Published:Updated:

"மாஸ் ஹீரோக்களின் பாஸ் ஆகிறார், விக்ரம்!" - வருகிறான் ‘மாவீரன் கர்ணன்’

"மாஸ் ஹீரோக்களின் பாஸ் ஆகிறார், விக்ரம்!" - வருகிறான் ‘மாவீரன் கர்ணன்’
"மாஸ் ஹீரோக்களின் பாஸ் ஆகிறார், விக்ரம்!" - வருகிறான் ‘மாவீரன் கர்ணன்’

அர்ஜூனன் அம்பெய்வான். கர்ணன் சாய்வான். மகாபாரதத்தின் உச்ச தருணம் அது. கண்ணீரின்றி கடக்கவே முடியாது. கர்ணவதம் முடிந்ததும், மகாபாரதமே முடிந்துவிட்டதைப்போலத் தோன்றும்.

`மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்திருக்கிறது. இதில், `கர்ண அவதாரம்' எடுக்கவிருக்கிறார் விக்ரம். `என்னுநின்டே மொய்தீன்' படத்தின் இயக்குநர் விமல் இயக்குகிறார். 300 கோடி பட்ஜெட், 80 கோடிக்கு தேர் செட், `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' படத்தில் பணிபுரிந்த டெக்னீசியன்கள் என்று, அசத்தலாக டேக் ஆஃப் ஆகியிருக்கிறது. இந்த நேரத்தில், கர்ணனைப் பற்றிக் கொஞ்சம் எழுதலாமென்று தோன்றியது.

கர்ணனை, மகாபாரதத்தின் மையக் கதாபாத்திரம் என்று சொல்ல முடியாது. ஆனால், கர்ணன் இல்லாமல் மகாபாரதமே சொல்ல முடியாது. இதுவரை இங்கே காட்டப்பட்ட அத்தனை மாஸ் ஹீரோக்களுக்கும், கர்ணனே பாஸ்! `பாட்ஷா' முதல் `பாகுபலி' வரை, கர்ணனின் சாயல் இல்லாத மாஸ் ஹீரோக்களே இல்லை. இதுவரை, மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து எத்தனையோ படைப்புகள் வந்திருக்கின்றன. அவற்றில் அதிகம் எடுத்தாளப்பட்டவன், கர்ணன் ஒருவனே! ஏனென்றால், கர்ணனின் கதையில் அவ்வளவு கனம் இருக்கும், ஊடும்பாவுமாக உணர்வுகள் ஊடுருவிச் செல்லும். இதனாலேயே, மணிரத்னம் முதல் ராஜமெளலி வரை கர்ணனால் ஈர்க்கப்படுகிறார்கள். மணிரத்னம் `தளபதி’ தந்தார். ராஜமெளலி `சத்ரபதி’ தந்தார்.

குந்தியின் மடியில் தவழ்வதிலிருந்து, குருஷேத்ர மண்ணில் மடிவது வரை, கர்ணன் போராடிக்கொண்டே இருந்தான். அவமானங்களால் சூழப்பட்டான். துயரங்களால் துரத்தப்பட்டான். எளியோரால் நேசிக்கப்பட்டான். வலியோரால் வெறுக்கப்பட்டான். வாழ்வனைத்தும் `அங்கீகாரம்’ என்ற ஒன்றுக்காகவே போராடினான். அவனை வீழ்த்திக்கொண்டே இருந்தது, விதி. ஆனால், வீழும்போதெல்லாம் எழுந்தான். `எப்படி?' என்று துரோணர் கேட்பார். `அது அவன் குணம்' என்பார், பீஷ்மர். இருந்ததையெல்லாம் கொடுத்தான். `எப்படி?' என்று தருமன் கேட்பான். `அது அவன் இயல்பு' என்பான், கிருஷ்ணன்.

மகாபாரதம் மன்னர் வம்சக் கதை. அதில், கர்ணன் மட்டுமே சாமானியர்களின் சக்கரவர்த்தி. அப்போதே ஆண்டைகளை எதிர்த்து ஆண்டவன், கங்காணிகளைக் கலங்கடித்தவன். கொடுத்துச் சிவந்தவன். இறக்கும்போதும் இரந்தவனுக்கு அளித்தவன். வில்லேந்திய சூரியன். ஆனால், வஞ்சத்தால் வீழ்ந்தவன். நம்மில் ஒருவன் அவன். நம்மைப் போன்றவன் அவன். எல்லா விதத்திலும், கர்ணன் கதாபாத்திரத்திற்கு சீயான் சரியான சாய்ஸ்!

மகாபாரதம், பாரபட்சமற்ற காவியம். எல்லாக் கதை நாயகர்களின் நன்றும் தீதும் அதிலிருக்கும். ஆனால், கர்ணனை மட்டும் எல்லோரையும்விட ஒருபடி மேலே நிறுத்துகிறார், வியாசர். எழுத்தாளர் ஜெயமோகன் இதை உறுதிப்படுத்துகிறார். `பெரும்பாலும், வியாசரின் கையால் தலைவருடப்பட்டே காவியத்தில் முன்வைக்கப்படுகிறான், கர்ணன். கதையை வைத்து நோக்கினாலே தாத்தனுக்கும், பேரனுக்கும் ஒற்றுமை தெரியும்; தனிக்கரிசனமும் புரியும்' என்கிறார், அவர். `மஹாவீர் கர்ணா'வுக்கு ஜெமோதான் கதை - வசனகர்த்தா.

மகாபாரத அறிஞர்களும், `காவியத்தின் எந்த இடத்திலும் கர்ணனை வியாசர் விட்டுக்கொடுப்பதில்லை. அவன் அவரின் மானசப்புத்திரன்' என்கிறார்கள். ஆம், `தனக்கென எதையும் கொள்ளா தழல்மகன், அவன்' என்றே, வியாசர் சொல்கிறார். மகாபாரதத்தில் கர்ணன் பங்களிக்கும் இடங்கள் குறைவு. ஆனாலும், அவன் ஆப்சன்ஸ்கூட ஏதோவொன்றை உரைத்துக்கொண்டே இருக்கும். அவனைப் பற்றிய விடுபடல்களும் நிறையவே இருக்கும். அத்தகைய விடுபடல்கள் மூலமே மானசப்புத்திரனுக்கு `மாஸ்' ஏற்றியிருப்பார் வியாசர்.   

மகாபாரதத்தின் மாபெரும் மாஸ் தருணம், `கர்ணனின் களம்புகுதல்’. காவியத்தின் திருப்புமுனை அத்தியாயமென்று, அதைச் சொல்லலாம். அஸ்தினாபுரத்து இளவரசர்கள் பலப்பரீட்சை நடத்திக்கொண்டிருப்பார்கள். அர்ஜூனன் வித்தைகளைக் காண்பித்து அரங்கித்தினரை வியப்பில் ஆழ்த்துவான். ஆசிரியர் துரோணர் கர்வத்தோடு, `இவனை வெல்பவன் இங்கில்லை. எங்கேயும் இல்லை' என்று அறிவிக்கும்போது, கிழக்கைக் கிழித்து எழுவான், கர்ணன்.

அட்டகாசமான அறிமுகம் அது. கர்ணன், பாஸ் ஆஃப் மாஸ்! அதேபோல, மகாபாரதத்தில் மாபெரும் அழகனாகச் சொல்லப்படுகிறான், கர்ணன். கண்ணனைக் காட்டிலும் அழகன்! பாஞ்சாலி சுயம்வரத்திற்கு அழைப்பு வருகிறது. துரியனுக்குத் துணையாக கர்ணனும் செல்கிறான். `நண்பேன்டா'க்களின் நாயகர்கள், நகர் நுழைகிறார்கள். ஒரு பெண், `அந்த உயரமானவன் யார்?' என்று கேட்கிறாள். அருகிருக்கும் பெண், `அங்கத்தின் தலைவன், அஸ்தினாபுரத்தின் தளபதி, கர்ணன்' என்கிறாள். அந்தப் பெண், `அளவில்லா அழகன்! இவனன்றி எவன் கொள்ள முடியும் இளவரசியை? சுயம்வரம் முடிந்துவிட்டதடி' என்கிறாள். 

ஆனால், அங்கே நடப்பது வேறு! சுயம்வர மண்டபம் மன்னர்களால் நிறைகிறது. போட்டி ஆரம்பிக்கிறது. மீன் இலக்கு நிறுத்தப்படுகிறது. வில் வைக்கப்படுகிறது. மற்ற மன்னர்கள் தோற்று விலகுகிறார்கள். கர்ணன் எழுகிறான். வில்லை எடுக்கிறான். அப்போது பாஞ்சாலி தடுக்கிறாள். `சூதன்மகனை கொழுநனென கொள்ளேன்' என்கிறாள். அரங்கம் நகைக்கிறது. துரியன் கொதித்தெழுகிறான். கர்ணன் தடுக்கிறான். `அவளின் விருப்பம் அதுவென்றால், ஆகுக’ என்று சொல்லிவிட்டு, களம் நீங்குகிறான். அப்புறம், அஸ்தினாபுர அவையில் அது எதிரொலிக்கிறது. ஒட்டுமொத்த காவியத்திலும், கர்ணன் சறுக்கும் ஒரே இடம் அது! கர்ணனுக்கும் பாஞ்சாலிக்கும் இடையே மெல்லிய காதல் இருந்ததாகவும் கதை உண்டு. `தளபதி’ படத்தில், அதை அழகாகக் கையாண்டிருப்பார், மணிரத்னம்.  

கர்ணன் மீது கண்ணனுக்குத் தனி அன்பு இருந்தது. போரில் களமிறங்குவதற்கு முன்னால், கர்ணன் மூன்று சந்திப்புகளை நிகழ்த்துவான். குந்தியிடம் பாசம் கேட்பான். பீஷ்மரிடம் நியாயம் கேட்பான். ஆனால், கண்ணனிடமே காரணம் கேட்பான். கர்ணன் களத்தில் சரிகையில், முதலில் விழும் கண்ணீர்த்துளி, கண்ணனுடையது. எப்போதும், வசுசேணனை வாஞ்சையுடன் பார்த்தவன், வாசுதேவன். அவனும் தேரோட்டி, இவனும் தேரோட்டி. அவன் ஆயர் குடிவேந்தன், இவன் வேளிர்குடி வேந்தன். அவனுக்கும் இரு தாய், இவனுக்கும் இரு தாய். அவன், கங்கையைக் கடந்து வந்தான். இவன், கங்கையில் மிதந்து வந்தான். அவனுக்கு நாகம் குடை என்றால், இவனுக்கு நாகம் துணை.

கர்ணனைச் சந்தித்தபின், குந்தியைச் சந்திக்கிறான் கிருஷ்ணன். குந்தி, `மறுத்துவிட்டான் அல்லவா?' என்கிறாள். கிருஷ்ணன், `ஆம் அத்தை! முத்தெய்வமும் முன்வந்தாலும், துரியனை துறவேன் என்றிட்டான்' என்கிறான். குந்தி `செய்நன்றி மறவோன் செங்கதிர் மைந்தன்' என்கிறாள். கிருஷ்ணன், ```அஸ்தினாபுரத்துக்கு நீயே அதிபதி' என்றும் ஆசைகாட்டினேன். ஆனால், அவன் அதைப் பொருட்டென்றே கொள்ளவில்லை" என்கிறான். குந்தி, ``ஆஸ்திக்கும், அரியணைக்கும் ஆசைப்படுவது அங்கனின் அகராதியிலேயே இல்லை" என்கிறாள். கிருஷ்ணன், ``ஆம், அறிந்தேன்" என்றபின், ``இப்போது என்ன செய்வது அத்தை? கர்ணனை சாய்க்காமல், துரியனை சாய்க்க இயலாது" என்கிறான். அதற்குப் பிறகே, குந்தி கர்ணனைச் சந்திக்கிறாள். ``நீ ராதேயன் அல்ல, கெளந்தேயன்" என்கிறாள். ஆனால் கர்ணன், ``நான் எப்போதும் ராதேயனே" என்று சொல்கிறான். குந்தி, ``ஐவர் உயிரையும் தானமளி மைந்தா" என்று கேட்கிறாள். கர்ணன், ``அர்ஜூனனைத் தவிர அனைவரின் உயிரையும் தந்தேன் தாயே" என்றுசொல்லி, அனுப்பி வைக்கிறான். 

`அர்ஜூனனைத் தவிர...' என்று அவன் சொன்னதற்குப் பின்னால், காண்டவத்தின் கண்ணீர் இருக்கிறது. அனைவரின் மீதும் அன்பு கொண்டவன், அர்ஜூனன் மீதும் அன்பு கொண்டவனாகவே இருக்கிறான். அர்ஜூனன் வித்தையை அதிகம் போற்றுபவனும் கர்ணனே. ஆனால், காண்டவதகனம் அவனை மாற்றுகிறது. அவனில் வன்மம் ஏற்றுகிறது. கர்ணவன்மத்தை அறிய காண்டவதகனத்தை அறிய வேண்டும். `காண்டவம்' என்பது, மகாபாரதத்தில் சொல்லப்படும் `சென்டினல் தீவு'. அங்கே, வெளியுலகையே அறியாமல் அமைதியாக வாழ்வார்கள், நாகரின மக்கள். ஆனால், அவ்வனத்தையும், அவ்வினத்தையும் கிருஷ்ணனும், அர்ஜூனனும் இணைந்து அழிப்பார்கள். கிருஷ்ணார்ஜூனர்களின் ஆணவ ஆட்டம், காண்டவதகனம். 

காண்டவம் எரிக்கப்படும். நாகரினம் அழிக்கப்படும். ஏதுமறியாதவர்கள் எதேச்சதிகாரத்துக்குப் பலியாவார்கள். பழங்குடி வனமான காண்டவத்தில், இந்திரப்பிரஸ்தம் எனும் நவீன நகர் எழும். அழிக்கப்பட்ட இனத்தின் காவலனாக கர்ணன் எழுவான். அவர்களின் கண்ணீரை ஏந்துவான். அவர்களுக்காக களம் காண்பான். நாகர் தொன்மக் கதைகளில் இது விரிவாகவே சொல்லப்படுகிறது. 

அக்கதைகளில், காண்டவ எரிப்பின்போது, நாகரினத்தில் சிலர் எஞ்சுகிறார்கள். அவர்கள், கர்ணனிடம் தஞ்சம் அடைகிறார்கள். அவன் கரம்பற்றி, `எங்கள் வேந்தே! எங்களை ஏற்பாயாக' என்று இறைஞ்சுகிறார்கள். கண்ணீரைக் கண்டதுமே கனிகிறான். நாகர்களை ஏற்கிறான். நாகபாசன் ஆகிறான். நாகாஸ்திரம் ஏந்துகிறான். ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசிலும், கர்ணனின் `காண்டவ வஞ்சினம்' சொல்லப்படுகிறது. அவன், காண்டவ மக்களுக்கு முன்னால் நின்றபடி, `இவர்கள் என் மக்கள். இவர்களின் பொருட்டு இவ்வுலகையே ஏழுமுறை எரிக்கும் பெருவஞ்சம் என்னில் குடியேறுக' என்று உறுமும்போது, உடல் சிலிர்க்கும். 

நாகர் தொன்மங்களில் அழுத்தமாகவே சொல்லப்படுகிறது, கர்ணனின் கதை. `உடன் பிறந்தவன் எனத் தெரிந்தும் அர்ஜூனன் உயிர்பறிக்க கர்ணன் துணிந்தது, காண்டவத்திற்காகவே' என்கிறது. இப்போதும், நாகர் குடிகளில் கர்ணனை வணங்கும் வழக்கம் இருக்கிறது. கர்ணனிடம் இருந்ததாகச் சொல்லப்படும் `காண்டப்பிரஸ்தம்' எனும் வில்லும், இதை உறுதிப்படுத்துகிறது. அவனிடம் இன்னொரு திவ்ய வில்லும் இருந்தது. அதனுடன் ஒப்பிட்டால், காண்டீபமே காட்சிப்பொருள்தான். அது, முக்கண்ணன் எடுத்த வில்லும், முப்புரம் எரித்த வில்லுமான, விஜயம். ஆனால் அவ்வில்லை, அவன் பயன்படுத்தியதே இல்லை. சாதாரண வில்லைக்கொண்டே எப்போதும் போருக்கு எழுவான். வில்லைவிட வில்திறனை நம்பியவன், அவன்!

கர்ணன், எளியவன். `எக்குடியும் என் குடியே' என்றுரைத்தவன். வசைச்சொல் உரைத்தோரையும் வாழ்த்தியவன். கடைசிவரை `ராதேயன்' என்றே அழைக்கப்பட்டான். அப்படி அழைக்கப்படவே அவன் விரும்பினான். சூரியப்புத்திரன் என்ற அடையாளத்தைவிட, சூதப்புத்திரன் என்ற அடையாளத்தையே சூடினான். `இந்திய தேசத்தில் முதன்முதலில் இட ஒதுக்கீடு பெற்றவன் கர்ணன்' என்று, எவரோ வலைதளத்தில் சொல்லியிருந்தார். உண்மைதான்! வாழ்நாள் முழுவதும் கொடுத்தே வந்தவன், பெற்றுக்கொண்ட ஒரே தருணம் அது. அதை அவனுக்கு அளித்தவன், துரியன். அவனுக்காகவே வாழ்ந்தான் கர்ணன். ஓரிடத்தில் கர்ணன் துரியனிடம், `நானிருக்கும் வரை நீயிருப்பாய்' என்று சொல்கிறான். கர்ணன் இருந்தவரை துரியன் இருந்தான். கர்ணன் வீழ்த்தப்பட்டதும், துரியனும் வீழ்த்தப்பட்டான். 

குருஷேத்ரக் களத்தில், பதினொன்றாவது நாள்தான் களமிறங்குகிறான், கர்ணன். அதற்கு முன்னாலேயே, கர்ணனை பலவீனப்படுத்தி இருப்பார்கள். கவசத்தை இந்திரன் தானமாகப் பெறுவான். ஜனன ரகசியத்தைக் கிருஷ்ணன் உடைப்பான். குந்தி வரம் வாங்குவாள். துரோணர் அவமதிப்பார். பீஷ்மர் தடுப்பார். இதையெல்லாம் கடந்தே, களம் நுழைவான், கர்ணன். தேர்ச்சக்கரம் சேற்றில் சிக்கும். சல்லியன் விட்டோடுவான். வில்லை எடுக்காமல் கீழிறங்குவான். வித்தை மறப்பான். ஆனாலும், தேர்ச்சக்கரம் தூக்குவான். கிருஷ்ணன், `இதுவே தருணம் பார்த்தா! அங்கன் தேரேறினால், அத்துடன் நீ ஒழிந்தாய்' என்று எச்சரிப்பான். அர்ஜூனன் அம்பெய்வான். கர்ணன் சாய்வான். மகாபாரதத்தின் உச்ச தருணம் அது. கண்ணீரின்றி கடக்கவே முடியாது. கர்ணவதம் முடிந்ததும், மகாபாரதமே முடிந்துவிட்டதைப்போலத் தோன்றும்.

இப்படி ஒரு சரித்திரத்தில் கர்ணனாகக் கலக்கப்போகிறார், சியான். மலையாளத்தில் பீரியட் படமாக வந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற `என்னு நிண்டே மொய்தீன்’ படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இந்தப் படத்தை இயக்குகிறார். நியூயார்க்கைச் சேர்ந்த யுனைடெட் பிலிம் கிங்டம் தயாரிப்பு நிறுவனம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாரிக்க இருக்கும் படத்தில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காத்திருப்போம்!

அடுத்த கட்டுரைக்கு