Published:Updated:

``ஹீரோவுக்கு மட்டுமல்ல, ஹீரோயினுக்கும் வெயிட் இருக்கணும்!’’ - ஐஸ்வர்யா தத்தா

``ஹீரோவுக்கு மட்டுமல்ல, ஹீரோயினுக்கும் வெயிட் இருக்கணும்!’’ - ஐஸ்வர்யா தத்தா
``ஹீரோவுக்கு மட்டுமல்ல, ஹீரோயினுக்கும் வெயிட் இருக்கணும்!’’ - ஐஸ்வர்யா தத்தா

`பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஐஸ்வர்யா புதுப் படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். இதுகுறித்து பகிர்ந்து கொண்டவை.

```பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, நிறைய படங்களில் நடிக்கிற வாய்ப்பு வந்தது. கதையைத் தேர்வு செய்றதுல ரொம்ப கவனமா இருக்கேன். ஏன்னா, படத்துல ஹீரோவுக்கு மட்டுமல்ல, ஹீரோயின் ரோலுக்கும் வெயிட் இருக்கணும். அதனால எனக்கு நடிக்க ஸ்கோப் இருக்கிற மாதிரியான கதையைத் தேர்வு செய்யலாம்னு இருக்கேன்’’ என்று உற்சாகமாகப் பேட்டியை ஆரம்பிக்கிறார், `பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ரன்னர் அப் ஐஸ்வர்யா தத்தா. 

`பிக் பாஸ்'ல் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு அந்த நிகழ்ச்சி ஒரு நல்ல பிளாட்பாரமாக அமைந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் அதில் கலந்துகொண்டவர்களுக்கும் சினிமா வாய்ப்புகள் வருகிறது. அந்த வரிசையில் இதில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா, தற்போது இரண்டு படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். இது குறித்து அவரிடம் பேசினேன். 

``ராஜமித்ரன் சார் இயக்கத்துல நடிகர் ஆரிகூட லவ் ஜானர்ல ஒரு படம் பண்றேன். ரெண்டு காதலர்களுக்கும் இடையே நடிக்கிற மோதல்கள், பிரச்னைகள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்தப் படம். படத்துல என்னுடைய கதாபாத்திரத்தை ரொம்ப ஸ்ட்ராங்கா அமைச்சிருக்கார், இயக்குநர். அது பிடிச்சுதான் இந்தப் படத்தை ஓகே பண்ணினேன். அதே மாதிரி மஹத்கூடவும் ஒரு படத்துல நடிக்கிறேன். இந்தப் படத்தை காமெடி ஜானர்ல உருவாக்கியிருக்கார் இயக்குநர் பிரபு ராம். அவர் என்கிட்ட கதை சொன்னப்பவே விழுந்து விழுந்து சிரிச்சேன். படம் பார்க்கிற ஆடியன்ஸும் என்னை மாதிரியே சிரிப்பாங்க. இந்த ரெண்டுமே என்னுடைய கரியர்ல முக்கியமான படமா இருக்கும். கூடிய சீக்கிரம் இந்த ரெண்டு படங்களுடைய டைட்டிலும் அதிகாரபூர்வமா அறிவிப்பாங்க. ஆரிகூட நடிக்கிற படத்துடைய ஷூட்டிங் ஸ்பாட்லதான் நான் இப்போ இருக்கேன். அங்க என்னைப் பார்க்க வர்ற தமிழ் ஆடியன்ஸ், அவங்க வீட்டுப் பொண்ணா நெனைச்சு, என்கிட்ட பேசுறாங்க. இதுக்கு நான் பிக் பாஸுக்குத்தான் நன்றி சொல்லணும்.’’

`` `பிக் பாஸ்’ நண்பர்களுடன் தொடர்புல இருக்கீங்களா?’’

``எல்லார்கூடவும் தொடர்புல இருக்க முடியலை. ஆனா, எங்களுக்குனு ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கு. அதுல நிறைய அரட்டை அடிப்போம். தனிப்பட்ட முறையில யாஷிகா, மஹத்கூட தொடர்ந்து பேசிட்டிருக்கேன். யாஷிகா ஷூட்டிங்ல எவ்வளவு பிஸியா இருந்தாலும் என்மேல அக்கறை காட்டி விசாரிப்பாங்க. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிற ஸ்க்ரிப்ட் அமைஞ்சா செமயா இருக்கும்." 

`` `பிக் பாஸ்’ டைட்டிலை ஜெயிக்க முடியலனு ஃபீல் பண்ணியிருக்கீங்களா?’’

``எனக்கு அது கொஞ்சம்கூட வருத்தம் இல்லை. ஏன்னா, `பிக் பாஸ்' வீட்டுல இருக்கும்போதே என்னுடைய உள்ளுணர்வு சொல்லுச்சு, நான் டைட்டில் ஜெயிக்க மாட்டேன்னு. டைட்டிலை மட்டும்தான் நான் ஜெயிக்கலை. மத்தபடி நிறைய மக்களின் மனசை ஜெயிச்சுருக்கேன், அது போதும். 

`` `பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழ் நல்லாவே பேசுறீங்க. அதனால, உங்க படங்களுக்கு நீங்களே தமிழ் டப்பிங் பேசுவீங்களா?"

``தேசிய விருது வாங்கணும்ங்கிறதுதான் என் கனவு. அதனால நம்ம படங்களுக்கு நம்மதான் டப்பிங் பேசணும். எனக்குத் தமிழ் தெரியாதுங்கிறதால, என்னுடைய முந்தைய படங்களுக்கு நான் டப்பிங் பேசினது இல்லை. இப்போ நான் நல்லா தமிழ் கத்துகிட்டேன். இனிமேல் என் படங்களுக்கு நானே டப்பிங் பேசலாம்னு முடிவு பண்ணிட்டேன்.’’

``பிடித்த நடிகர்..?’’

``என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் சிம்புதான். சினிமா வர்றதுக்கு முன்னாடியே எனக்கு சிம்புவைப் பிடிக்கும். ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு. இது வரைக்கும் அவர்கிட்ட இதைச் சொன்னது இல்லை. அதே மாதிரி நடிகைகள்ல நயன்தாரா, அதிதி பாலன், ரெண்டு பேருடைய நடிப்பும் ரொம்ப பிடிக்கும். ஏன்னா, இந்த ரெண்டு பேருமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பாங்க. பெரிய இயக்குநர்கள் படங்கள்ல நடிக்கணும்னு ஆசை இருக்கு, அது சீக்கிரமே நிறைவேறும்’’ என நம்பிக்கையோடு பேட்டியை முடித்தார். 

அடுத்த கட்டுரைக்கு