Published:Updated:

கன்னத்தில் முத்தமிட்டால் - அமுதா

கன்னத்தில் முத்தமிட்டால் - அமுதா
பிரீமியம் ஸ்டோரி
கன்னத்தில் முத்தமிட்டால் - அமுதா

நினைவோவியம்விக்னா - சந்தோஷ், ஓவியங்கள் : ஷண்முகவேல்

கன்னத்தில் முத்தமிட்டால் - அமுதா

நினைவோவியம்விக்னா - சந்தோஷ், ஓவியங்கள் : ஷண்முகவேல்

Published:Updated:
கன்னத்தில் முத்தமிட்டால் - அமுதா
பிரீமியம் ஸ்டோரி
கன்னத்தில் முத்தமிட்டால் - அமுதா

“எழுத்தாளர் இந்திரா ஞாபகம் இருக்கா” என்றேன்.

“இந்திரா பார்த்தசாரதியா...” என்றான் சந்தோஷ்.

“இல்லப்பா, சுஜாதா மாதிரி தன் மனைவி இந்திரா பேர்ல எழுதுற திருச்செல்வன். ஞாபகம் இல்லியா?” 

‘ஓ... ஆமா. அவர் புதுசா எதுவும் எழுதின மாதிரி தெரியலையே” என்றபடி யோசித்தான் சந்தோஷ்.

“ஆனா, அவரு பொண்ணு எழுதி இருக்கிறா” என்றேன்.

“அவங்க பொண்ணா? யாரு அமுதாவா...” என்று ஆர்வமாகக் கேட்டான்.

“ஆமா. அமுதா திருச்செல்வன். குழந்தைகளுக்கான ஒரு நாவல். சமீபத்துல செம்மை நூலகத்துக்காகப் புத்தகங்கள் தேடினப்ப கண்ணில்பட்டது. எடுத்துப் பார்த்தா, இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கோம்னு தோணிச்சு. விசாரிச்சா, அந்த அமுதாதான். கன்ஃபார்ம் ஆனதுமே `நெஞ்சில் ஜில் ஜில்'னு உள்ளுக்குள்ள பாட்டு கேட்குது” என்றேன் புன்னகையுடன்.

“எங்க மீட்டிங் பாயின்ட்” என்று புரிந்து கொண்டவனாக நேராக விஷயத்துக்கு வந்தான்.

“வேளச்சேரிலதான் அமுதா இருக்காங்க. விஷயத்தைச் சொல்லி மேடவாக்கம்தான் வீடு... ஒரு எட்டு வாங்கன்னதும் சந்தோஷமா ஒப்புக்கிட் டாங்க. நாளைக்கு ஈவ்னிங் அஞ்சு மணி போல வீட்டுக்கு வந்துடு.”

“ஸோ... அந்தச் `சிறிய ரெட்டைவால் சுந்தரி'யைப் பதினாறு வருஷத்துக்கு அப்புறம் நாளைக்குத் திரும்பவும் சந்திக்கப்போறோம். இல்லையா!”

கன்னத்தில் முத்தமிட்டால் - அமுதா

வெளியே நானோ கார் ஒன்று பூனையைப்போல கேட் முன்னால் எட்டிப்பார்க்கவும், “அமுதா வந்தாச்சு போல” என்றபடி நான் படியிறங்கினேன்.

கேட்டைத் திறந்ததும் நானோவை உள்ளே பார்க் செய்துவிட்டு அமுதா இறங்கினார். புன்னகைத்தபோது அந்தப் பழைய குட்டி அமுதா கொஞ்சம் எட்டிப்பார்த்தாள்.

“வணக்கம். நான் விக்னா. இது சந்தோஷ்” என்றபடி வீட்டுக்குள் வெல்கம் பண்ணினேன்.

அமுதா கையோடு கொண்டுவந்திருந்த தனது நாவலின் பிரதிகளை எங்கள் இருவருக்கும் அளித்துவிட்டுச் சொன்னார், “குழந்தைகள் நாவல்தான். ஆனா, முதலில் படிக்கவேண்டியது பெற்றோர்தான்!”

சந்தோஷ், நாவலின் கலர்ஃபுல்லான அட்டையைப் பார்த்துக்கொண்டே தலைப்பை வாய்விட்டுப் படித்தான் `நாட்குறிப்புகள்'. பிறகு அமுதாவைப் பார்த்து “கவர் டிசைன் சூப்பர்” என்றான்.

“தேங்க்ஸ். டிசைனும் நானே பண்ணினதுதான்” என்றார் அமுதா.

சம்பிரதாயமான காபி உபசாரங் களுக்குப் பிறகு, அந்த நாவலைக் கைகளில் வைத்துக்கொண்டு புரட்டியபடி அமுதாவைப் பார்த்தேன்.

“இந்திரா சார் எதுவும் எழுதுறதில்லையா? ஐ மீன் உங்க அப்பா திருச்செல்வன்...”

“அப்பா கிட்டத்தட்ட 2002-க்குப் பிறகு  எதுவும் எழுதல. அப்பப்போ சில பத்திரிகைகளில் `சிறப்புக் கட்டுரைகள்' எழுதுவார். என்னைத்தான் எழுது எழுதுன்னு சொல்லிட்டே இருப்பார்.”

“ரியல் இந்திரா எப்படி இருக்காங்க?” என்றான் சந்தோஷ்.

“நல்லாயிருக்காங்க. எனக்கு இப்போ திருமணமாகிட்டதால வேளச்சேரில இருக்கேன். அவங்க அடையாறு”என்றார்.

“குறும்பான ஒரு குட்டிப்பொண்ணாகத் தான் இப்பவும் எங்க மனசுல நிக்கிறீங்க. அந்த அமுதாவின் குறும்புகள் இப்ப எப்படி?” என்றேன்.

சிரித்துக்கொண்டே, “அந்த மாதிரி குறும்பெல்லாம் இப்போ பண்ண முடியாதுன்னுதான் நாவல் எழுதியிருக்கேன். அதுல அந்தக் குட்டி அமுதாவைத்தான் கொட்டி வெச்சிருக்கேன்” என்றார்.

“மீண்டும் உங்க அம்மா ஷ்யாமாவை சந்திச்சீங்களா?” - இதை கேட்கும்போதே எனக்கு விடை தெரிந்திருந்தது.

“இல்ல. அவர் போர் தீவிரமடைந்ததும் எதிரிகள் சுற்றிவளைத்துவிட்டதைக் கேள்விப்பட்டு, சயனைட் அருந்தி இறந்துவிட்டதா சொன்னாங்க” - அமுதா இதை சொல்லும்போதே குரல் உடைந்தார். பேச்சை மாற்ற விரும்பி மீண்டும் புத்தகங்கள் பக்கமே திரும்பினோம்.

“பொதுவா நடிகர்கள், வியாபாரிகள், இசைக் கலைஞர்கள் போலில்லாமல், எழுத்தாளர்களின் வாரிசும் எழுத்தாளர் ஆவது அரிது இல்லையா?” என்றான் சந்தோஷ்.

“ஆம்... அதற்குக் காரணம் எழுத் தாளர்கள் தங்கள் உலகத்துக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. ஆனால், அப்பா அப்படியல்ல” என்றார் அமுதா கண்களில் நிரம்பிய பெருமிதத்தை மறைக்க முயலாமல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கன்னத்தில் முத்தமிட்டால் - அமுதா

“எது உங்கள் முதல் படைப்பு?”

“இலங்கை சென்று வந்த அனுபவங் களைத் தொகுத்து எழுதி வைத்திருந்தேன். அதுவே பின்னாளில் படமாகக் கூட வந்தது. அதன் பிறகு எழுத்து என்னை ஆட்கொண்டது எனலாம்.”

“உங்கள் கதைகள் நிலம் சார்ந்தே இருப்பதாக அறிகிறோம். அது இயல்பாக அமைந்த ஒன்றா?” என்ற கேள்வியை வைத்ததும் அமுதா மேலும் உற்சாகமானார்.

“ஆம். நிலம் சார்ந்த கதைகள். என் பூர்வீகமான ஈழத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னை அமைதியிழக்கச் செய்தது. அப்பாதான் என்னை அகதிகள் முகாமுக்குச் சென்று வரச்சொல்லி ஊக்கமளித்தார். அப்போது, அங்கிருக்கும் பலருடனும் பேச வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலானவர்கள், தங்கள் பிள்ளைகள் பூர்வீகத்தை அறியாமலே வளர்கிறார்களே என்ற ஆதங்கத்தோடு இருப்பதை அறிந்தேன். அவர்களிடம் கேட்டுப் பெற்ற கதைகளையே ஆவணப்படுத்தியிருக்கிறேன். போருக்கு முன்னால் இருந்த அந்தப் பூமியை, அதன் அழகை, மேய்ச்சல்களை, வாழ்வியலை நிஜ மனிதர்கள் சொல்லக் கேட்க அத்தனை அற்புதமாக இருக்கிறது. அவற்றை குழந்தை மொழியில் மாற்றி எழுதுகிறேன். இந்தத் தேடல்மூலம் புலம் பெயர் மனிதர்களைப் பல நாடுகளுக்கும் சென்று சந்திக்க முடிந்தது. இதை என் வாழ்நாள் பாக்கியமாகக் கருதுகிறேன்.”

“போர்கள், அதன் காரணங்கள், இழப்புகள் பற்றிக் குழந்தைகளுக்கான புத்தகமாக எழுதிவருவதை அறிந்தோம். எப்படியும் தெரிந்துகொள்ளப் போகிறார்கள் என்கையில், இளம் மனதினருக்கு இது தேவையா?” என்றேன்.

“தேவைகளைச் சூழல் தானே தீர்மானிக்கிறது? அமைதியான சூழலில் வளர்பவர்களுக்கு காய்கறி வளர்ப்பதைப் பற்றி கற்றுத் தரலாம். இருக்கும் நிலத்தை விட்டு உங்களைச் சுற்றி பிச்சைக்காரர்களைப் போல இருக்கும் பல உயிர்களின் மதிப்பை எப்படி புரியவைப்பது? அரசாங்கங்கள் எடுக்கும் முடிவுகளில் யானையின் காலில் மிதிப்படும் சிற்றெறும்பைப் போல, எளிய மக்கள் மிதிபடுகிறார்கள் என்பதை ஏன் மறைக்க வேண்டும்? பெரியவர்களானதும் நமக்கு வன்முறை மீதான சுரணை குறைகிறது. நமக்கு நடக்காத வரை எல்லாமே கதைகள்தாம். குழந்தைகள் அவ்வாறல்ல. கதைகள் என்றாலும் இன்னோர் உயிர் வதைபட்டால் அழுகிறார்கள், அவர்கள் சிரித்தால் சிரிக்கிறார்கள். நாளைய உலகம் இன்புற் றிருக்க, இதுவரையிலான தவறுகளையும் அதன் தாக்கங்களையும் அவர்கள் மொழியில் சொல்லி வளர்ப்பது பலன் தரும் என்று நம்புகிறேன்.”

வழக்கமான கிண்டல் கேலியுடன் இந்த சந்திப்பை முடித்துக்கொள்ளும் மனநிலை வரவில்லை.

“ஓகே. ரொம்ப மகிழ்ச்சி. கிளம்பட்டுமா...” என்று அமுதா எழுந்தபோது, நாங்கள் இருவரும் எழுந்து முற்றம் வரை வந்தோம்காரில் ஏறிய அமுதா, எதையோ எடுத்துக் கொண்டு மீண்டும் இறங்கி, “சாரி மறந்திட்டேன்” என்று வெள்ளை ரோஜா பூச்செண்டுகளைக் கொடுத்தார். அதை நாங்கள் வாங்கிக் கொண்டோம். அமுதா நானோவை ஸ்டார்ட் செய்து கேட்டைத் தாண்டி சாலையின் போக்குவரத் தில் கலந்து நகர்ந்தார்.

மழை வருவது போலிருந்தது.  சந்தோஷ் தன் கைகளிலிருந்த ரோஜா செண்டை அருகில் நின்ற எனது சிறிய மகன் ஷ்யாமிடம்  நீட்டினான். அவன் அதை வாங்கிய கணம் சட்டென்று மழை விழ ஆரம்பித்தது. ஒரு துளி மழை நீர் ஷ்யாமின் கையிலிருந்த அந்தப் பூச்செண்டின் மீது சொட்டிச் சிதறியது. ஷ்யாம் அந்த வெள்ளைப் பூக்களை கைகளால் அணைத்துக் கொண்டான்.

கன்னத்தில் முத்தமிட்டால் வெளியான ஆண்டு: 2002
நடிப்பு: மாதவன், சிம்ரன், கீர்த்தனா, நந்திதா தாஸ், பிரகாஷ் ராஜ்.
இயக்கம்: மணிரத்னம்

கன்னத்தில் முத்தமிட்டால் - அமுதா

வாங்க பேசலாம்!

கேள்வி கேட்டு ஓர் உரையாடலைத் தொடங்குகிறீர்கள் என்றால், கேள்வியிலேயே பதிலையும் வைக்காதீர்கள். உதாரணமாக, குழந்தை முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு பள்ளியிலிருந்து வந்தால், `மிஸ் அடிச்சாங்களா?', `கீழ விழுந்துட்டியா?' என்று தொடங்கினால், `ஆம் /இல்லை' என்றுதான் பதில் வரும். `என்ன ஆச்சு? ஏன் என் குட்டி டல் அடிக்குது?' என்று தொடங்கினால், நீங்கள் எதிர்பார்க்காத ஒரு பதில் கிடைக்கும். பெரியவர்களிடம் பேசும்போதும் இதேதான். `இன்றைக்கு ஆபீஸ்ல பிரச்னையா, அதான் சாப்பிடலையா?' / `ஏன் சாப்பிடல?'

- இவ்விரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. முன்னதில் நாமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டு, அது சரியா என்று மட்டும் பார்க்கிறோம். பின்னதில் என்ன நடந்ததென்று தெரிந்துகொள்ள முன் முடிவில்லாமல் தயாராகிறோம்.