பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சிம்ரன் அரட்டை

சிம்ரன் அரட்டை
பிரீமியம் ஸ்டோரி
News
சிம்ரன் அரட்டை

ரஜினி கெமிஸ்ட்ரி, கமல் அரசியல், த்ரிஷா டான்ஸ், விக்ரம் டீம், விஜய் சேதுபதி நடிப்பு!

சிம்ரன் இஸ் பேக்!

சென்னைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 40-வது மாடியில் இருக்கும் வீடு.  தமிழ்நாட்டிலேயே மிக உயரமான அப்பார்ட்மெ ன்ட்டாம். கடலைப் பார்த்தபடி பால்கனி.  அருமையான காபியுடன் உரையாடலைத் தொடங்கினார், சிம்ரன்.  

சிம்ரன் அரட்டை

“சினிமா இப்போ எப்படி மாறியிருக்குனு நினைக்கிறீங்க?”

“ரொம்ப எளிமையா மாறியிருக்கு. முன்பெல்லாம் ஒருத்தர் நடிகராகுறது ரொம்பக் கஷ்டம். நிறைய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களைச் சந்தித்துப் பேசி வாய்ப்பு கேட்க வேண்டியிருக்கும். ஆனா, இப்போ இருக்கிற டிஜிட்டல் மீடியாவுல போட்டோக்களை அப்லோடு பண்ணுனா, பார்த்துட்டு சம்பந்தப்பட்டவங்களே கூப்பிடுறாங்க. சோஷியல் மீடியாவுல மியூசிக்கலி, டப்ஸ்மாஷ் எல்லாம் பண்ணி மக்களை என்டர்டெயின் பண்ணீங்கனா, நீங்களும் இன்னைக்கு ஸ்டார்தான்! மேலும், அறிமுக இயக்குநர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்குது. 90-கள்ல சினிமாத் தொழில்நுட்பம் படிச்சவங்களோட எண்ணிக்கை மிகக் குறைவு. இப்போ பலபேர் விஸ்காம் படிச்சிருக்காங்க, தயாரிப்பு நிறுவனங்கள்ல வேலை பார்க்கிறாங்க. சுருக்கமா சொன்னா, இன்னைக்கு சினிமாவுல என்ட்ரி கொடுக்கிறது ஈஸியான விஷயம் ஆயிடுச்சு. தவிர, ரசிகர்களோடும் தொடர்புல இருக்கமுடியுது இப்போ! இன்றைய சினிமாவுக்கும், சினிமாக் கலைஞர்களுக்கும் டெக்னாலஜி ஒரு வரம்!”

“90-களின் குழந்தைகளுக்கு சிம்ரன்னாலே ‘டான்ஸ்’தான் ஞாபகத்துக்கு வரும். டான்ஸ் மீதான காதல் எப்படி உருவாச்சு?”


“சின்ன வயசுல இருந்தே டான்ஸ்மேல அளவுக்கு அதிகமான  ஆர்வம். பரதநாட்டியம், சல்சா இரண்டையும் முறைப்படி கத்துக்கிட்டேன். எனக்கு பிரபுதேவாவோட டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். அவர் படங்கள்ல நடிக்கும்போது, டான்ஸ் சம்பந்தமா நிறைய விஷயங்களைப் பேசித் தெரிஞ்சுகிட்டேன்.”
 
“சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக்கிட்ட காலகட்டம் எப்படி இருந்துச்சு?”


“2003-ல எனக்குக் கல்யாணம் நடந்தது. பிறகு, குடும்பப் பொறுப்புகள் அதிகமாயிடுச்சு. குழந்தைகள் பிறந்ததுக்கு அப்புறம் என்னோட நேரத்தை முழுக்க முழுக்க அவங்களுக்காக மட்டுமே செலவழிக்க ஆரம்பிச்சுட்டேன்.”

“குடும்பம் பற்றி...”

“தீபக் ஒரு பைலட். கல்யாணத்துக்குப் பிறகு நடிப்பை விடக் கூடாதுனு நினைச்சேன். தீபக்கும் அதுக்கு நிறைய சப்போர்ட் பண்ணுனார். எங்க வீடு கடல் பக்கத்துல இருக்கிறதுனால, பீச்ல நிறைய நேரம் செலவ ழிப்போம். எங்களுக்கு அதீப், ஆதித்னு ரெண்டு பசங்க. அதீப்புக்கு 13 வயசு, ஆதித்துக்கு 7 வயசு. நான் எங்கெல்லாம் ஷூட்டிங் போறேனோ, அங்கெல்லாம் சின்னப் பையன் ஆதித்தையும் கூட்டிட்டுப் போவேன். நான் இல்லாம அவனால கொஞ்சநே ரம்கூட இருக்க முடியாது. ஆதித் ரஜினி ரசிகன். ‘பேட்ட’ படத்தோட ஷூட்டிங் டேராடூன்ல நடந்தப்போ, அவனையும் கூட்டிக்கிட்டுப் போயிருந்தேன். ரஜினி சாரைப் பார்த்ததும் ‘சிட்டி...சிட்டி’னு கூப்பிட ஆரம்பிச்சுட்டான்! அவனை ரஜினி சார்கிட்ட இருந்து கூட்டிக்கிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு!”

“சினிமாவுல உங்களுக்கு இருக்கிற பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்?”

“ஆல்வேஸ்... ஜோதிகா. எங்களுக்குள்ள போட்டி இருந்தாலும், அது ஆரோக்கியமானதா இருக்கும். சினிமா மட்டுமில்ல, பர்சனல் விஷயங்களையும் நாங்க பேசிப்போம். அவங்க வீட்ல என்ன நடந்தாலும், என்கிட்ட சொல்வாங்க. சினிமாவுல ஜோதிகா மாதிரி ஒரு பெஸ்ட் ஃப்ரெண்ட் எனக்குக் கிடைக்க மாட்டாங்க!”

“ ‘பேட்ட’ அப்டேட் ப்ளீஸ்?”

“கார்த்திக் சுப்புராஜ் சார்கிட்ட ‘பேட்ட’ என்ன மாதிரியான கதை, அதுல எனக்கு எந்த மாதிரி வசனங்கள் இருக்குனு எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்ட பிறகுதான், படத்துல நடிக்க ஒப்புக்கிட்டேன். முதல் கட்டப் படப்பிடிப்பு டார்ஜிலிங்ல நடந்துச்சு. இதுவரை உத்தரகாண்ட், லக்னோ, சென்னை ஆகிய இடங்கள்ல ஷூட்டிங் பண்ணியிருக்கோம். தன்னுடைய வேலைகள்ல ஒரு குறைகூட இருக்கக்கூடாதுனு மெனக்கெடுவார் இயக்குநர். அதனாலதான், அவர் இயக்கிய ஐந்து படங்களும் ஹிட் ஆயிருக்கு. ஷூட்டிங்கின் முதல் நாளிலேயே ரஜினி சாரோட சேர்ந்து நடிச்சேன். அவர் இத்தனை படங்கள்ல நடிச்சும், எப்படி இவ்வளவு அடக்கமா இருக்கார்னு புரியல, ஆச்சர்யம்தான். என் 20 வருட சினிமாவுல ரஜினி சாரைத் தவிர மற்ற பெரிய நடிகர்களோடயும் சேர்ந்து நடிச்சிருக்கேன். ரஜினி சார்கூட நடிக்கணும்ங்கிறது பெரிய கனவு. அமைதியான மனிதர்; குறைவாதான் பேசுவார். ஆனா, அர்த்தங்கள் நிறைய இருக்கும்.  இந்தப் படத்துல எங்களுக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆயிருக்கு. படத்துல எனக்கும் அவருக்கும் டான்ஸ்கூட இருக்கு!”  

சிம்ரன் அரட்டை

“விஜய் சேதுபதிகூட நடிச்ச அனுபவம்?”

“இந்தத் தலைமுறையின் டிரெண்ட் செட்டரா கார்த்திக் சுப்பராஜ் சாரையும், விஜய் சேதுபதியையும் பார்க்கிறேன். விஜய் சேதுபதிக்கு அழுத்தமான ஒரு குரல் இருக்கு. ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடினு எல்லாத்துலேயும் கலக்குறார் மனுஷன். ‘விக்ரம் வேதா’ பார்த்ததுல இருந்து விஜய் சேதுபதியோட ரசிகையா மாறிட்டேன் நான். அவர்கிட்ட பேசும்போது ஒரு பெரிய நடிகர்கிட்ட பேசுற மாதிரி இல்லை. ஏதோ பக்கத்து வீட்டுப் பையன்கிட்ட பேசுற மாதிரி இருக்கு. சவாலான கதாபாத்திரங்கள் எதுவா இருந்தாலும் நடிக்கத் தயாரா இருக்கார். விஜய் சேதுபதிக்கு மாற்று தமிழ் சினிமாவுல வேறு யாரும் இல்லை.”

“த்ரிஷாகூட `ஜோடி’ படத்துல சேர்ந்து நடிச்ச நாள்களெல்லாம் ஞாபகம் இருக்கா, இப்போ அவங்க எப்படி நடிக்கிறாங்க?”


“த்ரிஷாவை முதல்முறை பார்த்த மொமென்ட் இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. அவங்க சினிமாவுல தன்னை ஒரு நல்ல நடிகையா முன்னிலைப்படுத்திக்கிட்ட விதம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ‘ஜோடி’ படத்துல பார்த்தப்போவே  இந்தப் பொண்ணு பெரிய ஆளா வரும்னு எனக்குத் தோணுச்சு. டயலாக் இல்லாத சீன்கள்ல நடிக்கிறதுதான் இருக்கிறதுலேயே ரொம்பக் கஷ்டம். அதுல த்ரிஷா கில்லாடி. நானும் விஜய் சேதுபதியோட சேர்ந்து நடிக்கிறேன், த்ரிஷாவும் சேர்ந்து நடிக்கிறாங்க. அவங்க இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கிறது எனக்குப் பெருமையா இருக்கு. சினிமாவுல என்னை மாதிரி டான்ஸ் ஆடுற இன்னொரு நடிகைனு அவங்களைச் சொல்வேன். இத்தனை வருடம் ஒரு நடிகை நிலைத்திருக்கிறது, பெரிய விஷயம். ஹாட்ஸ் ஆஃப் த்ரிஷா!”
 
“ ‘சீமராஜா’வுக்குப் பிறகு நெகட்டிவ் ரோல் அதிகமா வந்தாலும், நீங்க அதுமாதிரி கேரக்டர்களுக்கு ஆர்வம் காட்டலைனு சொல்றாங்களே, அப்படியா?!”


“நெகட்டிவ் ரோல் ஒரு படத்துக்கு ரொம்ப முக்கியம். ஒரு நடிகருக்கு எந்தவிதமான ரோல் கொடுத்தாலும் அதுல சிறப்பா நடிச்சுக் காட்டணும். நெகட்டிவ் ரோல் நம்ம இமேஜை பாதிக்கும்னு நினைக்கிறவங்க, நடிக்கவே கூடாது. ‘ஐந்தாம் படை’ படத்துல வில்லியா நடிச்சதுக்கு அப்புறமும்கூட எனக்கு நிறைய நல்ல கதாபாத்திரங்கள் வந்துச்சு. ‘நீங்க திறமையான நடிகை’னு இந்த உலகம் நம்பிருச்சுனா, எந்த மாதிரியான கதாபாத்திரங்களுக்கும் உங்களைத் தேடி வருவாங்க.”

“ ‘துருவநட்சத்திரம்’ படத்துல நடிச்சிருக்கீங்க. அந்தப் படத்தோட ஸ்பெஷல் என்ன?”


“ ‘வாரணம் ஆயிரம்’ படம் மூலமா சினிமாவுல எனக்குக் கம்பேக் கொடுத்தது, இயக்குநர் கெளதம் மேனன். விக்ரம்கூட சேர்ந்து நடிக்கிறது இதுதான் முதல்முறை. படத்துல ஐஸ்வர்யா ராஜேஷை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. ‘என்னாமா நடிக்குது இந்தப் பொண்ணு’னு வியந்து பார்த்தேன். இது ஒரு டிடெக்டிவ் திரைப்படம். நாங்க எல்லோரும் ஒரு டீம். விக்ரம் எங்களுக்கு வில்லன்களை அழிக்கிறதுக்கான பணிகளைக் கொடுப்பார். நாங்க எப்படி அதைச் செய்து முடிக்கிறோம் என்பதுதான் கதை. இந்தப் படத்துல வர்ற சண்டைக்காட்சிகளுக்காக விமானத்தை விலைக்கு வாங்கி ஷூட்டிங் பண்ணுனோம்.”

“ ‘ஓடு ராஜா ஓடு’ படத்துல உங்க கணவர் தீபக் நடிச்சிருந்தார். அவருக்கு சினிமாவுல ஆர்வம் உண்டா?”

“ ‘ஓடு ராஜா ஓடு’ படத்தோட இயக்குநர் ஜதின் ராஜ், ‘டான்ஸ் தமிழா டான்ஸ்’ நிகழ்ச்சிக்காக எங்களுக்கு நிறைய உதவிகள் பண்ணியிருக்கார். அவரோட முதல் படத்துல ‘வீரபத்திரன்’ கதாபாத்திரத்துல தீபக் நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னார். தீபக் ரொம்ப அமைதியான ஒரு நபர். அவருக்கு சினிமா ரொம்பப் புதுசு. ஆரம்பத்துல அவர் ஆர்வம் காட்டலை. நான் கஷ்டப்பட்டு அவரை சம்மதிக்க வெச்சேன். தவிர, நானும் அந்தப் படத்துல கேமியோ ரோல் பண்ணுனேன்.”

“கமல், ரஜினி இருவருடனும் நடிச்சிருக்கீங்க. யாரோட அரசியலுக்கு உங்க ஆதரவு?” 

“அவங்க ரெண்டுபேரும் சமூக நலனுக்காகத்தான் அரசியலுக்கு வந்திருக்காங்க. கமல், ரஜினி சிறந்த நட்புக்கு உதாரணம். அவங்களுக்குள்ளே ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கு. தமிழ்நாடு சீர்குலைந்து இருக்கிற நிலைமையில, சினிமாவுல இருந்து ரெண்டுபேர் அரசியலுக்கு வந்திருக்கிறது பெருமையா இருக்கு. ரெண்டுபேரும் அரசியல்ல நல்ல நிலைமைக்கு வரணும், கஷ்டப்படுற மக்களுக்கு சேவை செய்யணும்னு எதிர்பார்க்கிறேன். மக்களுக்கும் இதே எதிர்பார்ப்பு இருக்கு. இவங்க ரெண்டுபேர்தான் தமிழ்நாட்டின் ரியல் ஹீரோஸ்.”

சுஜிதா சென் - படங்கள்: க.பாலாஜி