Published:Updated:

'பாம்பன் பாலம்' to 'துப்பாக்கி முனை'  

'பாம்பன் பாலம்' to 'துப்பாக்கி முனை'  
'பாம்பன் பாலம்' to 'துப்பாக்கி முனை'  

'துப்பாக்கி முனை', டீசரில் மின்சாரம் காட்டி நெட்டிசன்களை பரபரப்பேற்றிய விக்ரம் பிரபுவின் அடுத்த படம், டிசம்பர் 14 அன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவிருக்கிறது... பரபரப்பாக திரையிடல் வேலைகளுக்கு நடுவில் நம்மிடம் படம் பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் இளம் இயக்குனர் தினேஷ் செல்வராஜ்.

'பாம்பன் பாலம்' to 'துப்பாக்கி முனை'  

6 வருடங்களுக்கு முன்னாடியே கதை ரெடி!

முதல் மரியாதை, கிழக்கே போகும் இரயில், அன்னக்கிளி, கடலோரக் கவிதைகள் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளரான R. செல்வராஜ் அவர்களின் மகன் தினேஷ் செல்வராஜ். 'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல' படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக களம்கண்டார் தினேஷ். அந்தப் படத்தின் கதை, திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணுவிற்கு பிடித்துப்போக, 'தாணு சார் தந்த வாய்ப்புதான் துப்பாக்கி முனை உருவாக முதல் காரணம்' என சிலாகிக்கிறார் தினேஷ்.

'என்னுடைய முதல் கதை துப்பாக்கி முனை, 2012-லேயே கதையை தயார் செய்து வைத்திருந்தேன். போதிய பட்ஜெட் இல்லாததால், அதை முதலில் இயக்க முடியவில்லை. 2017-இல் நேரம் கூடிவந்தது, மார்ச் மாதம் 08 ஆம் தேதி இந்தக் கதையை தாணு சாரிடம் சொன்னேன், 10 ஆம் தேதி கையில் அட்வான்ஸ்' எனக் கூறிப் பூரிக்கிறார்.

'பாம்பன் பாலம்' to 'துப்பாக்கி முனை'  

படத்தின் 'ஒன் லைனர்' எப்படி சிக்கியது?

போலீஸ் என்கவுண்டர் நடக்கவிருக்கும் அந்தத் தருணம்  மிக மிக பரபரப்பானது. ஒரு உயிரைப் பறிக்கவிருக்கிறோம் எனும் போலீஸின் மன நிலை, இதுதான் நம் கடைசித் தருணம் என உணரும் குற்றவாளியின் மன நிலை, இரண்டு மனங்களும் நேரெதிர் புள்ளியில் சந்திக்கும் அந்தக் கணம் எவ்வளவு ஆழம் நிறைந்ததாக இருக்கும்! அப்போது இருவரின் எண்ண ஓட்டமும் என்னவாக இருக்கக்கூடும்? இவ்வாறான காட்சிதான் முதலில் என் மனத்திரையில் உதித்தது... மிகவும் சுவாரசியமான இந்தப் புள்ளியில் இருந்து கதையை எழுத ஆரம்பித்தேன்.

துப்பாக்கியை, தன் இன்னொரு கையாய் வைத்து பணிபுரியும் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். சவரக் கத்தியை மற்றொரு கரமாக வைத்து வாழ்க்கை நடத்திவரும் ஒரு சாமானிய சவரத் தொழிலாளி. இருவரையும் என்கவுண்டர் தருணம் இணைக்கிறது. இதற்கான காரணம் என்ன? இருவரின் பின்புலம் என்ன? இதை, கதை போகும்போக்கில் சொல்லும் துப்பாக்கி முனை, 24 மணி நேரத்துக்குள் நடக்கும் த்ரில்லர் வகையறா கதையாகும். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக விக்ரம் பிரபு நடித்துள்ளார், கதாபாத்திரத்தின் பெயர் பிர்லா போஸ். மிக முக்கியமான மற்றொரு கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்து நடித்துள்ளார் எம்.எஸ்.பாஸ்கர்.

'பாம்பன் பாலம்' to 'துப்பாக்கி முனை'  

படத்தின் டீசரில் இராமேஸ்வரம் ஹைலைட்டாக இருக்கிறதே!

'அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டாள், டும் டும் டும் போன்ற படங்களில் மணிரத்னம் சாருக்கு அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளேன். கன்னத்தில் முத்தமிட்டாள் ஷூட்டிங்கின் போது இராமேஸ்வரம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அந்த மண், மக்கள், விசாலமான கடலும் கரையும், பாம்பன் பாலமும் இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. என் முதல் படம் இராமேஸ்வரம் மண்ணில்தான் என அப்போதே முடிவெடுத்துவிட்டேன். ஏன், இந்தப் படத்தின் பெயர் கூட முதலில், 'பாம்பன் பாலம்' என்றே வைத்திருந்தேன், ஆனால் ஆக்ஷன் த்ரில்லர் வகையில் கதை இருப்பதால் 'துப்பாக்கி முனை' எனும் டைட்டிலை இறுதி செய்தோம்! படம் முழுக்க இராமேஸ்வரத்தின் அடையாளமான இடங்களைப் பார்த்து இரசிக்கமுடியும்.

தனது முதல் படத்துக்கு உற்சாகமான விமர்சனத்தைத் தராத மணிரத்னம், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பெரிய தம்ப்ஸ் அப் காட்டியிருப்பதாகக் கூறுகிறார் தினேஷ் செல்வராஜ். இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பும் இந்த சீசனில் மற்றுமொரு ஹிட் அடிக்கும் என எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தத் துப்பாக்கி முனை... தோட்டாவின் ஆழம் பார்ப்போம் டிசம்பர் 14  அன்று...