Published:Updated:

``சின்ன போர்ஷன்தான்... ஆனா, அது ரஜினிக்கான வாய்ஸ்!" - எஸ்.பி.பி #MaranaMass

``சின்ன போர்ஷன்தான்... ஆனா, அது ரஜினிக்கான வாய்ஸ்!" - எஸ்.பி.பி #MaranaMass
``சின்ன போர்ஷன்தான்... ஆனா, அது ரஜினிக்கான வாய்ஸ்!" - எஸ்.பி.பி #MaranaMass

`பேட்ட' படத்தின் சிங்கிள் டிராக் நேற்று வெளியானது. இதில் ரஜினிக்குப் பின்னணி பாடியிருக்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அந்தப் பாடல் குறித்துப் பேசியிருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம், `பேட்ட'. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் சிங்கிள் டிராக் நேற்று இணையத்தில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. `பாக்கத்தானே போற... இந்தக் காளியோட ஆட்டத்த'னு ரஜினியோட என்ட்ரி வெர்ஷனை இந்தப் பாடலில் கேட்டு அவரின் ரசிகர்கள் பலரும் துள்ளிக் குதித்து வருகின்றனர். சில குறிப்பிட்ட காலம் தமிழ் சினிமா பக்கம் தலை காட்டாத எஸ்பிபி, ரஜினிக்காக இந்தப் பாடலில் அவருக்கான போர்ஷனைப் பாடிக் கொடுத்திருக்கிறார். இந்த அனுபவம் குறித்து எஸ்.பி.பியிடம் பேசினேன். 

``இந்தப் பாட்டுல என்னோட போர்ஷன் குறைவுதான். மொத்தமே ஒரு நிமிஷத்துக்குள்ளதான் பாடியிருப்பேன். அனிருத் மாதிரி இளைய தலைமுறைகள் கூடவும், அவருடைய டீம் கூடவும் நான் வொர்க் பண்ணது சந்தோஷமா இருக்கு. மொதல்ல அவங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். என்னுடைய மகன் நேத்து சிங்கிள் ட்ராக் ரிலீஸான உடனே, நான் பாடின போர்ஷன் எங்க வரும்னு ரொம்ப ஆர்வமா பாட்டைக் கேட்டிட்டு இருந்தார். 

இப்போ வெளிவர பாடல்கள்ல நம்முடைய ட்ராக் எங்க வரும்னே தெரியாது. பாட்டு முழுமையா முடிஞ்சு வந்தாதான் நம்முடைய போர்ஷன் எங்க வருதுன்னே தெரியுது. நான் ரெக்கார்டிங் போகும்போது நான் பாட வேண்டிய வரிகளை என்னிடம் கொடுத்தாங்க. சின்ன போர்ஷந்தான்னு அப்பவே எனக்குத் தெரியும். இருந்தாலும் ரஜினிக்காகப் பாடினேன். அதுவும் போக, இந்தப் பாட்டுல என் குரலைக் கேட்கும்போது ஞாபகம் வர்ற முதல் ஆள் ரஜினி சார்தானே." 

``அனிருத் இந்தப் பாட்டுக்காக உங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்களுடைய போர்ஷன் கம்மிதான்னு சொன்னாரா?"

``அவர் சொல்லணும்னு அவசியம் இல்லையே. பாட்டைப் பாடுற எனக்கே தெரியுமே. இதுல எனக்கு எந்த ஒரு வருத்தமும், புகாரும் கிடையாது. நான் பாடப் போறது ஒரு வரியா இருந்திருந்தாக்கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஏன்னா நான் பாடினது, ரஜினியுடைய குரலுக்கு, அது எத்தனை வரிகளா இருந்தா என்ன?"

``முழுப் பாட்டு கேட்டீங்களா. பாட்டுக் கேட்டுட்டு என்ன ஃபீல் பண்ணீங்க?"

``கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது. நான் பாடும்போது முழுப் பாடலையும் கேட்கலை. ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம்  கேட்கும்போது  ரொம்பச் சிறப்பாவும், சந்தோஷமாவும் இருக்கு." 

``ரஜினி இந்தப் பாடலைக் கேட்டுட்டு உங்களுக்கு வாழ்த்துகள் சொன்னரா?"

``இல்லை. அவருடன் பேசியே ரொம்ப வருடங்கள் ஆச்சு. எப்பவுமே ரஜினி, பாடல் சம்பந்தமா எதுவும் பேசினது கிடையாது. ஒரு சின்ன அறிகுறிகூட அவர் வெளிப்படுத்தினது இல்லை. `இப்படி இருந்துருக்கலாம், அப்படி இருந்துருக்கலாம்'னு அட்வைஸ்கூட சொன்னதில்லை. நான் என் வேலையைப் பார்க்கிறேன், அவர் அவருடைய வேலையைப் பார்க்கிறார். அவ்வளவுதான். எதுவா இருந்தாலும் ரஜினி அதுல தலையிட மாட்டார்." 

``இப்போ இருக்கிற இள இசையமைப்பாளர்களை எப்படிப் பார்க்கிறீங்க. அவங்ககூட வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?"

``இசைக்கு வயசு வித்தியாசம் இல்லை. அந்த நேரத்தில் எனக்கு அவங்க பாட்டு சொல்லிக் கொடுத்தா எனக்கு அவங்க குரு மாதிரி. அனிருத்துக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கு. நான் பாட்டுப் பாடினப்போ, எனக்கு அவர் சில விஷயங்களைச் சொன்னார். குறிப்பா, சென்னைத் தமிழ் சுத்தமா இருக்கணுங்கிறதுக்காக அவரே என் போர்ஷனைப் பாடிக் காட்டினார். வயசைத் தாண்டி எல்லாருக்கும் ஒரு அனுபவம் இருக்கும். அதை நம்ம கண்டிப்பா மதிக்கணும். ஒரு பாடகருடைய வேலை, இசையமைப்பாளரை திருப்திப்படுத்துறதுதான். ஒருவேளை இசையமைப்பாளர்களுக்கு நம்ம வொர்க் பிடிக்கலேன்னா, சொல்லிப் புரிய வைக்கிறது என்னுடைய பொறுப்பு. இதுல ரெண்டுமே நடக்கலை. அவர் கேட்டதை அரை மணி நேரத்துல முடிச்சுக் கொடுத்துட்டேன்."

அடுத்த கட்டுரைக்கு