Published:Updated:

`` `அஜித் எந்திரிச்சு நடக்குறதே கஷ்டம்'ன்னாங்க... ஆனா!?’’ - ராஜீவ் மேனன்

`` `அஜித் எந்திரிச்சு நடக்குறதே கஷ்டம்'ன்னாங்க... ஆனா!?’’ - ராஜீவ் மேனன்
`` `அஜித் எந்திரிச்சு நடக்குறதே கஷ்டம்'ன்னாங்க... ஆனா!?’’ - ராஜீவ் மேனன்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் `சர்வம் தாள மயம்’ படத்தில் சிங்கிள் ட்ராக் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது. டிசம்பர் 28 ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் பிஸியாக இருந்த இயக்குநர் ராஜீவ் மேனன், நம்மிடம் பேசியதிலிருந்து...

`சர்வம் தாள மயம்’ படத்தோட ஸ்கிரிப்ட்டை எழுதியதிலும் அதைப் படமாக்கியதிலும் என்னென்ன சிரமங்கள் இருந்துச்சு..?

``பீட்டர் பல கஷ்டங்களைக் கடந்துதான் அவனோட குருகிட்ட சேருவான். அந்த கஷ்டங்களையும் குடும்பச் சூழலையும்; மக்களை சேர்க்கிறதுக்குத்தான் இசை, பிரிக்கிறதுக்கு இல்லை என்கிற நிஜத்தையும் ராவான டாக்குமென்ட்ரியா எடுக்கலாம். ஆனால், அதைப் படமா எடுக்கிறது சிரமம்; விஷூவலாக்குவதில் சிரமங்களும் இருக்கு. இந்தப் படத்தில் ஒரு பையனின் இசை கத்துக்கிற ட்ராவல் மட்டுமல்லாமல், இசைக்கலைஞர்கள் ஃபேமஸாகுற அதே சமயம், இசைக்கருவிகளைச் செய்றவங்க வறுமையில் வாடுவதையும் சொல்ல வேண்டியது இருந்தது. ஒரு இசை கலைஞரைக் கொண்டாடுற அளவுக்கு அந்த வாத்தியத்தைச் செய்யிறவங்களையும் கொண்டாடணும். மேக்கர்ஸ் இருந்தால்தான் ப்ளேயர்ஸ் உருவாக முடியும். ஓர் இசைக்கருவி வாசிக்கிறவங்களுக்குப் புகழையும், கேட்கிறவங்களுக்குச் சந்தோஷத்தையும், செய்யிறவங்களுக்கு வறுமையையும் கொடுக்குது. இந்த விஷயத்தையும் ஸ்கிரிப்டுக்குள் கொண்டு வந்தேன். 

எனக்கு இந்தப் படத்தை லைவ் ரெக்கார்டிங்ல எடுக்கும்னு ஆசை வந்துச்சு; அந்த ஆசை எனக்கு அதிகச் சிரமங்களையும் கொடுத்துச்சு. லைவ் ரெக்கார்டிங்கில் எடுக்கும் போது மிருதங்கம் வாசிக்கிற மாதிரியோ, பாட்டுப் பாடுற மாதிரியோ நடிக்க முடியாது. அதை ரியலாகவே நல்லா பண்ணத் தெரிஞ்சவங்களை வெச்சுதான் படம் எடுக்க முடியும். சங்கீதம் தெரியாத நடிகர்களையோ, இல்ல சங்கீதம் தெரிந்த, நடிகர்கள் அல்லாதவர்களையோ நடிக்க வைக்க முடியாது. அதனால் இசை தெரிந்த நடிகர்கள் - நடிகைகளை மட்டுமே தேர்ந்தெடுக்க சில சிரமங்கள் இருந்துச்சு.’’

ஏன் தொடர்ந்து படங்கள் இயக்குவதில்லை..?

`` `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’னு நான் இதுக்கு முன்னாடி பண்ணுன ரெண்டு படமும் ப்ளான் பண்ணி நடந்தது இல்லை. ஏவிஎம் கம்பெனியோடு 50 வது வருஷத்தில் அவங்க பிரபுதேவாவை வெச்சுப் படம் பண்ற பிளான்ல இருந்தாங்க. அந்தப் படத்துக்கு `ரஹ்மானை மியூசிக் பண்ண வைக்கணும்; அவர்கிட்ட கேட்டுச் சொல்லுங்க’னு என்கிட்ட கேட்டாங்க. அதுக்கு ரஹ்மான், `நான் ஆல்ரெடி பிரபுதேவாக்கு மூணு படம் வொர்க் பண்ணிட்டேன். இதுக்கு மேல அவர் படத்துக்கு வேற எந்த மாதிரி மியூசிக் பண்றதுன்னு எனக்குத் தெரியலை. நான் பண்ணலை’னு சொன்னார். `அதை அவங்ககிட்டயே சொல்லுங்க’னு சொல்லிட்டேன். அவர் அங்கப்போய் என்கிட்டச் சொன்னதைச் சொல்லிட்டு, `ஸ்கிரிப்ட் வித்தியாசமா இருந்தா; எனக்கு வசதியான ஒரு இயக்குநரா இருந்தா பண்ணலாம்’னு சொல்லியிருக்கார். `யாரை வெச்சுப் பண்ணலாம்’னு அவங்க கேட்டதுக்கு, `ராஜீவ் பண்ணுனா நான் பண்றேன்’னு சொல்லியிருக்கார். அப்புறம் எனக்கு கால் பண்ணி, `நீ என்னயா மாட்டிவிடப் பார்த்தா... நான் உன்னை மாட்டி விட்டுனேன். நீ சமாளிச்சுக்கோ’னு போயிட்டார்.  அப்புறம் ஏவிஎம்ல இருந்து என்கிட்ட ஏதாவது கதை இருக்கானு கேட்டாங்க. அவங்க கேட்டதுக்கு அப்பறம் நான் எழுதி, இயக்கியப் படம்தான் `மின்சார கனவு’. 

`கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தோட கதை, நானும் மணிரத்னமும் வாக்கிங் போகும்போது பேசிக்கிட்டது. `என் அண்ணனுக்கு கலை மேல அதிக ஆர்வம்; ஆனா அவர் அதை எதுவும் பண்ணாம அரசாங்க வேலைக்குப் போயிட்டார். எனக்கு சின்ன வயசுல கலை மேல அதிக ஆர்வம் இருந்தது இல்ல. ஆனால், நான் இன்னைக்குக் கலைத்துறையில இருக்கேன்’னு மணிரத்னம்கிட்ட சொல்லும் போது, `இதையே நீ படமா எடுக்கலாமே’னு சொன்னார். அண்ணன் – தம்பியை அக்கா – தங்கச்சியா மாத்துனேன். அந்த ரோலுக்கு தபு – ஐஸ்வர்யா ராய் நடிக்க கமிட்டானாங்க; மம்மூட்டி படத்துக்குள்ள வந்தார். அஜித்கிட்ட கதைச் சொல்லலாம்னு நினைக்கும் போது அவருக்கு ஒரு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. எல்லாரும், `அவர் எந்திச்சு நடக்குறதே கஷ்டம்; எப்படி நடிக்க வருவார்’னு சொன்னாங்க. நான் அவரை ஹாஸ்பிட்டலில் பார்த்து கதைச் சொன்னேன். அவரும், `நான் கண்டிப்பா நடிக்கிறேன்’னு சொன்னார். அதே மாதிரி பல சிரமங்கள் இருந்தாலும், வந்து நடிச்சுக் கொடுத்தார். இப்படி டக் டக்குனு அமைஞ்சதுதான் என்னோட ரெண்டாவது படம்.’’ 

மீடூ, கதை திருட்டு மற்றும் தியேட்டர் கிடைக்கிறதுல சிக்கல்னு இப்போ தமிழ் சினிமாவில இருக்கிற பிரச்னையை எப்படிப் பார்க்குறீங்க..?

``ஒரு பிரச்னைனா அதில் சம்பந்தப்பட்டிருக்கும் ரெண்டு தரப்பினரோட வாதமும் கேட்கப்படணும். மீடூ, கதை திருட்டுப் பிரச்னையில அது நடந்திருக்கு. குற்றம் சாட்டப்பட்டவர் பெரிய ஆளாக இருந்தாலும், அவங்க மேல குற்றம் சொன்னவர்களின் வாதங்கள் கேட்கப்பட்டுச்சு. இந்த ரெண்டு பிரச்னைகளுக்கும் ஒரு நிரந்தரமான முடிவு கிடைக்கணும் என்பதுதான் என் ஆசை. ஒரு படத்துக்கு தியேட்டர் கிடைக்கிறது பெரிய பிரச்னையா இருக்கு. முன்னாடியெல்லாம் சென்னை அண்ணா சாலையில் நிறைய தியேட்டர்கள் இருந்துச்சு. அப்போ இருந்த மக்கள் தொகையை இப்போ 5 மடங்கு அதிகமாகியிருக்கு. ஆனால், தியேட்டர்களின் எண்ணிக்கை குறைஞ்சிருக்கு. `திருட்டு விசிடி வந்திடுச்சு; நெட்ல படம் பார்க்குறாங்க’னு சொல்லி தியேட்டர் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது. `பரியேறும் பெருமாள்’, `96’னு நல்ல படங்கள் வந்தா மக்கள் கூட்டம் கூட்டமா தியேட்டருக்கு வந்துதான் படம் பார்க்கிறாங்க. படைப்பாளிகள்கிட்ட இருந்து தரமான படைப்புகள் வரும்போது மக்கள் தியேட்டர் பக்கம் அதிகமா வருவாங்க. அப்படிப்பட்ட படைப்புகள் அதிகம் வரணும்.’’

அடுத்த கட்டுரைக்கு