தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவள் இரும்பு மனுஷி!

அவள் இரும்பு மனுஷி!
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் இரும்பு மனுஷி!

தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் - அண்ணன் மணிகண்டன்சிஸ்டர்

‘சாமி 2’, `வடசென்னை', `செக்கச் சிவந்த வானம்', `துருவ நட்சத்திரம்', `கனா' என ஐஸ்வர்யா ராஜேஷின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. அவரோ இன்னமும் மீன்கடையில் பேரம் பேசி மீன் வாங்குவதும், டூவீலரில் சென்னையைச் சுற்றுவதுமாக அரிதார முகம் தவிர்த்து அகம் கவர்கிறார்.

`அதுதான் அவரது அழகு... அதுவே அவரது இயல்பும்' என்கிறார் மணிகண்டன். சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் `அழகு' தொடரில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் மணிகண்டன், ஐஸ்வர்யாவின் உடன்பிறப்பு. தங்கச்சியைப் பற்றிப் பேச சொன்னால், எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன் தயாராகிறார் பாசக்கார அண்ணன்.

``அம்முலு... ஐஸ்வர்யாவை நான் அப்படித்தான் கூப்பிடுவேன். அவளுக்கு நான் புஜ்ஜி. ஐஸ்வர்யாவுக்கு என்னையும் சேர்த்து மூணு அண்ணன்கள். நான் மூணாவது. ரெண்டு அண்ணன்களும் தவறிட்டாங்க. இப்போ நானும் தங்கச்சியும் மட்டும்தான். அம்மா, தங்கச்சி, நான், என் மனைவி, குழந்தைனு எல்லோரும் சந்தோஷமான கூட்டுக் குடும்பம்.

அவள் இரும்பு மனுஷி!

சின்ன வயசுல ரெண்டு பேரும் நிறைய அடிச்சுப்போம். வீட்டுல சில்லறை காசு இருக்கும். ரெண்டு பேரும் அதை எடுத்துக்கிட்டு சுவர் ஏறிக் குதிச்சு வீட்டுக்குப் பக்கத்துல தெருவோரக் கடையில மாங்கா பத்தையும், நெல்லிக்காயும் வாங்கித் தின்ன நாள்களை இன்னும் மறக்க முடியலை. அம்மா காசு கொடுக்கலைனா, தங்கச்சி தயங்கவே மாட்டா... திருடிடுவா! ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி வீட்டுக்குப் பக்கத்துல உள்ள ஆயா கடையில ஆப்பமும் தேங்காய்ப் பாலும் வாங்கிட்டு வருவா...'' - பால்யத்துக்குள் போகிறார், மணிகண்டன்.

``ஸ்கூல் படிக்கிறப்போ அவ ஸ்போர்ட்ஸ்ல கில்லி. ஸ்விம்மிங் சாம்பியன்.

ஸ்போர்ட்ஸ்ல பெரிய ஆளா வருவானுதான் எதிர்பார்த்தோம். திடீர்னு நடிப்புல ஆர்வம் வந்தது. சினிமானு முடிவெடுத்த நாள்ல இருந்து நான் அவ பக்கம் இருக்கேன்.

வாய்ப்பு தேட ஆரம்பிச்ச நாள்களில் நானும் அவளும்தான் ஸ்டுடியோக்களுக்குப் படையெடுப்போம். ஐஸ்வர்யாவுக்கு ஆரம்ப நாள்களில் நிறைய நிராகரிப்புகள்... `எனக்குப் பதிலா நீ வாய்ப்பு கேட்டிருந்தா, இந்நேரம் பெரிய ஸ்டார் ஆகியிருப்பே'னு என்னைக் கிண்டலடிப்பா.

அப்பா அந்தக் காலத்துல தெலுங்கு இண்டஸ்ட்ரியில ஹீரோவா இருந்தவர். அவர் இறந்தபிறகு அம்மாதான் எங்க எல்லோரையும் போராடி வளர்த்தாங்க. அப்பா இல்லாத ஏக்கமே தெரியாம வளர்த்தாங்க. எல்.ஐ.சி ஏஜென்ட்டா இருந்திருக்காங்க. அதிகாலையில நாலு மணிக்கெல்லாம் எழுந்து ரியல் எஸ்டேட் வேலைக்குப் போயிடுவாங்க. அப்படியொரு அசுர உழைப்பு அம்மாவுடையது.

அப்பாவின் மரணம், அடுத்தடுத்து அண்ணன்களின் இழப்புகள், வாய்ப்பு கேட்டுப்போன இடங்களில் தொடர் நிராகரிப்புகள்னு அவளுடைய வாழ்க்கை போராட்டங்கள் நிறைஞ்சது. ஆனாலும், அவள் இரும்பு மனுஷி.     இத்தனை கஷ்டங்களைப் பார்த்த ஒரு பெண், முதல் பட வாய்ப்பு கிடைக்கும்போது சந்தோஷத்துல எப்படித் துள்ளிக் குதிக்கணும்? ஆனா, ஐஸ்வர்யா அப்படிப் பண்ணலை. அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடிச்ச பிறகும்கூட அவகிட்ட எந்த ஆரவாரத்தையும் நான் பார்க்கலை. 

தினம் எனக்குக் காலையில அவதான் ஃபில்டர் காபி போட்டு எழுப்புவா. தூங்கிக்கிட்டு இருக்கிற என் மனைவிக்கும் ஐஸ்வர்யா போடுற காபிதான் பிடிக்கும். வீட்டுல ஃப்ரீயா இருந்தா அவதான் சமைப்பா.

 என் மனைவி சோஃபியாவும் நடிகைதான். சமீபத்துல ரிலீசான `லட்சுமி' படத்துல நடிச்சிருக்காங்க. என் கல்யாணத்துக்குப் பிறகு நானும் என் மனைவியும் அம்மா, தங்கச்சிகூட இருக்கிறதுனு முடிவு பண்ணினபோது, ஐஸ்வர்யாவுக்கு அவ்வளவு சந்தோஷம். எங்க குழந்தை  ஆர்யனுக்கு ஒரு வயசாகுது. ஐஸ்வர்யாவுக்கு அவன்தான் உலகம். டயப்பர்கூட அவதான் வாங்கிட்டு வருவா.

அவள் இரும்பு மனுஷி!

ஒருமுறை சிங்கப்பூர் போயிருந்தபோது என்னை நிறைய பேருக்கு அடையாளம் தெரிஞ்சு வந்து பேசினாங்க. காரணம் நான் நடிக்கிற 'அழகு'

சீரியல். `டேய், என்னடா என்னை யாருமே கண்டுக்க மாட்டேங்கிறாங்க. நீ வெள்ளையா இருக்கிறதால உன்கிட்ட பேசுறாங்களோ'னு கேட்பா. என் சீரியல் டெலிகாஸ்ட் ஆகும்போது அவ வீட்டுல இருந்துட்டா, நான் காலி. என் நடிப்பை வெச்சு செய்வா...'' - கிண்டலும் கேலியும் தாண்டி, தங்கையைப் பற்றி அண்ணன் அடுத்து பகிர்பவை சீரியல் சென்டிமென்ட்டுகளையே மிஞ்சும்.

``அப்பா உயிரோடு இருந்தவரை எங்க வாழ்க்கை வேற லெவல்ல இருந்தது. வீடு, வாசல், சொத்து, சுகம், உறவுகள்னு எல்லாம் இருந்தன. அவர் இறந்ததும் எல்லாம் போச்சு. லைஃப் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் மாதிரி இருந்தது. உச்சத்துல இருந்து, அப்புறம் அதல பாதாளத்துக்குப் போய், இப்போ மறுபடியும் மேலே எழுந்திருக்கோம். ஐஸ்வர்யாவைப் பத்தி எனக்கு நிறைய கனவுகள் இருக்கு. அதை நிச்சயம் அவள் நிறைவேற்றுவாள். அவள் கடுமையான உழைப்பாளி. அந்த உழைப்பு நிச்சயம் அவளை உயரத்துக்குக் கொண்டு போகும்.

ஐஸ்வர்யாவை நான் வழக்கமான ஹீரோயினா பார்க்கிறதில்லை. அவகிட்ட அபாரமான திறமைகள் இருக்கு. 'காக்கா முட்டை', `தர்மதுரை'யில தொடங்கி, இப்போ `கனா' வரைக்குமான படங்களே அதுக்கு சாட்சி. `கனா' படத்துல கிரிக்கெட் பிளேயரா நடிக்கிறாள். இப்போ கொஞ்சநாளா அவ சிந்தனை முழுக்க கிரிக்கெட்டாதான் இருக்கு. அந்தப் படத்துல நடிக்க ஆரம்பிச்ச பிறகு அவளுடைய பேச்சே கிரிக்கெட் கமென்ட்ரி மாதிரி மாறிப்போச்சு. இந்தப் படம் அவளுடைய வாழ்க்கையில மிகப்பெரிய திருப்புமுனையா அமையும்கிற நம்பிக்கை எனக்கிருக்கு.'' 

அண்ணனின் கண்களில் தங்கையின் கனா!

அவள் இரும்பு மனுஷி!

ரும வறட்சி, முடிப்பிளவு மற்றும் அடிப்படை அழகுப் பிரச்னைகளை வீட்டிலேயே சரி செய்துகொள்ள எளிய பராமரிப்புக் குறிப்புகளை இந்த இதழில் ஆங்காங்கே வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் கீதா அசோக்.

தொகுப்பு: சு.சூர்யா கோமதி