Published:Updated:

``சிவகார்த்திகேயனோடு நாங்க சேர்ந்த கதை!’’ - `ப்ளாக் ஷீப்' டீம்

``சிவகார்த்திகேயனோடு நாங்க சேர்ந்த கதை!’’ - `ப்ளாக் ஷீப்' டீம்
``சிவகார்த்திகேயனோடு நாங்க சேர்ந்த கதை!’’ - `ப்ளாக் ஷீப்' டீம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ப்ளாக் ஷீப் டீமின் ``நவயுக ரத்தக்கண்ணீர்" நாடகம் நடந்தது. அந்நாடகத்தின் இடைவேளையில் அவர்களைச் சந்தித்து உரையாடிய போது...

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் `ப்ளாக் ஷீப்' டீமின் `நவயுக ரத்தக்கண்ணீர்' நாடகம் நடந்தது. அந்த நாடகத்தின் இடைவெளியில் ஆர்.ஜே. விக்னேஷையும், ட்யூடு விக்கியையும் சந்தித்துப் பேசினோம்.

ஆர்.ஜே. விக்னேஷ்:

``எந்த ஹீரோயினோடு டூயட் ஆட ஆசை ?"

``அது நிறைய இருக்குங்க. குறிப்பிட்டு ஒருத்தரைச் சொல்லனும்னா, சன்னி லியோன்தான் என்னோட முதல் சாய்ஸ்."

``உங்களோட நண்பர் ரியோ படம் நடிக்கிறாா். இதுவரைக்கும் உங்களை யாரும் ஹீரோவா நடிக்கக் கேட்கலையா?"

 ``இதுவரைக்கும் யாரும் கேட்கலை. நம்மைப் பற்றி நமக்கே நல்லா தெரியும். அப்புறம் மத்தவங்க எப்படிங்க வருவாங்க. அப்படிக் கேட்டு வந்தாலும் எனக்கு ஹீரோவா நடிக்கிறதுல உடன்பாடில்லை."

`` `மீசையமுறுக்கு' படத்தைத் தொடர்ந்து ஆதி நடிக்கும் `நட்பே துணை' படத்திலும் நடிக்கறீங்களா?"

``யெஸ். `நட்பே துணை' படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்துல நடிக்கிறேன். ஆனா, அது ரொம்ப அழுத்தமான கதாபாத்திரமா இருக்கும்."

``நடிகர் கமல்ஹாசன் பற்றிய 12 மணி நேர `டாக் மாரத்தான்' பற்றிச் சொல்லுங்க?" 

``நான் தீவிரமான ரஜினி ரசிகன். ஒரு கட்டத்துல நடிகர் கமல்ஹாசனைப் பற்றித் தெரிந்துகொள்ள அவரைப் பற்றி நிறைய படிக்கத் தொடங்கினேன். அப்பதான் தெரிஞ்சது, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்குன்னு. அதை ஒரு 12 மணி நேர டாக் மாரத்தானா செய்ய ஆசைப்பட்டேன். ஒரு நாள் அவரை நேரில் சந்திக்கும்போது வாழ்த்துகளும் கூறினார்."

``யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறவங்களுக்கு ஒரு அட்வைஸ்?"

``எது பண்ணாலும் தனித்துவத்தோட பண்ணுங்க. ஒரே விஷயத்தை ஒரே மாதிரி பண்றவங்க ஆயிரம் பேர் இருக்காங்க. சில வித்தியாச முயற்சிதான் நம்மளை மத்தவங்ககிட்ட இருந்து வேறுபடுத்திக்காட்டும்."

``படப்பிடிப்பு தளத்தில் நீங்க எல்லோரையும் கலாய்ப்பவர். உங்களை பயங்கரமாக கலாய்க்கிறது யாா்?"

``எடிட்டர் ஃபென்னிதான். அவன் என்னை மட்டுமல்ல, எல்லாரையும் வெச்சு செய்வான். திரும்பி அவனை நம்ம கலாய்ச்சா எடிட்ல கைவெச்சுடுவான். அதனால நாங்க பேசுறதுல எடிட் பண்ணி பாதியைத் தூக்கிடுவோம். ஆனா, இது எல்லாத்தையும் தாண்டி, அவன் ஒரு நல்ல கலைஞன்."

``அரசியல்வாதிகளை விமர்சனம் செய்யும் ப்ளாக் ஷீப் குழுவுக்கு, அரசியல்ல நிற்க எண்ணம் இருக்கிறதா?"

``இங்கு ஏதோ ஒரு வகையில மாற்றம் உண்டாகும்னுதான் ஒவ்வொரு முயற்சியா எடுக்கிறோம். நாங்க அந்த மாற்றமா இருக்கணும்னு ஒரு நாளும் நினைச்சது இல்லை. எதிர்காலத்துல அதுக்கான சூழல் வந்தா, கண்டிப்பா அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்குவோம்."

``இப்போ இருக்க டெக்னாலஜி உலகத்துல நாடகம், சிலம்பாட்டம் போன்ற கலைகள் எல்லாம் அழிஞ்சுட்டு வருது. அதை மீட்க என்ன பண்ணணும்?"

"ஒரு கலையைச் சேர்ந்த குடும்பம் எங்க அழியுதோ, அங்கதான் ஒரு கலையும் அழியும். நாட்டுப்புற கலைகள் அழிச்சுட்டுப் போற இந்த சமயத்துல, ஆங்கரிங் பண்ணும்போது தப்பாட்டம் பண்ணிட்டு இன்ட்ரோ ஆகுற மாதிரி ஐடியா பண்ணிட்டு இருக்கோம்."

ட்யூடு  விக்கி :

``சிவகார்த்திகேயன் உங்க டீமுக்கு எப்படி அறிமுகமானார்?"

``நாங்க முதல்ல சின்ன ஸ்டுடியோவா ஆரம்பிக்கும்போது, அதைத் திறந்து வெச்சதே சிவகார்த்திகேயன்தான். அப்போ அவர் ஆங்கரா இருந்தார். நாங்க கதை ரெடி பண்ணிட்டு அவர்கிட்ட பேசின போது, கதையை ஓகே பண்ணிட்டார். கொஞ்ச நாளைக்கு அப்புறம்தான் `கனா' ஆடியோ லான்ச்ல அதை மீடியாவுக்குச் சொன்னார். 

``டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் எடுத்து வரும் முன்னேற்றங்கள் என்னென்ன?"

``டிஜிட்டல் மீடியா அசோசியேஷனில் நாங்கள் மட்டும் உறுப்பினர் இல்லை. சமூகத்தில் நடைபெறும் செயல்களுக்குக் கருத்து சொல்ற மக்கள் எல்லோருமே உறுப்பினர்தான். மெய்ன் ஸ்ட்ரீம் மீடியாவால கேட்க முடியாத சில கேள்விகளை, டிஜிட்டல் மீடியாவுல இருக்கிற நாங்க கேட்கிறோம். அதை வெறும் செய்தியா வைக்காம எங்களுடைய கன்டென்ட் மூலமா பேசிட்டிருக்கோம்."

``ஒரு மீடியாவை இன்னொரு மீடியா விமர்சிக்கிறது ஆரோக்கியமானதா?"

``மீடியாவுல இருக்கிற எல்லாருமே விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள்தான். எங்க மேல ஏதாவது விமர்சனம் இருந்தாலும் நாங்க வரவேற்போம். ஏன்னா, அதுதான் ஆரோக்கியமானது. நல்ல கன்டென்ட் கொடுக்கும்போது சில கெட்ட விமர்சனங்களும்  கட்டாயம் வரும்."

``அரசியல் நையாண்டிகள் எல்லாம் மக்களைச் சிந்திக்க வைக்கும்னு நீனைக்கிறீங்ளா?"

``மக்களைப் பொறுத்தவரை அவர்களை எப்போதும் அரசியல்வயப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்பதான் அரசியலைப் பத்தி சிந்திக்க ஆரம்பிப்பாங்க. இப்போ இது பெருசா இல்லேனாலும்கூட, படிப்படியா மக்கள் மத்தியில பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்."

``சிவகாா்த்திகேயன் தயாரிப்பில் `ப்ளாக் ஷீப்' டீம் நடிக்கிற படம் எப்படி இருக்கும்?"

``காமெடி, எமோஷன், நையாண்டினு எல்லாமே இருக்கும். அதுவும் சமூகத்துக்கு ஒரு நல்ல கருத்தைக் கூறும் பக்கா கமர்ஷியல் படமா நிச்சயம் இருக்கும்."

``அழிந்தது வரும் நாடகக்கலையை மீட்டெடுக்க இளைஞர்கள்கிட்ட நிறைய விழிப்புஉணர்வு உண்டாக்குறீங்களே?"

``நாடகம் என்பது இப்போ இருக்கிற ஊடகங்களைவிட வலிமையானது. நாடகங்களிலிருந்து வரும் விஷயம், மக்களின் மனதில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும். சுதந்திரப் போராட்டத்தில் பெரிய மாற்றங்களை உண்டாக்கியதே நாடகங்கள்தான். மக்களையும் நேரடியாவும் எளிமையாவும் தொடர்புகொள்ளலாம்னு இதைத் தேர்ந்தெடுத்தோம்." 

``அரசியலில் களமிறங்கியிருக்கும் ரஜினி, கமலுடைய செயல்கள் விமர்சனத்துக்குரியதா இருந்தா அதையும் நையாண்டி செய்வீங்களா?"

``அவங்க ரெண்டு பேருமே இன்னும் அவங்களுடைய கொள்கைளை தெரிவிக்கலை. ஆனா, அவர்களுடைய செயல்களும் கொள்கைகளும் சமூகத்தில் விமர்சனங்களுக்கு உட்பட்டதா இருந்தா கண்டிப்பா செய்வோம்."

``யூடியூப் வீடியோக்களில் கெட்டவாா்த்தைகள் பயன்படுத்துவது அவசியம்தானா?"

``கெட்டவாா்த்தைகளில் உள்ள உள்ளரசியலை நான் எதிர்க்கிறேன். ஆனா, அதை நாங்க ஊக்குவிக்கவில்லை. அவை அன்றாட வாழ்க்கையில் கடந்து போகக்கூடியதாதான் இருக்கு. அதைப் பயன்படுத்த வேண்டிய சூழலில், '18+' என்ற முன்னறிவிப்போடுதான் பயன்படுத்துறோம்" எனச் சொல்லி கலகல சிரிப்போடு பேட்டியை முடித்துக்கொண்டனர். 

அடுத்த கட்டுரைக்கு