Published:Updated:

நீர் வற்றிய நிலத்தின் நெடுமரம் - சைலானின் The Wild Pear Tree ஒரு பார்வை #iffi2018

நீர் வற்றிய நிலத்தின் நெடுமரம் - சைலானின் The Wild Pear Tree ஒரு பார்வை #iffi2018
நீர் வற்றிய நிலத்தின் நெடுமரம் - சைலானின் The Wild Pear Tree ஒரு பார்வை #iffi2018

ஒரு வட்டத்துள் அடைபட்டு வாழ்வதைப் பற்றிய விசனங்கள் தீவிரமெடுக்கும் இளமையில் நமக்குரிய இடம் எங்கோ மலையுச்சியில் இருப்பதாய் நம்பத் தலைப்பட்டு அடிவாரத்தில் அரற்றத் தொடங்குகிறோம். உச்சியில் ஆடும் மரக்கிளையின் பூரிப்பைக் கண்டு ஏக்கம் கொள்ளும் மலையின் காலடிப் பெருமரத்தின் நமைச்சல் சாதாரணமானதல்ல. அதனுள் மலை முகடுகளில் வேர் பரப்பும் கனவுகள் முகிழ்க்கின்றன. வெறும் பகற்கனவுகள்! நிதர்சனங்களின் சாபங்களை வடிகட்டி விட்ட கானல் கிளர்ச்சியின் ஊற்றுகள். எடையற்று மிதக்கச் செய்யும் மாயக் கனவுகளின் இலயிப்பில் கட்டுண்டு கிடந்த பிடிமானங்கள் வெகு விரைவிலேயே நழுவத் தொடங்குகின்றன. மிதப்பின் விசை திடீரென அறுபட்டதால் திடுக்கிட்டு விழித்த மனத்தில் பெரும் பதற்றம் உண்டாகிறது. தூரத்திலிருந்து ஒற்றை மலையென அறிந்திருந்ததை நெருங்கி நின்றுணர்கையில் பிளவுண்ட பெரும் பாறைகளின் தொகுப்பாகக் காணத் தலைப்படுகிறோம். தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் மலையை இலகுவாகப் பறந்து சென்று அளைந்து விடத் துடித்த பேராசைக் கனவுக்குமிழ்கள் சட்டென்று வெடித்துக் காணாமற் போகின்றன. பள்ளத்தாக்கின் சரிவுகளிலிருந்து சீறியெழும் மூச்சொலிகள் ஓய்ந்தொடுங்கி கூர்மழுங்கிக் குமைகின்றன. தான் வீழ்ச்சியடைவதை பெரும் ஆரவாரத்துடன் உலகுக்கு அறிவித்துக் கொண்டவாறு எக்காளமிட்டுக் கொட்டும் அருவியின் சீற்றம் அளப்பரியதாகிறது.

நீர் வற்றிய நிலத்தின் நெடுமரம் - சைலானின் The Wild Pear Tree ஒரு பார்வை #iffi2018

சுய பலவீனங்களின் பெருஞ்சுழலில் சிக்கி மீண்டெழ மூச்சுத் திணறிக்கொண்டிருக்கையில் நமது சுற்றமும் நட்பும் சிறு கல்லாய் இடறினாலும் நெஞ்சின் ஆழங்களிலிருந்து ஆவேசம் பொங்கிப் பிரவகிக்கின்றது. காலூன்றி நிற்கவே தள்ளாட்டம் போடும் மனது கற்கூரை தடுத்திருக்கா விட்டால் வானத்தை எட்டியிருப்பேன் என நொண்டிச் சாக்கு சொல்லி சமாதானம் அடைகிறது அல்லது வெறுப்பை உமிழ்கிறது. அவரவர்க்கு அவரவர் வழித்தடம். தன்னை மட்டும் கவனத்துடன் விடுவித்துக் கொண்டு மற்றமை மீது பழிகள் சுமத்தி தப்பித்துக் கொள்ளத் தோதாக நாம் / நம்மைச் சார்ந்திருக்கும் மனிதர்கள் எப்போதும் இருப்பார்கள் தானே? பலவீனர்களின் கூட்டுத் தொகையாக நிலைபெற்று விட்ட குடும்ப அமைப்பில் ஒருவரை ஒருவர் அண்டி அனுசரித்து ஐக்கியமாவதே தினசரி அல்லாட்டமாக நஞ்சூறி அச்சுறுத்தத் தொடங்குகின்றது. தான் இன்னார் எனும் விருப்பத்திற்கும் அறிதலுக்குமான இடைவெளிகள் நடைமுறை சார்ந்த முட்டுக்கட்டைகளால் நிரப்பப்படுகின்றன. உள்ளும் புறமும் தளைகள் இறுக இறுக நெருக்கிப் பிடித்து அழுத்தி வைக்கப்பட்டிருந்த உஷ்ணப் புழுக்கங்கள் யாவும் தாள முடியாத தருணங்களுக்காகக் காத்திருக்கின்றன. உச்சக் கணத்தில் உக்கிரப் பிரவாகமெடுக்கின்றன. அவை எதிர்ப்படும் எவரையும் சீண்டிக் குதறி நெஞ்சங்குளிர்ந்து பசியாறத் தயங்குவதில்லை.

நீர் வற்றிய நிலத்தின் நெடுமரம் - சைலானின் The Wild Pear Tree ஒரு பார்வை #iffi2018

துருக்கிய இயக்குநர் நூரி பில்கே சைலானின் (Nuri Bilge Ceylon) சமீபத்திய படம் The Wild Pear Tree. 2018ம் ஆண்டின் தங்கப் பனை விருதிற்காக கான் திரைப்பட விழாவில் போட்டியிட்டது. அதன் மையக் கதாபாத்திரமான சினான் (Sinan), இளமைக்கால சைலானை பிரதிபலிக்கும் திரை வார்ப்பு. மேலே குறிப்பிடப்பட்டிருப்பவற்றின் விநோதக் கலவை. வரலாற்றுப் பெருமிதங்களில் அமிழ்த்திக் கொண்டு நிகழ்கால ஒளியை இழந்து விட்ட கிராமத்துக்குப் பட்டம் பெற்றுத் திரும்புகிறான். ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பது அவன் லட்சியம். மெட்டா ஃபிக்ஷன் வகைமையில் எழுதி முடிக்கப்பட்ட நாவல் பிரதியும் கைவசம் உண்டு. ஆனால், இன்னமும் இறந்த காலத்து நினைவேக்கச் சிறப்புகளை எண்ணிப் பொருமியவாறு இன்றைய நாளில் திணிக்கப்பட்டதை கசப்புடன் சப்புக் கொட்டும் ஊர். `சுற்றுலாக் கையேடு எழுதேன்' என்று ஆலோசனை சொல்கிற மனிதர்கள். இன்மைகள் பலவும் புடம் போட்டு வரிசை கட்டி நிற்கிற சீரணிக்க இயலாத சூழலில் தனது நூலைப் பதிப்பித்துத் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள யத்தனிக்கும் இளைஞனின் கதை என ஒற்றை வரியில் படத்தைச் சுருக்கி விடலாம்தான். ஆனால், அவனது குறுகியோடும் வாழ்வில் சைலான் பொதிந்து வைத்திருக்கிற விசாலமான பார்வைகளை வியக்காமல் இருக்க முடியாது. பழைய கூடுகளை விட்டு வெளியேறி புத்துயிர் பூணும் சினானின் அகப் பயணத்தை விரித்தும் வளைத்தும் சகலத்தையும் சுழற்றிக்கொண்டு போகிறார். உலர்ந்து களைத்துக் கிடக்கும் மர நிழலில் வெயிலைப் பற்ற வைக்கிறார். அது துன்பக்கேணியிலிருந்து நிலத்துள் ஊறிய நீரை உள்ளிழுத்துப் பருகி ஊன் வளர்த்த மரம்.

நீர் வற்றிய நிலத்தின் நெடுமரம் - சைலானின் The Wild Pear Tree ஒரு பார்வை #iffi2018

எந்தக் காட்சியைச் சொல்வது? எதைத்தான் விடுவது? மூன்று மணி நேரம் எட்டு நிமிடங்கள் ஓடும் படத்தின் அடர்த்தி கூடிக் கொண்டே போகிறது. தனது முந்தைய படங்களின் தடங்களைத் துடைத்தெறிந்து விட்டு, சைலான் தன்னை முற்றிலுமாகப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். நிறைய பேசுகிறார்கள். நகைத்து வைப்பதற்கான சொல்லாடல்கள் அவ்வப்போது மின்னுகின்றன. ரிச்சர்ட் லின்க்லேட்டரின் Before Sunrise/ Sunset/ Midnight படங்களில் பயின்று வருவது போன்ற சிமிந்து கடக்கும் வேடிக்கைக் கதைகள் அல்ல. எட்டுத் திசைகளிலும் இலக்கற்று சிதறிப் பறப்பது போன்ற போக்குக் காட்டல்களுக்கு ஊடே துலக்கம் பெறும் வரையறைக்குட்பட்ட கரைகளுமல்ல. சைலானுக்கென்று அழுத்தமாய் நிறுவ ஓர் உறுதியான நோக்கம் இருக்கிறது. அது பாதை புலப்படாத வானில் திக்கற்று அலைவுறுவதில்லை. தன்னைத் திரட்டி வலுவாய் மிதந்தெழும் உள்ளடுக்குகள் ஒவ்வொன்றும் அதனதன் பிரத்யேகப் பின்புலத்தில் பலமாய் நெய்யப்பட்டிருக்கின்றன.

நீர் வற்றிய நிலத்தின் நெடுமரம் - சைலானின் The Wild Pear Tree ஒரு பார்வை #iffi2018

இரண்டு இமாம்களும் சினானும் தங்களுக்குள் விவாதங்கள் நிகழ்த்திக் கொண்டவாறு நீண்ட நடைப்பயணம் மேற்கொள்ளும் காட்சி ஓர் உதாரணம். திருட்டுப் பழம் பறிக்கும் இமாம்கள். மூத்த இமாமான சினானின் தாத்தாவைச் சுரண்டிப் பிழைக்கத் தயங்காதவர்கள். மரமேறி நின்றிருக்கும் இமாம் மீது மறைந்திருக்கும் சினான் தொடர்ந்து கல்லெறிந்து அவர்களை பதைபதைக்கச் செய்து விட்டு, பின்னர் சாவகாசமாய் வெளிப்படுவதில் உள்ள வன்மம் சினானையும் புதிதாய்க் காட்டிக் கொடுக்கிறது. இருளின் ஆழங்களில் உள்ளுறைந்த கீழ்மைகளின் போதம் வெட்டவெளியை எட்டிப் பார்த்தல். நிழலின் கருக்கு. வெறுமையில் புரண்டு ஒருக்களிக்கும் ஒளியின் சின்னஞ் சிறிய கீற்று. Medium Long Shot-கள் வெட்டப்பட்டு Extreme Long Shot-கள் உட்புகும் அந்த விவாதப் பயணத்தில் முகமூடிகள் அதிர்ந்து தம்மை உதறிக் கொள்கின்றன. மூவருடைய முகங்களின் கரிப்பையும் ஊடறுத்து குரல்களின் தீவிரம் மட்டும் மேலெழுகிறது. பல்வேறு முகங்களைச் சூடிக்கொண்ட ஒற்றைக் குரல். துளைக்க இயலாத பாறைகளில் மோதிச் சிதறும் எதிரொலிப்பு.

Red Weapon 6K கேமராவைப் பயன்படுத்திப் படமாக்கப்பட்ட விதம் ஃபிலிம் சுருள்களில் எடுக்கப்பட்ட படங்கள் தோற்றுவிக்கும் மயக்கத்தைக் கிளர்த்துகின்றது. பேரி மரத்தின் நிழலில் துயில் கொண்டிருக்கும் கைக் குழந்தையின் சிவந்து கன்றிப்போன மேனியெங்கும் செவ்வெறும்புகள் ஊர்ந்து செல்லும் அந்த ஒற்றைக் காட்சித் துணுக்கு போதும். சைலானின் மேதைமை வீச்சு எளிதில் புலப்பட்டு விடுகிறது. சலிப்பும் சோர்வும் வீணடிக்கும் தினசரி வாழ்வு பற்றிய ஏக்கங்களினால் சன்னதங் கொள்ளும் உளைச்சல்களின் பெருக்கை அவற்றின் வீரியங் குன்றாது வளர்த்தெடுக்கிறார். ஆர்ப்பாட்டமில்லை. கூச்சலில்லை. ஆனாலும் அது நம் சிடுக்கான மனங்களைத் தீண்டுகிறது. உணர்வுச் சீற்றம் சுழிந்தோடும் தருணங்களிலும் சைலான் தேர்ந்தெடுத்துக் கொள்கிற நிதானம் பிரமிப்பூட்டியது.

நீர் வற்றிய நிலத்தின் நெடுமரம் - சைலானின் The Wild Pear Tree ஒரு பார்வை #iffi2018

குற்றமும் கசடுகளும் சூழ்ந்த மின்சாரமற்றப் பின்னிரவில் தேநீர் கொண்டு வரும் கள்ளமில்லாப் பேரழகியை நாம் Once Upon A Time In Anatolia-வில் தரிசித்திருப்போம். முணுமுணுப்புகளின் ஒலியையும் முற்றடங்கச் செய்து நிசப்தங்களைத் தொட்டணைபவள். அவளுக்கு நிகராக நம்மைக் கலைத்துப் போடும் பெண்ணொருத்தி இந்தப் படத்திலும் வருகிறாள். ஹதீஸ்! சினானின் நண்பனுடைய முன்னாள் காதலி. அவளது தோரணையும் வேதனையும் பின்னியாடும் அவளுடனான சந்திப்பில் சினானின் பாசாங்குகள் பலமிழந்து தவிக்கின்றன. இயலாமையும் கழிவிரக்கமும் ஆங்காரமாக உருவெடுக்கும் அந்த முத்தக் காட்சியில் சிறிய அவகாசத்திற்குள்ளாகவே ஒருவிதமான கனவுத் தன்மை சலனமற்று முழுமையாகத் திரண்டு விடுகிறது. ஒரு பழுத்த இலை அசையும் ஒலியைத் தவிர வேறு இசையில்லை. முடிக் கற்றைகள் அலைபாயும் ஹதீஸின் தீர்க்கமான முகத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மைப் போலவே சினானின் ஆழத்தினுள்ளும் அப்போதே ஓர் உடைவு ஏற்பட்டிருந்தால் எத்தனை ஆறுதலாய் இருந்திருக்கும்?

நீர் வற்றிய நிலத்தின் நெடுமரம் - சைலானின் The Wild Pear Tree ஒரு பார்வை #iffi2018

ஒவ்வொரு கதாபாத்திரமும் அதனதன் இடத்தில் கச்சிதமாய்ப் பொருந்தி நிறைவு செய்கிறார்கள். சிறுகதைகளின் சூட்சமங்களுக்குள் நின்று படம் பண்ணிக் கொண்டிருந்த இயக்குநர் நாவலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார் என்று சொல்லலாம். நீட்டி முழக்கி விரித்தெடுக்க ஏராளமான அம்சங்கள் நெளிந்தோடும் படம். ஆயினும் படத்தின் பிரதானமான மையச் சரடை இங்கு எழுதாமல் விட்டு வைக்கிறேன். சினானின் தந்தை. அவரைப் பற்றியும் சொல்லி விட்டால் படம் பார்க்க வேண்டிய அவசியமிருக்காது. இதுகாறும் வரலாற்றுத் தொடர்ச்சியின் புழுதிப் பக்கங்களில் தனி மனிதர்களின் இருப்பைக் காத்திரமாகக் கேள்விக்குட்படுத்தி வந்தவர், முதன் முறையாக தொடர்ந்து வரும் நிழலுருவை அரவணைக்கப் பார்த்திருக்கிறார். அதன் விளைவு என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியது.

பின் செல்ல