Published:Updated:

"ஃபர்ஸ்ட் ரேங்க் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, புத்திசாலி புள்ள பொறக்கும்னு நினைச்சேன்!" - விஜய் சேதுபதி

தார்மிக் லீ
"ஃபர்ஸ்ட் ரேங்க் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, புத்திசாலி புள்ள பொறக்கும்னு நினைச்சேன்!" - விஜய் சேதுபதி
"ஃபர்ஸ்ட் ரேங்க் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, புத்திசாலி புள்ள பொறக்கும்னு நினைச்சேன்!" - விஜய் சேதுபதி

"விஜய் சேதுபதிங்கிற நடிகனை வந்து பார்க்கக் காத்திருக்கிறவங்களுக்கும் இதைத்தான் சொல்றேன். நடிகனுக்குனு ஒண்ணு இருக்கு, அதை மட்டும் கொடுங்க போதும். நான் சொன்னதுக்கு விமர்சனங்களும் கேள்விகளும் எழலாம். ஆனா, இதுதான் நிதர்சனம்."

`சீதக்காதி’ படத்தில் `இவர்தானா?’ என்று தெரியாத அளவு மேக்அப் போட்டு அய்யாவாக களமிறங்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. இது அவருடைய 25-வது படம். ஒரு மாலை நேரத்தில் அவரைச் சந்தித்தேன். 

``சமீபமா விஜய் சேதுபதி எது பேசினாலும் அவருடைய கருத்தில் ஆழமும் முதிர்ச்சியும் இருக்கே. என்ன காரணம்?’’

``எனக்குத் தெரிஞ்ச விஷயங்களைப் பலருக்கும் பகிர நினைக்கிறேன். ஒரு விஷயத்தை நீங்க பகிரும்போது, உங்களுடைய அறிவும் பெருகும். இது ஒருவகை சுயநலம்தான். ஆனா, பொதுநலத்தில் ஒரு சுயநலம்னு வெச்சுக்கலாம். நீங்க ஏதாவது ஒரு விஷயத்தைப் பார்க்கும்போது, அதுல உங்களுக்கான கேள்வி ஒண்ணு எழும். அப்புறம், அந்தக் கேள்விக்கான விடையைத் தேட ஆரம்பிப்பீங்க. இதை நீங்க இன்னொரு ஆளுக்குச் சொல்வீங்க. இது இப்படியே நிற்காது. இந்த ஒரு காரணம் மட்டும்தான்.’’

`` `96 படத்துல, `தி லைஃப் ராம்’ பாட்டுல வர்ற மாதிரி வாழணும், பயணப்படணும்னு பாட்டைப் பார்த்த பலரும் நினைச்சிருப்பாங்க. உங்களுக்கு அந்தப் பாட்டு எப்படிப்பட்ட அனுபவமா இருந்தது?"

``உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு அந்தப் பாடலைப் படமாக்குறப்போ எரிச்சலாதான் இருந்தது. அதுல எனக்குப் பிடிச்ச ஒரே விஷயம், கார்ல ஜாலியா டிரிஃப்ட் அடிச்சதுதான். அப்புறம் போகவே கூடாதுனு எரிச்சலாகி, நான் ஆச்சர்யப்பட்டது, பாட்டுல வர்ற அந்த நீர் வீழ்ச்சி. அந்த மலையில ஏறும்போது கால்ல செம்ம அடி வாங்கினேன். பிரேமை பயங்கரமா திட்டினேன். தட்டுத்தடுமாறி மேலே போயிட்டோம். போனதுக்குப் பிறகுதான் தெரிஞ்சது, அந்த இடம் ஒரு தெய்வீகமானதுனு! நான் பாட்டைப் பார்த்துட்டு, 'ஏன் அந்த ஷாட்டை வைக்கல'னு பிரேம்கிட்ட கேட்டேன். 'இல்ல விஜி, நம்ம பார்க்கிறதை ஒரு ஃபிரேமுக்குள்ள கொண்டுவர முடியல'னு சொன்னார். அப்புறம், தண்ணிக்கு அடியில போற மாதிரி ஒரு ஷாட் இருக்கும்ல... அதை எடுக்கிறப்போ, நான் செத்துடுவேன்னு எல்லாம் நினைச்சேன். அந்தளவு பயமா இருந்தது. இந்தப் பாட்டு எனக்குக் கொடுத்த அனுபவம் இதுதான்." 

``நீங்க உங்க நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஆள். ஆரம்பத்துல அவங்க உங்களை அணுகிய விதத்துக்கும், இப்போ அணுகுற விதத்துக்கும் ஏதாவது வித்தியாசத்தை உணர்றீங்களா?" 

``கண்டிப்பா இருக்கு. என் நண்பன் மகேந்திரன்னு ஒருத்தன், என்னைப் பார்க்க வந்திருந்தான். பார்த்துட்டு, 'நல்லா இருக்கீங்களா சார்'னு கேட்டான். 'அடிங்க... என்னடா சார்?'னு திட்டினேன். 'இல்லடா அப்படிதான் வருது'னு சொன்னான். நமக்குத்தான் மண்டையில வேலை ஓடிக்கிட்டே இருக்கும், நண்பர்கள்கூட நேரம் ஒதுக்க முடியலை. மத்தபடி, என் ஆபீஸ்ல இருக்கிற ஜான்ஸன், சந்துருனு என்கூட இருக்கிற எல்லோருமே என் நண்பர்கள்தான். ஃபிரெண்ட்ஸ் பத்தி சுருக்கமா ஒண்ணு சொல்லலாம், 'நான் பெத்த புள்ள... வெளியே ஒழுங்காதான் இருக்குமா?'னு சந்தேகப்படுற பெற்றோர்களுடைய பயத்தைப் போக்குறதே நண்பர்கள்தான். 'இவன் இருக்கான், பாத்துப்பான்'னு பெற்றோர்களோட பயத்தைப் போக்கிடுவாங்க. காலையில எல்லாம் சரியாகிடும்; சமாதானம் ஆகிடுவோம்ங்கிற தைரியத்துலதான், இங்கே பல நண்பர்கள் சண்டையே போடுறோம். நண்பர்கள்னாலே ஸ்வீட்தான்!"

``கஜா புயலுக்கு இளைஞர்களோட பங்களிப்பு அதிகம். இப்போகூட வெளியில உங்களைப் பார்க்கிறதுக்கு அத்தனை பேர் காத்திருக்காங்க. இந்தக் கால  இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?’’ 

``வெளியில ரொம்ப உணர்ச்சி வசப்படுறாங்கனு நினைக்கிறேன். நமக்குப் பிடிச்ச நடிகன், நமக்குப் பிடிக்காத செயல்னு இதையெல்லாம் வெச்சு ஈஸியா நம்மைத் தூண்டிவிடுறாங்க. முதல்ல இதை நாம உணரணும். அதனாலதான், ஈஸியா நம்மை மறக்கடிச்சிடுறாங்கனு நினைக்கிறேன். கஜா புயல் வந்து டெல்டா பகுதி முழுவதும் ரொம்ப பாதிப்புக்குள்ளாச்சு. அதுல இளைஞர்களுடைய பங்களிப்பு அதிகமா இருக்கு. அதையெல்லாம் திசை திருப்பும் வகையில சில சம்பவங்கள் நடக்குது. இதுக்கெல்லாம் முக்கியமான காரணம், உணர்ச்சிவசப்படுறோம் என்பதுதான். தவிர, நம்மளை ஈஸியா பயன்படுத்திக்கிறாங்க. விஜய் சேதுபதிங்கிற நடிகனை வந்து பார்க்கக் காத்திருக்கிறவங்களுக்கும் இதைத்தான் சொல்றேன். நடிகனுக்குனு ஒண்ணு இருக்கு, அதை மட்டும் கொடுங்க போதும். நான் சொன்னதுக்கு விமர்சனங்களும் கேள்விகளும் எழலாம். ஆனா, இதுதான் நிதர்சனம்."

``25-வது படம் `சீதக்காதி'தான்னு முன்கூட்டியே முடிவு பண்ணியிருந்தீங்களா?’’ 

``அந்த சமயம் `96’, `சீதக்காதி’ ரெண்டு படங்களிலும் கமிட் ஆனேன். ரெண்டு படத்தோட இயக்குநரும் எனக்கு நண்பர்கள். என் மனசு விரும்பியது 'சீதக்காதி'. அதனால, பிரேம்கிட்ட சொல்லி 'சீதக்காதி'யை 25-வது படமா தேர்ந்தெடுத்தேன்." 

```பேட்ட’ பட அனுபவம்?’’

``படம் பொங்கலுக்கு ரிலீஸாகப்போகுது. சூப்பரா வந்துருக்கு. எனக்கு கார்த்திக்கின் எழுத்து ரொம்பப்பிடிக்கும். அவர்கிட்ட இருக்கிற ஸ்பெஷலே, ஒரு சர்ப்ரைஸ் எலிமென்ட்டை கண்டிப்பா வெச்சிடுவார். அது, இந்தப் படத்திலும் இருக்கு. கார்த்திக் சுப்புராஜ் குடும்பமே ரஜினி ரசிகர்கள்தான். ரஜினி சாரை செலிபிரேட் பண்ணி ரொம்பநாள் ஆச்சுல்ல... அதுக்கு பெஸ்ட் ட்ரீட்டா, இந்தப் படம் இருக்கும்."  

`` `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் விஜய் சேதுபதி'னு உங்களுக்கு ஏதாவது ஆசை இருக்கா?’’

``நான் ஸ்கூல்ல இருந்தே மக்கு. முதல் ரேங்க் எடுக்கிற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டா, பொறக்கிற புள்ள புத்திசாலியா இருக்கும்னு யோசிச்சவன். இல்லைனா, எனக்கு வர்ற மனைவி டீச்சரா இருக்கணும்னு நினைச்சவன். இப்படிப் பல விஷயங்களை யோசிச்சிருக்கேன்." 

இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான கேள்விகளையும், அதற்கு விஜய் சேதுபதி சொன்ன பதில்களையும் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்! 

அடுத்த கட்டுரைக்கு