
“சிம்பு வீட்டுக்கே போயிடுவோம்!”
“சினிமாவில் ஆண்களை எல்லா ஜானர்லேயும் காட்டிட்டாங்க. ஆனா, வழக்கமா பெண்களை மையப்படுத்திய கதைகளைப் படமா எடுக்கும்போது, அதை ரொம்ப சீரியஸான கதையா, பெண்கள் முன்னேற்றம் பற்றிய கதையாதான் காட்டியிருக்காங்களே தவிர, ஒரு பெண்ணோட வாழ்க்கையை ஜாலியா இதுவரை சொல்லவே இல்லை. அதைச் சொல்லணும்னு நினைச்சுப் பண்ணுன கதைதான், ‘90 எம்.எல்’. காதல், செக்ஸ், ரிலேஷன்ஷிப், அதனால வர்ற பிரச்னைகள்னு பெண்கள் என்னெல்லாம் பேசிக்குவாங்களோ, அது அத்தனையும் ரொம்ப ஓப்பனா படத்துல சொல்லியிருக்கோம்.” - உற்சாகமாகப் பேசுகிறார், இயக்குநர் அனிதா உதீப்.

“ஓவியாவை மனசுல வெச்சுதான் கதையை உருவாக்குனீங்களா..?”
“அவங்களை நினைச்செல்லாம் கதை எழுதலை. வெவ்வேறு மனநிலையில இருக்கிற ஐந்து பெண்களைப் பற்றிய படம் இது. அதுல ஒரு கேரக்டர், தான் நினைக்கிறதை ரொம்பவே ஓப்பனா பேசக்கூடிய கேரக்டர். பிக் பாஸ் நிகழ்ச்சியில ஓவியாவோட நடவடிக்கைகளுக்கும், இந்தக் கேரக்டருக்கும் அப்படியொரு பொருத்தம். அதான், அவங்க பிக் பாஸ்ல இருந்து வெளியே வந்ததும் மீட் பண்ணி கதையைச் சொன்னேன். ‘என்னை மாதிரியே இருக்கு இந்தக் கேரக்டர். கண்டிப்பா நான் பண்றேன்’னு சொல்லிட்டாங்க.”
“சிம்புவோட இசை எப்படி வொர்க் அவுட் ஆகியிருக்கு?”
“ ‘குளிர் 100 டிகிரி’ படத்துல அவர் பாடிய ‘மனசெல்லாம்’ பாட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. பிறகு ‘சக்கபோடு போடு ராஜா’ படத்துல அவர் இசையமைப்பாளரா அறிமுகமானவுடனே, என் படத்துக்கும் அவர் இசையமைத்தால் நல்லா இருக்கும்னு நினைச்சு அவர்கிட்ட கதையைச் சொல்லப் போனேன். ‘இந்தக் காலத்துக்கு ஏற்றமாதிரி வித்தியாசமா இருக்கு. வழக்கமா ஒரு லவ் சாங், ஒரு பேத்தாஸ் சாங், ஒரு மாஸ் சாங்னு இல்லாம ஒவ்வொரு பாடலுக்கான சூழலும் வித்தியாசமா இருக்கு. கண்டிப்பா பண்ணலாம்!’னு சொன்னார். மொத்தம் ஐந்து பாடல்கள். ‘மிர்ச்சி’ விஜய் எல்லாப் பாடலையும் எழுதியிருக்கார். அதுல, சிம்பு ரெண்டு பாட்டு, ஓவியா ஒரு பாட்டு பாடியிருக்காங்க.”

“ஓவியாவுக்கு ‘மருத்துவ முத்தம்’ சீன் இருக்காமே?”
“ஆமா. ஓவியாவுக்கு ஜோடியா ஆன்சென்ட் பால்னு ஒரு மலையாள நடிகர் நடிச்சிருக்கார். அவங்களுக்குள்ள இருக்கிற ரொமான்ஸ் சீன்ல ஒரு சின்னப் பகுதி, லிப்லாக். அதேபோல, ஓவியா சில சண்டைக்காட்சிகளிலும் நடிச்சிருக்காங்க. மழையில நடக்கிற ஒரு ஆக்ஷன் சீன் படத்துல இருக்கு. அதுல அவங்க பர்ஃபாமென்ஸ் பேசப்படும். இது அவங்களுக்கு ஒரு மாஸ் என்ட்ரி, பஞ்ச் டயலாக்னு நிறையவே இருக்கு. முக்கியமா, ஓவியா ஆர்மிக்குப் படத்துல சில சர்ப்ரைஸ் காத்திருக்கு.”
“நடிகர் சிம்பு ஷூட்டிங்க்கு லேட்டா வருவார்னு ஒரு பேச்சு இருக்கு. இசையமைப்பாளர் சிம்பு எப்படி?”
“நாங்க அவர் வீட்டுக்குப் போய் ‘வாங்க கம்போஸ் பண்ணலாம்’னு உட்கார்ந்திடுவோம். அவரை எங்கேயும் போகவிடலை. எப்படி எங்க ஐடியா?”
“ஷூட்டிங் ஸ்பாட்ல பிக் பாஸ் பத்தி ஓவியா ஏதாவது பேசுவாங்களா?”
“உள்ளே என்னெல்லாம் நடந்தது, அவங்களோட அனுபவம்னு நிறைய ஷேர் பண்ணியிருக்காங்க. ‘நீங்க ஆரவ்கூட அவுட்டிங் போறீங்களா?’னு ஆரவ் பத்தி அவங்ககிட்ட பேசிக் கலாய்ச்சுக்கிட்டே இருப்பேன். அவங்களும் அதை ஜாலியா எடுத்துக்கிட்டு ஏதாவது காமெடியா பேசுவாங்க. எங்களுக்கு அதுதான் என்டர்டெயின்மென்ட்!”
உ.சுதர்சன் காந்தி - படம்: தே.அசோக்குமார்