Published:Updated:

``அம்மாவும் நானும் சுவர் ஏறி மருதாணி பறிப்போம்!'' - சாமூண்டீஸ்வரி #HBDSavithri

``அம்மாவும் நானும் சுவர் ஏறி மருதாணி பறிப்போம்!'' - சாமூண்டீஸ்வரி #HBDSavithri

எங்க வீட்டுக்குப் பின்னால இருக்கிற அவுட் ஹவுசோட மதில் சுவர் மேலே ஏறி, அதுக்குப் பக்கத்தில் இருக்கிற ஓட்டு மேலே ஏறுவாங்க அம்மா. நானும் அவங்க பின்னாடியே ஏறுவேன். அந்த ஓட்டு மேலே ஏறினாதான், சகுந்தலாம்மா வீட்டு மருதாணிச் செடியோட மேல் கிளைகளில் இருக்கிற இலைகளைப் பறிக்க முடியும்.''

``அம்மாவும் நானும் சுவர் ஏறி மருதாணி பறிப்போம்!'' - சாமூண்டீஸ்வரி #HBDSavithri

எங்க வீட்டுக்குப் பின்னால இருக்கிற அவுட் ஹவுசோட மதில் சுவர் மேலே ஏறி, அதுக்குப் பக்கத்தில் இருக்கிற ஓட்டு மேலே ஏறுவாங்க அம்மா. நானும் அவங்க பின்னாடியே ஏறுவேன். அந்த ஓட்டு மேலே ஏறினாதான், சகுந்தலாம்மா வீட்டு மருதாணிச் செடியோட மேல் கிளைகளில் இருக்கிற இலைகளைப் பறிக்க முடியும்.''

Published:Updated:
``அம்மாவும் நானும் சுவர் ஏறி மருதாணி பறிப்போம்!'' - சாமூண்டீஸ்வரி #HBDSavithri

ன்று, நடிகையர் திலகம் சாவித்திரிக்குப் பிறந்த நாள். அவருடைய நடிப்புத்திறமை, அவர் மீதான விமர்சனங்கள் இதையெல்லாம் தாண்டி, விஜய சாமூண்டீஸ்வரி மற்றும் சதீஷின் அம்மா சாவித்திரி எப்படிப்பட்டவர் என்று அவருடைய மகள் மனம் திறந்து சொல்கிறார். 

``அம்மான்னு நினைச்சாலே அவங்களுடைய சுட்டித்தனம்தான் எனக்கு நினைவுக்கு வரும். இதனாலே, சின்ன வயசுல எங்க பாட்டிகிட்ட அம்மா நிறைய அடி வாங்கியிருக்காங்களாம்.  

கார்த்திகை, மார்கழி மாதங்கள் வந்தாலே எனக்கு அம்மாவோட நினைவுகள் அதிகமா வந்துடும். எங்களுடைய அபிபுல்லா வீடு ரொம்பப் பெரிசு. கார்த்திகை மாதம் தீபம் வைக்கிற மூணு நாளும் எவ்வளவு ஷூட்டிங் இருந்தாலும், அதையெல்லாம் தள்ளி வைச்சுட்டு, வீட்டோட நாலு வாசலிலும் வரிசையா தீபம் ஏத்தி வைப்பாங்க அம்மா. 

மார்கழி மாசத்துல கோலம் போடுறதும் அம்மாவுக்கு இஷ்டமான வேலை. எங்க வீட்டு வாசல் பெருசுங்கிறதால, வீட்டில் வேலை  பார்க்கிறவங்க, வாசலைப் பெருக்கி, தண்ணி தெளிச்சு ரெடி பண்ணி வைச்சுடுவாங்க. அம்மா நைட் 10 மணியிலிருந்து 12 மணி வரைக்கும் பெரிய பெரிய கோலங்கள் போடுவாங்க. அவங்களுக்கு ரங்கோலி பிடிக்காது. புள்ளி வைச்சுப் போடற கோலங்கள்தான் பிடிக்கும். அதிலேயும் கோலத்தில் கலர்பொடி தூவ மாட்டாங்க. அதற்குப்பதிலா சாமந்திப் பூக்களை உதிர்த்து அந்த இதழ்களை கோலத்துல இருக்கிற பூ டிசைன்களில் தூவுவாங்க. அப்புறம், கோலத்துல அங்கங்கே மஞ்சள், குங்குமம் வைப்பாங்க. எங்க வீட்டிலேயே மாடுகள் இருந்ததால, சாண உருண்டையை வைச்சு மேலே அடுக்குச் செம்பருத்திப்பூக்களை செருகி வைப்பாங்க. இவ்வளவையும் அம்மா செய்துமுடிச்ச பிறகு பார்த்தால் வாசல் அவ்வளவு களையாக இருக்கும். 

அம்மா கோலம் போடும்போது நானும் அவங்ககூட சேர்ந்துப்பேன். அப்ப, அவங்க ஊரில் மார்கழிக் கோலம் போட்ட கதையெல்லாம் சொல்லுவாங்க. அந்தக் காலத்தில் கிராமங்களில் வீட்டுக்கூரை மேலேதான் பூசணிக்கொடியைப் படர விட்டிருப்பாங்க. அம்மா, அவங்க  பிறந்த ஊரில் இருந்தப்போ மார்கழி மாசங்களில் கோலத்துக்கு நடுவுல பூசணிப் பூ வைக்கிறதுக்காக, மத்த வீட்டில் பூத்திருக்கிற பூசணிப் பூக்களையெல்லாம் வீட்டு சொந்தக்காரர்களுக்குத் தெரியாம பறிச்சுட்டு வந்துடுவாங்களாம். அப்புறம் என்ன, பூவுக்குச் சொந்தக்காரங்க பாட்டிக்கிட்ட வந்து கம்ப்ளெய்ன்ட் கொடுக்க, அம்மாவுக்கு ஒரே பூஜைதான்'' என்ற சாமூண்டீஸ்வரி அம்மாவின் நினைவில் கலகலப்பாகச் சிரிக்கிறார்.

``புளி, கல் உப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் எல்லாத்தையும் உரலில் போட்டு இடிச்சு, துடைப்பக்குச்சியில செருகி எங்களுக்கு வீட்டிலேயே லாலிபாப் செய்து தருவாங்க. அம்மா சின்ன வயசுல சாப்பிட்ட லாலிபாப் அதுதானாம். எனக்கு, அதை சாப்பிட்டா வாயெல்லாம் எரியும். ஆனா, அம்மாவுக்கு அது ரொம்ப இஷ்டம். 

சின்ன வயசுல பிளேடால் பென்சில் சீவும்போது விரல் கட் ஆச்சுன்னா, அம்மா உடனே `எங்கே விரலைக் காட்டு'ன்னு கேட்பாங்க. நானும் நம்பிக் காட்டுவேன். உடனே மறைச்சு வைச்சிருக்கிற ரெவ்லான் சென்ட்டை எடுத்து புஸ்ஸுன்னு விரல் மேலே ஸ்பிரே பண்ணிடுவாங்க. நான் எரிச்சல் தாங்காம துள்ளிக் குதிப்பேன். ஆனா, ரெண்டே நிமிஷத்துல எரிச்சல் நின்னுடும். பிளேடு பட்ட காயம் செப்டிக் ஆகாம இருக்கிறதுக்குத்தான் அம்மா, சென்ட்டை அடிச்சாங்க அப்படிங்கிறது அப்புறம்தான் தெரிஞ்சது. 

அம்மாவுக்கு மருதாணின்னா ரொம்ப இஷ்டம். எங்க வீட்டுக்குப் பக்கத்து வீடு நடிகை ஜி.சகுந்தலாவுடைய வீடு. எங்க வீட்டிலேயும் மருதாணிச்செடி இருந்தாலும், சகுந்தலாம்மா வீட்டு தோட்டத்தில் இருந்த மருதாணி இலை ரொம்ப நல்லா சிவக்கும். அதனால், அம்மாவுக்கும் எனக்கும் அவங்க வீட்டு மருதாணி மேலேதான் எப்பவும் ஒரு கண்ணு. எங்க வீட்டுக்குப் பின்னால இருக்கிற அவுட் ஹவுஸோட மதில் சுவர் மேலே ஏறி, அதுக்குப் பக்கத்தில் இருக்கிற ஓட்டு மேலே ஏறுவாங்க அம்மா. நானும் அவங்க பின்னாடியே ஏறுவேன். அந்த ஓட்டு மேலே ஏறினாதான், சகுந்தலாம்மா வீட்டு மருதாணிச் செடியோட மேல் கிளைகளில் இருக்கிற இலைகளைப் பறிக்க முடியும். அதுக்குதான் இவ்வளவு சாகசம் பண்ணுவோம் நானும் அம்மாவும்'' என்பவரின் குரல், அம்மாவுடன் சேர்ந்து லூட்டி அடித்த அந்தக் காலகட்டத்துக்கே பயணமாவது தெளிவாக நமக்குப் புரிந்தது.

``அப்புறம் உள்ளங்கையில் மருதாணி வைக்கும் போது சாமந்திச் செடியோட சின்ன இலையைப் பறிச்சு, என்னோட உள்ளங்கையில வைச்சிடுவாங்க அம்மா. அதுக்கு மேலே மருதாணியை உருண்டையா உருட்டி வைச்சு அழுத்திடுவாங்க. அது சிவந்ததும் பார்த்தால் சாமந்தி இலையோட வடிவம் உள்ளங்கையில் பிரின்ட் மாதிரி இருக்கும். சில நேரம், கையில் மெழுகுவத்தியுடைய துளிகளை தெளிச்சுவிட்டு, அது காய்ந்ததும் அரைத்த மருதாணியை அப்படியே எடுத்து அப்பி விடுவாங்க. கையை வாஷ் பண்ணிட்டுப் பார்த்த கை முழுக்கச் சிவப்பாகவும், ஆங்காங்கே சின்னச் சின்ன ஒயிட் டாட்ஸ் இருக்கும். இதில் எல்லாம் நான்தான் அம்மாவோட கூட்டு. தம்பி சதீஷ் மருதாணி வைச்சுக்க மாட்டேன்னு தப்பிச்சு ஓடிடுவான். 

அம்மா நல்லா நீச்சல் அடிப்பாங்க. நான், என் தம்பி, அம்மா மூணு பேரும் சேர்ந்து நீச்சலடிக்கிறப்போ அம்மா, குளத்துக்குள்ள காயினைப் போட்டுவிட்டு தேடச் சொல்வாங்க. நாங்க ஜாலியா குளிச்சிக்கிட்டு இருக்கிறப்போ உள் நீச்சல் போட்டுட்டு வந்து எங்க கால்களை கிள்ளி விடுவாங்க. நானும் சதீஷும் ஆ.. ஊ.. அலறிக்கிட்டே சிரிப்போம்'' என்றவர், அம்மா சாவித்திரிக்குப் பிடித்த உணவுகளைப் பற்றி ருசியாக தகவல்களை சொல்ல ஆரம்பித்தார். 

``ஜாபர்ஸ் ஐஸ்கிரீம் பார்லரில் `பீச் மெல்பா'ன்னு ஒரு ஐஸ்கிரீம் செய்வாங்க. அதை பிளாஸ்க்கில் வாங்கிட்டு வந்து, வீட்டில் வைச்சு சாப்பிடுவாங்க. நடுராத்திரியில்கூட அம்மா சாஃப்ட் ஐஸ்கிரீம் சாப்பிடுவாங்க. அந்தளவுக்கு அம்மா ஐஸ்கிரீம் பிரியை. நான் சிறுமியா இருந்தப்போதான் ஆவின் ஃபிளேவர்டு மில்க் அறிமுகமாச்சு. டிரைவரை அனுப்பி அதை பாட்டில் நிறைய வாங்கிட்டு வந்து ஃபிரிட்ஜில் வைத்துக் குடிப்பாங்க அம்மா. 

அம்மாவுக்கு வளசரவாக்கத்துல வயல் இருந்தது. அந்த வயலில் செருப்பில்லாத காலோட ஓடுறதுன்னா அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும். `நெருஞ்சி முள்ளு ஒட்டிக்கும்மா'ன்னு நான் சொன்னா, `பரவாயில்லை, எடுத்துப் போட்டுடலாம்'னு சொல்வாங்க. நானும் அம்மாவும் ஆளுக்கொரு முழுக் கரும்பைத் தோளில் போட்டுக்கிட்டுச் சாப்பிட்டுக்கிட்டே வயல், வரப்புன்னு நாள் முழுக்க நடந்துகிட்டே இருப்போம்.  சாயங்காலத்துக்குள்ள தோள் மேலே கிடக்கிற முழுக் கரும்பையும் சாப்பிட்டு முடிச்சிருவோம். அந்த நாளெல்லாம் சொர்க்கம்'' என்ற சாமூண்டீஸ்வரி, அம்மா அழுத சம்பவத்தையும், அம்மா தன்னை அடித்த சம்பவங்களையும் பகிர்ந்துகொண்டார்.  

``என்னை சர்ச் பார்க்கில் சேர்த்த முதல் நாள், நான் கிளாஸ் ரூமுக்குள்ள போக மாட்டேன்னு அழ, என்னைப் பார்த்து அம்மா, அப்பா ரெண்டு பேருமே அழ ஆரம்பிச்சிட்டாங்களாம். அங்கிருக்கிற சிஸ்டர்ஸ் எனக்கு ஒரு லாலிபாப் கொடுத்ததோட அம்மா-அப்பாக்கும் கூட ஆளுக்கொரு லாலிபாப் கொடுத்தாங்களாம். அந்த சிஸ்டர்ஸ் இதைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க. 

அம்மா என்னை ரெண்டு தடவைதான் அடிச்சிருக்காங்க. ஒரு தடவை, அம்மா ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது, நான் மொட்டை மாடியோட கைப்பிடிச் சுவர் மேலே ஏறி நின்னுக்கிட்டு இருந்தேனாம். அப்ப ஒரு தடவை. ரெண்டாவது தடவை, `தமிழ்ப்பற்று' என்பதை `தமிழ்ப்பர்ரு' என்று படித்ததற்காக தலையில் குட்டு வாங்கியிருக்கிறேன். மத்தபடி, எங்களோட அம்மா ஸோ ஸ்வீட்'' என்று சந்தோஷமாகச் சொல்லி முடித்தார் சாவித்திரியின் மகள்!