Published:Updated:

விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ சீக்ரெட்ஸ்!

விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ சீக்ரெட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ சீக்ரெட்ஸ்!

வயது: 75 - தொழில்: நாடக நடிகர்

விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ சீக்ரெட்ஸ்!

வயது: 75 - தொழில்: நாடக நடிகர்

Published:Updated:
விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ சீக்ரெட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ சீக்ரெட்ஸ்!

முதிர்ந்த தோற்றம், அடையாளம் தெரியாத ஒப்பனை, பெரிய மூக்குக் கண்ணாடி என்று  ‘சீதக்காதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோது ஒட்டுமொத்தத் தமிழ் சினிமாவும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது. ‘இது விஜய்சேதுபதிதானா?’ என்று நம்ப முடியாத திகைப்பு, பார்த்தவர்களுக்கெல்லாம் இருந்தது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய்சேதுபதியுடன் கூட்டு சேரும் இயக்குநர் பாலாஜி தரணிதரனைச் சந்தித்தேன்.

விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ சீக்ரெட்ஸ்!

‘’நடுவுல உங்களை ஆளையே காணோம். என்னாச்சு, விஜய்சேதுபதியை வெச்சுப் படம் எடுத்தீங்க. படமும் ஹிட் ஆச்சு.... என்னாச்சு?’’

“ப்பா. செமையாக் கேள்வி கேட்டீங்க. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை முடிச்சதுக்கு அப்புறம் எனக்கு மூணு நாலு மாசம் இடைவெளி தேவைப்பட்டது. ‘சீதக்காதி’ படத்துல வர்ற ஐயா கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகரைத் தேர்வு செய்ய ரொம்பக் கஷ்டப்பட்டேன். அதை அப்படியே ஓரமா வெச்சுட்டு, ‘ஒரு பக்கக் கதை’ படத்தின் ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சேன். சூட்டோடு சூடா படத்தையும் எடுத்து முடிச்சிட்டேன். ஜெயராம் பையன் காளிதாஸும், மேகா ஆகாஷும் இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க. மேகா ஆகாஷுக்கு அதுதான் முதல் படம். படம் ரிலீஸ்ல கொஞ்சம் பிரச்னை இருக்கு. சரி... ‘சீதக்காதி’ ஸ்கிரிப்டை டெவலப் பண்ணலாம்னு அந்த வேலைகளை ஆரம்பிச்சேன்.  மளமளவென வேலைகளை ஆரம்பிச்சுப் படமும் நல்லபடியா முடிஞ்சிடுச்சு.’’

“கதையை எழுதும்போதே விஜய்சேதுபதிதான் இந்தப் படத்துல நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்களா?”

விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ சீக்ரெட்ஸ்!

“இல்லைங்க. இந்தப் படத்துக்கு முதல்ல அமிதாப் பச்சன் சாரைத்தான் மைண்டுல வெச்சிருந்தேன். அவரை அணுகுறது ரொம்பக் கஷ்டமா இருந்தது. சரி, உண்மையிலே 75 வயசு தாத்தாவை வெச்சுப் பண்ணுனா, ரியலா இருக்கும்னு ஃபீல் பண்ணுனேன். ‘எல்லோருக்கும் தெரிஞ்ச முகமா இருந்தா நல்லா இருக்கும்’னு நண்பர்கள் சொன்னாங்க. கெட் அப் மாத்துறதுதான் கமல் சாருக்குக் கை வந்த கலையாச்சேனு அவரை கமிட் பண்ணவும் முயற்சி பண்ணுனேன். ஆனா அதுவும் சரியா அமையலை. சரி, ப்ராஸ்தெடிக் (Prosthetic) மேக் அப்தான் இப்போ நல்லா டெவலப் ஆகியிருச்சேனு விஜய்சேதிபதியையே நடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணுனேன். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ சமயத்துலே ஐயா கதாபாத்திரத்தைப் பத்தி விஜய் சேதுபதிகிட்ட சொல்லியிருந்தேன். ‘நானே பண்றேன்’னு அப்பவே சொன்னார். ஆனாலும் எனக்கு ஒரு சின்னத் தயக்கம் இருந்தது. இந்த அஞ்சு வருஷத்துல அவர் ரொம்பவே வளர்ந்துட்டார். ‘சரி, எதுக்கும் கேட்கலாமே’னு ஐயா கதாபாத்திரத்தைப் பத்தி முழுமையா சொன்னேன். அப்போ இருந்த ஆசை இப்பவும் அவருக்கு இருந்தது. இப்போ சொன்னா ரொம்ப மிகையா இருக்கும். படத்தைப் பார்த்த பிறகு அவரைத் தவிர ஐயாவா வேறு யாரையும் நினைச்சுப் பார்க்க முடியலை.”

“ ‘சீதக்காதி’ என்ன மாதிரியான படம்?”

“ஒரு நாடக நடிகருடைய குடும்பச் சூழல் மற்றும் அவர் நாடகக் குழுவின் உணர்வுகளும் நிகழ்வுகளும்தான் இந்தப் படத்தின் அடிப்படை. கலையைப் பத்தியும் கலைஞனைப் பத்தியும் பேசுற ஒரு நல்ல படைப்பா ‘சீதக்காதி’ படம் இருக்கும். இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா ஆகியோரின் நாடகங்களை ரைட்ஸ் வாங்கிப் பயன்படுத்துறோம்.” 

“ஐந்து வருடங்கள்ல விஜய்சேதுபதிகிட்ட எதுவும் மாற்றங்கள் தெரியுதா?”

“ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் சமயத்துல இருந்த விஜய்சேதுபதி வேற, இப்போ இருக்கிற விஜய்சேதுபதி வேற. நான் வளர்ச்சியில சொல்றேன். ஆனா அவருடைய அணுகுமுறையும் திறமையும் அப்படியேதான் இருக்கு. நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை அப்படியே கொடுத்திடுவார். ஷூட்டிங் வர்றதும் சரி, வந்துட்டுப் பேசுற டயலாக்கும் சரி, டைமிங்ல ரொம்ப கரெக்டா இருப்பார். ரொம்ப நேர்த்தியா எல்லாத்தையும் முடிச்சுக் கொடுத்திடுவார். ‘நீங்க எத்தனை டேக் வேணாலும் போங்க. இத்தனை டேக் போய்ட்டோம்னு தயங்க வேண்டாம். உங்களுக்குத் திருப்தி கிடைக்கும் வரைக்கும் டேக் போகலாம்.’ இதுதான் சேது என்கிட்ட அடிக்கடி சொன்ன விஷயம். ஒரு இயக்குநருக்கு இதைவிட வேறென்ன வேணும்? சுருக்கமா சொல்லணும்னா அவர் இயக்குநருடைய நடிகர்.

விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ சீக்ரெட்ஸ்!

படத்துல விஜய்சேதுபதி 75 வயது நாடக நடிகர். படத்துல அவர் நடிச்சிருக்கார்ங்கிறதைவிட ‘ஐயா’வா வாழ்ந்திருக்கார்னுதான் சொல்லணும். படத்தில் அதிகம் பேசமாட்டார். இதுவரைக்கும் பார்த்த விஜய்சேதுபதிக்கும், இந்தப் படத்துல பார்க்கப்போற விஜய்சேதுபதிக்கும் நிறைய வித்தியாசம் பார்ப்பீங்க. ஐயாவுடைய கெட் அப் போட்டாலே, எங்க கண்ணுக்கு விஜய்சேதுபதி தெரியமாட்டார். ஐயா கதாபாத்திரத்தை முழுமையா வெளிக்கொண்டு வர்ற ஒரு காட்சி வரும். ஒரு மிகப் பெரிய நடிகர், தன்னுடைய நடிப்பை வெளிக்கொண்டு வர்ற மாதிரியான காட்சி அது. மொத்தமா 8 நிமிஷம். எந்த இடத்துலேயுமே கட் இல்லை. அந்தக் காட்சி முடிஞ்சு ‘கட்’னு சொன்னதும் மொத்த யூனிட்டுமே கை தட்டினாங்க. இந்தக் கைதட்டல் தியேட்டரிலும் எதிரொலிக்கும்னு நம்புறேன்.”

“விஜய்சேதுபதியைத் தவிர படத்துல வேற யார் யார் நடிச்சிருக்காங்க?”

“பாரதிராஜா சாரும் பாக்யராஜ் சாரும் படத்துல அவங்களாவே வர்றாங்க. இவங்ககூட ஒர்க் பண்ணுனது ரொம்பப் புதுமையான அனுபவமா இருந்தது. பாக்யராஜ் சார் என்ன மாதிரி சீன்னு முன்னாடியே கேட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி ரெடியாகிட்டுதான் வருவார். போக, ஸ்பாட்ல நிறைய யோசனைகள் சொன்னார். பாரதிராஜா சார்கிட்ட கதையை முன்னாடியே சொல்லிட்டேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர் நடிச்சதைப் பார்த்த எல்லோருக்குமே ரொம்ப பிரமிப்பா இருந்தது. படத்துல மௌலி சாருக்கும், மகேந்திரன் சாருக்கும் முக்கியமான ரோல் இருக்கு. ஒரு கட்டத்துக்கு மேல மகேந்திரன் சார்தான் படத்துடைய கதையைக் கொண்டு போவார். விஜய்சேதுபதியுடைய மனைவியா அர்ச்சனா நடிச்சிருக்காங்க. அவங்களைப் பத்தி சொல்லவே தேவையில்லை, மிகப் பெரிய நடிகை. நிறைய விருதுகள்லாம் வாங்கியிருக்காங்க. ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்ரினு சிலர் கௌரவ வேடங்கள்ல  நடிச்சிருக்காங்க. இவங்களைத் தவிர நிஜ நாடகக் கலைஞர்களும் நடிச்சிருக்காங்க.’’

விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ சீக்ரெட்ஸ்!

“டெக்னிக்கல் விஷயங்கள் படத்துல எப்படி வந்திருக்கு? யார் யார் ஒர்க் பண்ணியிருக்காங்க?”

“கோவிந்த் வசந்த் இந்தப் படத்துக்கு இசையமைச்சிருக்கார். எனக்குக் கிடைச்ச கிஃப்ட்னுதான் இவரைச் சொல்லணும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்குப் பின்னணி இசைமைச்சிருந்தார். ‘ஒருபக்கக் கதை’ படம் வெளில வந்தா அவருடைய திறமை இன்னும் அதிகமா தெரியும்.  ‘96’ படத்துலேயும் இவர் ஒர்க் பண்ணியிருக்கார். நான் காட்சியில சொல்ல நினைக்கிறதை, இசையில ரொம்ப அழகா கடத்திட்டுப் போனார். இன்னும் ரெண்டு பேரைப் பத்தி நான் கண்டிப்பா சொல்லணும். படத்துடைய ஒளிப்பதிவாளர், சரஸ்காந்த். இவர் இல்லேன்னா சீதக்காதி சீதக்காதியா வந்திருக்காது. இவருக்கு இதுதான் முதல் படம். இந்தப் படத்துக்குப் பிறகு கண்டிப்பா பெரிய லெவல்ல பேசப்படுவார். அவருடைய ஆளுமை படம் முழுக்கவே இருக்கும். கோவிந்தராஜ்தான் படத்துடைய எடிட்டர். அவரும் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாவே கொடுத்திருக்கார்.” 

விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ சீக்ரெட்ஸ்!

“படப்பிடிப்பு ஆரம்பிச்சிட்டு வெளிவராத பல தமிழ்ப்படங்கள் லிஸ்ட்ல உங்க படமும் இருக்கே? உண்மையான காரணம்தான் என்ன?”

“இப்போ சினிமாவுடைய வணிகமே மாறிடுச்சு.  நெகட்டிவா பேசுற மாதிரி இருக்கும். ஆனா உண்மை இதுதான். இது தமிழ் சினிமாவுக்கு கோல்டன் டைம்னு சொல்றாங்க. ஆனா எனக்கு அப்படித் தோணலை. அந்தக் காலகட்டத்துல ‘சேது’ மாதிரி ஒரு படம் எடுத்துட்டு, அதை ஒரு சாதாரண தியேட்டர்ல ரிலீஸ் பண்ணுனாலே போதும். ஒரு வாரத்துல மக்கள் மத்தியில பேசப்பட்டு படம் ஓட ஆரம்பிச்சிடும். காரணம், அப்போதெல்லாம் தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கிறவங்க ஜாஸ்தியா இருந்தாங்க. இப்போ ஆன்லைன்லே எல்லாப் படங்களையும் பார்த்து முடிச்சிடுறாங்க. பெரிய ஸ்டாருடைய படங்களை மட்டும்தான் தியேட்டர்ல பார்க்கிறாங்க. 

விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ சீக்ரெட்ஸ்!

ஒரு படம் ரிலீஸ் ஆகி, அது ஸ்லோவா பிக் அப் ஆகி, அப்புறம் நல்லா ஓடும்ங்கிற பேச்சுக்கே இடமில்லாமப்போயிடுச்சு. முன்னாடி எல்லாம் படத்தின் நூறாவது நாளைக் கொண்டாடுவாங்க. ஆனா, இப்போ ஒரு படம் ரெண்டு வாரம் ஓடினாலே அது சூப்பர் ஹிட். இந்த மாதிரியான சூழலில் ஒரு சின்னப் படத்தை எடுத்து, ரிலீஸ் பண்றதுங்கிறது ரொம்பக் கஷ்டமா இருக்கு. ‘அருவி’ மாதிரியான சில படங்கள்தான் கரெக்ட்டான பேனர்ல, சரியான சமயத்துல ரிலீஸ் ஆகுது. பெரிய நட்சத்திரங்களை வெச்சு படம் எடுக்கிறது கஷ்டம். புதுமுகங்களை வெச்சு ஆர்வத்துல எடுத்தாலும், அதை ரிலீஸ் பண்றது ரொம்பக் கஷ்டம். இப்பவெல்லாம் ஸ்டார்ஸுக்குப் படம் பண்ண வேண்டிய சூழல்தான் ஏற்பட்டிருக்கு. அவங்களும், அவங்களுடைய ரசிகர்களுக்காகப் படம் பண்றாங்க. இப்படிப் பல பிரச்னைகள் இருக்கும்போது, இது தமிழ் சினிமாவின் கோல்டன் டைமா எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியலை. ‘ஒரு பக்கக் கதை’ படம் ரிலீஸாகுறது, தயாரிப்பாளர்கள் கையிலதான் இருக்கு. ஏதோ ஒரு வடிவத்துல படம் மக்கள்கிட்ட போய்ச் சேரணும்னு ஆசை இருக்கு. பார்ப்போம்!”

தார்மிக் லீ