Published:Updated:

`பூவே உனக்காக' முதல் `சர்கார்' வரை... விஜய்யின் 26 வருட டைம்லைன்! #26YearsOfVijay

`பூவே உனக்காக' முதல் `சர்கார்' வரை... விஜய்யின் 26 வருட டைம்லைன்! #26YearsOfVijay
`பூவே உனக்காக' முதல் `சர்கார்' வரை... விஜய்யின் 26 வருட டைம்லைன்! #26YearsOfVijay

10 வயதில் குழந்தை நட்சத்திரம், 17 வயதில் கதாநாயகன் என இரண்டு முறை தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், விஜய். என்ட்ரி ஆன ஆரம்பத்தில் அவர் சந்தித்தது என்னவோ விமர்சனங்களும், வசவுகளும்தாம். எந்த ஒரு திரைக்கலைஞனையும் காலம்தான் உருவாக்கும். ஆனால், அதையெல்லாம் தாண்டி மீண்டு வந்தவர், விஜய்.

தனது திரையுலகப் பயணத்தில், 26வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய்க்கு வாழ்த்துகள். 26 வருடங்களாக விஜய்யின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்த 26 படங்களின் தொகுப்புதான் இக்கட்டுரை.

பூவே உனக்காக:
 

நடிகர் விஜய் அவர்களின் திரைப் பயணத்தில் மாபெரும் வெற்றியடைந்த முதல் படம், `பூவே உனக்காக'. காதல் தோல்வியில் இளைஞர்கள் மரணித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், காதல் தோல்வியிலும்கூட  மகிழ்ச்சியைக்  காணலாம் என்று உணர்த்தியது இப்படம். இந்தப் படத்திலிருந்துதான், இவரது மனைவி சங்கீதா இவருக்கு மிகப் பெரிய ரசிகையானார். அப்போது விஜய்யைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே லண்டனிலிருந்து சென்னைக்குக் கிளம்பி வந்தார், சங்கீதா. அதே போல் அவரது அம்மா ஷோபாவுக்கு இந்தப் படம் ரொம்பப் பிரியமாம். அது மட்டுமன்றி படம் வெளிவந்த சமயத்தில் 20 முறைக்கும் மேல் பார்த்திருக்கிறார்.

லவ் டுடே :
 

`பூவே உனக்காக' படம் தந்த வெற்றிக்குப் பின் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த நான்கு படங்களுமே தோல்வியைத் தழுவின. அந்தத் தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு ஒரு திருப்பு முனையாக அமைந்த படம், `லவ் டுடே'. அன்றைய காலகட்டத்தில், காதலால் இளைஞர்களின் வாழ்வு  எப்படியெல்லாம் தடம் மாறுகிறது என்பதை வெட்ட வெளிச்சமாகப் பேசியதால், இளைஞர்களின் ஃபேவரைட் படமானது. `ரசிகன்', `தேவா' படங்களின் மூலம் கிராமத்தில் தன்னை நடிகராக நிலை நிறுத்திக்கொண்டார், விஜய். அதே போல் நகரங்களின் பக்கம் விஜய்யின் அட்ரெஸ்ஸை தேட வைத்த படம், `லவ் டு டே'.   

ஒன்ஸ்மோர் :
 

தமிழ் சினிமாவின் எவர்கீரின் ஜோடிகளுள் ஒன்றான சிவாஜி, சரோஜாதேவியுடன் `ஒன்ஸ்மோர்' இல் கைகோத்தார் விஜய். சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த `இருவர் உள்ளம்' திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை சில இடங்களில் சிவாஜியின் ஃப்ளாஷ்பேக்காக `ஒன்ஸ்மோர்' இல் பயன்படுத்தியிருப்பார்கள். விஜய் ரசிகர்களின் ஃபேவைரைட்டான விஜய் - சிம்ரன் காம்போ ``ஒன்ஸ்மோர்" படத்திலிருந்துதான் ஆரம்பமானது. ``பார்க்கச் சின்னப் பையனா பவ்யமாதான் இருக்கான். ஆனா, செட்டுல வந்தா புது அவதாரம் எடுத்து வெளுத்துக் கட்டுறான். இப்போ இருக்குற இளம் நடிகர்கள்ல என்னை வியப்பில் ஆழ்த்திய பையன் விஜய்" என `ஒன்ஸ்மோர்' படப்படிப்பின் போது தனக்கு நெருக்கமானவர்களிடம் விஜய்யைப் பற்றி இப்படிச் சொல்லி ஆச்சர்யப்பட்டாராம் சிவாஜி. 

நேருக்கு நேர் :
 

தற்போது தமிழ்த் திரையுலகத்தில் முக்கிய இடத்திலிருக்கும் விஜய்யும் சூர்யாவும் சேர்ந்து நடித்த படம், `நேருக்கு நேர்'. சிம்ரன், தமிழில் நடிக்க ஒப்புக்கொண்ட முதல் திரைப்படம் இதுதான். ஆனால், அதற்கு முன்பே `வி.ஐ.பி', `ஒன்ஸ்மோர்' ஆகிய படங்கள் வெளிவந்துவிட்டன. `நேருக்கு நேர்' படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் அஜித்தான் நடித்தார். சில நாள்கள் ஷூட்டிங்கும் நடந்தது. சில கால்ஷீட் பிரச்னைகளால் அப்போது அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார், அஜித். அதேசமயம், `கில்லி' திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த ஜெனிபரும் இப்படத்தில் நடித்திருக்கிறார். 

காதலுக்கு மரியாதை :

வசூல் ரீதியாக விஜய்க்கு மாபெரும் ஹிட் கொடுத்த படம், `காதலுக்கு மரியாதை'. படத்தின் பட்ஜெட் இரண்டு கோடி, அள்ளிக் குவித்தது, 15 கோடி. `காதலுக்கு மரியாதை' படத்தைப் பார்த்து விட்டு, `உன்னோட அப்பான்னு சொல்லிக்கிறதுல நான் ரொம்பப் பெருமைப்படறேன்டா' என எஸ்.ஏ.சி நெகிழ்ந்திருக்கிறார். படம் தந்த வெற்றி, கிடைத்த குடும்ப ரசிகர்கள் என அனைத்தையும் தாண்டி இந்தப் படத்தின் மூலம் அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாக அப்பாவுடைய பாராட்டை எண்ணி மகிழ்ந்தார் விஜய்.

துள்ளாத மனமும் துள்ளும் :

தமிழ் சினிமாவின் காதல் பட வரிசையில் `துள்ளாத மனமும் துள்ளும்' படத்துக்கு எப்போதுமே இடமுண்டு. இந்தப் படத்துக்குப் பிறகுதான் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய ஓப்பனிங் உருவானது. தன்னை நிலைத்த நடிகனாக முன்நிறுத்திக்கொடுத்ததும் இந்தப் படம்தான்.  தமிழில் இந்தப் படத்துக்குக் கிடைத்த அதீத வரவேற்பால், ஐந்து மொழிகளில் ரீமேக் ஆனது. அதேசமயம், கேரளாவில் நடிகர் விஜய்க்கு தனி மார்க்கெட் ஏற்படவும், மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் அமையவும் அடித்தளமிட்டுக்கொடுத்தது, `துள்ளாத மனமும் துள்ளும்'. 

குஷி:

காதல், ஈகோ, என இளசுகளின் மனதை அப்படியே படம்பிடித்துக் காட்டிய படமாக வெளியானது, `குஷி’. ஒரு பாடல் கொடுக்கும் பரவசத்துக்காக, 140 அடிக்கு மேலிருந்து `பங்கி ஜம்ப்' செய்து சாதனை செய்தார். 'குஷி' படத்துக்கு முன்பு தொடர்ந்து நான்கு தோல்விப் படங்கள் தந்து ஒரு இக்கட்டான சூழ்நிலையில் விஜய் இருந்தபோது, வெற்றியைக் கொடுத்த படம் 'குஷி'.  

ப்ரியமானவளே :
 

தன்னுடைய வழக்கமான பாணியிலிருந்து வேறுபட்டு நடித்த முதல் படம் இது. உள்ளுர்  கலாசாரம் தெரியாமல் வெளிநாட்டில் வளர்ந்த இளைஞனாக, அதகளம் பண்ணியிருப்பார், விஜய். திருமணத்துக்குப் புதிதாக ஒப்பந்தம் என்கிற கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு வித்தியாசமான படைப்பை வழங்கினார், இயக்குநர். பொதுவாக விஜய் எந்தப் படத்தில் கமிட் ஆனாலும், அவரது மனைவி சங்கீதாவிடம் கதை சொல்லி அவருடைய கருத்தைக் கேட்பார். இந்தக் கதையைக் கேட்டவுடன் அவரது மனைவி சொன்ன முதல் வார்த்தை, `ரொம்ப நல்லாருக்கு பண்ணுங்க'. யோசிக்காமல் அவர் ஓகே சொன்ன எல்லாப் படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்தானாம். அந்த வரிசையில் இந்தப் படமும் இடம்பெற்றது. 

ப்ரண்ட்ஸ் :
 

`நேருக்கு நேர்' படத்துக்குப் பிறகு தனது கல்லூரி நண்பர் சூர்யாவுடன் `ப்ரண்ட்ஸ்' படத்தின் மூலம் மீண்டும் இணைந்தார், விஜய். காமெடி, காதல், ரொமான்ஸ் என மூன்று ஜானரில் நகர்ந்த இப்படத்தின் கதை பல விதத்தில் பலரையும் கட்டிப்போட்டது. இந்தப் படத்தில் விஜய்க்கு  இணையாக நடித்து ரகளை செய்தவர், வடிவேலு. ஒட்டுமொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்தி இருப்பார் மனிதர். வடிவேலுவுடன் அதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் நான்காவது முறையாக இணைந்த    ப்ரண்ட்ஸ் திரைப்படம் தான் பட்டிதொட்டியெங்கும்  கொண்டு சேர்த்தது இவர்களின் காம்போ. 

பத்ரி:
 

காஸ்ட்யூம் வழியில் பலரையும் தனக்கு ரசிகனாக்கிய படம், `பத்ரி'. ஆக்‌ஷன், சென்டிமென்ட், காமெடி, லவ், மோட்டிவேஷன் என எல்லா உணர்வுகளையும் கலந்து ஒரு புது ரக நடிப்பை வெளிப்படுத்தி வெளுத்து வாங்கியிருப்பார்  விஜய். தேர்வெழுதப் போகும்போது பிட்டுகளுக்கு ஒரு பிட்டு என ரணகள என்ட்ரியோடுதான் அறிமுகமாவார் விஜய். பாக்ஸிங்கிறாகப் பயிற்சி எடுக்கும்போது இவர் செய்த பயிற்சி அனைத்தும் டூப் போடாமல் இவரே நடித்தது. அந்தப் பாட்டை இப்போது கேட்டால் கூட நரம்புகள் முறுக்கேறும். 

ஷாஜகான் :

நண்பனின் காதலியை நண்பனோடு சேர்த்து வைக்கும் கதாநாயகனின் கதைதான், `ஷாஜகான்'. விஜய்யின் ஆரம்பகாலத்தில், பல புதுமுக இயக்குநர்களுக்கு  வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த வகையில், இந்தப் படத்துக்கும் ரவி அப்புலு என்னும் புதுமுக இயக்குநரை நம்பியே களம் இறங்கினார், விஜய். தமிழ் சினிமாவில் காதல் படங்கள் அதிகப்படியாக எடுக்கப்பட்ட காலகட்டத்தில்தான் விஜய்க்குத் தொடர்ந்து அமைந்த எல்லா வெற்றிப் படங்களும் காதல் படங்களாகவே இருந்தன. ஒரு தலைக் காதலால் வரக்கூடிய அழகிய நினைவுகளையும் அதனுடைய வலிகளையும் சிறப்பாகப் பேசியதால் இளைஞர்கள் மனதிலும் காதலர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துக்கொண்டது, `ஷாஜகான்'. 

தமிழன்:

தொடர்ந்து வந்த வெற்றிகள் அசைக்க முடியாத நட்சத்திரமாக விஜய்யை உயர்த்திக் கொண்டிருந்தபோது, வெளிவந்த படம்தான் `தமிழன்'. சமூக அக்கறையைப் பற்றிப் பேசிய இப்படம், அளவான வெற்றியை மட்டுமே ருசித்தது. இவர் இன்னொரு ஃபீல் குட் காதல் படத்தில் விஜய் நடித்துவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், அதை தவிர்த்துவிட்டு `தமிழன்' போன்ற கதைகளில் நடிக்க முடிவெடுத்ததே பெரிய விஷயம். 

யூத்:

2002-ல் வெளியானது, `யூத்'. வழக்கம்போல தனக்குப் பழக்கப்பட்ட ஏரியா என்பதால் ரொமான்ஸ் காட்சிகளை `ஜஸ்ட் லைக் தட்' என டீல் செய்திருப்பார், விஜய். `புதிய கீதை' படத்துக்கு முன்னர் தத்துவ வசனங்களைத் தூவிய படம் இதுதான். விஜய் இதுவரை பன்னிரண்டு படங்களை ரீமேக் செய்திருக்கிறார். இவரின் ரீமேக் படங்களின் ஹிட் வரிசையில் இந்தப் படமும் வழக்கம்போல் அசால்டு செய்தது. படத்தில் சிம்ரனுடைய குத்தாட்டம் ஆடிய `ஆள்தோட்ட பூபதி' பாடல் ட்ரெண்ட் செட்டிங் ஆனது.

பகவதி :
 

இயக்குநர் வெங்கடேஷுடன் மூன்றாவது முறையாகக் கூட்டணி சேர்ந்த படம், `பகவதி'. விஜய்யின் நடிப்பில் ஒரு இறுக்கத்தைக் கொண்டு வந்த படம் இது. அப்போது வரை காதல் கதையில் நடித்துக்கொண்டிருந்த விஜய், இந்த ஆக்ஷன் படத்தில் நடிக்கவே ஆரம்பத்தில் தயங்கினார். விஜய்யை மாஸ், மசாலா என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்த படம், `பகவதி'. `எனக்காக ரெண்டு கமர்ஷியல் படம் பண்ணு, பிடிக்கலைன்னா விட்டுடு' என எஸ்.ஏ.சி வற்புறுத்திய பிறகுதான் பகவதியில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய்.

திருமலை :
 

விஜய்யை முழு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய படம், `திருமலை'. அறிமுக இயக்குநர் ரமணா இயக்கத்தில் நடித்த இப்படம் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. `வாழ்க்கை ஒரு வட்டம்டா, இங்க ஜெயிக்கறவன் தோப்பான், தோக்கறவன் ஜெயிப்பான்' என விஜய் பேசிய பன்ச் டயலாக் செம வைரலானது. தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் புத்துணர்வு கொடுத்தது.

கில்லி :
 

விஜய்யின் திரைப் பயணத்தில் சொல்லிவைத்து கில்லியாடியது இப்படம். இன்ட்ரோ காட்சியிலிருந்து கையைச் சுற்றி க்ளைமாஸில் பிரகாஷ்ராஜை அடிக்கும் காட்சி வரை அத்தனையும் அதகளம். கண் மூடி கண் திறப்பதற்குள் இன்டர்வல் வரும் திரைக்கதை, விஜய்யின் அதிரிபுதிரி ஆக்‌ஷன், மாஸ், மசாலா, பாடல்கள் என அத்தனையும் படத்தின் சிறப்பம்சம். அனைத்து ரக ஆடியன்ஸையும் படம் வெகுவாகக் கவர்ந்தது. த்ரிஷாவுடன் சேர்ந்து ஆடிய, 'அப்படிப்போடு' பாடலுக்கு ஆடாத கால்களே இருக்க முடியாது. 

சச்சின் :
 

`சச்சின்' படத்தில் எந்த வித ஆர்ப்பாட்டமுமின்றி 'ஜாலி'யை மட்டுமே அணுகி நடித்த படம். விஜய்யின் அலட்டல் இல்லாத நடிப்பு, ஜெனிலியாவின் துறுதுறு நடிப்பு, வடிவேலுவின் காமெடி கலாட்டா என படம் ஊட்டிக்கே நம்மையும் அழைத்துச் சென்றது. பொதுவாக இயக்குநரிடம் அடுத்த படத்துக்கான கதையைக் கேட்கும் விஜய், அதை ஓகே செய்ய குறைந்தது ஒரு வாரமாவது எடுத்துக்கொள்வார். ஆனால், `சச்சின்' படக் கதையை  கேட்ட  20வது   நிமிடத்தில் கமிட் செய்துவிட்டார்.  

திருப்பாச்சி :

சிவாஜிக்கு `பாசமலர்', ரஜினிக்கு `முள்ளும் மலரும்' படங்களைப் போல, விஜய்க்கு ஒரு `திருப்பாச்சி' என்று சொல்லலாம். `கில்லி' படத்தில் எந்நேரமும் தங்கச்சியோடு ஒரண்டை இழுத்துக்கொண்டிருக்கும் விஜய், இதில் அப்படியே நேரெதிராக தங்கச்சி மல்லிகாவை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வார். விஜய்க்கு, இந்தக் கதாபாத்திரமும் நடிப்பும் மிக எளிமையாக அமைந்துவிட்டது.

போக்கிரி :
 

ரீலுக்கு ரீல் சண்டைகள், காட்சிக்குக் காட்சி கொலைகள் என விஜய் `போக்கிரி'யாக அவதரித்த படம். வழக்கம்போல் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. அது கொஞ்சமும் பிசிறு தட்டாமல் அதே பல்ஸோடு இங்கும் ஹிட்டானது. `போக்கிரி’ படத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்ட மேடையில், ராகவா லாரன்ஸ், `விஜய் பிரமாதமான டான்ஸர்னு எல்லோருக்கும் தெரியும். மேடைகளில் பாடியிருக்கார். ஆனா, அவர் இது வரை எந்த விழா மேடையிலும் ஆடியதில்லை. யாருக்காக இல்லேனாலும், இந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக அவர் ஆடணும்' என்ற வேண்டுகோளை வைத்தார். மேடையேறிய விஜய், அந்தக் குழந்தைகளுக்காக அதிரடியான  ஆட்டத்தைப் போட்டார். லாரன்ஸ் சொன்னது போல விஜய் ஆடிய முதல் விழா மேடை அதுதான்!

காவலன் :
 

`சுறா' படம் கொடுத்த தோல்விக்குப் பிறகு எந்தவித ஆரவாரமுமின்றி மெலோ ட்ராமா ஜானரில் வெளியான படம், `காவலன்'. `மென்மையான காதல் கதையெல்லாம் இனிமே விஜய்க்குச் சுத்தமாகச் சரிப்படாது’ என்ற விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டது. மிகவும் எதிர்பார்த்த ஐம்பதாவது படம் உட்பட, தொடர்ந்து ஆறு  தோல்விப்படங்கள், அரசியல் கட்சி தொடங்குவது குறித்த தெளிவின்மை எனத் தனது கேரியரில் விஜய் சற்று சறுக்கிய நேரத்தில், அவருக்கு மிகப் பெரிய பாதுகாப்பைக் கொடுத்தது, காவலனின் வெற்றி. 

வேலாயுதம் :

`Assasins creed''ன் கதாபாத்திரத்தின் உடையை காப்பியடித்து `வேலாயுதம்' எனும் ஹீரோவை உருவாக்கியிருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு விஜய் சற்று வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து நடிப்பார். அப்படியான ஒரு படம்தான் இது. சிவாஜி, சாவித்திரி நடித்த `பாசமலர்' படத்தினை டூரிங் டாக்கீஸில் மக்கள் பார்ப்பது போன்ற காட்சி படமான போது, படத்தில் நடித்த அனைவரும் பாசமலரில் மூழ்கி விடுவார்களாம். இதனால், ஒவ்வொரு முறையும் லேட்டாகத்தான் காட்சிக்கு `கட்' சொன்னாராம், ராஜா. 

நண்பன் :
 

பன்ச் வசனங்கள், ஸ்டன்ட் காட்சிகள் என ஏதுமின்றி தனது வழக்கமான பாணியை விட்டுவிட்டு இந்தியில் வெளியான `3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக்கில் நடித்தார், விஜய். தனது இமேஜை மொத்தமாகப் புறம் தள்ளிவிட்டு, பஞ்சவன் பாரிவேந்தனாக அறிமுகமாகி, கொசக்ஸி பசப்புகழாக நடித்து பட்டையைக் கிளப்பியிருப்பார். இந்தியின் ஒரிஜனல் வெர்ஷனில் இருக்கும் திகட்டாத தன்மையைத் தமிழுக்கு வழங்கியதில் இயக்குநர் ஷங்கருக்கும் பெரும் பங்குண்டு. `நண்பன்' படம் குறித்து விஜய் பேசும்போது, `பொதுவாக என்னுடைய படத்தில் பன்ச் டயலாக்குகளை திணிக்க விரும்ப மாட்டேன். அதேசமயம் சீன்களுக்குத் தேவைப்பட்டால் மட்டுமே பேசுவேன். என்னைத் திரையில் வித்தியாசமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை `நண்பன்' படம் மூலமாகத்தான் நிறைவேறியது' என்று கூறினார்.

துப்பாக்கி :
 

பல பிரச்னைகளுக்குப் பின் வெடித்த இந்தத் `துப்பாக்கி', ரஜினியின் `எந்திரன்' படத்துக்குப் பின் `நூறு கோடி கிளப்'பில் இணைந்தது. இந்தப் படத்தை தனது வீட்டு தியேட்டரில் இரு முறை பார்த்த ரஜினி, உடனடியாக விஜய்க்கும், ஏ.ஆர். முருகதாஸ்க்கும் போன் செய்து படத்தைப் பற்றிச் சொல்லிச் சிலாகித்துள்ளார். மேலும், `துப்பாக்கி' படத்தின் இருபதாவது நாளன்றுதான், தனது திரையுலகில் இருபதாம் வருடத்தை ஆரம்பித்தார் நடிகர் விஜய். 

கத்தி:

சில ஊடகங்களின் உண்மை முகம், சில பிரபலமான வியாபாரிகளின் பண மோசடி, விவசாயிகளின் இன்னல்கள், கார்ப்பரேட் கம்பனிகளின் அசுர அரசியல்... இப்படிப் பல்வேறு பிரச்னைகளின் முகத்திரையைக் கிழித்து பதம் பார்த்தது, `கத்தி'. விஜய் போன்ற ஒரு பெரிய  `மாஸ்’ ஹீரோவைக் கொண்டு `கமர்ஷியல்’ கலாட்டாக்களுடன் நிதர்சன அரசியலைப் பேசியிருப்பார் இயக்குநர், முருகதாஸ். சிரஞ்சீவி, தனது ரீ-என்ட்ரிக்கு இந்தப் படத்தைத்தான் தேர்ந்தெடுத்தார். தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ரீமேக் அதிகம் செய்கிறார் என்று விஜய் மீது வைத்த குற்றச்சாட்டுக்குத் தகுந்த பதிலடியாக இது அமைந்தது.

தெறி:
 

வழக்கமான பழிவாங்கல் கதைதான். அதைக் கொடுத்த விதத்திலும் சரி, விஜய் என்னும் மாஸ் பிம்பத்தைச் சரியாகப் பயன்படுத்திய விதத்திலும் சரி, திரையரங்குகளில் தெறித்தது இந்த `தெறி'. ஒரு  கமர்ஷியல் ஆக்ஷ்ன் படத்தில் குழந்தைகளைப்  பொறுப்புஉணர்வுடன் வளர்க்க வேண்டும் என்னும் அழகிய கருத்தைப் பதிவு செய்தது படத்தின் மற்றொரு சிறப்பம்சம். அந்த வருடத் தமிழ்ப் புத்தாண்டில் பெரிய போட்டிகள் இல்லாததாலும், கதையும் கலர்ஃபுல்லாகப் பயணித்ததாலும் நூறு கோடி கிளப்பில் இணைந்து `தெறி'த்தது. 

மெர்சல் :
 

விஜய் திரைப்பயணத்திலேயே அதிகச் செலவில் எடுக்கப்பட்ட படம், `மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் நூறாவது படம், வடிவேலுவின் ரீஎன்ட்ரீ என  இவை அனைத்தையும் தாண்டி முதன்முறையாக மூன்று வேடங்களில் விஜய் நடித்த படம் இது. இதையெல்லாம் தாண்டி, எச்.ராஜா கொளுத்திய திரியால் பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்தது. எப்போதுமே டப்பிங் முடிந்த பிறகுதான் படத்தின் எந்தக் காட்சியையும் பார்ப்பார், விஜய். ஆனால், மெர்சல் படத்தின் சண்டை உள்ளிட்ட சில காட்சிகளை எடிட்டிங் முடிவதற்கு முன்னே பார்ப்பதில் ஆர்வம் காட்டினார். 

சர்கார் :
 

அரசியல் கனவில் வலம் வரும் விஜய்க்கு முக்கியமான படமாக அமைந்தது `சர்கார்'. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, படம் முழுக்க முழுக்க விஜய்யின் `சர்கார்'தான். விஜய்யின் அரசியல் வருகைக்கு நடைபாதை அமைத்துக் கொடுக்கும் வகையில் திரைக்கதையை அமைத்துக்கொடுத்திருந்தார், ஏ.ஆர்.முருகதாஸ். பல தடைகளுடன் சர்ச்சைகளுடன் வெளியாகிய `சர்கார்' பாக்ஸ் ஆபீஸை நொறுக்கவும் தவறவில்லை. 

அனிதாவாக இருந்தாலும் சரி, ஜல்லிக்கட்டு அரசியலாக இருந்தாலும் சரி... மக்களின் பிரச்னைகளில் சாதாரண மனிதராகப் பங்கெடுத்துக்கொள்கிறார், விஜய். ஆனால், `இனிமேல் எனது படங்களில் சிகரெட் பிடிக்க மாட்டேன்!' என்று கொடுத்த வாக்குறுதியை மட்டும் விஜய் மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அதை மட்டும் கொஞ்சம் சரி செஞ்சுக்கங்கணா! ஏன்னா, படங்களில் மட்டும் கிடையாது, பல இலட்சம் குழந்தைகளுக்கு நிஜத்திலும் நீங்கதான் ஹீரோதான்!

அடுத்த கட்டுரைக்கு