Published:Updated:

எரவான் குறிப்புகள்

எரவான் குறிப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
எரவான் குறிப்புகள்

எரவான் குறிப்புகள்

எரவான் குறிப்புகள்

எரவான் குறிப்புகள்

Published:Updated:
எரவான் குறிப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
எரவான் குறிப்புகள்

ரு படத்தை எடுத்துட்டு உலகம் பூரா சுத்திட்டு இருக்கீங்களா?’ என்று  நண்பர் ஒருவர் கேலியாகக் கேட்டதும் ஒரு விடுகதைதான் என் நினைவுக்கு வந்தது.

‘ஒரு நெல்லு குத்தி வீடெல்லாம் உமி’ என்பதுதான் அந்த விடுகதை. ஒரு விளக்கு எரிந்து வீடெல்லாம் வெளிச்சம் பரவுகிறது என்பதுதான் அதற்கான விடை. வெளிச்சத்தை உமி என்று சொல்கிற தமிழின் அழகை, சாதாரண விடுகதையில்கூடக் கவித்துவமாகக் காட்சிகள் விரியும் சித்திரத்தைப் பலமுறை நினைத்து வியந்திருக்கிறேன். அதுபோல ஒரு படம்; அது தரும் வெளிச்சம். எத்தனையோ புதுப் புது மனிதர்கள், புதுப் புது ஊர்கள் எனப் பயணம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.

 சென்ற வாரம் ஆர்மீனியா நாட்டின் எரவான் நகருக்குச் சென்றிருந்தோம். உடன் ‘உயிரெழுத்து’ இதழின் ஆசிரியர் நண்பர் சுதீர் செந்திலும் வந்திருந்தார். அவர் ‘டூலெட்’ படத்தில் இணை இயக்குநராகவும் இருந்தவர். முதலில் ஆர்மீனியாவுக்கு விசா எடுக்க வேண்டும் என்று அணுகியபோது, பயண ஏற்பாட்டாளர்கள் அந்த நாடு எங்கிருக்கிறது என்று உலக வரைபடத்தைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டார்கள். ஈரானுக்கும் துருக்கிக்கும் மேலே, ரஷ்யாவுக்குக் கீழே, ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் இருக்கிற சிறிய நாடு என்று கண்டுபிடித்தார்கள். முன்பு சோவியத் ரஷ்யாவில் இணைந்திருந்த அர்மீனியா, இப்போது தனி நாடாக இருக்கிறது.

எரவான் குறிப்புகள்

எனக்கு ஆர்மீனியா என்றதும் உடனே நினைவுக்கு வந்த பெயர் செர்கய் பரஜ்னோவ். பரஜ்னோவ் ஓவியர், திரைப்பட இயக்குநர். அவரது ‘Colour of pomogranates’ என்கிற திரைப்படம் பற்றி ஏற்கெனவே உலக சினிமா கட்டுரையில் எழுதியிருக்கிறேன். நேரடியாகக் கதை சொல்லாமல் அசையும் ஓவியம் போன்ற காட்சிகளின் வழியே அற்புதமான திரைப்பட அனுபவத்தைத் தருபவர் அவர். அந்த இயக்குநரின் நாட்டுக்குப் போகிறோம் என்பதுதான் கூடுதல் பரவசம்.

ஆர்மீனியா நாட்டின் தலைநகரான எரவான் நகரத்தை விமானத்தின் சன்னல் வழியே பார்க்கும்போது மலைகளும் விவசாய நிலங்களும் அங்காங்கே சில வீடுகளும் தெரிந்தன. ஒரு மாநகரத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை. தரை இறங்கி அரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகுதான் ஊர் வந்தது. பழைய கற்கட்டடங்களும் அரிதான செப்புக் கோபுரம்கொண்ட தேவாலயமும் கடந்து செல்லச் செல்ல உலகின் புராதனமான ஒரு நகரத்துக்குள் நுழைகிறோம் என்கிற உணர்வு வரத்தொடங்கியது.

நெரிசலான நகரத்துக்குள் நுழைந்ததும் ஆர்மீனிய மொழியில் ஓட்டுநர் கைகாட்டி ஏதோ சொன்னார். அவர் சொன்ன இடத்தில் மாஸ்கோ தியேட்டரும் திரை விழாவுக்கான பதாகைகளும் இருக்க, இதுதான் திரைப்பட விழா நடக்கிற இடம் என்று புரிந்துகொண்டோம். அதற்கு அருகிலேயே நாங்கள் தங்க வேண்டிய விடுதி இருந்தது. விடுதிக்குள் நுழைந்து, ‘கோல்டன் ஆப்ரிகாட் எரவான் சர்வதேசத் திரைப்பட விழாவின் விருந்தினர்கள்’ என்றதும் ஆங்கிலம் தெரிந்த ஒரு பிரதிநிதி எங்களை வரவேற்று அழைத்துச் சென்றார்.

‘டூலெட்’ படத்தின் இரண்டாவது திரையிடல் காலை பத்து மணிக்கு இருந்தது. விமானத்தின் தாமதத்தினால் நாங்கள் நகரத்திற்குள் வரவே 12 மணியாகிவிட்டது. அறையில் உடைமைகளை வைத்துவிட்டுத் தெருவில் இறங்கி நடக்கையில், நம் ஊரின் வெக்கை முகத்தில் அடித்தது. ஐரோப்பிய நகரம்போல நேர்த்தியான பழைமையான கற்சுவர்களால் ஆன கட்டடங்கள் நடுவே இவ்வளவு வெப்பம் ஆச்சர்யமாக இருந்தது.

தங்கியிருந்த இடத்திலிருந்து ஒரு நிமிடத் தொலைவிலிருந்த பழைமையான மாஸ்கோ திரையரங்கத்திற்குப் போனோம். பிரமாண்டமான செயற்கை நீரூற்றுகளிலிருந்து வரும் சாரல், அந்த இடத்தையே குளுமையாக மாற்றியிருந்தது. திரைவிழாவில் கலந்துகொள்ளும் படங்களின் சுவரொட்டிகளை அழகாக வடிவமைத்து, திரையரங்கின் வாசலில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஓவியர் சந்தோஷ் நாராயணன் வடிவமைத்த மூன்று பாதங்கள் மட்டுமே இருக்கும் ‘டூலெட்’டின் போஸ்டர் நுழைந்ததுமே வாசலில் இருந்தது. உள்ளூர் நண்பர் ஒருவரை வெளிநாட்டில் சந்திப்பதைப்போல மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவிலிருந்து இது ஒரு படம்தான் சர்வதேசப் படங்களுக்கான போட்டியில் இருப்பதால், விழாவை நடத்துபவர்கள் என்னை ஓர் இந்திய இயக்குநராகவே பார்த்தார்கள்.

எரவான் குறிப்புகள்

கழுத்தில் அணியும் எங்களுக்கான அனுமதி அட்டைகளையும் திரைவிழாவில் வெளியிடப்படும் படங்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகங்களையும் பரிசுப்பொதிகளையும் வாங்கிக்கொண்டோம். அன்றைய எரவான் தினசரியில் ‘டூலெட்’ படம் குறித்த விமர்சனம் ஆங்கிலத்தில் வந்திருந்தது. அங்கிருந்த அந்த நாளிதழையும் எடுத்துக்கொண்டு அறைக்கு வந்தோம்.

பரிசுப்பொதியில் என்ன இருக்கிறது என்று பார்த்தேன். பதினைந்து வருடமாக நடக்கும் திரைவிழா குறித்த குறிப்புகள், அப்பாஸ் கியாரெஸ்தமி, அல்மதோவர், சைலான், கிம் கி துக் என இதுவரை கலந்துகொண்ட உலக இயக்குநர்களின் பட்டியல், திரையீடுகள் குறித்த நேரஅட்டவணை, எரவான் நகரத்தின் வரைபடம், இரவு விருந்துக்கான அழைப்பிதழ்கள் இருந்தன. அன்றைய விருந்து, ‘நல்பாண்டியன்’ தெருவில் எண் ஏழில் இருந்தது. தெருவின் பெயர் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

சென்னையில் பாரிமுனை ஜார்ஜ் டவுன் அருகே ஆர்மீனியன் தெருவும் பழமையான ஆர்மீனியன் தேவாலயமும் இன்றும் இருக்கின்றன. அங்கு முன்னூற்றுக்கும் மேற்பட்ட ஆர்மீனியர்களின் கல்லறைகள் அடங்கிய கல்லறைத்தோட்டம் இருக்கிறது. ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்மீனியாவிலிருந்து கால்நடையாக மலைகளின் வழியே நடந்தே வந்த ஆர்மீனியர்கள் ‘மதறாஸ்’ நகரில் பட்டு, மாணிக்கக் கற்கள் முதலான பொருள்களின் வணிகம் நடத்தியதாகக் குறிப்புகள் இருக்கின்றன. அதுபோல நம் ஊரிலிருந்து அங்கு போன ‘நல்ல பாண்டியன்’ யார் என்று வரலாற்று ஆசிரியர்கள்தான் கண்டறிய வேண்டும். அவர்கள் பேசுகிற ஆர்மீனிய மொழிகூடத் தொலைவில் புரியாமல் கேட்கிற தமிழின் சாயலில் இருப்பதாக சுதீர் சொன்னார்.

ஒரு நகரத்தைக் கால்களால்தான் புரிந்துகொள்ளமுடியும் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வர, எரவானின் முக்கியமான தெருக்களில் நடந்து திரிந்தோம். தன் பழைமையை மாறாமல் வைத்திருக்கிற அந்த நகரத்தின் தூய்மையையும் சிறப்பையும் வியந்துகொண்டே தும்னியான் தெருவிலும் சயத் நோவா அவென்யூவிலும் நடந்தோம். சயத் நோவா ஆர்மீனியன் கவிஞர், இசைக் கலைஞர். அவரது வாழ்க்கை வரலாற்றைக் கவித்துவமாகச் சொல்வதுதான் பரஜ்னோவின் ‘Colour of Pomogranates’ படம். ரஷ்யக் கவிஞர் புஷ்கின் பெயரிலும் ஒரு தெரு இருந்தது.

இரவு விருந்துக்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. மாலை ஏழு மணியாகியிருந்தாலும் நம் ஊர் நான்கு மணிபோல உறைக்காத வெயில் அடித்துக்கொண்டிருந்தது. திரைவிழா அலுவலகம் போனபோது “இரவு விருந்துக்குப் போகவில்லையா?” எனக் கேட்டு, அது நடக்கும் இடத்துக்கு எப்படிப் போவது என்று வழியும் சொன்னார்கள். “இதே சாலையில் நேராகப் போனால் இடதுபக்கம் ஓர் இறக்கம் வரும். இங்கிருந்து நடந்தால் நான்கே நிமிடங்கள்” என்று சர்வதேச இயக்குநர்களை ஒருங்கிணைக்கிற வரவரா புன்னகைத்தார்.

“வழி எதுக்குக் கேக்கிற? நம்மகிட்டதான் சிட்டி மேப் இருக்குல்ல” என்றார் சுதீர்.

ஆர்மீனியாவின் புகழ்பெற்ற வைன் மற்றும் ஆர்மீனியாவின் புகழ்பெற்ற மலையின் பெயரான அராரத் பெயரில் இருக்கிற புகழ்பெற்ற மதுவும் விருந்தில் இருக்கும் என்பதாலும் மரியாதைக்குரிய அழைப்பைத் தவறவிடக் கூடாது என்பதாலும்  நல்பாண்டியன் தெரு எண் ஏழு என்கிற கட்டடத்தைத் தேடுவதில் சுதீர் ஆர்வமாக இருந்தார். அவர் கையில் எரவானின் வரைபடம் இருந்தது. “சின்ன வயசில நான் என்.சி.சி-யில இருந்ததால எந்த நாட்டுக்குப் போனாலும் மேப்பை வச்சு இடங்களைக் கண்டுபிடிக்கிறது எனக்குப் பிடிக்கும்... அது ஒரு கலை” அது உனக்கெல்லாம் தெரியுமா? என்பதுபோல சுதீர் புன்னகைக்க, அவர் பின்னால் நான் பேசாமல் நடந்துகொண்டிருந்தேன்.

“கொஞ்ச தூரம் நடந்ததும் இடதுபக்கம் ஒரு திருப்பம் வரும்” என்று சொன்னார்களே என்று கேட்டேன். அவர் வரைபடத்தைப் பார்த்து, “பேசாம வாப்பா... நான்ல கூட்டிட்டுப் போறேன்” என்று வரைபடத்தைப் பார்த்து நடந்துகொண்டிருந்தார். பத்து நிமிடம் நடந்த பிறகு, “இதுதான் குடியரசு சதுக்கம்... பாரு நாம இப்ப இங்க இருக்கோம்” என்று வரைபடத்தின் மேலே விரல்வைத்துக் காட்டினார். செயற்கை நீருற்றுகளுடன் அந்த இடம் அழகாக இருந்தது. படங்கள் எடுத்துக்கொண்டோம். ஒருவர் சுதீர் அருகே வந்து, ‘‘நமஸ்தே... இந்தியா?” என்றார். “யெஸ்... யெஸ் நமஸ்தே...” “என்னைய எப்படி இந்தியான்னு கண்டுபிடிச்சான்?”

முன்னால் நடந்த சுதீர் வேகம் குறைந்து, வரைபடத்தைக் கையில்வைத்துப் பார்ப்பதும் இங்கும் அங்கும் திரும்பி வடக்குப் பக்கத்தைக் கண்டுபிடிப்பதுமாக இருக்கையில் அவரது என்.சி.சி அனுபவத்தின்மேல் எனக்கு சந்தேகம் வரத் தொடங்கியது. அரை மணி நேரத்துக்கும் மேல் நடந்திருந்தோம். சுதீர் வரைபடத்தை மடித்துப் பையில் வைத்துக்கொண்டு எதிரில் வருகிற அழகான பெண்ணிடம் “நல்பாண்டியன் ஸ்ட்ரீட்?” என்று புருவத்தை உயர்த்தி ஸ்டைலாகக் கேட்க, அந்தப் பெண் தோளைக் குலுக்கிவிட்டுச் சென்றாள்.

“இங்க யாருக்குமே இங்கிலிஷ் தெரியல கவனிச்சியா?”

“ஆமாமா கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். அந்தப் பொண்ணு நாலு நிமிஷத்தில நாம போக வேண்டிய இடம் வரும்னு சொன்னிச்சு... நாப்பது நிமிஷமா சுத்திட்டு இருக்கோம்... பேசாம ரூமுக்குப் போயிடலாம்.”
“கொஞ்சம் பொறுமையா இருப்பா... நீ ஒரு டைரக்டர்னு மதிச்சு டின்னருக்குக் கூப்பிடுறாய்ங்க... போகாம இருக்கலாமா?”

“உன் மேப் என்னாச்சு?”

“அது வேஸ்ட். முழுக்க ஆர்மீனிய மொழியில இருக்கு.” நான் சிரிக்க, சுதீரும் சிரித்தார்.

இரவு விருந்து 8.00 மணிக்கு முடிந்துவிடும் என்பதால், பரபரப்பாகி சாலையோரத்தில் கூட்டமாக உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்த கிழவர்களிடத்தில் கேட்டார். நாங்கள் நல்பாண்டியன் தெருவில்தான் நின்றுகொண்டிருந்தோம்.

எரவான் குறிப்புகள்

‘நல்பாண்டி இப்படி நம்மள சுத்தல்ல விடுறானே... தெருவைக் கண்டுபிடிச்சாச்சு... இந்த ஏழாம் நம்பர்தான்… எக்ஸ்க்யூஸ் மீ...நம்பர் செவன்?”

“இதுதான் ஏழு!” என்று நாங்கள் நிற்கிற இடத்தின் கட்டடத்தை ஒருவர் காட்டினார். அதில், விருந்து நடக்கிற விடுதி இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. நான் மீண்டும் “அறைக்குத் திரும்பிவிடலாமா?” என்று கேட்டேன்.

“பொறுமையா இரு செழி... ஆர்மீனியாவில ஆறாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே ஒயின் தயாரிக்க ஆரம்பிச்சிருக்காங்க... ஒயின்ல இந்த நாடுதான் பெஸ்ட். அப்புறம் உலகத்தின் முதல் கிறிஸ்டியன் கன்ட்ரி இதுதான். சார் செவன்.... நல் பாண்டியன் ஸ்ட்ரீட்... ‘பூரோ’ ஹோட்டல்?” சிகரெட் பிடித்தவரிடம் அழைப்பிதழைக் காட்ட, அவர் எங்கள் முன்னால் இருந்த ஏழாம் எண் கட்டடத்திற்குள்ளிருந்து வாகனங்கள் வெளியே வருவதற்காக அமைக்கப்பட்டிருந்த குகைபோலிருந்த பகுதிக்குள் நுழைந்து  வெளியில் வந்து கைகாட்டினார். அந்தக் கட்டடத்தின் பின்பகுதியில் ‘பூரோ’ இருந்தது. சிறிய அழகான உணவு விடுதி.

ஒயின் கோப்பைகள் உரசிக்கொள்ளும் அந்த உணவுவிடுதியில் நான் ஈரானிய இயக்குநர் அஸ்கர் பர்ஹதியையும் ஸ்டான்லி குப்ரிக்கின் ஒளிப்பதிவாளர் லாரி ஸ்மித்தையும் தேடினேன். இருவரும் சர்வதேசப் படங்களுக்கான போட்டியின் நடுவர்களாக இருந்தனர். பொதுவாக நடுவர்களாக இருப்பவர்கள் இதுபோல விருந்துகளில் கலந்துகொள்வதில்லை என்று தெரிந்திருந்தும் போவதற்குள் அவரைச் சந்திக்க வேண்டுமென்று விருப்பமாக இருந்தது. ஒருமணி நேரம் விருந்தில் இருந்தோம். விதவிதமான ஆர்மீனிய சைவ அசைவ உணவுகள் இருந்தன. ஆர்மினீயாவின் பாரம்பர்ய வெள்ளை, சிவப்பு ஒயின்கள் இருந்தன. பல நாடுகளிலிருந்து வந்திருந்த இயக்குநர்களும் விருந்தினர்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்க மின்சாரம் போய்விட்டது. இரவு ஒன்பது மணியானாலும் இருட்டாமல் இருந்ததால் ஜன்னல் திரைகளைத் திறந்துவைத்தார்கள்.

வெளியில் வரும்போது மிதமான குளிர் இருந்தது. சிரிய நாட்டுக்காரர் நடத்தும் சாலையோர உணவகம் ஒன்றில் அமர்ந்திருந்தோம். சாலையோரம் வரிசையாக மரங்கள் இருந்தன. தெருமுனையில் மனம் ஒன்றி ஒருவர் அக்கார்டியன் இசைத்துக்கொண்டிருந்தார். அருகிலேயே மஞ்சள் ஒளியில் முத்தங்கள் நிகழ்ந்தன. அந்த இசையின் பின்னணியில் சாலையின் இருபுறமும் பெண்களும் ஆண்களும் நடந்து செல்வது ஒரு திரைப்படத்தின் காட்சிபோல இருந்தது.

மறுநாள் காலை, பிரத்யேகமான பத்திரிகையாளர் சந்திப்பு இருந்தது. ‘டூலெட்’ படத்தைப் பார்த்த ஆர்மீனிய தினசரியைச் சேர்ந்த பெண் நிருபர் சாஷாவும் செக் குடியரசிலிருந்து வந்திருந்த ‘ortr’ பத்திரிகை நிருபரும் படத்தைச் சிலாகித்துக் கேள்விகள் கேட்டுக்கொண்டே யிருந்தார்கள். வீடு வாடகைக்குக் கொடுப்பதிலிருக்கும் ஒருவிதமான தீண்டாமை அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. படத்திலிருக்கும் குடும்ப உறவுகள் குறித்த ஆச்சர்யத்தையும் கலாசாரம் சார்ந்து படத்திலிருக்கும் பல விஷயங்கள் எங்களுக்கும் பொதுவானதுதான் என்றும் பேசினார்கள்.

இந்திய சினிமா என்றால், வண்ணமாக உடை அணிந்து நடனம் ஆடுவார்கள். அப்படி எதுவும் இல்லாமல் எடுப்பதில் உங்களுக்கு என்ன சிரமங்கள் இருந்தன? உங்கள் சினிமாக்களில் இசையும் பாட்டும் பிரதானமாக இருக்கும். உங்கள் படத்தில் இசையே இல்லையே ஏன்? நீங்கள் கதையை அணுகுகிற விதம், இந்திய பாணியிலிருந்து மிகவும் நவீனமாக இருக்கிறது. இதைப் புதிய அலையின் தொடக்கமாகக் கருதலாமா? என்று கேட்டார்கள்.

அறைக்கு வந்து ஆர்மீனியாவின் பாரம்பர்ய இசையை யூடியூபில் கேட்டுக்கொண்டிருந்தோம். மதியம் ஓர் உக்ரேனியப் படம் பார்த்தோம். “இன்னைக்கு டின்னர் நாய் ரெஸ்டாரண்ட்... நாய்தாம்ப்பா போட்டிருக்கு நீயே பாரு...  ‘Noy Restaurent’ மேப்பில பாத்தேன். இங்கயிருந்து 65 கிலோ மீட்டர் காட்டுது. போய்ட்டு வரவே நேரம் சரியாயிரும். அதனால வேண்டாம். நம்ம ரூமுக்கே அராரத் மலையைக் கொண்டுவந்திருவோம்.”

பொடி நடையாக நடந்தோம். மாஸ்கோ திரையரங்கிற்கு வெளியே இருந்த செயற்கை நீருற்று அணைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் பிரமாதமான இசைநிகழ்ச்சி நடந்தது.  அன்று மாலை பவ்லிகோவ்ஸ்கியின் ‘Cold War’ படம் பார்ப்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தோம். மாஸ்கோ திரையரங்கில் ‘சிவப்பு’, ‘நீலம்’, ‘சிறிய சிவப்பு’, ‘சிறிய நீலம்’ என்று நான்கு திரையரங்குகள் இருந்தன. இதே நீலம் திரையரங்கில்தான் ‘டுலெட்’ இரண்டு முறையும் திரையிடப்பட்டது என்பதால், அதே திரையரங்கில் பவ்லிகோவ்ஸ்கியின் படம் பார்ப்பதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. இந்தப் படத்துக்காகத்தான் பவ்லிகோவ்ஸ்கி இந்த வருடம் ‘கான்’ திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் விருது வாங்கியிருக்கிறார். மேலும், அவரது முந்தைய படமான ‘Ida’ எனக்குப் பிடித்த படம்.

படம் முடிந்து நடந்து வரும்போது, அந்தத் தெருவில் ஆங்கங்கே இசைக்கலைஞர்கள் இசைத்துக்கொண்டிருந்தார்கள். சுதீர் ஒவ்வொருவருக்கும் 20 ரூபாய் சில்லறை போட்டுக்கொண்டே வந்தார். ஒரு வயதானவர் சுதீரைப் பார்த்ததும் அருகில் வந்து, “நமஸ்தே” என்று சொல்லிவிட்டு ஏதோ உதவி கேட்க, அவர் கேட்பது புரியாமல் நாங்கள் கடந்துவந்தோம்.

மறுநாள் காலையில் பரஜ்னோவ் மியூசியம் பார்க்கலாம் என்று கிளம்பினோம். விடுதியின் நான்காவது தளத்தின் மின்தூக்கி அருகே நிற்கும்போது, ஒருவர் அழகான கூடை நிறைய மஞ்சள் நிறப் பழங்களுடன் நின்றுகொண்டிருந்தார். நான் இது என்ன பழம் என்று எடுத்துப் பார்க்க, அவர் ‘ஆப்ரிகாத்’ என்றார். ‘ஓ இதுதானா?’ லேசான மஞ்சள் நிறத்தில் கைப்பிடி அளவிலிருக்கும் சிறிய பழம். நான் எடுத்த பழத்தைக் கூடையில் திரும்பவைக்க, அவர் ‘வைத்துக்கொள்ளுங்கள்’ என்று தலையை அசைத்து சைகை செய்தார். ஆளுக்கு இரண்டு எடுத்துக்கொண்டோம். நம் ஊர் ப்ளம் பழம்போலச் சுவை. பேரிக்காய்போலக் கொஞ்சம் கெட்டியான தோலுடன் இருந்தது. சுதீர், ஆப்ரிகாத் பழத்தைக் கையில்வைத்து இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்துச் சொன்ன அழகியல் விளக்கத்தைக் கேட்டுச் சிரித்துக்கொண்டிருந்தேன்.

“மியூசியத்துக்கு காரில் போகலாமா?” என்று கேட்டேன். “எதுக்கு மேப் இருக்கு..? இங்கயிருந்து ரெண்டு கிலோமீட்டர்தான். இப்ப இந்த இடத்தில இருக்கோம். மியூஸியம் இங்க இருக்கு.” வரைபடத்தின் சாலைகளில் விரல் வைத்துக் கோடு போட்டுக் காட்டினார். அரை மணி நேரம் நடந்து திசை தெரியாமல் நின்றபோது, நாங்கள் தற்போது நின்றுகொண்டிருக்கும் தெரு வரைபடத்தில் இல்லை. முந்தைய நாளைப் போலவே “மேப் முழுக்க ஆர்மீனிய மொழியில இருக்கு” என்று சுதீர் சொல்ல, சிரித்து வயிறு வலித்துவிட்டது. நடந்தோம். சாலைகளில் ஒரே நேரத்தில் பத்துப் பேர் குடிப்பதுபோலச் செயற்கை நீரூற்று இருந்தது. வாய்வைத்துக் குடிக்கலாம். பாட்டில் இருந்தால் பிடித்துக்கொள்ளலாம். சுத்தமான நீர் நகரம் எங்கும் இலவசமாகக் கிடைக்கிறது. தங்கும் விடுதியில்கூட, ‘குடிநீரைக் குளியலறையில் பிடித்துக் குடிக்கலாம்’ என்ற அறிவிப்பு இருந்தது.

ஒருமணி நேர நடைக்குப் பிறகு, ஒரு பழைய கட்டடத்தின்மேல் பரஜ்னோவ் தெரிந்தார். அந்தக் கட்டடம் நகரத்தின் சற்றே உயரமான இடத்தில் இருந்தது.

இருவரும் திரைப்பட விழாவின் விருந்தினர்கள் என்று தெரிந்ததும் பரஜ்னோவ் மியூசியத்தில் நுழைவுக்கட்டணம் வாங்கவில்லை. ஒரு பழைமையான கற்கட்டடம். நுழைந்ததும் பரஜ்னோவின் தலை மட்டும் இருக்கும் கற்சிலை. உள்ளேயே மாடிப்படிகள் வைத்த அழகான அந்த வீட்டில்தான் பரஜ்னோவ் வசித்திருக்கிறார். சுவரெல்லாம் ஓவியங்கள்... உள் அறையில் அவர் படத்தின் விதவிதமான போஸ்டர்கள். அவர் படத்துக்காக உடை அலங்காரங்களை வரைந்து பார்த்த சித்திரங்கள். சர்ரியலிஸ பாணியில் மயிற்பீலிகளையும் கடித வரிகளையும் பறவை இறகுகளையும் இணைத்துச் செய்யப்பட்ட கொலாஜ் பாணி ஓவியங்கள். ஒரு தோற்பை, யானையின் தலையாக மாற்றப்பட்டிருந்தது. பரஜ்னோவ் உருவப்படத்துக்குக் கீழே காய்ந்து சுருங்கிய மாதுளம்பழங்கள் ஒரு வெண்கலக் கிண்ணத்தில் இருந்தன.

சிறையில் அவர் இருந்தபோது, தன் சக கைதிகளை அஞ்சல் வில்லைகள் அளவில் வரைந்த ஓவியங்கள் இருந்தன. சிறை நாள்களில் ஒரு கலைஞனின் படைப்பு சார்ந்த மனஅழுத்தம் எப்படியெல்லாம் வெளிப்படும் என்பதைப் பார்க்கையில் ஆச்சர்யமாக இருந்தது. பென்சில், பேனா, காகிதங்கள் இல்லாததால் தனக்குக் கொடுக்கப்பட்ட பால் புட்டியின் அலுமினிய மூடியில் நகத்தினால் அழுத்திக் கோடிட்டுச் செய்யப்பட்ட உருவங்கள் அங்கு இருந்தன. பழைய ஐரோப்பிய நாணயங்கள்போல இருக்கும் இதைத் தாலேர் (Thaler) என்று அழைக்கிறார்கள். இந்தத் ‘தாலேர்’ ஒன்றின் மாதிரிதான் வாழ்நாள் சாதனையாளர்
களுக்கான விருதாக கோல்டன் ஆப்ரிகாட் விழாவில் வழங்கப்படுகிறது.

பரஜ்னோவ் தன் சுயத்தைப் பகடி செய்வதிலும் அதை ரசித்துத் தன் உருவங்களையே ஓவியமாக மாற்றிப் பார்ப்பதிலும் ஆர்வம் மிக்கவர். காப்பகம் முழுக்க அவரது சுயஓவியங்களும் புடைப்புச் சித்திரங்களும் சிற்பங்களும் இருக்க, எங்கோ கேட்டதுபோன்ற இசை எங்கிருந்து வருகிறது என்று அறிய முடியாமல் கேட்டுக்கொண்டிருந்தது. அது ஒருவிதமான மாயத்தன்மையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பிறகுதான் கவனித்தேன். அந்த அழகிய வீட்டின் சன்னலில் ‘கலர் ஆஃப் போமோகிரேனேட்ஸ்’ படம் மெல்லிய ஒலியுடன் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படம் ஓடும் இடத்தைச் சுற்றி, படத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட உடைகளும் பொருள்களும் இருக்க, யாருமில்லாத அந்த வீட்டில் பரஜ்னோவுடன் சேர்ந்து அந்தப் படத்தைப் பார்ப்பதுபோல இருந்தது.

எரவான் குறிப்புகள்

மாலை, விருது வழங்கும் விழா. சுதீர் விழாவுக்காகப் புதுச்சட்டை அணிந்தார். ஏழு மணி விழாவுக்கு ஐந்து மணிக்கெல்லாம் நடந்தே கிளம்பிவிட்டோம். அரம் கச்சாத்ரியன் என்கிற ஆர்மீனிய இசைமேதையின் பெயரில் இருக்கும் அரங்கத்தில்தான் விழா. வழியில் புத்தா ரெஸ்டாரன்ட் இருந்தது. அதன் வெளியிலிருந்த ஒரு புத்தர் சிலையின் தலையிலிருந்து நீர் வழிவது மாதிரியான அழகான கற்சிற்பம் இருந்தது. வழியிலிருக்கும் திறந்தவெளிப் பூங்காவில் மிகப்பெரிய திரையில் பெல்ஜியத்துக்கும் இங்கிலாந்துக்குமான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி நடந்துகொண்டிருந்தது.

அந்த அரங்கின் வெளியில் கச்சத்ரியானின் பிரமாதமான கற்சிலை இருந்தது. அடுத்த இசைக்கோர்வைக்கான வாசிப்பை இயக்குவற்காக ஓர் இசைக்கலைஞனின் கைவிரல்கள் காற்றில் அசையும்போது உறையவைத்தது போன்ற பாவனையுடன் அந்தச் சிலை வடிவமைக்கப்படடிருந்தது. ‘Enzeli’ என்கிற ஆர்மீனியப் பாரம்பர்ய நடனத்துக்கு அவர் அமைத்த இசையைக் கேட்டுப்பார்க்கும் ஆர்வம் வந்தது. அரங்கத்தின் இன்னொரு பக்கம் அலெக்ஸாண்டர் ஸ்பிண்டைரியன் என்கிற இன்னோர் ஆர்மீனிய இசைக்கலைஞரின் சிலை இருந்தது. அவரது பெயரில்தான் அந்த ஒபேரா அரங்கம் இருந்தது.

ஆர்மீனியாவில் பாரம்பர்யமான இசைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது அந்த மாலைப்பொழுதில் தெரிந்தது. விருது விழா நடக்கும் அரங்கத்திற்கு வெளியே, வெள்ளை மேற்சட்டையும் கறுப்பு காற்சட்டையும் அணிந்த இசைக்குழுவினர் கூட்டமாக நின்று ஒத்திகை செய்துகொண்டிருந்தார்கள். லேசான மழை தூறிக்கொண்டிருக்க அவர்கள் வாசிப்பதைப் பெண்களும் ஆண்களும் ஏராளமான குழந்தைகளும் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். மழைச்சாரலுடன் மஞ்சள் வெயிலடிக்க அந்த இசையைக் கேட்கும் தருணம் அற்புதமாக இருந்தது. வாசித்து முடித்ததும் ‘ப்ராவோ’ என்று எல்லோரும் கைதட்டி ஆரவாரித்தார்கள்.

சுதீரைப் பார்த்து ஒருவர் ‘நமஸ்தே’ சொல்லிக்கொண்டிருந்தார். ஏழு மணிக்கு வெயில் முறுகி ஆரஞ்சு நிறத்திலிருந்தது. சிவப்புக்கம்பள விரிப்பில் நடந்து, அரங்கத்தினுள் நுழைந்து அழைப்பிதழிலிருந்த எண்களின்படி எங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தோம்.

விழா தொடங்குவதற்குச் சில நிமிடங்கள் முன்பு, மூன்று நாள்களாகப் பார்க்க விரும்பிய அஸ்கர் பர்ஹதி வந்து என் முன் வரிசையில் அமர்ந்தார். இசையுடன் விழா தொடங்கியது. சில அறிவிப்புகளுக்குப் பிறகு, ஆவணப்படங்களுக்கான விருதுகள் ஆர்மீனியப் படங்களுக்கான விருதுகள் முடிந்து, முழுநீளக் கதைப்படங்களுக்கான விருதுகளை அறிவிக்க நடுவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். பர்ஹதியுடன் லேரி ஸ்மித்தும் இருந்தார்.

முதல் விருதை பர்ஹதி அறிவிக்கும்போது, இந்த விருதுக்கு இரண்டு படங்களுக்கிடையில் கடுமையான போட்டி இருந்தது. எந்தப் படத்துக்கு விருது கொடுப்பது என்று குழம்பி, நாங்கள் முடிவெடுக்க நீண்ட நேரம் விவாதிக்க வேண்டியிருந்தது என்று சொன்னார்.

விருது அறிவிப்பு முடிந்து, விழா முடிந்து பர்ஹதி கீழிறங்கி வருகையில், நான் முன்சென்று வணக்கம் சொல்லி கைக்கொடுத்து “உங்கள் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் என் ஆதர்சங்களில் ஒருவர்” என்று சொல்ல, “நீங்கள்?” என்று புருவம் சுருக்கிக் கேட்டார். “நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன். போட்டிப் பிரிவிலிருந்த ‘டுலெட்’ படத்தின் இயக்குநர்” என்று சொல்ல, “ஓ கிரேட்... உங்களை நான் பார்க்க விரும்பினேன். ரொம்ப நல்ல படம்” என்று சொல்லி என் கையை இறுகப் பற்றிக்கொண்டார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே லேரி ஸ்மித் அருகில் வர, “இவர்தான் லேரி அந்த ‘டுலெட்’ படத்தின் இயக்குநர்” என்று பர்ஹதி சொல்ல, லேரி என் கைகளைப் பற்றிக்கொண்டு “இந்தியாவில் நான் கொஞ்ச நாள் இருந்திருக்கிறேன். அதன் கலாசாரம் எனக்கு நன்கு தெரியும். எனவே, உங்கள் படத்தை நான் ரசித்துப் பார்த்தேன். உங்களுக்குத்தான் பரிசு கொடுக்க நினைத்தோம்” என்று அவர் புன்னகைத்தார்.

அரங்கத்தின் வெளியில் ஊடகவியலாளர்கள் காத்துக்கொண்டிருந்ததால் லேரி எனக்கு வாழ்த்து சொல்லிக் கிளம்ப, பர்ஹதி என்னுடன் இருந்தார். சுதீர் வந்து இருவரையும் ஒரு படம் எடுத்தார். “இந்த வருடம் கான் திரைப்பட விழாவுக்கு வந்திருந்தேன். உங்கள் படத்தைப் பார்க்க முடியவில்லை” என்று சொல்ல, “ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் வெளியாகிறது” என்று சொல்லி, “உங்கள் படத்துக்கு நீங்கள்தானே ஒளிப்பதிவு?” என்று கேட்டார். “ஆமாம்” என்று சொன்னேன். “ஐ லைக் யுவர் லைட்டிங் அப்ரோச். ஆக்சுவலி உங்க படத்துக்குத்தான் விருது கொடுக்க முடிவு செஞ்சோம்” என்று பேசத் தொடங்க, “நீங்கள் விரும்பினால் படத்தைப் பற்றி ஒருசில வரிகள் விடியோவில் சொல்ல முடியுமா?” என்று கேட்டேன். “நிச்சயம் சொல்கிறேன்” என்று புன்னகைக்க, எனது செல்போனில் அவரது பாராட்டுக்களை எடுத்துக்கொண்டேன்.

விழா முடிந்து வெளியில் வந்ததும் எடுத்த வீடியோவில் ஒலி பதிவாகியிருக்கிறதா என்று பார்த்தேன். ‘டுலெட்’ படப்பிடிப்பில் முதல் மூன்று நாள் எடுத்ததை எடிட்டிங்கில் பார்த்துவிட்டு, ஸ்ரீகர் பிரசாத் பேசினார், “‘செழியன்... விஷுவல்ஸ் நல்லாயிருக்கு. ஆனா, சவுண்டு சுத்தமா இல்லையே” எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் குழப்பம் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதால்தான் உடனே பார்த்தேன். பர்ஹதி பேசிய வீடியோவில் ஒலி துல்லியமாக இருந்தது.

மரங்கள் அடர்ந்த சாலையில் நானும் சுதீரும் அமைதியாக நடந்துவந்து கொண்டிருந்தோம். புத்தரின் தலையிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது.

“கவலைப்படாதடா செழி. 1500 படங்கள்லயிருந்து பத்துப் படத்துக்குள்ள வந்து, அதிலயும் கடைசி வரைக்கும் டஃப் ஃபைட் கொடுத்துருக்கோம்ல. அதுவே பெருசு... விடு, அடுத்த படத்துல பாத்துக்கிருவோம். எதுக்குடா சிரிக்கிற?”

“நீதான் புதுச்சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு வந்த...” இருவரும் சிரித்துக்கொண்டே நடந்து வந்தோம்.

அறைக்கு வந்து அங்கிருந்த ஆப்ரிகாட் பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டே அடுத்த படத்தின் கதை குறித்தும் ஆர்மீனியாவின் பெருமைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம்.

 “பாரு... ஒரு பழத்துமேல அவங்களுக்கு எவ்வளவு பெருமைன்னு. ஒரு பெஸ்டிவலே பழத்தின் பெயரால் நடக்குது. நம்ம ஊர்ல இது மாதிரி அபூர்வமான எத்தன பழம் இருக்கு. எதைப் பத்தியும் உண்மையான பெருமையே நமக்கு இல்ல. விழாவுல கவனிச்சியா, தேங்யூனு சொல்றதைக்கூட அர்மீனிய மொழியில மொழிபெயர்க் குறாங்க. இங்க திரையிட்ட படத்துக்கெல்லாம் ஆர்மீனிய மொழியில சப்-டைட்டில் பண்ணுறாங்க. தெருப்பெயர்லதான் ஆங்கிலம் இருக்கு. அவங்க மொழியோட தனித்தன்மையை எப்படிப் பாதுகாக்குறாங்க பாத்தியா...”

“தண்ணீர் இலவசமா இருக்கே...?”

“நம்ம ஊர்ல இது ஒண்ணப் பண்ண முடியுமா?”

“அது ஆப்ரிகாட் விதைதான... அதை எதுக்கு எடுத்துவைக்கிற?”

“நம்ம ஊர்ல முளைக்குதான்னு பாப்போம்...”

மறுநாள் காலையில் மழை பெய்தது. ஊரின் தன்மை ஒரு குளிர்ப்பிரதேசத்தின் இயல்பைக்கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆர்மீனியா, பழைய தேவாலயங்களுக்குப் புகழ்பெற்றது என்பதால் நடக்கத் தொடங்கினோம். ‘Zoravor Surp Astvatsatsin Church’தான் எரவானின் பழைய தேவாலயம் என்று இணையத்தில் பார்த்து சுதீர் சொல்ல, அங்கு போனோம். நாங்கள் போகும்போது, பிரார்த்தனை அற்புதமான இசையுடன் நடந்துகொண்டிருந்தது. 1600-களில் கட்டப்பட்ட தேவாலயம் பூகம்பத்தில் முழுக்க அழிந்து, பதினைந்து வருடங்களில் திரும்பக் கட்டப்பட்ட அந்த தேவாலயத்தைச் சுற்றிலும் திராட்சைக்கொடிகள் அழகாக இருந்தன.

ஆர்மீனியாவில் காஸ்பர்யான் என்றொரு ‘டுடுக்’ இசைக்கலைஞர் இருக்கிறார். அவரது இசையை ஒருமுறை எனக்கு எஸ்.வி.ஆர் அனுப்பியிருந்தார். ஒவ்வொரு முறை அதைக் கேட்கும்போதும் கண்கள் கலங்கிவிடும். காஸ்பர்யானைச் சந்திக்கலாம் என்ற விருப்பமும் இருந்தது. அறைக்கு வந்ததும் பாரம்பர்யமான ‘டுடுக்’ இசையைக் கேட்டுக்கொண்டிருந்தோம்.

எரவான் குறிப்புகள்

மாலையில் உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப்போட்டி இருந்தது. மாஸ்கோ திரையரங்கில் அதே நேரத்துக்கு கொரிதியாவின் இந்த வருடம் கான் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்கப்பனை விருதுபெற்ற ‘Shop lifters’ இருந்தது. நான் கானில் அந்தப் படம் பார்த்திருந்தேன் என்பதால் கால்பந்தா? கொரிதியாவா? என்று சுதீரிடம் கேட்டேன். 15,000 பார்வையாளர்களின் ஆரவாரத்தோடு சிறுவர் பூங்காவில் பெரிய திரையில் நடந்த கால்பந்துப் போட்டி என்று முடிவுசெய்தோம். சுதீர் கொஞ்சம் அராரத் மலையை விழுங்கினார்.

“கோல் குரோஷியா... கோல் குரோஷியா’ என்று சிறுவர்களும் பெரியவர்களும் குரல் எழுப்பும் கூட்டத்தின் நடுவில் நின்றுகொண்டிருந்தோம். பியர் அருந்திக்கொண்டும், புல்தரையில் துணியை விரித்துக் கூட்டம் கூட்டமாக அமர்ந்து குரோஷியா வெல்ல வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும்கூட, பிரான்ஸ் கோல் அடிக்கும்போதெல்லாம் கரகோஷம் எழுந்தது. விளையாட்டை விருப்பு வெறுப்பு இன்றி ஒரு கொண்டாட்டமாகப் பார்க்கிற பண்பு ஆச்சர்யமாக இருந்தது.

எரவானில் இது கடைசி இரவு. நெரிசலான தெருவின் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிழாபோல இருந்தது. வழக்கமாக நடக்கும் தெருவின் முனையில் அக்கார்டியன் மட்டும் இருந்தது. வாசிப்பவரைக் காணவில்லை. ஒரு பெண் தனியாக நின்று ஒபேரா பாடுவதுபோல உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு 20 ரூபாய் நாணயம்!

ஊருக்குக் கிளம்புகிற மனநிலையோடு பொழுது விடிந்தது. மதியத்துக்குமேல் கிளம்ப வேண்டும் என்பதால், திரும்பவும்  தும்னியான் தெருவில் காலார நடந்தோம். வாசித்துமுடித்த நூலின் பக்கங்களை வெறுமனே புரட்டிப் பார்ப்பதுபோல. மரங்களின் அடியிலிருந்த மர இருக்கையில் வெறுமனே அமர்ந்திருந்தோம். ஓர் ஊரைப் பிரிவது என்பது, ஒரு நண்பரைப் பிரிவது போன்ற  உணர்வைத் தந்தது. பரிசுப்பொருள்கள் விற்கும் கடையில் ஆர்மீனியாவின் பாரம்பர்ய உடையில் வயலின் வாசிக்கும் ஒரு பெண் பொம்மையை வாங்கிக்கொண்டேன். அந்தப் பொம்மையின் புன்னகை அழகாக இருந்தது.

ஊருக்கு வந்ததும் ஆர்மீனியக் கவிதைகளையும் ஆர்மீனிய இசையையும் கேட்டுக்கொண்டிருந்தேன். சேவக் என்றொரு கவிஞரின் கவிதை வரி எனக்கு ஆச்சர்யமளித்தது. ‘நாங்கள் சிலர். ஆனால், நாங்கள் ஆர்மீனியர்கள்’ எனத் தொடங்கும் கவிதை, தாங்கள் ஆர்மீனியராக இருப்பதன் தனித்துவத்தின் பெருமையை அழகாகச் சொன்னது.

‘தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற பாரதிதாசனின் வரிகள் நினைவுக்கு வந்தன.

காலையில் நடைப்பயிற்சியின்போது ஒரு காட்சியைப் பார்த்தேன். பழங்கள் விற்பவரின் அடுக்கிலிருந்து இரண்டு  மாதுளம்பழங்கள் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு ஓடுகின்றன. கடைக்காரர் ஒரு குழந்தையின் பின்னால் நடப்பதுபோலப் பழங்களின் பின்னே நடக்கிறார். தாடி மீசையுடன் பரஜ்னோவ் சாயலில் வருபவர் இரண்டு பழங்களையும் இரண்டு கைகளில் எடுத்துப் புன்னகையுடன் பழக்காரரிடம் கொடுக்கிறார்.

வீட்டுக்கு வந்து ஆர்மீனியாவின் நினைவோடு எழுதுமேசையின் முன்னால் அமர்ந்திருக்கிறேன். வயலின் வாசிக்கும் பொம்மையின் புன்னகை. கச்சத்திரியான் டி மைனரில் எழுதிய வயலின் இசை மெள்ளக் கேட்கத் தொடங்குகிறது. எதிரில் ஆப்ரிகாட்டின் இரண்டு விதைகள் இசையைக் கேட்டு மூடிய இமைகள்போல இருக்கின்றன.

- செழியன்