என்பது ஏன் உழைக்கும் மக்களுக்கு நிகழ மறுக்கும் சாத்தியமாக, நிறைவேறாத கனவாக இருக்கிறது என்பதையும் அழுத்தமாய் முன்வைக்கும் ஓர் அசலான சினிமா ‘மேற்குத்தொடர்ச்சி மலை.’

மேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்

நாம் இதுவரை பார்த்துப் பழக்கப்பட்ட வணிக சினிமாக்களின் சாயல் படியாமல், மண்ணையும் மக்களையும் அவர்களின் வாழ்வியலையும் அப்படியே பதிவு செய்திருக்கும் ஒரு யதார்த்த சினிமாவைத் தந்து, ஒரு வலிமையான அரசியலைப் பிரசார நெடி இல்லாமல் கலைநேர்த்தியுடன் பதிவு செய்திருக்கும் இயக்குநர் லெனின் பாரதிக்கு ஒரு மகத்தான செவ்வணக்கம். இப்படி ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்த நடிகர் விஜய்சேதுபதிக்கு மனம் திறந்த, மனம் நிறைந்த பாராட்டுகள்.

தனக்கென ஒரு நிலம் வாங்குவதையே லட்சியமாகக்கொண்ட இளைஞன் ரங்கசாமி. ஒவ்வொரு நாளும் மேற்குத்தொடர்ச்சி மலையைக் கால்களால் நடந்து கடந்து ஏலக்காய் மூட்டைகள் சுமந்து ஜீவிக்கிறான். தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் ஏலக்காய்த் தோட்டங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறது அவனுடைய எதிர்காலம். ஒவ்வொரு முறையும் கையருகே வந்து கலைந்துபோகிறது சொந்தநிலக் கனவு...  அது ஒருவகையில் நனவாவதும் பின் வேறு வழியில் கலைந்துபோவதும், அதற்குப் பின்னால் மாறியிருக்கும் அரசியல் - பொருளாதாரச் சூழலும்தான் கதை.

வசனம் ராசீ. தங்கதுரை.  சினிமாவுக்கென்று மெனக்கெடுகிற வசனங்கள் எதுவுமில்லை. ஒரு மலைக்கிராமத்துக்குள் நாம் பயணித்தால் நாம் பார்க்கிற மனிதர்கள், கேட்கிற குரல்கள், உறவுகளுக்கு இடையிலான நம்பிக்கைகள், எளிய நம்பிக்கைகள், அன்றாட உழைக்கும் வாழ்வில் பொதிந்திருக்கும் நகைச்சுவைத் தருணங்கள்... இவை அனைத்தும் வசனங்களாக உருமாறியுள்ளன. 

மேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்

வாழ்நாள் வரை உழைத்துக்கொண்டே இருந்ததை சாதனையாகச் சொல்லிக்கொண்டு வாழ்ந்து மடிகிற வனகாளியில் தொடங்கி, மலையில் தொலைத்த வாழ்வைத் தேடி அலைகிற கிறுக்குக் கிழவி வரை ஓராயிரம் கதைகள் படம் முழுக்க, மலைமுகடுகளின் இடுக்குகள் எங்கும் நிறைந்துகிடக்கின்றன. கதை நாயகன் என்று ஒருவர் இருந்தாலும், அவருக்கு என்று ஒரு கதை இருந்தாலும் அதைச் சுற்றிலும் பின்னப்பட்ட ஏராளமான மனிதர்களின் கதைகளும் மலையோரத்து மூலிகைச் செடிகளைப்போல் துளிர்த்துத் திளைக்கின்றன.

மலையில் நடக்கிற அத்தனை நிகழ்வுகளையும் ஒரு ராட்சசனைப்போல மலையும் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. அழுகுரல்களைக் கேட்டுக் கண்ணீர் சிந்துகிறது. இழப்புகளில் பதற்றம் கொள்கிறது, மௌனித்திருக்கிறது, தென்றலில் தலையாட்டிச் சிரிக்கிறது, அத்தனை கதைகளையும் கேட்கிறது; பார்க்கிறது. இறுதிக் காட்சியில் பார்வையாளனோடு மலையும் உறைந்து நிற்கிறது. இதைச் சாத்தியமாக்கியிருப்பது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. தன் உழைப்பின் கதை சொல்லி வனகாளி, தன் சகாக்களுடன் ஏலக்காய் மூட்டை சுமந்து திரும்பும் காட்சி, இறுதிக்காட்சி எனப் பல இடங்களில் படத்தின் ஒட்டுமொத்த ஜீவனையும் தன் கேமராவுக்குள் அடைத்து வைத்திருக்கிறார் இந்த மாயக்கார ஒளிப்பதிவாளர்.

மேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்ரங்கசாமியாக நடித்திருக்கும் ஆன்டனியை நடிகர் என்று யாருமே ஒப்புக்கொள்ளமாட்டர்கள். ஊர்க்காரர்களில் யாரையோதான் நடிக்கவைத்திருக்கிறார்கள் என்று சத்தியம் செய்யும் அளவுக்குக் கச்சிதமான பாத்திரத்தேர்வு. மலைகளில் நடையாய் நடந்து ஒவ்வொருவரிடமும் பாந்தமாகப் பேசும்போதும், தன் ஏலக்காய் மூட்டையைத் தவறவிட்டு மலைமீதிருந்து பாய்ந்தோடி வந்து கதறி அழும்போதும், இறுதிக்காட்சியில் இறுக்க முகத்துடன் நடந்துசெல்லும்போதும் என ரங்கசாமியாகவே வாழ்ந்திருக்கிறார் ஆன்டனி. ரங்கசாமியின் மீது காதலோடு திரியும் காயத்ரி, எப்போதும் தொழிலாளர்களுக்காகவே சிந்திக்கிற சகாவு சாக்கோ, ரங்கசாமிக்காக நெகிழும் கங்காணி, `உன் அப்பனுக்குக் கடமைப்பட்டிருக்கேன்’ என்று விம்மும் அத்தா, கண்ணோரம் நீர் கசிய அமர்ந்திருக்கிற ரங்கசாமியின் அம்மா, இன்னும் இன்னும்... என எல்லோருமே மனதில் நிறைகிறார்கள். அதேபோல் தாத்தாமெட்டில் உள்ள முகமற்ற நாட்டார் தெய்வம், மரத்தின்மீது ரங்கசாமி பறக்கவிடும் வேட்டி, கிராமத்துத் திருமணம் எனப் பண்பாட்டுப் பதிவுகளும் ஈர்க்கின்றன.

விதை விதைத்துவிட்டு வீட்டுக்கு வந்தவர்கள் சாப்பிடும்போது மழைபெய்யத் தொடங்கவும் ரங்கசாமியின் மனைவி காட்டுகிற அந்த மகிழ்ச்சி முகம் ஓர் ஆனந்தக்கவிதை. ரங்கசாமி தூங்கி எழுந்ததும் அப்படியே மழைநீரில் முகத்தைக் கழுவிக்கொள்வது, பத்திரம் பதிய அம்மாவோடு சென்று அங்கே பிரச்னை என்றதும் அம்மா திரும்பிச்செல்கிற காட்சி எனப் படம் முழுக்கக் கவித்துவமான தருணங்கள் ஏராளம்.

இயற்கையின் சத்தங்களுக்கு அதிகம் இடம்கொடுத்து, தேவையான இடங்களில் மட்டும் தன் இசையால் நிரப்பி, மனதைக் கனக்க வைக்கிறது இளையராஜாவின் இசை. ஏலக்காய் மூட்டை சிதறும் இடத்திலும் இறுதிக்காட்சியிலும் ராஜாவின் இசை நம் நெஞ்சாங்கூட்டுக்குள் புகுந்து இதயத்தைப் பிடுங்கிப்போடுகிறது.  நிதானத்தோடு பயணிக்கும் கதையை ஜீவனோடு தொகுத்திருக்கிறது காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு.

ஆன்டனி, காயத்ரி தவிர்த்து மற்ற எல்லோருமே உள்ளூர் நடிகர்கள் என்பதால் சில இடங்களில் அவர்கள் நடிக்கத் தடுமாறுவது தெரிகிறது. ஏலக்காயை அசல் விலைக்கே கொடுக்கும் முதலாளி தொடங்கி கிராமத்தில் உள்ள அத்தனை மனிதர்களும் அவ்வளவு நல்லவர்களாக இருப்பது யதார்த்தம்தானா இயக்குநரே? நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையில் பயணிக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் திடீரென்று வன்முறைப் பாதையில் இறங்கிக் கொலை செய்வதும் உறுத்துகிறது. முதலாளித்துவத்துக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடும் சகாவு, தன் கட்சியைச் சேர்ந்தவர் செய்யும் வர்க்கத் துரோகத்திற்கு எதிராகப் போராடி ஏன் அம்பலப்படுத்த முடியவில்லை?

இப்படி சில கேள்விகள் இருந்தாலும் தமிழின் முக்கியமான சினிமாவாகத் தடம் பதித்து, நம் மனசின் சிகரங்களில் ஏறி அமர்கிறது இந்த ‘மேற்குத்தொடர்ச்சி மலை.’

- விகடன் விமர்சனக் குழு