Published:Updated:

" 'மரண மாஸ்' ரஜினி, 'ஹல்க்' வில்லன்.." - பாபி சிம்ஹா ஷேரிங்ஸ்

நடிகர் பாபி சிம்ஹா பேட்டி. ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கும் 'பேட்ட' படம் குறித்தும், பிற படங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

" 'மரண மாஸ்' ரஜினி, 'ஹல்க்' வில்லன்.." - பாபி சிம்ஹா ஷேரிங்ஸ்
" 'மரண மாஸ்' ரஜினி, 'ஹல்க்' வில்லன்.." - பாபி சிம்ஹா ஷேரிங்ஸ்

தமிழில் பல படங்களில் வில்லனாக மிரட்டி வரும் பாபி சிம்ஹாவின் அடுத்த படம், 'பேட்ட'. தவிர, 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் நடிப்பதோடு, தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். தற்போது, 'வெள்ள ராஜா' வெப் சீரீஸில் நடித்து வரும் பாபி சிம்ஹாவிடம் பேசினோம். 

"பல படங்கள்ல பிஸியா இருக்கிற நீங்க, வெப் சீரீஸ்ல நடிக்க காரணம் என்ன?"

"வெப் சீரீஸ்ல நடிக்கிறதை நான் நெகட்டிவா நினைக்கல. அது என்னோட கரியருக்கு இன்னும் கைக்கொடுக்கும்னு நினைக்கிறேன். நிறைய பட வாய்ப்புகளுக்கு மத்தியிலதான் வெப் சீரீஸைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். காரணம், தரமான கதைதான். ஒரு படம் எடுக்கும்போது அது கமர்ஷியலா வெற்றியடைய சில யுக்திகளைச் சேர்ப்போம். சில படங்கள் அதுக்கு விதிவிலக்கா அமையலாம். ஆனா, அதெல்லாம் தரமான படங்கள்னு விருது விழாக்கள்ல பாராட்டு பெருமே தவிர, அது ரசிகர்கள்கிட்ட சென்றடையிறது ரொம்பக் குறைவு. வெப் சீரீஸ் பண்ணும்போது, அதைப்பத்தி கவலைப்பட அவசியமே இல்லை. கதைக்குத் தேவையானதை மட்டும் காட்சிகளா பண்ணியிருக்கோம். இந்த சீரிஸ்ல லவ், காமெடி காட்சிகள் இல்லை. ஒரு நல்ல படத்துல நடிச்ச திருப்தி, இந்த சீரிஸ் மூலமா எனக்குக் கிடைச்சிருக்கு. தமிழ் ஆடியன்ஸுக்கு மட்டுமில்ல, எல்லோருக்கும் 'வெள்ள ராஜா' பிடிக்கும்னு நம்புறேன்." 

"வெப் சீரீஸ்ல இருக்கிற பாசிட்டிவ் விஷயங்கள் என்னென்ன?"

"சாதாரண படம்னா சில வாரங்கள் மட்டும்தான் தியேட்டர்ல ஓடும். வெப் சீரீஸ்னா எப்போ வேணும்னாலும் நெட்ல பார்த்துக்கலாம். 'வெள்ள ராஜா' சீரீஸ்ல தேவா கதாபாத்திரம் மாதிரி எனக்கு அமையாதானு ரொம்பநாளா எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். எல்லா படங்களுக்கும் ஆடியன்ஸ் ஒன்னுதான். ஆனா, எல்லாப் படமும் அத்தனை ஆடியன்ஸையும் திருப்தி படுத்தாது. 'வெள்ள ராஜா' படம் த்ரில்லரை விரும்புறவங்களுக்கு மட்டும்தான் பிடிக்கும். இந்த சீரீஸ்ல ஹாலிவுட் படத்துல வர்ற மாதிரியான டீடெயிலிங் கொடுத்திருக்கார், இயக்குநர் குகன் சென்னியப்பன். சென்னையிலதான் செட் போட்டுப் படமாக்கினோம். செட்ல பழைய காலத்து போட்டோ, சிலைகள், பொம்மைகள் இருக்கும். ஓரே ஒரு கதாபாத்திரத்தைக் காட்டும்போது, அதுக்குத் தேவையான ஒரு பொம்மையைப் பின்னாடி வெச்சிருப்பார், இயக்குநர் குகன். ஸ்கிரிப்ட்டுக்கு மட்டும் கிட்டத்தட்ட சில வருடங்கள் செலவழித்ததா சொன்னார். அந்த உழைப்பு எனக்குத் தெரிஞ்சது."

" 'ஜிகர்தண்டா' மாதிரியான கேங்ஸ்டர் கதைகளையே அதிகம் தேர்ந்தெடுக்குறீங்களே..."

"எனக்கு வர்றதெல்லாம் அப்படித்தான் வருது. தவிர, எனக்கும் இப்படியான கதைகள்ல அதிகமா நடிக்கிறதுனால, கேங்ஸ்டர் கேரக்டருக்கான லுக், ஸ்டைல் எல்லாம் பக்காவா செட் ஆகிடுச்சு. தவிர, எனக்கும் துப்பாக்கின்னா ரொம்பப் பிடிக்கும். காதல் கதையில நடிக்கவும் ரெடியாதான் இருக்கேன்."   

"சீரீஸ்ல இருக்கிற மற்ற கதாபாத்திரங்கள் பற்றி...?" 

"என்கூட காளி வெங்கட் சார் நடிச்சிருக்கார். அவர் காமெடி மட்டும்தான் பண்ணுவார்னு நினைச்சவங்களுக்குப் பதிலடி கொடுத்து சில சீரியஸான கேரக்டரையும் பண்ணார். இதிலும், அவருக்கு அப்படியான ஒரு கேரக்டர். சீரிஸ்ல ஸ்கூல் டீச்சரா வர்றார். நடிகை காயத்ரி 'ஆதிரா'ங்கிற கேரக்டர்ல சமூக சேவையாளரா நடிச்சிருக்காங்க. பார்வதிக்கு தெனாவெட்டான ஒரு போலீஸ் கதாபாத்திரம். அவங்களுக்குத் துப்பாக்கி எடுத்து சுடணும்ங்கிறது ரொம்பநாள் ஆசையாம். இந்த சீரிஸ் மூலமா அதை நிறைவேத்திக்கிட்டதா சந்தோஷப்பட்டாங்க. ரத்தம், துப்பாக்கி, சண்டைக் காட்சிகள்னு ஆசைப்பட்டதுக்கும் அதிகமாவே அவங்களுக்குக் கிடைச்சிருக்கு." 

"சீரிஸ்ல டெரரா ஒரு வில்லன் இருந்தாரே... யார் அவர்?"

" 'சாமி 2' ஸ்பாட்லதான் அவரை முதல்முறை பார்த்தேன். 7.2 அடி உயரமான ஆள். தெலுங்குப் பட வில்லன் மாதிரி இருந்தார். ஹரி சார்கிட்ட அவரைக் கவனிக்கச் சொன்னேன். ஹரி சார், 'கண்டிப்பா ஞாபகம் வெச்சுக்கிறேன், அடுத்தடுத்த படங்கள்ல நடிக்க வைக்கிறேன்'னு சொன்னார். அவர் பெயர், மனோகரன். வாலிபால் பிளேயர். கார்ப்பரேட் கம்பெனியில வேலை பார்க்கிறார். இயக்குநர் குகன் புதுமுக வில்லன் ஒருத்தரைத் தேடிக்கிட்டு இருக்கும்போது, இவரைப் பத்தி சொன்னேன். அவர்கிட்ட பேசிப் பார்த்தாதான், தெரியுது குழந்தை மனசுக்காரரா இருக்கார். அவரை வில்லனா பார்க்கிறப்போ, அவருக்கே சிரிப்பாதான் இருக்கிறதா சொன்னார். செட்ல நாங்கெல்லாம் அவரை 'ஹல்க்'னுதான் கூப்பிடுவோம். தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன்களில் ஒருவரா இவர் வலம் வருவார்னு நம்புறேன்."

" 'வல்லவனுக்கு வல்லவன்' படம் பற்றி?"   

"சேகுவாரா வாழ்க்கை வரலாற்றைப் படமா எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். வீட்ல அவரோட பெரிய போட்டோவை மாட்டி வெச்சிருக்கேன். கல்லூரி காலத்துலேயே அவரைப் பற்றி ஒரு மேடை நாடகம் பண்ணலாம்னு நினைச்சிருக்கோம். சில காரணங்களால பண்ணமுடியல. 'வல்லவனுக்கு வல்லவன்' படத்துல சேகுவாரா கெட்டப் போட சான்ஸ் கிடைச்சது. அவரோட பேச்சு, நடை, உடையெல்லாம் எப்படி இருக்கும்னு படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டு நடிச்சிருக்கேன். சே என் இஸ்பிரேஷன். கண்டிப்பா ஒருநாள் அவரோட வாழ்க்கையைப் படமா எடுப்பேன்!"

"ரஜினியோட நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?" 

"நாமெல்லாம் ரஜினி சாரை நேர்ல பார்க்க முடியுமானு ஏங்கிக்கிட்டு இருந்த காலம் போய், இப்போ அவரோட சேர்ந்து நடிக்கிறேன். இதுக்கு கார்த்திக் சுப்பராஜ் சாருக்குத்தான் நன்றி சொல்லணும். 'ஜிகர்தண்டா' படத்துல இருந்து கார்த்திக் சாருக்கும் எனக்குமான நட்புறவு உன்னதமானது. இந்தப் படத்துக்காக வெளியூர், வெளிநாடுனு நிறைய இடங்கள்ல ஷூட்டிங் பண்ணியிருக்கோம். எனக்கு ரஜினி சார்கிட்ட அதிகமா பேச வாய்ப்பு கிடைக்கலை. ஆனா, அவர் நடிக்கிறதைப் பார்க்கும்போது ஒன்னு மட்டும்தான் தோணுச்சு, சூப்பர் ஸ்டாருக்கு இணை சூப்பர் ஸ்டார்தான்! படத்துல தலைவர் மரண மாஸ் காட்டியிருக்கார்" என்கிறார், பாபி சிம்ஹா.